தினச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஏப்ரல், 2020

பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்


பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு

திட்டமிட்ட பொழுதுபோக்கும் ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாகும். 
உழைப்போர்க்கு ஓய்வு இன்றியமையாதது.  ஓய்வு, ஒன்றும் செய்யாது மடிந்திருப்பதனால் மிகு பயன் தாராது.  எப்படியாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக எதிலும் ஈடுபடுதலும் நற்பொழுதுபோக்கு ஆகாது. பொழுதுபோக்கால் உள்ளத்திற்கு இன்பம், உடலுக்குப் பயிற்சி ஏற்பட்டு மீண்டும் தம் கடமையிலீடுபடப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் பெறுதல் வேண்டும். தாமே தனியாகப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதினும் பிறருடன் கூடிப்பொழுதுபோக்கலே நற்பயன் தருவதாகும்.
சங்கக்காலத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை ஆடவரும் பெண்டிரும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கில் இன்பம் கண்டுள்ளனர்.  விளையாட்டும், ஆடலும் பாடலும், இன்ப உரையாட்டும் எல்லாருடைய உள்ளங்களையும் கவர்ந்துள்ளன.
பூங்காக்களுக்குச் சென்றும், நகரைவிட்டு வெளியிடங்களை அடைந்தும் அன்றும் பொழுது போக்கியுள்ளனர். கடற்கரையில் அலவனாட்டுதல், வண்டல் விளையாடுதல், பாவையை வைத்துக்கொண்டு விளையாடுதல், விளையாட்டுக் குதிரை, தேர் முதலியவற்றை இழுத்து விளையாடல், ஒருவரோடு ஒருவர் கைகோத்து ஆடல், பந்தாடல், நீர்நிலைகளிற் சென்று முழுகி விளையாடல், கிளி வளர்த்தல், திருவிழாக்களுக்குச் செல்லல், ஆடவர் பெண்டிர் இருசாரார்க்கும் உரிய அக்காலப் பொழுது போக்குகளாகும்.
            ஆடவர் மற்போர் புரிதலையும் கோழிப் போர், யானைப் போர் காண்டலையும், வேட்டையாடுதலையும் தமக்குரியனவாகக் கொண்டுள்ளனர். ஆடவரில் முதுமையுற்றோர் ஓரிடத்தில் அமர்ந்து வல்லாட்டம் (சூதாட்டம்) ஆடிப் பொழுதுபோக்கியுள்ளனர்.  சூதாடுவதற்கெனத் தனி அகங்கள் இருந்துள்ளன (புறம்-52).  வல்லாட்டத்திற்குரிய பலகை, காய் முதலியனபற்றித் தொல்காப்பியத்தில கூறப்படுவதனால் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் வல்லாட்டம் பொழுதுபோக்காக அமைந்துள்ளது என்று அறியலாம்.
கெடவரல், பண்ணை, ஓரை முதலியன விளையாட்டின் பெயர்களாகும்.
‘ஓரை ’ என்பது மகளிர்க்குரிய விளையாட்டு என்பதும் அதில் ஆடவரும் சேர்ந்து விளையாடுவர் என்பதும் “ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” (நற்றிணை-155) என்பதிலிருந்து அறியக் கிடக்கின்றது.
ஊஞ்சல் ஆடுதல் மகளிர்க்கே உரிய விளையாட்டு,  ‘தெற்றி’ என்பதும் மகளிர்க்கே உரிய விளையாட்டாகும் (புறம்-53).  அது இன்ன விளையாட்டு என அறிய முடியவில்லை.  “கழங்கு ஆடுதல்” என்பதும் (அகம்-334) மகளிர்க்குரிய ஒன்றாகும்.
கடற்கரையில் நண்டுகள் ஓடி ஓடி மறைதலைக் காண்பது வியத்தகு காட்சியாகும்.  அதனைக் கண்டு பொழுதுபோக்கலைச் சிறு விளையாடலாகக் கருதினர் என்பது “செம்பேர் ஈரளை அலவற் பார்க்கும் சிறு விளை யாடல்” (நற்றிணை-123) என்று கூறுவதனால் அறியலாம்.
காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் எவ்வாறு பொழுது போக்கில் ஈடுபட்டு மகிழ்ந்தனர் என்பது பட்டினப்பாலையில் கற்போர் உள்ளம் கவருமாறு கவினுறக் கூறப்பட்டுள்ளது ( வரிகள் 62-117)
தொழிலாளர்கள் கடற்கரைக்குச் சென்று கடல் இறா மீனைச் சுட்டுத் தின்பர்; வயலாமையைப் புழுக்கி உண்பர்; அடும்பு மலரையும் ஆம்பல் மலரையும் அழகுறச் சூடிக் கொள்வர்.  ஆடவர்கள் பலர் கூடிக் கையாலும் கருவிகளாலும் போர் செய்வர்.  ஒருவரை ஒருவர் சுற்றிச் சுற்றிப் பொருது கொள்வது நாள்மீன்கள் (நட்சத்திரங்கள்) கோள்மீனைச் (கிரகம்) சுற்றிவருவது போல் இருக்கும்.  கவண் வீசுவர்; ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை, கவுதாரிச் சண்டை முதலியன கண்டு களிப்பர்; பெண்கள் சுறாமீன் கோடு நட்டு வணங்கி வாழ்த்துவர்.  பரதவர் உவா நாளில் மீன்வேட்டைக்குச் செல்லாது வீட்டிலிருந்து பெண்களுடன் உண்டு ஆடி மகிழ்வர்;  கடலில் குளிப்பர்; பின்னர் நன்னீர்க் குளத்தில் முழுகி மகிழ்வர்; அலவனாட்டியும், அலைகளில் நடந்தும் பதுமைகளைப் புனைந்தும் ஐம்பொறிகளால் நுகரும் பொருள்களை நுகர்ந்து மயங்குவர்; பகலில் இவ்வாறு விளையாடிய பின்னர்க் காதலனும் காதலியும் பட்டாடையை நீக்கிப் பருத்தியாடையை அணிவர்; மட்டு நீக்கி மது மகிழ்வர்.  மைந்தர் கண்ணியை மகளிர் சூடுவர்; மகளிர் கோதையை மைந்தர் மலைவர்; பாடலோர்ப்பர்; நாடகம் நயப்பர்.  வெண்ணிலாவில் வீற்றிருந்து மகிழ்வர்.  பின்னர் அங்குள்ள மணல்மேடுகளில் துயின்று இரவைக் கழிப்பர்.
இவ்வாறெல்லாம் அக்கால மக்கள் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்.
எளிய மக்களும் இனிய முறையில் பொழுது போக்கினர் என்பதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.
“நெல்லரியும் இருந்தொழுவர்
 செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
 தெண்கடல்திரை மிசைப்பாயுந்து
 திண்திமில் வன்பரதவர்
 வெப்புடைய மட்டுண்டு
 தண்குரவைச் சீர்தூங்குந்து
 தூவற் கலித்த தேம்பாய் புன்னை
 மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
 எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
 முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்
 இரும்பனையின் குரும்பைநீரும்
 பூங்கரும்பின் தீம்சாறும்
 ஓங்குமணல் குவவுத்தாழைத்
 தீநீரோடு உடன் விராஅய்
 முந்நீருண்டு முந்நீர்ப் பாயுந்”     (புறம்-24)
கடலில் குளித்தலும் கள்ளுண்டலும் குரவையாடலும் மாலைகளைச் சூடி விளையாடலும், மகளிருடன் நடனமாடுதலும் மூன்று வகை நீரும் கலந்த கலவை நீரையுண்டு மகிழ்ந்து கடலில் பாய்ந்து விளையாடலும் இன்றைய மேனாட்டார் பொழுதுபோக்கோடு ஒத்திருக்கின்றனவன்றோ?
மற்போர்பற்றி ஆமூர் மல்லனைச் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி வென்ற நிலை வண்ணிக்கப்பட்டுள்ளது.  அக்கால மற்போர் இக்கால மற்போர் போலவே நடந்துள்ளது.  சாத்தந்தையார் எனும் புலவர் அம்மற்போரை நேரிற் கண்டு பின்வருமாறு கூறியுள்ளார்:
“இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
 மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
 ஒருகால் மார்பு ஒதுங்கின்றே; ஒருகால்
 வருதார் தாங்கிப் பின்ஓதுங் கின்றே;
 நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப்
 பொரல்அருந் தித்தன் காண்கதில் அம்ம
 பசித்துப்பணை முயலும் யானை போல
 இருதலை ஓசிய எற்றிக்
 களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே” (புறம்-80)
மற்போரைக் கண்டவர் ஆர்ப்பரவம் ஏழ்கடல் ஒலியினும் மிகுதியாய் இருந்தது என்று அப் புலவரே  கூறியுள்ளமையால் (புறம்-81) மற்போரைக் கண்டு போதுபோக்கியோர் கூட்டம் இக்காலம் நடைபெறும் மற்போர், விளையாட்டுப் பந்தயங்கள் முதலியவற்றைக் கண்டு களித்துப் பொழுதுபோக்கும் பெருங்கூட்டத்தைப் போன்று இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.
மற்போரைக் கண்டு மகிழ்ந்தது போன்றே யானைப் போரைக் கண்டும் மகிழ்ந்தனர் என்பது,
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்  தன்கைத்துஒன்று
 உண்டாகச் செய்வான் வினை”  (குறள்-758)
எனும் திருக்குறளால் தெளியலாம்.
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
 வல்லா ராயினும் புறம்மறைத்துச் சென்றோரைச்
 சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
 நல்லிதின் இயக்கும்அவன் சுற்றத் தொழுக்கமும்”
என்னும் மலைபடுகடாம் அடிகளால் (77-80) இயற்றமிழும்,
குழலினிது யாழினிது என்ப” எனும் திருக்குறளால் இசையும்,
கூத்தாட் டவைக்குழாத் தற்றே” எனும் திருக்குறளால் நாடகமும், அக்கால மக்களின் பெரும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்று அறிய இயலும்.  பாடும் புலவரும் பாணரும் ஆடும் விறலியும் பொருநரும் அக்காலத்து நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டனர் என்பதனாலும் இவை மக்களுக்குப் பயன் விளைக்கும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்றும் தெரியலாம்.  சங்கக்காலத் தமிழ்மக்கள் பொழுதுபோக்கு முறையிலும் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர் என்பதில் ஐயமின்று.
– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
தினச்செய்தி 02.04.2020

வெள்ளி, 27 மார்ச், 2020

நம் எண்களை அறியாமல் இருக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்


  நம் எண்களை அறியாமல் இருக்கலாமா?


தமிழ் எண்கள் என்றால் என்ன? தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா?  அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு? அவற்றைப் பயன்படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா? பிற மொழியினர் அவ்வாறு தத்தம் மொழி எண்களைப் பயன்படுத்தும் பொழுது நாம் மட்டும் தமிழ் எண்களை விலக்கி வைப்பது தவறல்லவா? இந்தியாவில் உள்ள பிற மொழியினர் அன்றாடப் பயன்பாட்டில் கூடத் தங்களுடைய மொழி எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நாம் நம் எண்கள் என்ன என்று தெரியாமல் இருப்பது நமக்கு இழுக்கல்லவா? எனவே, நம் எண்களை நாம் அறிவோம்!
தமிழ் எண்களைக் குறிப்பிடும் பாடல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் பலராலும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது கம்பர் கால ஒளவையார் பாடிய பாடல் ஒன்று. அப்பாடல்  ‘எட்டேகால் இலட்சணமே’, எனத் தொடங்கும். தமிழில் எட்டு என்பதை ‘அ’ என்னும் எழுத்தாலும் கால் என்பதை ‘வ’ என்னும் எழுத்தாலும் குறிப்பர். எனவே எட்டே கால் இலட்சணம் என்றால் அவலட்சணம் என்றாகிறது. பாடல்களில் மட்டுமல்ல அன்றாடப் பயன்பாடுகளிலும் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.
தமிழில் ஒன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களும் மேல்வாய் இலக்கம் எனப்பட்டன. கோடி என்றால் கடைசி என்று பொருள். இப்பொழுதும் கோடி வீடு, கடைக்கோடியில் என்றெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். முன்னொரு காலத்தில் கோடி என்பதே கடைசி எண்ணாக இருந்துள்ளது. பின்னர் மிகுதியான பல எண்கள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை எண்ணால் குறிக்காமல் எழுத்தால் குறித்துள்ளனர். அவ்வாறு பேரெண்களைத் தாமரை, வெள்ளம்,  ஆம்பல் என்ற முறையில் குறிப்பிட்டதை உணர்த்தும் வகையில் தொல்காப்பிய நூற்பாவும் உள்ளது.
சங்க இலக்கியமான பரிபாடலில் நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்கள் குறிக்கப்படுகின்றன.ஒன்றுக்குப் பிறகு 52 சுழியன்களை அல்லது சுன்னங்களைச் சேர்த்துக் குறிப்பிடும் பேரெண் பூரியம் எனப்பட்டது. இப்பொழுது 1 இற்கு அடுத்து 20 சுழிகள் உள்ள எண்ணைப் பூரியம் எனக் குறித்துக் குறிப்பிட்டு வருகின்றனர். இது தவறாகும்.
ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை கீழ்வாய் இலக்கங்கள் எனப்பட்டன.
அவை ஒன்றுக்குப் பின்னே இருப்பதால் பின்னம் எனப்பட்டன. அவை இருவகையாகப் பகுக்கப்பட்டன. ஒன்று என்னும் முழு எண்ணை இரண்டு இரண்டாகப் பகுத்துப் பயன்படுத்தும் முறைமை ஒன்று. இப்பகுப்பு, அரை – ½, கால் – ¼, அரைக்கால் – 1/8, வீசம் அல்லது மாகாணி – 1/16, அரைவீசம் – 1/32, கால்வீசம் – 1/64, அரைக்கால்வீசம் – 1/128, என்ற வகையில் அமையும்.
மற்றொரு பகுப்பு முறைமை ஒன்று என்னும் முழுமையான எண்ணை ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்வது. இதில் நான்மா – 1/5, இருமா – 1/10, ஒருமா – 1/20, அரைமா – 1/40, காணி – 1/80, அரைக்காணி – 1/160, முந்திரி – 1/320, எனப் பின்னத்தின் பெயர்கள் அமையும். இத்தகைய பின்னங்களும் தமிழ் எண்களால் குறிக்கப்பட்டிருந்தன. அதுவே, தமிழுக்கு உள்ள சிறப்பு.
தமிழில் கணக்கியலை விளக்கும் வகையில், ஏரம்பம், சினராலயம், கணித இரத்தினம், சிறு கணக்கு முதலிய பல நூல்கள் முன்பு  இருந்துள்ளன. இன்றும் கணக்கதிகாரம், ஆத்தான கோலாகலம், கணித தீபிகை  ஆகியவை இருக்கின்றன.
தமிழ்க்கணக்கு நூல்களில் தமிழ் எண்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பின்ன வாய்ப்பாட்டிலும்தமிழ் எண்கள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த எல்லைக் கற்களிலும் தமிழ் எண்கள் குறிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தியர் ஆட்சியில் அவை காணாமல் போயின. ஆங்கிலேயர் ஆட்சியில் பணத்தாள்களில் தமிழ் எண்கள் இருந்தன. இன்றும் மொரிசீயசு பணத்தாளில் தமிழ் எண் உள்ளது. ஆனால் இந்தியர் ஆட்சியில் பணத்தாளில் தமிழ் எண்கள் தொலைக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழுக்கு இருந்த முதன்மை, இந்தியர் ஆட்சியில் இல்லாமல் போனது. அப்படி என்றால் இந்தியாவில் தமிழும் தமிழரும் இல்லையா?
  இருபத்து மூன்று என்றாலும் உ(இரு) ௰ (பத்து) ௩ (மூன்று) உ௰௩ என்றும் இருநூற்று இருபத்து ஏழு என்பது உ௱உ௰எ எனவும் முன்னர்க் குறிப்பிட்டனர்.
  உரோமன் முறையும் இவ்வாறுதான் ஆனால் உரோமன் முறையில் மாற்றம் செய்தால் எண்மதிப்பு மாறும். சான்றாக 15 என்பது I என்பதையும் என்பதையும் V சேர்த்து IV எனக் குறிப்பிட்டால் ‘4’ என ஆகிறது. X என்பதையும் என்பதையும் V சேர்த்து XV என எழுதினால்தான் எண் மதிப்பு சரியாக அமையும் ஆனால் தமிழில் இடமதிப்பிற்கு ஏற்க ‘கரு’ என எழுதினால் மதிப்பு மாறாது. எனவே இவ்வழக்க முறையையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பத்திரப்பதிவு முதலான ஆவணங்களில் பழைய முறைபின்பற்றப்பட்டு வந்துள்ளதை உணர்ந்து அவ்வெண்களை நாமும் அறிந்து பின்பற்ற வேண்டும்.
  ௦(0), ௧(1), ௨(2), ௩(3), ௪(4), ௫(5), ௬(6), ௭(7), ௮(8), ௯(9), ௰(10)
என்பனவே,   சுன்னம் அல்லது சுழியம் முதல் பத்து வரையிலான தமிழ் எண்கள். இவ்வெண்களிலிருந்தே இன்றைக்குப் பயன்படுத்தும் அடைப்பிற்குள் குறிப்பிட்டுள்ள 0 முதல் 10 வரையிலான அடிப்படை எண்கள் உருவாயின. பின் வரும் படம் தமிழ் எண்கள் எவ்வாறு உலக எண்களாக மாறியுள்ளன என்பதைக் காட்டும்.
பத்திற்கு மேல்,
௰௧(11), ௰௯(19), ௨௰(20), ௨௰௧(21) …..௯௰௯(99), ௱௧ (101)… ௯௱ (900), ௲ (1000), ௲ ௱(1100), ௲௯௱(1900), ௨௲(2000), …. ௯௲(9,000), ௰௲(10,000), … ௯௱௲(90,000), ௱௲(100,000) ௱௱௲(100,00,000)
என்பனபோல் எழுத வேண்டும். அஃதாவது அறுபத்து ஏழு என்றால் ஆறு பத்தும் ஏழும் என்பதுபோல் ஆறு பத்தைக்குறிப்பிட்டு ஏழைக் குறிக்க வேண்டும். எண்பதாயிரத்து எட்டு என்றால் எட்டுபத்துஆயிரமும் எட்டும்என்பதுபோல் குறிக்க வேண்டும். அறுபதில் ஆறு பத்துகள் உள்ளமையையும் எண்பதாயிரத்தில் எட்டு பத்தாயிரம் உள்ளமையையும் குறிப்பதுபோல் எல்லா எண்களையும் விரித்துக் கூற வேண்டும்.
பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது.  ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘க0’ என்றே குறிக்கின்றனர். ‘௰’ எனக் குறிப்போரும் 11 முதல் கக, உ௩, ௪அ என்பன போன்று பயன்படுத்துகின்றனர். அஃதாவது பத்து ‘௰’ வர வேண்டிய இடத்தில் ஒன்றைக்/’ க’  குறிக்கின்றனர். இருபது, முப்பது, நாற்பது முதலானவை வரும் இடங்களில் பத்து எண்ணை விலக்கி விட்டு இரண்டு, மூன்று, நான்கு என்பனபோல் குறிக்கின்றனர்.
கீழ் வாய் இலக்கம்

இவைபோன்ற பெருமதிப்பிலான எண்களும் மிகவும் குறைந்த மதிப்பிலான பின்ன எண்களும் வேறு எம்மொழியிலும் நடைமுறையில் இல்லை. இதன்மூலம் பழந்தமிழரின் கணக்கு அறிவியல் தலைசிறந்து இருப்பதை உணரலாம்.
 மேலும் சுழி என்றும் குறிக்கப்படும் ‘0’ ‘சுன்னம்’ தமிழர்களின் கண்டுபிடிப்பே; பிற மொழிகளில் ‘சுன்ன’ என்பது போன்று மாறி அளிக்கப்படுகிறது.
  பயன்பாட்டில் இல்லாத எதுவும் மறைந்தொழியும், எனவே தமிழின் வடிவங்களைப் பிரிவு எண்கள், துணை எண்கள், உட்பிரிவு எண்கள் போன்ற முறைகளில் பயன்படுத்தலாம்.
திண்ணைப்பள்ளிக்கூடங்களிலேயே பல்வகைக் கணக்குகளும் நீட்டலளவை, முகத்தலளவை,  எண்ணிக்கை அளவை முதலலான பல வகை அளவை முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டன. அவற்றை நாம் தனியாக வேறொரு கட்டுரை மூலம் பார்ப்போம்.
அறிவியலுக்கு அடிப்படை கணக்கு என்பதால் கணக்கறிவியலில் உயர்நிலையுற்றிருந்த பழந்தமிழர் பிற அறிவியல் துறைகளிலும் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு நாம் தாய்த்தமிழ் வாயிலான கல்வியையும் இழந்து தமிழர்க்குரிய கல்விமுறையையும் இழந்து அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். இனியேனும் விழித்தெழுவோமா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, மார்ச்சு 17, 2020

புதன், 25 மார்ச், 2020

இதுதான் தமிழர் பண்பாடா? – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி


இதுதான் தமிழர் பண்பாடா?

காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை.
தருமபுரியின் இளவரசன்-திவ்வியா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடத் தொடர்கதையாகி விட்டது.
போதாததற்குத், தமிழ் மக்களிடம் மிகுந்த செல்வாக்குடைய ஊடகமான திரைப்படமும் காதலுக்கு எதிரான கருத்துகளையும் வன்முறைகளையும் பரப்பத் தவறுவதில்லை என்பது வேதனைக்குரியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்குப் போகும் வயதிலேயே பிள்ளைகள் காதலிப்பது போல் படம் எடுத்து அதையே பெரிய காப்பியம் போலப் பீற்றிக் கொண்டது நம் திரையுலகம். இன்று அதுவே, படிக்கும் இளைஞர்கள் கையிலிருந்து நூலைப் பிடுங்கி விட்டு “மண்ணையும் பொண்ணையும் தொட்டா வெட்டு” என சாதித் துருவேறிய அரிவாளைத் திணிக்கிறது!
இப்படிக் காதலுக்கு எதிராகச் செயல்படும் அனைவருமே அதற்குப் பண்பாடு, ஒழுக்கம், கற்பு போன்றவற்றைக் காரணம் காட்டுகிறார்கள்.
அப்படியானால் காதல் தமிழ்ப் பண்பாடு இல்லையா?
காதலிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா?
காதல் திருமணம் கற்புநெறிக்கு எதிரானதா?
எனும் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன!
இவற்றுக்கு விடை காணச் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘கலித்தொகை’ நமக்குக் கரம் நீட்டுகிறது என எண்ணலாம்.
சங்க இலக்கிய நூல்கள் மொத்தம் பதினெட்டு இருந்தாலும் அவற்றுள் பண்டைக் காலத் தமிழர்களின் ஒழுக்க வழக்கங்கள், மரபுகள், இயல்புகள், அந்தக் காலத்தின் தன்மை, இயற்கைச் சூழல் என அனைத்தையும் அறியச் சிறந்த நூலாகப் பரிந்துரைக்கப்படுவது கலித்தொகைதான்.
அப்படிப்பட்ட தமிழர்தம் காலப்பெட்டகத்திலிருந்து (time capsule) இதோ ஒரு காட்சி.
காதலனுடன் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்காகத் தாய்-தந்தையைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் தலைவி. இந்தக் காலத்தில் நாம் இதை ‘ஓடிப் போதல்’ என்கிறோம். ஆனால், சங்கத் தமிழ் இதை ‘உடன்போக்கு’ எனும் அழகிய சொல்லால் அழகு செய்கிறது. அதாவது இணைந்து வெளியேறுதல்! யாருடன் இணைந்து எங்கிருந்து வெளியேறுதல்? காதலனுடன் இணைந்து பெண் தன் வீட்டை விட்டு வெளியேறுதல்!
அப்படி உடன்போன தன் மகளைக் காணாமல் தேடிக் கொண்டு வரும் தாய், எதிரில் வரும் அறம் உணர்ந்த சான்றோர்களைப் பார்த்து, “கொள்கையும் ஒழுக்கமும் உடைய சிறந்தவர்களே! மற்றவர்களுக்குத் தெரியாமல் இதுநாள் வரை கூடி வாழ்ந்த என் மகளும் இன்னொருத்தியின் மகனும் இந்த வழியாகப் போனதைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறார்.
அதற்கு அவர்கள், “பார்த்தோம்! சிறந்த நகைகளை அணிந்த அந்த இளம்பெண்ணின் தாயே, அழகிய பெருமகனுடன் பாலைவனத்தையும் கடந்து போகத் துணிந்து இந்தக் காட்டின் வழியே செல்கிறாள் உங்கள் மகள். அவள் மிகுந்த கற்புடையவள்! சிறந்த ஒருவன் பின்னால்தான் அவள் சென்றிருக்கிறாள். அவளுக்காக நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அவள் எடுத்த இந்த முடிவுதான் சிறந்த அறவழியும் கூட!” என்று அறிவுரை கூறி அந்தத் தாயைத் திரும்பி வீட்டுக்குப் போகுமாறு வழிநடத்துகிறார்கள். (கலித்தொகை: பாலை-9).
காதலிப்பவனையே மணப்பவள்தான் கற்பில் சிறந்தவள். அப்படித் திருமணம் செய்து கொள்வதற்காகப் பெண் தன் வீட்டை விட்டு வெளியேறுவது கூடத் தவறில்லை. மாறாக, அதுவே அறம் சார்ந்த வழி” என இன்றைய சாதி வெறியர்களின் கன்னத்தில் அறைகிறது இந்தச் சங்கத் தமிழ்ப் பாடல்.
அது மட்டுமில்லை, “மற்றவர்களுக்குத் தெரியாமல் இதுவரை சேர்ந்து வாழ்ந்தவர்கள் (தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்)” என அந்தத் தாய் குறிப்பிடுவதிலிருந்து அந்தக் காலத்தில் பெண்ணும் ஆணும் திருமணத்துக்கு முன்பே கூடும் (sex) வழக்கம் இருந்திருப்பதும் தெரிய வருகிறது.
“கற்பை உடலுடன் தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள்! அது மனம் சார்ந்தது; ஒழுக்கம் சார்ந்தது” என இன்று கரடியாய்க் கத்துகிறோம். ஆனாலும், பெரும்பாலானோருக்கு அது சென்று சேரவில்லை. ஆனால் இந்தத் தெளிவு தமிழர்களுக்கு அன்று இருந்திருப்பது இந்தப் பாடலிலிருந்து புரிகிறது. அதனால்தான் உடலை ஒரு பொருட்டாகக் கருதாமல் மணம் புரியும் முன்பே கூடுவது அவர்களால் முடிந்திருக்கிறது.
மொத்தத்தில், தனக்குப் பிடித்தவனைக் காதலிக்கும் உரிமையும் காதலித்தவனையே கரம் பற்றும் துணிவும் தமிழ்ப் பெண்ணுக்கு அந்தக் காலத்தில் இருந்திருப்பதைக் கிறித்துப் பிறப்புக்கு முன்பே எழுதப்பட்ட இந்தப் பாடல் உறுதிப்படுத்துகிறது. தவிர, மக்களுக்கு அறநெறிகளை எடுத்துரைக்கும் இடத்திலிருந்த அந்தக் காலத்துப் பெரியவர்கள் – சான்றோர்கள் கூட இதை ஆதரிப்பவர்களாகத்தாம் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
இந்த ஒன்று மட்டுமில்லை, சங்க இலக்கியங்களில் பண்டைத் தமிழகத்தின் காதல் வாழ்வுமுறை பற்றி இப்படிப் பற்பல பாடல்கள் உள்ளன.
தலைவனும் தலைவியும் வீட்டுக்குத் தெரியாமல் காதலிப்பது, பிறர் அறியாமல் சந்திப்பது, அதற்குத் தோழி உதவுவது, தலைவன் பணம் ஈட்டுவதற்காக (சம்பாதிப்பதற்காக) ஊரை விட்டு வெளியேறினால் தலைவியும் அவனுடனே சென்று விடுவது போன்றவை அப்பாடல்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
உலகில் தமிழர்களைப் போலவே நீண்ட நெடிய வரலாறு கொண்ட இனங்கள் மேலும் சில உண்டு. அவர்களுடைய ஆதிகால இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் அனைத்தும் கடவுளைப் போற்றுபவையாகவும் ஏதோ ஒரு வகையில் கடவுள் தொடர்பானவையாகவும்தாம் இருக்கின்றன. கிரேக்கக் காப்பியங்கள், ஆப்பிரிக்க நாடோடிக் கதைகள், ஆரியத் தொன்மங்கள், எகிப்தியப் பழங்கதைகள் என அனைத்தும் இப்படித்தாம்.
ஆனால், தமிழர்களின் பழம்பெரும் நூல்களான சங்க இலக்கியங்களோ காதலையும் வீரத்தையுமே பெரிதும் பாடுகின்றன. மொத்தமாகவே அகம் (காதல்) – புறம் (வீரம்) என்கிற இரு பெரும் பிரிவுகளாகத்தாம் அவை பகுக்கப்பட்டுள்ளன. அதிலும் புறத்திணையை விட அகத்திணையே அதிகம்!
சங்க இலக்கியத்தின் மொத்தப் பாடல்கள் 2381. அவற்றுள் 1862 பாடல்கள் அகம் பாடுகின்றன. அதாவது தமிழர் வாழ்வியல் – வரலாற்று – பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் சங்க இலக்கியங்கள் அதிகம் போற்றுவதே காதலைத்தான்!
“அப்படியானால் காதல் திருமணம் மட்டும்தான் தமிழர் வழக்கமா? மாமன் மகள், அத்தை மகன் எனக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததெல்லாம் நமது பண்பாடில்லையா?” என நீங்கள் கேட்கலாம். ஆனால், சிந்தித்துப் பார்த்தால் அது கூட ஒரு வகையில் காதல் திருமணம்தான் என்பதை உணர முடியும்.
அடிப்படையில் காதல் திருமணம் என்பது என்ன? ஒருவரோடு பழகி, புரிந்து கொண்டு, அதன் பின் மணப்பதுதானே? அப்படிப் பார்த்தால் சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடி, உறவாடி, பழகிய அத்தை மகனையோ மாமன் மகளையோ கட்டிக் கொள்வதும் காதல் மணம்தானே?
இப்படிப்பட்ட மண்ணில் உட்கார்ந்து கொண்டு காதலை நம் பண்பாட்டுக்கு எதிர், கற்பு நெறிக்கு முரண், ஒழுக்கமில்லாத செயல் எனவெல்லாம் சிலர் பிதற்றுகிறார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்குத் தமிழர் வரலாறு பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படிக் காதலுக்கு எதிராக மீசை முறுக்கும் அனைவரும் சொல்லும் இன்னொரு காரணம், “எங்கள் சாதியில் இதுவரை வேற்று சாதி இரத்தம் கலந்ததே இல்லை; இனியும் கலக்கக்கூடாது” என்பது.
ஆனால் சங்கக் காலத்திலோ பெண் தான் விரும்பிய எந்த ஆணையும் காதலிக்கலாம், கைப்பிடிக்கலாம் எனும் உரிமை இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சமூகத்தில் கலப்பில்லாத சாதி என்கிற ஒன்று எப்படி இருந்திருக்க முடியும்?
சொல்லப் போனால், சாதி என்பதே அன்று இல்லை! தமிழர்களை மேல் – கீழ் எனப் பிரித்து நம் இனத்தின் எல்லா வீழ்ச்சிகளுக்கும் மூலக் காரணமான சாதி என்பது ஆரியச் சாதியர் வருகைக்குப் பிறகுதான் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை தமிழ் மண்ணில் வெறும் குடிகள் மட்டுமே இருந்தன. “துடியர், பாணர், பறையர், கடம்பர் ஆகிய நான்கு தவிர வேறு எதுவும் குடி இல்லை” எனச் சங்க இலக்கியமான புறநானூறு கூறுவது இதற்குச் சான்று (பாடல் 335). ஆனால் அவரவர் குடிகளுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் அன்று கிடையாது.
இப்படிக் குடிகளாக வாழ்ந்த தமிழ் மக்கள்தாம் பின்னாளில் சாதியினராக மாற்றப்பட்டிருக்கிறார்கள் எனும்பொழுது இதில் எது கலப்பில்லாத சாதியாக இருக்க முடியும்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் குடி விட்டுக் குடி காதலித்தும் மணம் புரிந்தும் வாழ்ந்த நம் முப்பாட்டன்-முப்பாட்டிகளின் அதே உதிரம்தானே சாதியாக மாறிய பின்பும் நம் உடம்பில் ஓடுகிறது? அப்படியிருக்க இதில் எதுதான் கலப்பில்லாத உதிரம் எனச் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னால் அதை விட முட்டாள்தனம் வேறெது இருக்க முடியும்?
எனவே தமிழர்களே!
 உண்மையிலேயே நீங்கள் தமிழ்த் தாய்-தகப்பனின் உறவுகளெனின் காதலை எதிர்க்காதீர்கள்!
காதலர்களை வாழ விடுங்கள்! தமிழ்ப் பண்பாட்டை வாழ விடுங்கள்!
ஆம்!
காதலே நம் பண்பாடு! காதலே நம் ஒழுக்கம்! காதலே நம் கற்பு நெறி!
வாழ்க காதல்! வாழ்க தமிழ்!
    – ஊடகவியலர் இ.பு.ஞானப்பிரகாசன்
தினச்செய்தி 24.03.2020

ஞாயிறு, 22 மார்ச், 2020

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்இலக்குவனார்

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்!

 உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது.
 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.”  
(திருவள்ளுவர், திருக்குறள் 70)
என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
(ஔவையார், கொன்றைவேந்தன், 37, 38)
தந்தை தாய் பேண் (ஔவையார், ஆத்திசூடி, 20)
என்பனவும்
குமர குருபரர்புதல்வர்க்குத் தந்தையும் தாயும் தெய்வம் என்பதும்
பெற்றோரின் உயர்வை நமக்கு உணர்த்தும்.
இராமாயணத்தில், மாயத்தோற்றத்தில் சனகனை உருவாக்கி மடிந்ததாக் காட்டும் பொழுது தந்தை இறந்ததாகக் கருதிய சீதை,
எந்தையேஎந்தையேஇன்று என் பொருட்டு உனக்கும் இக் கோள்
வந்ததேஎன்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோமண்ணோர்
தந்தையேதாயேசெய்த தருமமேதவமே!’ என்னும்;
வெந்துயர் வீங்கிதீ வீழ் விறகு என வெந்துவீழ்ந்தாள்.”
என்கிறாள். தந்தையைத் தாயாகவும் அறமாகவும், தவமாகவும் போற்றும் மனப்பான்மையை நாம் காணலாம்.
இதுபோல், வாலி இறந்ததும் அவன் மகன் அங்கதன்,
எந்தையேஎந்தையேஇவ் எழு
திரை வளாகத்துயார்க்கும்,
சிந்தையால்செய்கையால்ஓர்
தீவினை செய்திலாதாய்!”
என்று தந்தையின் உயர்வை எண்ணி அரற்றுகிறான்.
ஈச னடிபோற்றி எந்தையடி போற்றி” (திருவாசகம்)
என மாணிக்க வாசகர், கடவுளைத் தந்தையாகக் கருதுகிறார்.
அப்பாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல்வேண்டும்
என வள்ளலார் இராமலிங்க அடிகள், இறைவனை அப்பா என்றே கருதி அழைக்கிறார்.
இவ்வாறு தந்தையை உயர்வாகப் போற்றுவதையும் அதனால் இறைவனைத் தந்தைக்கு ஒப்பாகக் கருதுவதையும் நாம் பல பாடல்கள் வழிக் காணலாம்.
இப்பொழுதெல்லாம் அந்த நாள், இந்த நாள் என்று ஏதேதோ நாள் கொண்டாடுகிறார்கள். இவற்றையெல்லாம் நாம் கொண்டாட வேண்டுமா என்பது பலர் எண்ணம். கடந்த ஒரு நூற்றாண்டாகப் பிற நாடுகளில் கொண்டாடப்படும் இத்தகைய நாள்கள் வணிக நோக்கில் முதன்மைப்படுத்தப்பட்டு நம் நாட்டிலும் இப்பொழுது பின்பற்றப்படுகிறது. எனவே, தேவையில்லை என்பதே மூத்தோர் எண்ணம்.
 எல்லா நாளிலும் எல்லாரையும் போற்ற வேண்டும் என்பதே உண்மைஅதனால்இத்தகைய தனித்தனிநாள் தேவையில்லை என்பதும் ஒரு சாரார் கூற்றுஇவற்றிலெல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் நம் நாட்டில் இன்றைய பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, கூட்டுக்குடும்பம் அருகியமை போன்ற பல காரணங்களால், உறவுகளை மதிக்கும் நிலை மறைந்து வருகிறது. எனவே, தந்தைநாள் முதலான நாள் வரும்பொழுதாவது இது குறித்த சிந்தனை உண்டாவதும், திருந்திய போக்கு ஏற்படுவதும் தந்தை மீதுள்ள மதிப்பினை வெளிப்படுத்துவதும், நல்லன செய்வதில் நாட்டம் உண்டாவதும் பெருகுகிறது. இவற்றை யெலலாம் ஒரு நாள் கூத்தாக மாற்றாமல் தொடர்ந்து நிலவும் பண்பாடாகக்கடைப்பிடிக்கும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்..
தலைப்பு தந்தையைப்பற்றியது என்பதால் நாம் இங்கே அதனைப்பற்றி இனிப் பார்ப்போம். உலகில் இந்தியா முதலான 52 நாடுகள் சூன் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையைத் தந்தையர் நாளாகவும் பிற நாடுகள் (ஏப்பிரல் நீங்கலான ஒரு மாதத்தில்) ஏதோ ஒரு நாளினைத் தந்தையார் நாளாகக் கொண்டாடுவதும் வழக்கமாக உள்ளது.
 சொனாரா இசுமார்ட்டு தோட்டு (Sonora Smart Dodd), 6 பிள்ளைகளைவிட்டுவிட்டுத் தாய் மறைந்தபின், மறுமணம் புரியாமல் தங்களைப் பேணிய தந்தை வில்லியம் இயாக்சன் இசுமார்ட்டு(William Jackson Smart)-இனைப் புகழும் வகையில் தந்தையர் நாள் கொண்டாட விரும்பியதனால் உருவாகி இது படிப்படியாக வெவ்வேறு நிலைகளை எட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சூலை 5, 1908 இல் முதன்முதலில் தந்தையா் கொண்டாடப்பட்டது என்பாரும் உளர். 1909இல் சொனாரா வேண்டியதற்கிணங்க 1910 முதல் தந்தையார் நாள் கொண்டாடப்படுவதாகவும் கூறுகின்றனர். (இரு கருத்துகளுமே விக்கிபீடியாவில் காணப்படுகின்றன.)
தந்தையர் நாள் கொண்டாடும் நாம் திரைப்படங்களில் தந்தையர்பற்றிய தவறான படிமம் உருவாக்கப்படுவதை நீக்க முயல வேண்டும். தமிழ்த்திரைப்படங்களில் அப்பா எனப்படுபவர் பொதுவாக மகன் முன்னிலையில் அவனை வேலைவெட்டி இல்லாதவன், தண்டச்சோறு, ஊர் சுற்றி, பொறுப்பில்லாத போக்கிலி என்பனபோல் ஏசுவார்; கண்டிப்பார்.   ஆனால், மகன் இல்லாத பொழுது தன் மனைவியிடம் அவன்மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவார்.
மகனோ அப்பாவை ஒருமையில் பேசுவான். இந்த ஒருமையில் பேசுவது என்பது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்தது. அச்சமூகம் ஆதிக்கம் செலுத்திய ஊடகங்கள் வழியாக இப்பேச்சு பரவி, அடுத்துச் சென்னை வழக்கம்போல் மாறி, இன்று எங்கும் இதுவே நிலைக்கின்றது. பெரியவர்களை ஒருமையி்ல் கூறும் ஊடகம் சிறு பிள்ளைகளிடம், நீங்கள், வாங்கள், என்பனபோல் மதிப்பாகப்பேசுவர். இப்பழக்கமும் இன்று மக்களிடையே பரவி விட்டது.
 எனவே, அப்பாவை மகன் ஒருமையில் குறிப்பிடுவதைத் தவறு என யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் மகன் தந்தையை அடிக்கக் கையை ஓங்குவதாகத்தான் காட்டுவார்கள். அண்மையில் வந்த ஒரு படத்தில் (கேடி பில்லா, கில்லாடி இரங்கா) “அடி பார்ப்போம்” எனத் தந்தை கூறியதும் மகன் அடித்துவிடுவதாகவே காட்சி இருக்கும். பின்னர் அவன் தந்தையைத் தன் நாயகனாக அவரது ஒளிப்படத்தில் குறிப்பிடுவான். இந்தக் கதை எதற்கு? படங்களில் இப்படி எல்லாம் பார்க்கும் இளைஞர்களுக்குத் தந்தையை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகும்?
பொதுவாகவே திரைப்படங்களில் தந்தை பற்றிய வெளிப்பாடு சரியாக இல்லை என்பதே உண்மை. நடிகர் திலகம் (சிவாசி கணேசன்அப்பாவாக நடித்த படங்களில் எல்லாம் மறைமுகமான பாசமுள்ள அப்பாவாகக் காட்டிக் கொண்டு மோசமான அப்பாகவே நடித்திருப்பார். (நான்பார்த்த படங்களில் எல்லாம் அப்படித்தான் நடித்திருப்பார். பிற படங்களில் மாறி நடித்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இப்படிப் பாத்திரப்படைப்பு இருந்தால்தான அவர் நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்ற தவறான எண்ணமே காரணம்.) சான்றாக எல்லாராலும் பாராட்டப்படும் ‘தங்கப்பதக்கம்’ படத்தைக் கூறலாம்.
காவல் அதிகாரியான அவர் மகனிடம் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், கனிவை வெளிப்படுத்த என்ன தடை? வீட்டிலும் காவல் அதிகாரியாக எண்ணாமல் தந்தைபோல் நடந்துகொள்ள ஏன் இயலவில்லை? காவல் அதிகாரியின் வேலை தண்டிப்பதுதானா? திருத்துவது இல்லையா? தன் மகனின் குற்றச் செயலை அறிய இரு காவல் துறையினரை மாறு வேடத்தில் அனுப்பிப் பண உதவி கேட்கச்செய்வார். மகனும் உதவுவான். அதை வைத்து அவன் திருட்டைக் கண்டுபிடிப்பார். உண்மையில் அவர், மகனின் உதவும் பண்பையும் பரிவுப்போக்கையும் உணர்ந்து அவனை அவன் வழியில் திருத்ததானே முயன்றிருக்க வேண்டும். அன்பு காட்டி அவனைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து சரணடையச் செய்திருக்கலாமே! கடமை என்ற போர்வையில மகனைப் பகைவன்போல் கருதும் மோசமான தந்தையாகத்தான் இதில் நடித்திருப்பார்.
 பொதுவாகவே தந்தையை வழிகாட்டியாகவும் தாய்மைஉணர்வும் உள்ளவராகவும்தோழனாக நடந்து கொள்பவராகவும் ஆற்றுப்படுத்துபவராகவும் காட்டாமல் மகனின் எதிரிபோல் காட்டுவதே திரைப்படங்களின் பழக்கம்தந்தை எதிரிபோல் நடந்துகொண்டதும் மகனையும் அதற்கேற்ப எதிரியாகத்தானே படைக்க முடியும்எனவேதிரைப்படங்கள் இப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இக்கருத்தை நான் முன்னர்த் தெரிவித்த பின்பு, இப்பொழுது சில படங்கள் தந்தையின் அன்பை உணர்த்தும் வகையில் வருவது மகிழ்ச்சிக்குரியது.
தந்தை, மகன் அல்லது மகள் மீதுள்ள அன்பை அவர்களிடம் நேரிடையாக வெளிப்படுத்துபவராகவும். பிள்ளைகளுக்கு இடர்ப்பாடு வரும் நேர்வுகளில் ஆற்றுப்படுத்தி ஆறுதல் கூறுபவராகவும் காட்ட வேண்டும். வேலை கிடைக்காச் சூழலில் பிள்ளையின் வருவாயை நாடும் குடும்பம் எனில், “உன் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வேலை கிடைக்கும். அதுவரை கிடைக்கும் வேலையைப் பார்” என்று கூற வேண்டும். போதிய வருவாய் உள்ள குடும்பம் எனில், “உன் கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையில் சேர்ந்தால்தான் முன்னேற இயலும். எனவே, வேலை கிடைக்கவில்லை எனக் கவலைப்படாதே. உன் திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு முயற்சி செய். கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும்.” என நம்பிக்கையுரை வழங்க வேண்டும்.
பொறுப்பினை உணராமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், “நண்பர்கள் துணை தேவைதான். அவர்களுடன் தகுதியை வளர்த்துக்கொள்வது குறித்தும் வேலைக்கான தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவதுபற்றியும் கலந்து பேசு. தம்பி, தங்கையர் படிப்பில் கருத்து செலுத்தி அவர்களுக்கு ஊக்கமாக இரு. வீட்டுப் பொறுப்பில் உன்னால் முடிந்ததை ஏற்றுக் கொண்டு எங்கள் சுமையைக் குறை”   என அமைதியான முறையில் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் இப்போதைய போக்கையே தொடர்ந்தால் இளந்துலைமுறையினர் வாழ்வைச் சிதைக்கிறார்கள் என்றுதான் பொருள்.
‘திரைப்பட அப்பாக்கள்’ திருந்த வேண்டுமெனில் இயக்குநர்களும் கதையாசிரியர்களும் திருந்த வேண்டும். திருந்துவார்களா? தந்தை-மகன் நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் படங்களை உருவாக்குவார்களா?
 திருந்துவார்கள் என்று நம்பிக்கை வைப்போம்!
 – இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 03.03.2020