திங்கள், 3 ஜனவரி, 2011

திட்டத்தை எவ்வாறு வகுத்தாலும் கண்டிப்பாகத் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களில் மிகப் பெரிய அளவில் தொகுதி  உறுப்பினர் பெயரை விளம்பரப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அவர் ஒன்றும் தன் சொந்தப் பணத்தில் செலவு செய்யவில்லை. மக்கள் பணத்தில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் பொழுது திட்ட விளக்கமும் அறிவிப்பும்தான் முதன்மையானவையே தவிர வேறு எவர் பெயரும் அல்ல. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

dinamani editorial pages: கொள்கையைத் தொலைத்த சுயவிளம்பரங்கள்

பெரியோரை வியத்தலும் இலமே என்னும் புறநானூற்று வரியைக் கடைப்பிடித்துப் புகழ்முகங்களுக்குத் துதிபாடும் போக்கு நின்றால்தான் இதற்கு விடிவு கிடைக்கும். இல்லாவிட்டால் போட்டிப் போட்டுக்கொண்டு விளம்பர முகங்கள் பெருகும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கொள்கையைத் தொலைத்த சுயவிளம்பரங்கள்

First Published : 03 Jan 2011 12:38:28 AM IST


தனிநபரின் கொண்டாட்டங்களைப் பார்த்து ஆத்திரப்படவில்லை. அதே நேரத்தில் தனிநபர்களின் கொண்டாட்டங்களில், அப்பாவி உழைப்பாளி மக்களை உள்ளடக்குகிறபோது, அமைதியாகவும் இருக்க முடியவில்லை. மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்த தினங்களுக்கு விடுமுறை விடப்படுகிற காரணத்தால், ஓரளவு நினைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. மகாகவி பாரதியார், தந்தை பெரியார், மாவீரன் பகத்சிங் போன்றவர்களுக்கு விடுமுறையும் இல்லை, "கட் அவுட்' வைத்து நினைவூட்டுவதற்குப் பணம் மற்றும் படைபலமும் இல்லை. மேற்குறிப்பிட்ட தியாகிகளுக்கு இல்லாத பணம் மற்றும் படைபலம், இன்றைய அரசியல் வாதிகளில் பலருக்கும் இருப்பதால், அவர்களின் பிறந்த தினத்தை நினைவில் வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம். சாலையைக் கடக்கும் ஒவ்வொரு, சராசரி குடிமகனும், பார்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்த விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன. பிறமாநிலங்களை விட தமிழகம், இக்கொண்டாட்டத்தில் முன்னணியில் இருக்கிறது. இது ஒரு நாள் கொண்டாட்டமாக இருந்தால், நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாதக் கணக்கில் நடைபெறும், பிரசாரங்களாக மாறிவருவதால், பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. சுவர் எழுத்துப் பிரசாரம் துவங்கி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்கள், திரும்பும் திசை எங்கும் "கட் அவுட்'கள் ஆகியவை ஒருபுறம். மற்றொரு புறம் வாரக்கணக்கில், கிரிக்கெட் அல்லது வேறு போட்டிகள், நகரமாக இருந்தால் குத்தாட்டம், கிராமமாக இருந்தால் கரகாட்டம் போன்ற உற்சாகமூட்டும் ஏற்பாடுகள். இவை போதாது என்று, தெருக்கள் தோறும் ஒலி மற்றும் ஒளி அமைப்புகளும், போதை வஸ்துகளும் ஏற்படுத்தும் தாக்கம்.மதுரை, கடந்த சில ஆண்டுகளாக சிறப்புச் செய்தியாக மாறி வருவது கண்கூடு. 2008, ஜனவரி 30-ம் தேதி மதுரையில், விடுதலைப் போராட்ட வீரராக அடையாளம் காணப்பட்ட, வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலையை "கட் அவுட்'கள் கொண்டு வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து விட்டனர், மதுரை மாநகரத்து உடன்பிறப்புகள். 2010, ஜூலை 15 காமராஜின் பிறந்தநாள், நகரமக்கள் தொகையை விஞ்சும் அளவுக்கு விளம்பரங்கள். ஆனால் அதில் காமராஜைத்தான் காணவில்லை. அன்று விருதுநகருக்கு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரியின் புகைப்படத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம், காமராஜுக்குத் துளியும் தரப்படவில்லை. "எளிமையின் அடையாளமே' என்ற வாசகங்களை, இது போன்ற வாழ்த்துச் செய்திக்கான விளம்பரப் பலகைகளில் பார்க்கிறபோது, நடமாடும் நகைச்சுவைத் தொலைக்காட்சிகள் வந்து விட்டனவோ என சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது. தங்கள் தலைவர்களாக போற்றப்பட வேண்டிய மறைந்த வீரர்கள், இருட்டடிப்புச் செய்யப்படுவதும், ஆடம்பரங்கள் தலைவிரித்து ஆடுவதும், பொது மக்களுக்கு, வேடிக்கைப் பொருளாக மாறுவதும், சமூக அக்கறையின்மையின் வெளிப்பாடு. எனவே, இது குறித்த கவலை பொதுமக்களிடம் உருவாக வேண்டியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, உயர் நீதிமன்றம், சென்னை நகரில், குறிப்பாக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விளம்பரப் பலகைகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதற்குக் காரணம் விமான ஓட்டிகளின் பார்வையைக் கூச்சமுறச் செய்கிற வகையில் வண்ண விளக்குகளைக் கொண்டதாக விளம்பரம் அமைந்ததாகும். அதுபோல் பொதுமக்களை, தேசத்  தலைவர்களைக் களங்கப்படுத்தாமல், பொதுஇடங்களின் அமைதியைப் பாதிக்காத தனிநபர் விழாக்களாக அமைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்.இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பொதுக் கூட்டங்களுக்கும், போராட்டம் நடத்தும் இடங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசும், நீதித்துறையும், இது போன்ற தனி நபர்கள் செய்யும் இடையூறுகளைப் பொறுத்துக் கொள்வது ஏன் என்பது பொதுவான அரசியல் நோக்கர்களின் கேள்வி. அதுமட்டுமல்ல, தனிநபர்கள் முன்னிலைப்படுத்தப்படும் போக்கு, கொள்கையற்ற நிலையிலேயே மேலோங்குகிறது. கொள்கைக்கு இடமின்றித் தலைவரின் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆக்கிரமிக்கின்றன. விமர்சனக் கண்ணோட்டம் இல்லாத, விவாதமற்ற, துதிபாடுகிற அரசியலுக்கு வழிவகுக்கும் இதன் மூலமான திசைதிருப்பல் ஏற்பாடுகள், ஜனநாயகத்தைக் கீழ்நோக்கித் தள்ளும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய விளம்பரப் பலகைகளை அமைப்பவர்கள், தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல இடங்களில், பல்வேறு சமூகவிரோதச் செயல்களைச் செய்பவர்களும் இடம்பெறுவதைக் காண முடிகிறது. இத்தகைய நபர்களின் விளம்பர நோக்கம், தலைவரின் வீட்டு விழாவுக்கானதாக மட்டும் இருப்பதில்லை. கூடவே, தான் இந்தத் தலைவருக்கு வேண்டியவர் என்பதையும், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. இத்தகைய தனிநபர் கொண்டாட்டங்களில், சமூக விரோதிகளில் பலர் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட தலைவர்களும், அப்பாவிப் பொதுமக்களும் உணர வேண்டும். இதோடு வரி கட்டப்படாத கருப்புப் பணம், ஊழல் பணம் போன்றவை புழக்கத்துக்கு வருவதன் காரணமாக, மக்களுக்கான பணம் இப்படி வாரி இரைக்கப்படுவதைக் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது.     பிறந்தநாள்களை அல்லது தங்கள் வீட்டு விழாக்களை கொண்டாடக்கூடாது என அராஜகமான வாதத்தை முன்வைக்க விரும்பவில்லை. அது தனிமனித உரிமை. மூத்த அரசியல் தலைவர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும்கூட வாழ்த்துச் சொல்லும் மாண்பு வளர வேண்டும். அது பத்திரிகைச் செய்தியாக உருப்பெற வேண்டும். அந்த அளவிலான நிகழ்வுகள் சமூகத்தைப் பண்படுத்தும். ஆனால் ஒரு நாட்டில், 20 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில் 83.4 சதவீத மக்கள் உள்ள நிலையில், அத்தகைய உழைப்பாளி மக்களை, தலைவரின் வீட்டு விசேஷத்துக்காக சுவரெழுத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதகுலம் போதுமான நாகரிக வளர்ச்சியடையாத, பின்தங்கிய சமூகத்தின் பண்பாடு இல்லையா? எனவே சமூகம் தொடர்ந்து வளர்ச்சிபெற, இதுபோன்ற சின்னச்சின்ன நிகழ்வுகள் குறுக்கீடாக அமைகிறதோ என்ற ஐயப்பாட்டில் இருந்தே இந்த விவாதத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. மக்களை அவர்களின் உரிமை குறித்த சிந்தனைக்குத் தூண்டுவதில், தலைவர்களுக்குப் பங்கு இருக்கிறது என்கிற ஆதங்கத்தில் இருந்தே இந்த விவாதத்தைத் தூண்ட வேண்டியுள்ளது. இத்தகைய விவாதங்களில் உலக மற்றும் தமிழக முற்போக்கு இயக்கங்களுக்குப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர் இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது, இலவசத் திருமணங்கள், அன்னதானம் ஆகிய நற்பணிகள் நடைபெறுவதைக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில், நிறையக் கொண்டாட்டங்கள அரங்கேறுவதால், இலவசங்களில் மக்கள் வாழ்ந்து விடலாம் என்று கருதினால், சுயமரியாதை இயக்கம் வளர்ந்த தமிழ்நாடு என வரலாறு கற்பிப்பதில் பொருளில்லை. மகாபாரதக் கதையில், பாண்டவர்களின் தலைவன் தருமனுக்கு ஏழு உலகத்தையும் சுற்றிக்காட்ட, கிருஷ்ணன் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றாராம். ஓர் உலகத்தில், யாரும் யாருக்கும் தருமம் செய்யாத தன்மையும், மக்கள் எங்குமே கையேந்தாத நிலையும், இருப்பதையும் தர்மன் கண்டுள்ளார். இவ்வூரில், தருமம் செய்வோரே இல்லையே!  இவ்வூரின் மன்னனும், தர்மகாரியங்களில் ஈடுபடவில்லையே என கிருஷ்ணனிடம், தருமன் கேட்டதாகவும், அதற்கு கிருஷ்ணன், இவ்வூரில் யாருக்கும் தர்மம் தேவைப்படாத நிலையை மன்னன் ஏற்படுத்தியுள்ளான் என்று விளக்கம் அளித்ததாகவும், பள்ளி ஆசிரியர் நீதிபோதனை வகுப்பில் குறிப்பிட்டதை, மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. ஆம் மக்களை யாசகராக வைத்திருப்பதை விடவும், யாசகர் இல்லாத ஆட்சியை உருவாக்குவது, சாலச் சிறந்தது. நற்பணிகள் என்பது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில், அனைவரும் இணைந்து செய்வது. நமது நாட்டில் ஒருவர் கொடுப்பதையும், மற்றொருவர் யாசகம் செய்வதையும், நற்பணி என சுருக்கிக் கொள்ளக் கூடாது. தினமணியின் தலைப்புச் செய்தியில், ஒருமுறை கல்பாக்கத்தைச் சார்ந்த தம்பதி இடம் பிடித்தனர். தொடர்ந்து 25 ஆண்டுகளாக இலவச டியூஷன் கற்றுக் கொடுத்து வந்தனர் என்பதே செய்திக்கு அடிப்படை. அந்தச் செய்திக்கு முன் அந்தத் தம்பதிக்கு, வேறு எந்த வகையிலான விளம்பரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டதில்லை. அதுபோல் ஓசையின்றிப் பிறருக்கு உதவுவதே சிறந்த பண்பாடாகக் கொள்ள முடியும். ஒரு கை தருவதை இன்னொரு கை அறியக் கூடாது என்ற பழமொழி, இத்தகைய பொருளில் தான் சொல்லப் பட்டிருக்க வேண்டும்.எனவே கொண்டாட்டங்கள், பிறந்த தினமாக இருந்தாலும், வேறு நிகழ்வுகளாக இருந்தாலும், அதைப் பொதுவெளிக்குக் கொணர்ந்து மக்கள் உணர்வுகளை, மழுங்கச் செய்வதைத் தவிர்க்க முன்வர வேண்டும். நம் தேசத்தில் விவாதிக்க நிறையக் கருத்துகளும், கொள்கைகளும் இருக்கின்றன. அவற்றைத் திசைதிருப்ப வேண்டாம் என்பதே வேண்டுகோள்

Road and speed or new: editorial, dinamani: தலையங்கம்: சாலை புதிது, வேகம் புதிது!

சாலையும்  விரைவும் புதியனவாக இருந்தாலும் அலட்சியம் என்பது என்றும்  தொடரும் பழைய தொடர்கதைதான் என நன்கு உணர்த்துகிறது தலையங்கம்.
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலையங்கம்: சாலை புதிது, வேகம் புதிது!


ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு விபத்துகள் படிப்பவர் நெஞ்சை வலிகொள்ளச் செய்வதாக இருந்தன. ஜனவரி 1-ம் தேதி, இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த வேன், கிருஷ்ணகிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அதிகாலை 2 மணியளவில் மோதியதில், புதுமணத் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.ஜனவரி 2-ம் தேதி தொப்பூர் அருகே, சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த கார், நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் 9 பேர் இறந்தனர்.இந்த இரண்டு சம்பவங்களும் அதிகாலையில் நிகழ்ந்துள்ளன என்பதும், இரண்டுமே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதால் நேர்ந்த விபத்துகள் என்பதும்தான், இந்த விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. இந்த இரண்டு விபத்துகள் மட்டுமல்ல; நாற்கரச் சாலைகளில் வாகனங்கள் வருவதற்கும் போவதற்கும் தனித்தனியாக மிக அகன்ற சாலைவசதி இருக்கும்போது, இத்தகைய விபத்துகள் லாரி ஒட்டுநர்களின் பொறுப்பற்ற தன்மையால் நிகழ்கின்றன என்பதுதான் உண்மை.இவர்கள் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, இந்த வழக்கில் இந்தியப் போக்குவரத்து வாகனச் சட்டத்தின்படி இவர்கள் குற்றமற்ற அப்பாவிகளாக எந்தவித அபராதமோ தண்டனையோ இல்லாமல் விடுவிக்கப்படக்கூடும். ஆனால் இந்த ஓட்டுநர்கள் இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்கும் அளவுக்குக் குற்றம் புரிந்தவர்கள் என்று நாம் துணிந்து சொல்லலாம்.நாற்கரச் சாலையில் எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்ல முடியாது. தேநீர் கடையையும், பஞ்சாபி தாபாவையும், அந்நிய மதுபானக்கடையையும் கண்ட மாத்திரத்தில் நாற்கரச் சாலையில் ஓரம் கட்டுவதற்கு எந்த லாரிக்கும் அனுமதியில்லை. இந்த லாரிகள் "சர்வீஸ் லேன்' எனப்படும் சாலையில் இறக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டுமே தவிர, நாற்கரச் சாலையில் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 7,000 கி.மீ. தொலைவுக்கான நாற்கரச் சாலைகள் முழுவதிலும் பார்த்தோமேயானால், நாற்கரச் சாலையிலேயே ஓரங்கட்டப்படும் லாரிகள், கார்கள்தான் அதிகம். நெடுஞ்சாலைப் பாதுகாப்புப் படை இவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். விபத்து நடந்தால், சாலையின் குறுக்கே நிறுத்தியதற்காக இவர்கள் மீது குற்றத்தைப் பதிவுசெய்து தண்டனை பெற்றுத்தரவும் வேண்டும். நாற்கரச் சாலையில் குறிப்பிட்ட தூரங்களில், வாகனங்கள் "சர்வீஸ்' சாலையில் இறங்கி ஏற வசதியுள்ள இடங்களில் மட்டுமே தேநீர் மற்றும் உணவகங்கள் இரவு நேரத்தில் திறந்திருக்கலாம் என்பதைக் கட்டாயமாக்குவதும்கூட மிகப்பெரும் பயன் விளைவிக்கும். நிறுத்தப்படும் லாரிகளில் மிகச் சிலவே, சிவப்பு விளக்குகளை எரியச் செய்து நிறுத்தப்படுகின்றன. பல வாகனங்கள் இதைச் செய்வதில்லை. "ரிப்ளக்டர்' மூலம்தான் வாகனம் நிற்பதை அறிய முடியும். பெரும்பாலான நேரங்களில், முன்னால் ஒரு வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே இவை உண்டாக்குவதால், வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் மிக அருகில் வந்த பிறகுதான் வாகன ஓட்டிக்கு அந்த லாரி நிறுத்தப்பட்டிருப்பதே புரியும் நிலைமை. அதற்குள் விபத்து நிகழ்ந்துவிடுகிறது.நாற்கரச் சாலையில் ஒரு லாரி பழுதாகி நின்றால், சாலையில் அங்காங்கே பொருத்தப்பட்டுள்ள தொலைபேசி மூலம் சுங்கச் சாவடிக்குத் தெரிவித்து, அதை இடையூறு இல்லாத இடத்துக்கு அகற்ற வேண்டும். இதற்கான விழிப்புணர்வும் லாரி ஓட்டுநர்களிடம் இல்லை. பழுதான லாரி என்பதை மற்ற வாகனங்கள் உணரும் வகையில், சிவப்பு விளக்கு மட்டுமன்றி, நீல வண்ண விளக்குகளையும் எரியச் செய்வதன் மூலம் இந்த எச்சரிக்கையையும் மேலும் வலுவானதாக மாற்ற முடியும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் நாற்கரச் சாலைகள் தோன்றாத நேரம். அப்போது வெளிநாடுகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் இந்தியர்கள் இறந்துபோய் அவர்களின்  சடலங்கள் விமானத்தில் வந்து இறங்குவது நிகழ்ந்தன. அப்போது அரபு நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பேராசிரியர் இதுபற்றிக் கூறியது இதுதான்:இந்தியர்களால் எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை நிதானிக்க முடிவதில்லை. இந்தியாவில் சாலை வசதி இல்லை என்பதால் அதிகபட்சம் நமது வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வரும். ஆனால் இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ, அரபு நாடுகளிலோ நிலைமை அப்படியல்ல. அங்கே நெடுஞ்சாலை அகலமானது. போக்குவரத்து நெரிசலும் இருக்காது. மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில்தான் வாகனங்கள் வந்துகொண்டிருக்கும். தொலைவில் வரும் காரின் உருவத்தின் அளவை வைத்து, தொலைவைக் கணித்து விடுவார்கள். ஆனால், வேகத்தைக் கணிக்காமல் சாலையில்  இறங்குவார். ஆனால் அதற்குள் வாகனம் வந்து மோதிவிடும். அயல்நாட்டில் இருக்கும் அதே சாலை வசதிகள் இன்று இந்தியாவுக்கு வந்துவிட்டன. நாற்கரச் சாலைகளில் 120 கி.மீ.க்கும் குறையாத வேகத்தில் கார்கள் பறக்கின்றன. ஆனால் இந்திய வாகன ஓட்டுநர்களின் கணிப்புகளும், வாகனத்தை ஓட்டும் பாணியும் இப்போதும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ஓட்டிய அதே நிலையிலிருந்து மாறவே இல்லை. அவர்கள் இந்த வேகத்துக்குப் பழகவில்லை என்பதைத்தான் இந்த விபத்துகள் காட்டுகின்றன.

Indians cheated in malyasia: மலேசியாவில் ஏமாற்றப்படும் இந்தியர்கள்!

முதல்வர் தான் அறிவித்தவாறு  அயலகத் தமிழர்நல வாரியத்தை உடனே அமைத்து இவை போற்ற குற்றங்கள் இனி நடக்காமல் தடுக்கவும் முன்னரே தீங்கு விளைவிக்கப்பட்டவர்களுக்கு உரிய  இழப்பீடு வழங்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மலேசியாவில் ஏமாற்றப்படும் இந்தியர்கள்!


கோலாலம்பூர், ஜன.2: மலேசியாவில் அதிகமான சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியர்களை ஏஜென்டுகள் ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.இதனால் மலேசியாவுக்கு வேலைக்கு வர வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்கள் ஏஜென்டுகளிடம் கவனமாக இருக்குமாறு மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு ஆள்களை வேலைக்கு அழைத்துவரும் ஏஜென்டுகளில் பெரும்பாலோர் மோசடிப் பேர்வழிகளாக உள்ளனர். அவர்கள் தங்களது வருமானத்துக்காக ஏமாற்று செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். முன்பெல்லாம் படிப்பறிவில்லாத இளைஞர்களும், பெண்களும்தான் ஏமாற்றப்பட்டனர். சமீபகாலமாக நன்கு படித்தவர்களும் ஏமாற்று ஏஜென்டுகள் விரிக்கும் வலையில் சிக்கி துயரை அனுபவிப்பது வழக்கமாகியுள்ளது.இப்படி மலேசியாவுக்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்ட 24 இந்தியர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பத் தயாராகவுள்ளனர். இதில் சிலர் நன்கு படித்தவர்கள். ஹோட்டல் நிர்வாகம் படித்த ஒருவருக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட் அழைத்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. மதுபானக் கடையில் சேர்த்துவிட்டுள்ளார். மதுபானக் கடையில் அவர் தினசரி 12 மணி நேரம் பணிபுரிந்துள்ளார். அவர் இவ்வளவு நீண்ட நேரம் உழைத்தும் உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளார் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த விதவையான லதா சண்முகம் என்பவர் மலேசியாவுக்கு வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு மாதத்துக்கு 10 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறி ஏஜென்ட் அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர் வேலைக்கு சேர்த்துவிட்ட வீட்டில் லதாவுக்கு மாதம் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் கொடுத்துள்ளனர். இதனால் மீதம் 5 ஆயிரம் ரூபாய் என்னவாயிற்று என்று லதா கேட்டுள்ளார். அதற்கு அந்த வீட்டு உரிமையாளர், உங்களை அழைத்து வந்த ஏஜென்டுக்கு கொடுக்க வேண்டும் என்றுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த லதா, தனக்கு சொன்னபடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வீட்டு உரிமையாளர், லதாவை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதையடுத்து உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார் லதா. அந்த உணவகத்தில் ஒரு மாதம் மட்டும் அவருக்கு 10 ஆயிரம் சம்பளம் கிடைத்துள்ளது. பிறகு அந்த உணவகத்தின் உரிமையாளரும் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அவர் தொடர்ந்து 6 மாதத்துக்கு சம்பளமே தரவில்லை. இதனிடையே, இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த லதாவின் மகள் தனது தாயிடம் கல்விச் செலவுக்கு பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் லதாவால் பணம் அனுப்பி வைக்க முடியவில்லை.  கல்விச் செலவுக்கு தனது தாய் பணம் அனுப்பி வைக்காததால் மனமுடைந்த லதாவின் மகள் தற்கொலை செய்து கொண்டார். மலேசியாவில் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால் லதா தாய்நாட்டுக்கு திரும்ப முடிவெடுத்தார். ஆனால் தாய் நாட்டுக்கு திரும்புவதற்கு விமானக் கட்டணத்துக்குகூட அவரிடம் பணம் இல்லை. அவரின் நிலையை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர்தான் அவருக்கு விமானக் கட்டணம் செலுத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் இதை மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை என்ற தமிழ்ப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். லதாவின் சோகக் கதை வெளியே தெரியவந்துள்ளது என்றால், மலேசியாவில் கஷ்டப்படும் இன்னும் எத்தனையோ இந்தியர்களின் சோகக் கதை வெளியில் தெரியாமல் உள்ளது. இந்திய இளைஞர்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து நல்லவேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மலேசியாவுக்கு வேலைக்கு வர விரும்பும் இந்தியர்கள் ஏஜென்டுகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை, சம்பளம் குறித்த ஏஜென்டின் வாக்குறுதியின் உண்மைத்தன்மையை 100 சதவீதம் உறுதி செய்த பின்னரே மலேசியாவுக்கு வர விமானத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே தூதரக அதிகாரிகளின் எச்சரிக்கை கலந்த அறிவுரையாக உள்ளது.

cong.will take good decesion: காங்கிசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்: ஈ.வி.கே.எசு. இளங்கோவன்

தி.மு.க.கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால்  காங் மண்ணை அடியோடு கவ்வி  இருக்கும் என்பது நன்கு தெரிந்தும் கோவன் இவ்வாறு உளறுவதால் காங். தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது  என்பதை  விட வேறு என்ன சொல்வது? 
மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காங்கிரஸ் விரைவில் நல்ல முடிவு எடுக்கும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை, ஜன. 2: காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.சென்னை, பெரம்பூரில் காங்கிரஸ் கட்சியின் 126-ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை இந்திரா தேசியப் பேரவை சார்பில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்."காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் வேண்டும், மரியாதை வேண்டும், அங்கீகாரம் வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள எல்லா காங்கிரஸôரும் கருதுகின்றனர். தி.மு.க. செய்யும் தவறுகளுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக வேண்டியுள்ளது. எனவே, தி.மு.க. அணியில் காங்கிரஸ் கட்சி இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான காங்கிரஸ்காரர்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களின் இந்த உணர்வுகளை எல்லாம் நாங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் சொல்லியிருக்கிறோம்.ஆகவே, காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும். அதன் பிறகு தமிழகத்தில் எங்களது பிரசாரமே வேறு விதமாக இருக்கும்.கடந்த மக்களவைத் தேர்தலில் நான், தங்கபாலு உள்பட காங்கிரஸ் கட்சியின் முன்னணியினர் பலர் தோல்வியடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம். தி.மு.க.வுடன் மட்டும் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கும்' என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

birth place of first man: முதல் மனிதன் தோன்றியது எங்கே?

உலகில் மனிதன் தோன்றிய பொழுது புவி அமைப்பு இப்பொழுதுபோல் இல்லை. ஆப்பிரிக்கா முதல்  ஆசுதிரேலியா வரையிலான தமிழ்க்கண்டம்  பிளவுபடாமல் இருந்தது. அப்பகுதியில்தான் மனிதன் தோன்றினான். மையப்பகுதியான குமரிக்கடல் நிலமாக ,
 இருந்த பகுதியில் திரளான  தமிழ் மக்கள் வாழ்ந்தனர். பல்வேறு கடல்கோள்களாலும் நிலப் பெயர்ச்சிகளாலும் உலகம் சிதறியது. இதனால் மக்கள் கூட்டமும் சிதறியது. சிதறிய எண்ணிக்கைக்கேற்ப நாகரிகம் வளர்ந்தது; புதிய இனப் பெருக்கமும் ஏற்பட்டது. கடலால் பிரிக்கப்படாதிருந்த இன்றைய  இலங்கையும் தமிழ்நாடும் இணைந்த பகுதியே மக்களினம் தோன்றிய முதல் புவிப்பகுதி எனப் பல்துறை ஆராய்ச்சி அறிஞர்கள் சொல்லியிருப்பது உண்மை. ௪ இலட்சம்  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த படிமம் இசுரேலில் கிடைத்தது எனில், அதற்கும் தொன்மையான காலத்தில் மனிதன் வாழ்ந்த பகுதி தமிழ்க்கண்டமாகும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இஸ்ரேல்:"உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்' என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.

சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர்.இதுகுறித்து டெல் அவிவ் பல்கலை விஞ்ஞானிகள் கூறியதாவது:நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின், உடல் படிவங்கள் "குசேம்' குகையில் கிடைத்துள்ளன. மனித பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய "பிளைஸ்தோகின்' காலத்தை சேர்ந்தது.

இதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஆப்ரிக்காவில் தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்ரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் என தெரிகிறது.

political cartoon of dinamalar:

flowers show: தினமலர் படச் செய்தி:உதகை மலர்கண்காட்சி

rocket attack by america in pakistan: பாகிசுதானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலூ

அதிகார வெறியால் எந்த அரசு கொலை புரிந்தாலும் குற்றம் குற்றமே! பழங்குடி மக்களே மண்ணின் மைந்தர்கள். அவ்வாறிருக்க அவர்களை ஏவுகணைத்தாக்கிக் கொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களின் உள்ளங்களைக்  கொள்ளையடிக்காமல் உயிர்களைக்  கொள்ளயைடித்து என்ன பயன்? அமெரிக்கா திருந்தினால்  ஏவல் நாடுகளும் திருந்தும். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் 14 பேர் பலி

பெஷாவர், ஜன.1: வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானின் பழங்குடிகள் நிறைந்த வடமேற்குப் பகுதிகளில் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பின் மேற்பார்வையில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் இந்தத் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் மட்டுமன்றி அப்பாவிகள் பலரும் பலியாகின்றனர்.நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது எனக் கூறி இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனாலும், ஏவுகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு ரகசியமாக அளிக்கும் ஆதரவே இந்தத் தாக்குதல்கள் தொடர்வதற்குக் காரணம் என்கிற சந்தேகமும் நிலவுகிறது.இன்று நடந்த முதல் ஏவுகணைத் தாக்குதல் ஒரு வாகனத்தைக் குறிவைத்து நடந்தது. இதில் அந்த வாகனம் நொறுங்கி 9 பேர் பலியானார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் கிடந்த சடலங்களை எடுப்பதற்காக சிலர் கூடியபோது மற்றொரு ஏவுகணை அவர்களைத் தாக்கியது. அதில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் விவரங்கள் பற்றி உடனடியாக எந்தத் தகவலும் இல்லை.

Free supply will continue: ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்: முதல்வர் கருணாநிதி

நலத்திட்டங்களுக்குப் பாராட்டுகள். எனினும், ஏழைகள்  இருக்கும் வரை இலவசம் தொடரும் என்பதை நிலையாக ஆக்காமல் இலவசம் பெற யாரும் இல்லை என்னும்படி எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான , இல்லாமை இல்லாமல் போகும்படியான, ஏழைகளற்ற மன்பதையை உருவாக்குவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்: முதல்வர் கருணாநிதி

சென்னை பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் இலவச பொங்கல் பொருள்களை பயனாளி ஒருவருக்கு வழங்குகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் பல்லாவரம் நகராட்சித்
தாம்பரம், ஜன. 1: ஏழைகள் இருக்கும்வரை இலவச உதவிகள் தொடரும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.சென்னை பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், இலவச பொங்கல் பொருள்கள் வழங்கும் திட்டம், இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்து அவர் பேசியது:உலகம் முழுவதும் ஜனவரி முதல் நாள் வருடப் பிறப்பு நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கென தனித்தனி வருடப்பிறப்பு நாள்கள் உள்ளன.ஆனால், தமிழர்களுக்கு அட்சய ஆண்டு முதல் பிரபவ ஆண்டுவரை 60 ஆண்டுகள் நிறைவடைந்து, மீண்டும் அட்சய ஆண்டு தொடங்குவது குழப்பமாக உள்ளது. இது தமிழ் ஆண்டை திட்டவட்டமாகக் கூறக்கூடிய கணக்காக இல்லை.வீடுதோறும் விளக்கேற்றுங்கள்: எனவே, நம் மூதாதையர்கள், முன்னோர்கள், நம்மை ஆளாக்கியவர்கள், அடையாளம் காட்டியவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்த தை முதல் நாளை, தமிழர்களாகிய நாம், தமிழ் கலாசாரத்தைப் போற்றுகிறவர்களாகிய நாம், தமிழர் வருடப் பிறப்பு நாளாக, தமிழர் திருநாளாக, வீடுகளில் அகல் விளக்கேற்றி கொண்டாடி மகிழ வேண்டும்.தைத் திருநாளில் அனைவரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று அரசு சார்பில் பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இலவசம் என்பது சிலருக்கு இழிவான சொல்லாகக் கருதப்படுகிறது. எல்லாம் இலவசமாக வழங்கப்படுகிறதே, இது என்ன பொருளாதாரம் என்றுகூட சில பத்திரிகைகள் கேலி செய்கின்றன.ஆனால், பத்திரிகைகளும் இலவச இணைப்புகளை வெளியிடுகின்றன. இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும்வரை இது போன்ற இலவச உதவிகளை வழங்கிக்கொண்டே இருப்போம்.1990-ல் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு | 256 கோடி செலவில் 1 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேஷ்டிகளும், 3 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் சேலைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.இந்தத் திட்டத்தின் மூலம் 221 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 11 ஆயிரம் நெசவாளர்களும், 121 விசைத்தறி நெசவாளர் சங்கங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் நெசவாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைந்துள்ளனர் என்றார் முதல்வர் மு.கருணாநிதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வருவாய்த் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலர் எஸ்.மாலதி, பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் ஸ்வரண்சிங், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.