திங்கள், 29 நவம்பர், 2010

ஐம்பத்து நான்கில் ஒருவர்

இந்திய அரசாங்கம் யாருக்காக?

கடல்சார்ந்து வாழும் மக்கள் பரதவர்கள் என்று அழைக்கப் பெற்றனர். இந்நிலத்தில் பெரும்பகுதி  கடற்பகுதியாக இருந்ததால் இந்நிலப்பகுதியே பரதவர் நிலம் என அழைக்கப்பட்டது. எனவேதான் இந்தியாவை பாரதம் என்று மத்திய அரசு குறிப்பிடுகிறது. நம் கண்டத்திற்குப் பெயர் தந்த மக்களின் வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படாமல் சிங்கள அரசின் சார்பில் தண்டிப்பதற்காகக் கொண்டுவரப்படும் வன்கொடுமைச் சட்டமே புதிய சட்டம். தன் நாட்டு மக்கள் நலனுக்காக அல்லாமல்  பிற நாட்டு மக்கள் நலனுக்காகச் சட்டம்  இயற்றும் ஒரே வெட்கக்கேடான அரசு இந்திய அரசுதான். இந்திய அரசு எதற்காக எனப் பலராலும் கேட்கப்படும் கேள்வியைக் கட்டுரையாளர் விளக்கத்துடன் கேட்டிருப்பது பாராட்டிற்குரியது.  ஆனால், அரசைப் பொறுத்தவரை இது செவிடன் காதில் ஊதிய சங்கே! 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

இந்திய அரசாங்கம் யாருக்காக?


உலக மீனவர் நாள்' நவம்பர் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்கள் அப்படி ஒருநாள் இருப்பதைக்கூட நினைத்துப் பார்க்க நேரம் இல்லாமல் கவலைக்கடலில் கிடந்து தத்தளிக்கின்றனர்.தமிழ்நாட்டின் தென்பகுதி மீனவர்கள் நாள்தோறும் சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவு காணும்படி தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கைகளைக் கொடுத்து காத்திருந்து பார்த்துவிட்டனர். இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மத்திய அரசு தம் குடிமக்கள் நலனைவிட இலங்கை அரசின் நலனையே பெரிதாக நினைக்கிறது.இதற்கொரு முடிவு காணாத நிலையில் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையையும் ஏவி, மிச்சம் மீதியிருக்கும் அவர்களது வாழ்வாதாரங்களைப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது.இந்த ஆணை கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அது வெளியான 60 நாள்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் கருத்துகளை யார் மதிக்கின்றனர். அது ஒரு நாடகம்; அவ்வளவுதான்.இந்த அறிவிப்பாணைக்கு மீனவ மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.மேலும், கடலோரச் சுற்றுச்சூழலும், கடல்சார் வளமும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.இந்த அறிவிப்பாணையில் சில புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கடலோர மேலாண்மைத் திட்டங்களில் மாற்றம் செய்வது என்பதுபோன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்தக் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை ஒருசில தரப்பினரின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.கடலோர மேலாண்மை விஷயத்தில் ஏதேனும் மாறுதல்கள் செய்யப்படுமானால் அது மீனவ மக்களிடையே பெரும் குழப்பத்தை விளைவிக்கும். இதைப் பயன்படுத்திச் சிலர் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு ஏற்படும்.எனவே, மேற்கூறிய உண்மைகளைக் கருத்தில்கொண்டு அறிவிப்பாணையைத் தள்ளிவைக்க வேண்டும். மீனவ மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே இந்த மசோதா பற்றி எழுந்துள்ள ஐயங்களை நீக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.உலகம் தோன்றிய காலத்திலிருந்து மக்களுக்கான தொழிலாக இருந்து வருவன உழவுத்தொழிலும், மீன்பிடித் தொழிலும்தான். பசித்த வயிற்றுக்குச் சோறும், மீனும் இயற்கை கொடுத்த இனிய உணவுகள். ஆனால், இந்த இரண்டு பழங்குடி மக்களும் இன்று கடுமையான சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.இவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு, புதிய சட்டங்களைப் போட்டு, உள்நாட்டிலேயே அவர்களை அகதிகளாக மாற்றத் துடிக்கிறது. இப்போது வந்துள்ள கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை - 2010 மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்தும், மரபுவழித் தொழிலிலிருந்தும் துரத்துகிறது.கடற்கரையையும், கடற்கரையின் உயர் அலை தொடும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மீனவர்கள் வசிப்பதற்கு இதுவரை பாதுகாப்பு வழங்கிவந்த கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையை நீக்கிவிட்டு அவ்விடத்தில் புதிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை கொண்டுவரப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த அறிவிப்பாணையைப் பரிசீலித்து பலப்படுத்துவதற்காக எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த அறிவிப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவ மக்கள் கடலோரமாக வாழ்வதற்கும், தொடர்ந்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக கடலோரப் பகுதிகளில் பல்வேறு தொழில்திட்டங்கள் கொண்டு வரப்படும்.பெரிய தொழிற்சாலைகளால் கடல் மிகுந்த மாசுபாடு அடையும்; கடல் அரிப்பு ஏற்படும். கடல்வளங்களும், கடல்வாழ் அரியவகை உயிரினங்களும் அழிந்துவிடும்; இப்போதுள்ள மீன்பிடித் தளங்களும் அழிக்கப்படும்.கடந்த 2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிவிப்பாணை பற்றி மக்களின் கருத்துரை பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், முறையாக அவை பின்பற்றப்படவில்லை. மீனவ மக்களின் மையங்களாகச் செயல்படும் பஞ்சாயத்துகளின் கருத்துகள் கேட்கப்படவில்லை. அத்துடன் மீனவ மக்களிடம் எவ்விதப் பொதுக் கருத்துக்கணிப்பும், விவாதங்களும் நடைபெறவில்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மீனவ அமைப்புகள் கொடுத்த திருத்தங்களும் பரிசீலிக்கப்படவில்லை.இதன் விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரும் தண்டனைகளும் கடுமையானவை. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால் படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். படகிலிருந்த மீனவர்க்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சோதிக்கவிடாமல் தடுப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம்வரை அபராதம்.இதுதவிர, 12 கடல் மைல் தாண்டினால் ரூ. 9 லட்சம் அபராதம்; படகின் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உண்டு; மீன்களும் பறிமுதல் செய்யப்படும். கரையோரப் பகுதியில் மீன்வளம் குறைந்துவருவதால் 12 கடல்மைல் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் தரப்பு வாதமாக இருக்கிறது.விதிமுறைகளை மீறும் மீனவர்களைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றுக்கு இழப்பீடும் கோர முடியாது. ஐயப்பாட்டின் காரணமாக தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றுக்காக கடலோரக் காவல்படையைக் குற்றம்சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக் காவல்படைக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.இதற்கு இந்திய அரசு என்ன காரணம் கூறுகிறது தெரியுமா? ""ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிறநாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும், மீன்பொருள்களையும் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டும் என்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கு இணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை'' என்று கூறுகிறது.ஆனால், இந்திய வேளாண்மைத்துறை கூறுவதோ வேறு. ""பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள்போல இனிமேல் நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல்பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம்'' என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகக் கூறுகிறது.இந்தியா மூன்றுபக்கமும் கடல்சூழ்ந்த தீபகற்ப நாடாகும். இந்தியக் கடற்கரையின் நீளம் 5,560 கி.மீ. ஆகும். தீவுகளையும் சேர்த்தால் சுமார் 8,500 கி.மீ. நீளமாகும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்குச் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இன்னும் நாம் வளரவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.இந்தியாவின் நீண்ட கடற்கரையில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இங்கு வாழும் 600 மீனவக் கிராமங்களில் சுமார் 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைதான் இப்போது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.1984 முதல் 2010 வரை கச்சத்தீவு மீதான நமது உரிமை ஒப்பந்தம் இலங்கையால் மீறப்பட்டே வந்திருக்கிறது. ராமேஸ்வரம், பாம்பன், ஜெகதாப்பட்டினம், நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அடித்து விரட்டியதோடு அல்லாமல் பெட்ரோல் குண்டுகளையும் வீசி படகோடு எரித்துக் கொல்லவும் முயற்சி நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர், காயம்பட்டவர், படகுகளை இழந்தவர், உறுப்புகளை இழந்தவர் தொகை நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது.இதுபற்றித் தமிழக அரசு கடிதம் எழுதும்; எனினும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மீனவர்களின் வாழ்வுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்துக்கு இல்லையா?""இலங்கைக் கடற்பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது...'' என்று மத்திய வெளியுறவுத் துறையமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். இப்படி கூறுவதற்கு ஓர் அமைச்சர் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், "இந்திய அரசாங்கம் யாருக்காக?' என்ற கேள்வியும் எழுகிறது.

தினமணி : தலையங்கம்: மூக்கணாங்கயிறு!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதே நாட்டு நடப்பாக இருந்தாலும் நேர்மையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக அல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவே சில ஊழல்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. தினமணி குறிப்பிடும் அமைப்புகளிலும் ஊழல்கள் இருக்கின்றன. சில ஊழல்களை வெளிப்படுத்துவதற்கும் அதை விடப் பெரிய ஊழல்களே காரணமாக இருக்கின்றன. சிலவற்றை  வெளிப்படுத்தாமல் இருக்க (உரியவரிடம் பெருந்தொகை வாங்குதல் அல்லது மிரட்டிக் கறத்தல் என்ற அளவில்) ஊழல் துணைபுரிகிறது.  அரசு துறைகள் மட்டுமல்ல :ஊடகங்களும் ஊழலை வெளிப்படுத்த அல்லது மறைக்கச்  சில அளவு கோல்கள் வைத்துள்ளன. அனைத்துத் துறைகளிலும் நேர்மைக் கேடர்கள் நிறைந்துள்ளமை போல் நேர்மையாளர்கள் சிலரும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனவே,  தினமணியின் பொதுவான பார்வை தவறாகும்.
தலையங்கம்: மூக்கணாங்கயிறு!

First Published : 29 Nov 2010 04:06:44 AM IST

Last Updated : 29 Nov 2010 04:17:16 AM IST

பத்திரிகை விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என்று எதற்குமே அசைந்து கொடுக்காத மத்திய அரசை, உச்ச நீதிமன்றமும், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையரின் அறிக்கையும் "ஸ்பெக்ட்ரம்' ஊழலை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மையம் தொடுத்திருக்கும் வழக்கில் நடைபெறும் விசாரணை மேலும் பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறதோ இல்லையோ, இந்தியாவில் விழிப்புடன் செயல்படும் பத்திரிகைகளும், துணிவுடன் இயங்கும் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம், நீதித்துறை, தலைமைத் தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகள் ஒன்று மாற்றி ஒன்று துரத்தும் என்பது மட்டும் இப்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.""தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் என்பது அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் அமைப்பு. அந்த அமைப்பு தாக்கல் செய்யும் அறிக்கைகளுக்கு அதிகபட்ச மரியாதை தரப்பட வேண்டும். தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் தனது அறிக்கையில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டும்போது, மத்திய புலனாய்வுத் துறை நியாயமாகப் பிரச்னையில் தொடர்புடைய அமைச்சரையும், அந்தத் துறையின் செயலரையும் விசாரித்திருக்க வேண்டும். 8,000-க்கும் அதிகமான தஸ்தாவேஜுகளைப் பரிசோதித்திருக்கிறோம் என்கிறீர்கள். முதல்நோக்கில் (பிரைமா ஃபேசி) சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தெரிந்தும் ஏன் இன்னும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று மத்திய புலனாய்வுத் துறைக்குக் கேள்வி எழுப்பி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.உச்ச நீதிமன்றத்தில் வெளிவரும் தகவல்களிலிருந்தும், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையரின் அறிக்கையின்படியும் பார்த்தால் திட்டமிட்டுப் பல முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை உரிமம் வழங்குவதற்கான வழிமுறைகளில் பல அடிப்படை நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 25, 2007-க்கு முன்னால் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 85 விண்ணப்பங்கள் ஏதாவது ஒரு வகையில் இந்த அடிப்படை நிபந்தனைக்கு உள்பட்டதாக இல்லை என்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது உச்ச நீதிமன்ற விவாதத்தில் வெளிப்பட்டிருக்கிறது.விண்ணப்பம் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த 15 நாள் அவகாசத்தை அரை நாளாகக் குறைக்கிறார்கள். 13 விண்ணப்பதாரர்களுக்கு இது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அவர்கள், விண்ணப்பத்துடன் இணைப்பதற்கான வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்)யுடனும் வங்கி உத்தரவாதத்துடனும் தயாராகக் காத்திருக்கிறார்கள். முன்கூட்டியே தெரியாமல் அரை நாள் அவகாசத்தில் இவர்களால் எப்படி வரைவோலை, வங்கி உத்தரவாதம், தொடர்பான எல்லா ஆவணங்களுடனும் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடிந்தது என்று தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் தனது அறிக்கையில் எழுப்பி இருக்கும் கேள்வியும் உச்ச நீதிமன்ற விவாதத்தில் வெளிவந்திருக்கிறது.மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, தலைமைக் கணக்குத் தணிக்கை முறையாகச் செய்யப்படுகிறது. இந்தத் துறையின் சார்பில் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் ஆண்டுதோறும் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அதில் முறைகேடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தத் தவறுகளைச் சம்பந்தப்பட்ட அரசின் நிதியமைச்சகம் ஆய்வுசெய்து, தவறுகளைத் திருத்தவும், தவறு செய்தவர்களைத் தண்டிக்கவும் நடவடிக்கைகளைத் தொடரவேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம்.இந்த ஆணையம் சுதந்திரமாக, எந்தவித அரசியல் நிர்பந்தங்களுக்கும் உள்படாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டம், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையருக்குப் பல சிறப்புச் சலுகைகளை வழங்கி இருக்கிறது. தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம் போன்று இதுவும் பிரதமர் அல்லது முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்காத அமைப்பு.பிரிட்டிஷ் ஆட்சியிலேயே 1860-ல் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் தொடங்கப்பட்டுவிட்டது. மக்களின் வரிப்பணம் ஆட்சியாளர்களால் சரியாகச் செலவிடப்படுகிறதா, அதில் ஊழல் அல்லது முறைகேடுகள் உள்ளனவா என்பதைத் தணிக்கை செய்வதுதான் இதன் கடமை. பலமுறை, இந்தியத் தலைமைத் தணிக்கை ஆணையத்தின் சட்டதிட்டங்கள் நாடாளுமன்றத்தால், அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது 1971-ல் செய்யப்பட்ட கடைசித் திருத்தத்தின் மூலம் நடைமுறையில் உள்ள அதிகாரங்களும், கடமைகளும்.தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் என்னதான் அறிக்கைகள் தாக்கல் செய்தாலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. முறைகேடுகள் அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்தால் ஆட்சியாளர்கள் அதன்மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் கட்டளைக்குப் பணிந்து அதிகாரிகள் முறைகேடுகளுக்குத் துணைபோகும்போது, தங்களது முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படும் என்பதால், தேவைப்படும் தகவல்களையும், தொடர்புடைய ஆவணங்களையும் கணக்குத் தணிக்கை ஆணையத்துக்குத் தருவதில்லை. ஆணையத்துடன் ஒத்துழைப்பதும் இல்லை. பொதுமக்களுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தரும் அதிகாரம்கூட, கணக்குத் தணிக்கை ஆணையத்துக்கு இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. இதையெல்லாம் மீறி, கணக்குத் தணிக்கை ஆணையம் திறமையாகச் செயல்பட்டு, முறைகேடுகளை வெளிக்கொணர்கிறது என்றால் அதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.அது கணக்குத் தணிக்கை ஆணையமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், தகவல் ஆணையமாக இருந்தாலும், இந்த ஆணையர்களுக்கு மேலும் சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, கணக்குத் தணிக்கை ஆணையத்தின் அதிகார வரம்பு உயர்த்தப்பட்டு, நேரிடையாக விசாரணைக்கு உத்தரவிடவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சட்டரீதியாகத் தலைமை ஆணையரின் கரங்கள் வலுப்படுத்தப்படுவதுதான், ஊழலில் மூழ்கித் திளைக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்குப் போடப்படும் சரியான மூக்கணாங்கயிறாக இருக்கும்!

தமிழர் கட்சிச் சார்பாளர்களைச் சந்திக்கவில்லை எசு.எம். கிருட்டிணா

மிழர் நலனுக்காகச் சென்றிருந்தால் தமிழர்களின் சார்பாளர்களைச் சந்தித்திருப்பார்.சிங்கள நலனுக்காகச் சென்றவர் எப்படிச் சிங்களத் தலைவர் ஒப்புதல் இன்றி அவர்களைச் சந்திக்க இயலும்? இந்த உண்மையை வெளிப்படுத்திய  வகையில் கிருட்டிணாவின் பயணம்  வெற்றியே! உதவாக்கரை நாட்டில்  வாழும் உத்தமர்கள் சார்பாக இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை எஸ்.எம். கிருஷ்ணா

First Published : 29 Nov 2010 01:10:00 AM IST


கொழும்பு நவ. 28: இலங்கையில் 4 நாள் சுற்றுப் பயணம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழர் தேசிய கட்சித் தலைவர்களை சந்திக்காமலேயே தில்லி திரும்பினார்.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுக் கட்சி என்று கருதப்படும் தமிழர் தேசிய கூட்டணி கட்சித் தலைவர்களை கொழும்பில் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மதியமும் சந்திப்பு நடைபெறவில்லை. அமைச்சர் கிருஷ்ணா அம்மன்தோட்டாவில் இருந்து நேராக கொழும்பு விமான நிலையம் சென்று அங்கிருந்து தில்லி திரும்பி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டதாக தமிழர் தேசிய கூட்டணி கட்சி எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரா தெரிவித்தார்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா 4 நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை இலங்கைக்குச் சென்றார். இரு நாடுகளிடையே 7-வது ஒத்துழைப்பு மாநாட்டையொட்டி அவர் கொழும்பு சென்றார். வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட உயர் நிலை குழுவும் உடன் சென்றது.போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுகுடியமர்வுப் பணிகளைப் பார்வையிடவும். தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு திட்டம் குறித்து இலங்கை அதிபரைச் சந்தித்து ஆலோசிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். அதுபோல் இலங்கையில் உள்ள தமிழர் கட்சிப் பிரதிநிதிகளை  கிருஷ்ணா சந்தித்துப் பேசவும் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி  வெள்ளிக்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபட்சவைச் சந்தித்தார் கிருஷ்ணா. பின்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார். அதுபோல் ராஜபட்சவின் சொந்த ஊரான அம்மன் தோட்டாவிலும் இந்திய துணை தூதரக அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். ரயில்வே கட்டுமானப் பணி உள்பட பல்வேறு திட்டங்களில் இரு நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தமிழர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை கிருஷ்ணா சந்திக்கவில்லை. இது தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைத் தமிழர்சிக்கலுக்குக் காலக்கெடு வரையறுக்க முடியாது : எசு.எம்.கிருட்டிணா

௧.)காலக கெடு வரையறுக்க முடியாது என்று சிங்கள முதலாளி சொன்னதைச் சொல்லுகிறார். ௨.) தமிழர் நலன் குறித்த உண்மையான பேச்சை எடுக்காமல் இந்திய-சிங்கள நலன் குறித்து மட்டுமே பேசப்பட்டது வெற்றிதானே! ௩.)தமிழக மீனவர்கள்கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் பற்றிப் பேசும் பொழுதெல்லாம்  இரு நாட்டுச்சிக்கல் எனத் திசை திருப்புவதும்  வழக்கமான ஒன்றுதானே! ௪.) எந்த ஒரு நாடும் தன் நாட்டுக் குடிமக்கள்  பிற நாட்டால் தாக்கப்பட்டால் அந்நாட்டின் மீது போர் தொடுக்கவும்  தயங்குவதில்லை என்பதே நடைமுறை உண்மை. தமிழக மீனவர்களை இந்நாட்டுக் குடி மக்களாகக் கருதவில்லை என்பது இப்பொழுதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா

புது தில்லி, நவ. 28: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. எனினும் இது தொடர்பாக காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யமுடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.  இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  இலங்கையின் வடக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் அங்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.   விவசாயம், வீட்டுவசதி, தகவல் தொடர்பு, மறுகுடியமர்வு உள்ளிட்டவற்றில் இந்தியா சார்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.   தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இந்த விவகாரத்தில் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. இலங்கை அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறதோ, அதைப் பொறுத்தே பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியும். தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.  அதிபர் ராஜபட்சவுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டில் பிரதமர் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு அவர் எப்போது செல்வார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.தமிழக மீனவர் பிரச்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது குறித்து பேசப்பட்டதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்குப் பதிலளித்த எஸ்.எம். கிருஷ்ணா, இது குறித்து அதிபர் ராஜபட்ச, வெளியறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஆகியோருடன் பேசியதாகத் தெரிவித்தார்.  இருநாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த விவகாரத்தில் 2008 செயல்முறைத் திட்டத்தை கடைப்பிடிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வரிவிலக்கு அளிப்பது குறித்தும் அந்த நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன் என்று கிருஷ்ணா கூறினார். 

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அன்னை – அறிவுமதி கவிதை - நன்றி: ஆனந்தவிகடன்

 
அழுவதற்கும் முடியாமல்
அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா
என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?
ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்
தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்
சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை
என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை
அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை
அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்
புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்
இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்
இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்
நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்
நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்
தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்
தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்
தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்
மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்
என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்
வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்
ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்
சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்
உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்
முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே
ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே
உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே
ஒன்று மட்டும் உறுதியம்மா…
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்
அறிவுமதி கவிதை
ஓவியங்கள்:எஸ்.இளையராஜா

நன்றி: ஆனந்தவிகடன்


  paarvathiyammal.jpg
32K View Download

இதுவா உண்ணாவிரதம்?

காந்தி  வழியில் உண்ணா நோன்பு இருந்த திலீபனுக்கு நேர்ந்த கதியை அறிந்தவர்கள் உண்மையான உண்ணா நோன்பை மேற்கொள்வார்களா? உண்ணா நோன்பை மதிக்காத அரசிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். உண்ணா நோன்பு என்ற பெயரில் ஏதோ வேடிக்கை நிகழ்ச்சியாகக் கூட்டம் கூடினால் போதும் என்பதே இவர்களின் எண்ணம். எனவே கட்டுரையாளர் கவலைப்பட்டுப் பயனில்லை. காந்தியக் கொள்கைகளை முதலில் அரசு மதிக்கட்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இதுவா உண்ணாவிரதம்?

First Published : 27 Nov 2010 04:37:04 AM IST


சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கத்தையே கதிகலங்க வைத்தது காந்தியின் உண்ணாவிரத அறப்போராட்டங்கள்தான். அவர் ஒருநாள், இருநாள் அல்ல, கோரிக்கை நிறைவேறும்நாள் வரை அஹிம்சை வழியில் தன் உடலை வருத்தி, உண்ணாநோன்பு இருந்து பலமுறை வெற்றி கண்டுள்ளார்.  அவரின் சக்திமிக்க அறப்போராட்டமாம் உண்ணாவிரதப் போராட்டத்தை, நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிற சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் இப்போது கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.  அந்தவகையில், அண்மையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜேக் சார்பில், ஒருநபர் குழுவில் கைவிடப்பட்டுள்ள மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் தர ஊதியத்தை வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். அதில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் நடந்த ஆசிரியர்களின் உண்ணாவிரதம் கேலிக்கூத்தின் உச்சவடிவமாக இருந்தது.பொதுவாக உண்ணாவிரதம்  என்பது, காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிவரை உண்ணாநோன்பிருந்து போராடுவது வழக்கம். ஆனால், இங்கு நடந்த உண்ணாவிரதம் தொடங்கியதே காலை 11 மணிக்குத்தான். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் போராட்டப் பந்தலில் இருந்து ஆசிரியர்கள், கும்பல் கும்பலாக வெளியேறி, அருகில் இருந்த கடைகளில் தேநீர் குடிக்கத் தொடங்கினர். உண்ணாவிரதத்தில் இருந்த தலைவர்கள் போராட்டப் பந்தலுக்குள் வந்து அமருமாறு  பலமுறை ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருந்தனர். ஆனால், அதை ஆசிரியர்கள் பொருள்படுத்தவே இல்லை.   பகல் ஒரு மணி அளவில் போராட்டப் பந்தலுக்குள் இருந்த பெண் ஆசிரியர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புறப்பட்டுச் சென்று விட்டனர். அதேநேரம் அப்போதுதான் உண்ணாவிரதம் தொடங்குவதுபோல, மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள் வேன் போன்ற வாகனங்களில் வந்து இறங்கிப் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆசிரியர்கள் பந்தலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அரசியல்வாதிகளைவிட ஆசிரியர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்களே எனப் பேசிக்கொண்டனர். மேலும், எந்த ஓர் அரசியல் மேடையானாலும் ஏதாவது ஒருவகையில் போலீஸôரைத்  தரக்குறைவாகப் பேசுவது வழக்கம். ஆலங்குளம் காவல்நிலையம் அருகில் நடந்த இந்த உண்ணாவிரதத்தில் பேசிய மாநிலப் பொறுப்பில் உள்ள ஒரு தலைவர், போலீஸôரை ஒருமையில் பேசினார். இதைக் கண்டு அங்கிருந்த போலீஸôர், சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிவர்களே இவ்வாறு பேசுகின்றனரே என மனம் வெதும்பினர். ஆசிரியர்கள் தங்களது ஊதியஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்குத்  தெரிவிக்க விரும்புவது அவர்களது உரிமை. ஆனால், அரசியல்வாதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்களில் எந்தவித நடைமுறையும் எப்படி கடைப்பிடிக்கப்படுவதில்லையோ, அதேபோல ஆசிரியர்கள் நடத்திய இந்தப் போராட்டத்திலும் அவர்கள் நடந்து கொண்டவிதம் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அறவழியில் தேசப்பிதா காந்திஜி கையாண்ட சக்திவாய்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கேலிக்கூத்தாக்கி, கொச்சைப்படுத்தியது நியாயமா?
கருத்துகள்

"தன்மானத் தமிழன்" என்பதுபோய் "மானம் கெட்ட தமிழர்கள்" என்று மாறியதற்கு காரணமே இதுபோன்ற உதவாக்கரை ஆசிரியர்கள்தான்! தன்மானம், நாட்டுப்பற்று,பரோபகாரம்,மதநல்லிணக்கம், அரசியல் அறிவு, சுய சிந்தனை என்று எத்துனையோ நல்ல விசயங்களை மாணவர்களிடம் கற்பிப்பதை விடுத்து, எட்டுசுரைக்காயை மட்டுமே போதிப்பதல்ல கல்வி! கல்லூரியை முடிதவர்களிடம் கூட மேற்சொன்ன விஷயங்கள் இல்லாதபோது வேறென்ன சொல்வது!
By வருத்ததுடன் ஒரு தமிழன்!
11/27/2010 5:19:00 PM
இந்த ஆசிரியர்கள் முதல்வரின் லேடஸ்ட் உண்ணாவிரதத்திளிருந்து "சிற்றுண்டிக்கு பின் ,மதிய உணவு வேளைக்கு முன்" என்ற உண்ணாவிரதப் போராட்ட நிலையை எடுத்துள்ளார்கள் போலும்!! நல்ல காமெடி!
By S Raj
11/27/2010 9:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

தலையங்கம்: பாவம் ரோசய்யா...

காங்.கின் தலைமை சரியில்லை என்பதால்தான் தமிழ்நாட்டில் செல்வாக்கற்ற கோவன் துள்ளுகிறார். இந்நிலையில் தந்தையின் செல்வாக்கால்  குளிர்காயும் செகன் துள்ளுவதில் வியப்பில்லை.  காங்.கிற்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு இல்லாததால் ஆரவாரத்தை நம்பும் நிலையில்தான் உள்ளது. எனவேதான் இந்த நிலை. ரோசய்யாவைப்பற்றி அனைவரும் கவலைப்படாமல் இருக்கும் பொழுது தினமணியாவது ஆசிரியவுரை எழுதியது  அவரைச் சார்ந்தவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: பாவம் ரோசய்யா...

பிகார் தேர்தல் முடிவும், கர்நாடகத்தில் முதல்வராக நீடிக்க எடியூரப்பா நடத்திய தகிடுதத்தங்களும், ஆந்திர மாநிலத்தில் ரோசய்யா தனது முதல்வர் பதவியிலிருந்து விலகியதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கு 78 வயதாகிவிட்டதால் முதல்வர் பதவியில் திறமையுடன் செயல்பட முடியவில்லை என்று ரோசய்யா காரணம் கூறியிருந்தாலும், அவரால் ஆந்திர மாநில முதல்வருக்கான கண்ணியத்துடன் செயல்பட முடியாத அவமானகரமான சூழ்நிலைதான் அவரை இந்த முடிவுக்குத் தள்ளியது என்பதே உண்மை.தெலங்கானா பிரிவினை தொடர்பாக மத்திய அரசு அமைத்த கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையை இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசுக்கு அளித்துவிடும் என்றும், அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய பிரச்னையைச் சமாளிக்கக் கூடியவராக ரோசய்யா இல்லை என்பதால் இந்த நடவடிக்கையை மேலிடம் எடுத்ததாகவும் அரசியல்நோக்கர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறினாலும்கூட, அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த அரை நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் தெலங்கானா பிரச்னையை ரோசய்யா மட்டுமல்ல, கிஷண் குமார் ரெட்டியாலும்கூட சமாளிப்பது கடினம் என்பதுதான் கசப்பான உண்மை.ரோசய்யா கடந்த 14 மாதங்களில் முதல்வர் பதவியின் சுகத்தை அனுபவித்ததைக் காட்டிலும் பெற்ற அவமானங்கள்தான் அதிகம். முந்தைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின்னர், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை (கடப்பா தொகுதி மக்களவை உறுப்பினர்) முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவரது வயது, அனுபவமின்மை ஆகியவற்றைக் கருதி கட்சி மேலிடம் அதற்கு உடன்படவில்லை. அது நடக்காத பிறகு, அரசுக்கு நெருக்கடியும் தர்மசங்கடங்களும் தரும் நடவடிக்கையில் இறங்கினார் ஜெகன். ஒய்.எஸ்.ஆர் தான் முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கிய "சாட்சி" நாளிதழ், மற்றும் "சாட்சி' தனியார் தொலைக்காட்சி ஆகியன ரோசய்யாவின் அரசுக்கு எதிராகத் திரும்பின. ஆந்திர மாநில காங்கிரஸ் அரசில் ஊழல், திட்டங்கள் சரியாக இல்லை என்று தினமும் ஒரு செய்தி நாளிதழிலும் தொலைக்காட்சியிலும் விரிவாக வெளியாகின. இதையெல்லாம் ரோசய்யா மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் என்றாலும், எந்த நடவடிக்கையும் இல்லை.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவை மக்கள் மனதிலிருந்து அழிக்கவும், ஜெகன்மோகன் ரெட்டியை ஓரங்கட்டவும் வழிதேடிக் கொண்டிருந்தபோது தனித்தெலங்கானா பிரச்னை திடீரென்று மீண்டும் எழுந்தது. அது ரோசய்யாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. கலவரங்களைக் கட்டுப்படுத்த ரோசய்யாவுக்குத் திறமையில்லை என்று முதல் பக்கச் செய்திகள் பெரிதாக்கப்பட்டன.  தனிநபர் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி இது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதை மேலிடத்துக்கு ரோசய்யா எடுத்துச் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.அடுத்து, கட்சி மேலிடத்தின் தடையை மீறி ஆறுதல் யாத்திரையைத் தொடங்கினார் ஜெகன். அதற்கும் நடவடிக்கை இல்லை. கடைசியாக, அண்மையில் சாட்சி தொலைக்காட்சியில், சோனியா காந்தி லாயக்கற்றவர், தலைமையேற்கத் தகுதியற்றவர் என்று வெளிப்படையாக விமர்சிக்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒளிபரப்பானது. காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவரான மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி, மாநிலத்தின் கட்சிப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரை தில்லியில் நவம்பர் 23-ம் தேதி நேரில் சந்தித்து முறையிட்டும்கூட, ஜெகன் மீது நடவடிக்கை இருக்காது என்று செய்தி நவம்பர் 24-ல் வெளியானால், ஒரு பெரியவரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? "இப்போது ஜெகன்மோகனை கட்சியிலிருந்து நீக்கினால் அவர் தனிக்கட்சி தொடங்கிவிடுவார்' என்பதாக காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர்கள் கருத்து தெரிவித்தாலும்கூட, ஜெகன்மோகன் மிகச் சாதாரண இளைஞர், மேடைப்பேச்சாற்றல் அரசியல் அனுபவம் இல்லாதவர், அவரிடம் உள்ள ஒரே பலம் தந்தை விட்டுச் சென்ற சொத்துகளும், நாளிதழும், தொலைக்காட்சி சேனலும் மட்டும்தான் என்பதை ஆந்திர மாநில காங்கிரஸôர் சொல்லவே செய்கிறார்கள்.ஜெகன்மோகன் ரெட்டி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கினால், அவரால் பின்னுக்குத் தள்ளப்படுவது சந்திரபாபு நாயுடுவும் தெலுங்கு தேசமுமாக இருக்குமே தவிர, ஆளும் காங்கிரஸ் கட்சி அல்ல. சொல்லப்போனால், அதுவேகூட, காங்கிரஸýக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் அல்லது காங்கிரஸýக்கும் தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான போட்டியாகி, காங்கிரஸ் கட்சி லாபமடையக்கூட வாய்ப்பு உண்டு.ஆனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு இந்த அடிப்படை உண்மைகள் தெரியாது என்பது மட்டுமல்ல, எடுத்துச் சொன்னாலும் புரியவில்லை என்பதுதான் முதல்வர் மாற்றம் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. ரெட்டி இனத்தவரின் வாக்கு வங்கி கைநழுவிவிடுமோ என்கிற பயம் காங்கிரஸ் மேலிடத்தைப் பீடித்திருப்பதால், இன்னொரு ரெட்டிக்கு - கிரண் குமார் ரெட்டி - முதல்வராகும் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. இப்போதும்கூட துணிந்து ஜெகன்மோகன் ரெட்டியைக் கட்சியிலிருந்து நீக்கும் துணிவு காங்கிரஸ் தலைமைக்கு ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.மத்தியில் ஆகட்டும், மாநிலத்தில் ஆகட்டும், ஆளும் கட்சியைத் தன் விருப்பத்துக்குப் பணிய வைக்க வேண்டும் என்றால், ஒரு நாளிதழ், ஒரு தொலைக்காட்சி சேனல், நிறைய பணம், கொஞ்சம் தைரியம் இருந்தால் போதும் என்பதுதான் இன்றைய அரசியல் போலிருக்கிறது. பாவம், ரோசய்யாவிடம் நாளிதழும் இல்லை, தொலைக்காட்சி சேனலும் இல்லை. மற்ற ஊடகங்களை எந்தவழியிலாவது தன்பக்கம் இழுத்து எதிர்யுத்தம் நடத்தவும் தெரியவில்லை. அல்லது எடியூரப்பாபோல, மத்தியத் தலைமையைப் பயமுறுத்திப் பணிய வைக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.நிராயுதபாணிகள் களத்தைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதற்கு ரோசய்யாவை உதாரணம் காட்டலாம் போலிருக்கிறது. அதேநேரத்தில், அவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மதிப்பும் மரியாதையும்கூட மக்கள் மனதிலிருந்து வெளியேறி விட்டிருப்பதைக் காங்கிரஸ் தலைமைக்கு யார் தெரிவிப்பது?
கருத்துகள்

congress party waste our indians money.
By nallavan
11/27/2010 9:09:00 PM
ayya please tell me who write this Thalayangam, Nalaukku nal Merugu koodi konde pogirathu. Keep ROooooooooooooooKKKKKKKKKKSSSSSSS. Thanks
By janakiraman
11/27/2010 8:56:00 PM
அரசியலில் நல்ல மனிதர் ஆனால் அவர் காங்கிரசில் இருப்பது கடினமானதுதான் இனி யார் வந்தாலும் ஆந்திராவை காப்பது மிக கடினமானசெயல் முதலில் பிரிவினை கோருபவர்களுக்கு என்ன சொல்கிறது காங்கிரஸ் அரசு ???
By rafeiq ms
11/27/2010 8:36:00 PM
rosaiyya is not capabale to handle AP.He is a poor a administrator.
By kamal
11/27/2010 8:28:00 PM
CONGRESSUKKU AAPPU ANDRAVIL . SEMMALAI
By SEMMLAI
11/27/2010 8:16:00 PM
மொத்தத்தில் நல்லவர்களுக்கு எந்தக் கட்சியும் லாயக்கில்லை போலும்!
By K.HIRUMALAIRAJAN
11/27/2010 4:32:00 PM
இந்த தலையங்கம் காங்கிரஸ் கட்சியின் திறமையின்மையை நன்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இன்று ரோசைய்யாவிற்கு வந்த இதே நிலை தான் நாளை கிஷன்குமார் ரெட்டிக்கும் என்பதை காங்கிரஸ் நன்கு அறியும்.
By சுரேஷ்
11/27/2010 3:53:00 PM
சூப்பர் தலையன்க்கம், எனியும் தொடருடம்
By க.சரவணன்
11/27/2010 12:57:00 PM
குட்
By vinod
11/27/2010 11:26:00 AM
மிகவும் உண்மையான கட்டுரை.. இந்த காங்கிரெசின் தைரியம் இல்லா தனத்தால் தான் நாடாளுமன்றம் இரு அவைகளும் 11 நாட்களாக செயல் படமுடியாமல் முடங்கி கிடக்கின்றத்து... வாய் சொல்லில் வீரர்கள் ""காங்கிரெஸ்"காரர்கள் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டும் நிகழ்வுகள் இது...
By கு.ரகுநாதன்
11/27/2010 10:47:00 AM
மிக நல்ல தலையங்கம். உண்மையை புட்டு வைக்கிறது. ஜெகனை வெளியே அனுப்பி கட்சியை ஒருமுகப் படுத்தும் முனைப்பு கட்சி தலைமைக்கு இல்லை என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. இப்படி அதைரியத்தைக் காட்டினால் அது எப்படி கட்சியை வளர்க்கும்? இன்று காங் கட்சி மிக்க வலுவாக உள்ள ஒரே மாநிலம் ஆந்திரம்தான். ஜெகனிடம் டிவி,நாளிதழ், அப்பாவின் பண மலை தவிர வேறு எதுவுமில்லை என்று தோலுரித்துக்காட்ட தலைமைக்கு தைரியம் இல்லை என்று கூறியது முற்றும் உண்மை.!
By S Raj
11/27/2010 9:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை நியாயமாக நடந்து கொள்ளும்: எசு.எம்.கிருட்டிணா நம்பிக்கை

௧.) இலங்கை ஒரே நாடு என்றால் தன் நாட்டு மக்கள் மீது வேதியல் கொத்துக் குண்டுகளை வீசிப் படுகொலை செய்ததை எவ்வாறு போர் என்று சொல்லுவது? ௨) இலங்கையும் ஈழமும் தனித்தனி நாடுகள் எனில் அயல்நாட்டின் மீது போர் தொடுத்து வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்ததை எவ்வாறு போர் அறமாகக் கொள்ள முடியும்? ௩.)  இந்தியாவின் சார்பாகத்தான் போர் தொடுத்ததாகச் சிங்களம் கூறி வருவதால் கிருடடிணா கூறும் நியாயம் என்பது இந்தியக் கண்ணோட்டத்தில்தானே இருக்க முடியும்? ௪) தமிழர் சிக்கல்களைத்தமிழர் அல்லாதவர்களே முடிவெடுப்பது எந்த வகையில்  நயன்மை (நியாயம்)? ௫) பொய்யும் புரட்டும் கலந்து சிங்கள-இந்திய அரசுகள் அளிக்கும் அறிக்ககைகள் எங்ஙனம் உண்மைகளை எதிரொலிக்கும்? ௬) போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும்  தமிழ்ஈழத்தை ஏற்பதுவுமே உண்மையான தீர்வும் அறமும் ஆகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை நியாயமாக நடந்து கொள்ளும்: எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை

First Published : 28 Nov 2010 12:00:00 AM IST


கொழும்பு, நவ.27: ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதை இலங்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இந்தியாவின் புதிய தூதரகத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்தார்.நீண்டகால ஈழத்தமிழர் பிரச்னைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமே நிரந்தரத் தீர்வை காண முடியும் என்பதை இலங்கை அரசிடம் உறுதியாக தெரிவித்துவிட்டோம். இதற்கான நடவடிக்கையை அதிபர் ராஜபட்ச விரைந்து மேற்கொள்வார் என்றே நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: இதனிடையே, ஈழத் தமிழர் சமுதாய ஆதரவுக் கட்சிகளின் தலைவர்களுடன் அதிபர் மகிந்த ராஜபட்ச வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. சில மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் ஈழத்தமிழர் ஆதரவு முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.ஆனால் இந்த கட்சித் தலைவர்களுடன் அடுத்த ஓரிரு வாரங்களில் அதிபர் ராஜபட்ச ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அதிபர் ராஜபட்சவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிகாரப் பகிர்வால் மட்டுமே நீண்டகால ஈழப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று ராஜபட்சவிடம் ஆணித்தரமாக தெரிவித்தார்.இரு தலைவர்களும் சந்தித்த அடுத்த சில மணி நேரத்தில் ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளை ராஜபட்ச சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவத்தின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தவர்கள். ராணுவ நடவடிக்கையின் மூலம் ஈழத்தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை எட்டிவிட முடியாது என்று தங்களது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வந்தவர்கள்.இதனால் இந்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், இந்தத் தலைவர்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து ராஜபட்ச பேசினாரா என்பது குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை.இலங்கையில் போரின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் பகுதியிலேயே மறுகுடியமர்த்தும் பணியை அரசு தொய்வில்லாமல் செய்யும் என்று ராஜபட்ச உறுதி அளித்ததாக தெரியவந்துள்ளது.ஈழத்தமிழ் மக்களை மறுகுடியமர்த்தும் பணியை மேற்பார்வையிட தமிழர் ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்க ராஜபட்ச ஒப்புக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போரினால் சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்கு உரிய நிதி உதவி செய்து அவர்களின் துயர் துடைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் தமிழர் ஆதரவு கட்சிகளின் தலைவர்களிடம் ராஜபட்ச உறுதி அளித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சிறிய குற்றம் செய்ததால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும் ராஜபட்ச முடிவெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.