udhayai veeraiyan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
udhayai veeraiyan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2011

dinamnai editorial pages: இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

First Published : 06 Jan 2011 12:00:00 AM IST


இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும். இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும். மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா! நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா? திரைப்பட நாயகர்களுக்கு "ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர். மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். ""இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை. நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா? ""இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்...'' என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர். வீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது. இந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்? ""எனது இளைய நண்பர்களே! பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்...'' இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார். இந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரப்பிய விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். "சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், "தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். எனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், "இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான "பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா? மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இங்கு வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளும், பொதுத்துறைகளாகி, தனியார் துறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசுத்துறையிலும் காலியாகும் இடங்கள் நிரப்பப்படுவதில்லை; குறைக்கப்படுகின்றன. ""இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்'' என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான். ஆனால், இந்தியாவில் மக்களாட்சிமுறை நடந்தாலும், இங்கு மன்னராட்சி முறையைப்போல வாரிசு அரசியலே வெற்றிகரமாக நடந்து வருகிறது. நேருவின் பரம்பரையில் வந்துள்ள ராகுல் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதால் அவர் அரசியலில் வெற்றிகரமாக வலம் வருகிறார். இப்போதே பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் பதவியை விட்டுத்தரத் தயாராக இருப்பதாக அறிவித்துவிட்டார்; பிறகு கேட்க வேண்டுமா? இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது. இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும். "இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

திங்கள், 29 நவம்பர், 2010

இந்திய அரசாங்கம் யாருக்காக?

கடல்சார்ந்து வாழும் மக்கள் பரதவர்கள் என்று அழைக்கப் பெற்றனர். இந்நிலத்தில் பெரும்பகுதி  கடற்பகுதியாக இருந்ததால் இந்நிலப்பகுதியே பரதவர் நிலம் என அழைக்கப்பட்டது. எனவேதான் இந்தியாவை பாரதம் என்று மத்திய அரசு குறிப்பிடுகிறது. நம் கண்டத்திற்குப் பெயர் தந்த மக்களின் வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படாமல் சிங்கள அரசின் சார்பில் தண்டிப்பதற்காகக் கொண்டுவரப்படும் வன்கொடுமைச் சட்டமே புதிய சட்டம். தன் நாட்டு மக்கள் நலனுக்காக அல்லாமல்  பிற நாட்டு மக்கள் நலனுக்காகச் சட்டம்  இயற்றும் ஒரே வெட்கக்கேடான அரசு இந்திய அரசுதான். இந்திய அரசு எதற்காக எனப் பலராலும் கேட்கப்படும் கேள்வியைக் கட்டுரையாளர் விளக்கத்துடன் கேட்டிருப்பது பாராட்டிற்குரியது.  ஆனால், அரசைப் பொறுத்தவரை இது செவிடன் காதில் ஊதிய சங்கே! 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

இந்திய அரசாங்கம் யாருக்காக?


உலக மீனவர் நாள்' நவம்பர் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்கள் அப்படி ஒருநாள் இருப்பதைக்கூட நினைத்துப் பார்க்க நேரம் இல்லாமல் கவலைக்கடலில் கிடந்து தத்தளிக்கின்றனர்.தமிழ்நாட்டின் தென்பகுதி மீனவர்கள் நாள்தோறும் சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இதற்கு ஒரு முடிவு காணும்படி தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கைகளைக் கொடுத்து காத்திருந்து பார்த்துவிட்டனர். இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மத்திய அரசு தம் குடிமக்கள் நலனைவிட இலங்கை அரசின் நலனையே பெரிதாக நினைக்கிறது.இதற்கொரு முடிவு காணாத நிலையில் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையையும் ஏவி, மிச்சம் மீதியிருக்கும் அவர்களது வாழ்வாதாரங்களைப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது.இந்த ஆணை கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அது வெளியான 60 நாள்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் கருத்துகளை யார் மதிக்கின்றனர். அது ஒரு நாடகம்; அவ்வளவுதான்.இந்த அறிவிப்பாணைக்கு மீனவ மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.மேலும், கடலோரச் சுற்றுச்சூழலும், கடல்சார் வளமும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.இந்த அறிவிப்பாணையில் சில புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கடலோர மேலாண்மைத் திட்டங்களில் மாற்றம் செய்வது என்பதுபோன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்தக் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை ஒருசில தரப்பினரின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.கடலோர மேலாண்மை விஷயத்தில் ஏதேனும் மாறுதல்கள் செய்யப்படுமானால் அது மீனவ மக்களிடையே பெரும் குழப்பத்தை விளைவிக்கும். இதைப் பயன்படுத்திச் சிலர் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு ஏற்படும்.எனவே, மேற்கூறிய உண்மைகளைக் கருத்தில்கொண்டு அறிவிப்பாணையைத் தள்ளிவைக்க வேண்டும். மீனவ மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே இந்த மசோதா பற்றி எழுந்துள்ள ஐயங்களை நீக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.உலகம் தோன்றிய காலத்திலிருந்து மக்களுக்கான தொழிலாக இருந்து வருவன உழவுத்தொழிலும், மீன்பிடித் தொழிலும்தான். பசித்த வயிற்றுக்குச் சோறும், மீனும் இயற்கை கொடுத்த இனிய உணவுகள். ஆனால், இந்த இரண்டு பழங்குடி மக்களும் இன்று கடுமையான சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.இவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு, புதிய சட்டங்களைப் போட்டு, உள்நாட்டிலேயே அவர்களை அகதிகளாக மாற்றத் துடிக்கிறது. இப்போது வந்துள்ள கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை - 2010 மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்தும், மரபுவழித் தொழிலிலிருந்தும் துரத்துகிறது.கடற்கரையையும், கடற்கரையின் உயர் அலை தொடும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மீனவர்கள் வசிப்பதற்கு இதுவரை பாதுகாப்பு வழங்கிவந்த கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையை நீக்கிவிட்டு அவ்விடத்தில் புதிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை கொண்டுவரப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த அறிவிப்பாணையைப் பரிசீலித்து பலப்படுத்துவதற்காக எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த அறிவிப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவ மக்கள் கடலோரமாக வாழ்வதற்கும், தொடர்ந்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக கடலோரப் பகுதிகளில் பல்வேறு தொழில்திட்டங்கள் கொண்டு வரப்படும்.பெரிய தொழிற்சாலைகளால் கடல் மிகுந்த மாசுபாடு அடையும்; கடல் அரிப்பு ஏற்படும். கடல்வளங்களும், கடல்வாழ் அரியவகை உயிரினங்களும் அழிந்துவிடும்; இப்போதுள்ள மீன்பிடித் தளங்களும் அழிக்கப்படும்.கடந்த 2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிவிப்பாணை பற்றி மக்களின் கருத்துரை பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், முறையாக அவை பின்பற்றப்படவில்லை. மீனவ மக்களின் மையங்களாகச் செயல்படும் பஞ்சாயத்துகளின் கருத்துகள் கேட்கப்படவில்லை. அத்துடன் மீனவ மக்களிடம் எவ்விதப் பொதுக் கருத்துக்கணிப்பும், விவாதங்களும் நடைபெறவில்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மீனவ அமைப்புகள் கொடுத்த திருத்தங்களும் பரிசீலிக்கப்படவில்லை.இதன் விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரும் தண்டனைகளும் கடுமையானவை. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால் படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். படகிலிருந்த மீனவர்க்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சோதிக்கவிடாமல் தடுப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம்வரை அபராதம்.இதுதவிர, 12 கடல் மைல் தாண்டினால் ரூ. 9 லட்சம் அபராதம்; படகின் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உண்டு; மீன்களும் பறிமுதல் செய்யப்படும். கரையோரப் பகுதியில் மீன்வளம் குறைந்துவருவதால் 12 கடல்மைல் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் தரப்பு வாதமாக இருக்கிறது.விதிமுறைகளை மீறும் மீனவர்களைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றுக்கு இழப்பீடும் கோர முடியாது. ஐயப்பாட்டின் காரணமாக தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றுக்காக கடலோரக் காவல்படையைக் குற்றம்சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக் காவல்படைக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.இதற்கு இந்திய அரசு என்ன காரணம் கூறுகிறது தெரியுமா? ""ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிறநாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும், மீன்பொருள்களையும் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டும் என்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கு இணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை'' என்று கூறுகிறது.ஆனால், இந்திய வேளாண்மைத்துறை கூறுவதோ வேறு. ""பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள்போல இனிமேல் நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல்பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம்'' என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகக் கூறுகிறது.இந்தியா மூன்றுபக்கமும் கடல்சூழ்ந்த தீபகற்ப நாடாகும். இந்தியக் கடற்கரையின் நீளம் 5,560 கி.மீ. ஆகும். தீவுகளையும் சேர்த்தால் சுமார் 8,500 கி.மீ. நீளமாகும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்குச் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இன்னும் நாம் வளரவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.இந்தியாவின் நீண்ட கடற்கரையில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இங்கு வாழும் 600 மீனவக் கிராமங்களில் சுமார் 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைதான் இப்போது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.1984 முதல் 2010 வரை கச்சத்தீவு மீதான நமது உரிமை ஒப்பந்தம் இலங்கையால் மீறப்பட்டே வந்திருக்கிறது. ராமேஸ்வரம், பாம்பன், ஜெகதாப்பட்டினம், நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அடித்து விரட்டியதோடு அல்லாமல் பெட்ரோல் குண்டுகளையும் வீசி படகோடு எரித்துக் கொல்லவும் முயற்சி நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர், காயம்பட்டவர், படகுகளை இழந்தவர், உறுப்புகளை இழந்தவர் தொகை நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது.இதுபற்றித் தமிழக அரசு கடிதம் எழுதும்; எனினும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மீனவர்களின் வாழ்வுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்துக்கு இல்லையா?""இலங்கைக் கடற்பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது...'' என்று மத்திய வெளியுறவுத் துறையமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். இப்படி கூறுவதற்கு ஓர் அமைச்சர் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், "இந்திய அரசாங்கம் யாருக்காக?' என்ற கேள்வியும் எழுகிறது.

வியாழன், 18 நவம்பர், 2010

ங்கும் இங்குமாகப் பலர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியை உதயை வீரையன் தினமணி மூலம் அருமையாகக் கேட்டுள்ளார்.  வ்ல்லரசின் கைப்பொம்மையாகச் செயல்படும் அமைப்பை எவ்வாறு பன்னாட்டு அவை என்று சொல்ல முடியும். செல்வாக்கு உள்ளவர்களின் சொல்வாக்கிற்கேற்ப முடிவெடுக்கும் ஓர்
அமைப்பை எவ்வாறு அனைத்து நாடுகளின் அமைப்பாகச் சொல்ல முடியும்.   ஈழததில் படுகொலை புரிந்த பொழுது  அதைத் தடுத்து நிறுத்த வேண்டியவர்களுடன் இணையாமல் கொலைகாரக் கூட்டணியுடன் இணைந்த கொடுங்கோலர் பொறுப்பில் இருந்தும் யாராலும் தட்டிக்  கேட்காமல்   இருந்த அமைப்பபை எவ்வாறு  உலக அமைதிக்கான அமைப்பாகக்கூற முடியும்?  ஒபாமா வருகையின்  பொழுது மட்டுமல்ல, மாவீரர் நாள் நெருங்குவதற்கு முன்பும் ஆனச் சரியான காலத்தில் வந்துள்ள அருமையான கட்டுரை.இதனை வெளியிட்டுத் தன் உணர்வையும் வெளியிட்டு்ள தினமணிக்குப் பாராட்டுகள். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஐ.நா. மன்றம் அவசியமானதா?


ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்கப்பட வேண்டும்; இதற்கு அமெரிக்கா ஆதரவு தரும்...'' என்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தாற்காலிக இடம்பெற்றுள்ள இந்தியாவுக்கு இது ஆறுதலான செய்திதான். ஆனால், உலக அமைதிக்கு இந்த அவை உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறதா?இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் என்ன? உலகெங்கும் வாழும் மக்களிடம் சில நேரங்களில் இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் இருக்கிறது. உலக அமைதிக்காகவும், மனித உரிமைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் அதைச் செயல்படுத்த இயலாதபோது அதற்கு என்ன மரியாதை இருக்கும்?அமெரிக்க ஏகாதிபத்திய நாடு ஆப்கானிஸ்தான்மேல் படையெடுத்தபோதும், இராக்மேல் படையெடுத்து அதன் அதிபரை அநியாயமாகக் கைது செய்து, விசாரணை என்ற பெயரால் மரண தண்டனை விதித்து தூக்குமேடை ஏற்றியபோதும் இந்த அவை வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தது.இலங்கையில் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தபோதும், மூன்று லட்சம் பேரை முள் வேலிக்குள் போட்டு சித்திரவதை செய்கிறபோதும் ஐ.நா. அவையும், அதன் பொதுச் செயலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, "இந்த ஐ.நா. அவை எதற்காக இருக்கிறது?' என்ற கேள்வி எழுகிறது.இந்த உலகம் இரண்டு உலகப் போர்களைக் கண்டுவிட்டது; அதன் விளைவுகளையும் உணர்ந்துவிட்டது. முதல் உலகப் போரின் முடிவில் "சர்வதேச சங்கம்' அமைக்கப்பட்டது. அது ஒழுங்காகச் செயல்படாததால்தான் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. அதன் முடிவின் தொடக்கமாகவே 1945 அக்டோபர் 24 அன்று ஐ.நா. அவை உதயமானது. இரண்டாம் உலகப் போர் மக்களுக்கு அளவற்ற துன்பங்களையும், இழப்புகளையும் கொண்டு வந்தது; இந்தப் போரில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 4 திரில்லியன் டாலர்கள் பொருள்சேதம் ஏற்பட்டது; ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன; மனித மேதைமையின் மாபெரும் படைப்புகள் அழிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் காயம், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர். ஹிட்லரால் உருவான இரண்டாம் உலகப் போருக்கு மனிதகுலம் தந்த விலை எழுத்தில் அடங்காதது. சோவியத் யூனியன் 20 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பறிகொடுத்தது; அமெரிக்கா 4 லட்சம் பேரையும், பிரிட்டன் 3 லட்சத்து 70 ஆயிரம் பேரையும் இழந்தது. ஜெர்மன் தரப்பில் 13.6 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர்; காயம் அடைந்தனர்; சிறைப்பிடிக்கப்பட்டனர். இதன் ஐரோப்பியக் கூட்டு நாடுகளின் தரப்பில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஜப்பானின் இழப்பு வரலாறு மறக்காதது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 அன்று ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டன. ஒரே நொடியில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரைச் சாம்பலாக்கியது; 1,56,555 பேரை முடமாக்கியது. 1945 நவம்பர் 20 முதல் 1946 அக்டோபர் 1 வரை நியூரென்பர்கில் சர்வதேச ராணுவ டிரிப்யூனலில் முக்கிய ராணுவக் குற்றவாளிகளின் மீது நீதி விசாரணை நடந்தது. இது ஆக்கிரமிப்பை மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாக அறிவித்தது; நியாயமாகத் தண்டித்தது. நியூரென்பர்க் டிரிப்யூனலின் தீர்ப்பில் காணப்படும் சர்வதேச உரிமை பற்றிய கோட்பாடுகளை ஐ.நா. சங்கப் பொதுச்சபை உறுதிப்படுத்தியது. இதன்மூலம், ஆக்கிரமிப்புப் போரும், மனிதகுலத்துக்கு எதிரான போர்க் குற்றங்களும் மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாகும் என்று ஐ.நா. அவை அறிவித்தது. இந் நிறுவனம் தோன்றிய உடனே மனித உரிமைகளை வரையறை செய்ய பொருளாதார, சமூகக் குழுவின்கீழ் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சர்வதேச மனித உரிமைகள் மசோதாவை வரைந்தது. அதனை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1948 டிசம்பர் 10 அன்று ஏற்றுக்கொண்டது. "மனித உரிமைகள் பொதுப் பிரகடனம்' அனைத்து நாடுகளும் ஏற்று நடக்க வேண்டிய ஒன்றாகும். 1993-ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீதான உலக மாநாடு, உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மனித உரிமைகள் மீறலால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொண்டது. அந்த மாநாடு வியன்னா பிரகடனம் ஒன்றையும், செயல்திட்டம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டது. அதன்படி மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும் பன்னாட்டு மக்களின் தார்மிகப் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டது. ஐ.நா.வின் மனித உரிமைகள் பொதுப் பிரகடனம் 30 விதிகளில் குறிப்பிட்டுள்ள உரிமைகளைக் குடியியல், அரசியல் உரிமைகள் என்றும், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். குடியியல், அரசியல் உரிமைகள் இக்கால மக்களாட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவ்வுரிமைகளைப் பாதுகாப்பது மக்களாட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. வாழ்க்கை, சுதந்திரம், தனிமனிதப் பாதுகாப்பு உரிமைகள், அடிமைத்தனம், சித்திரவதையிலிருந்து விடுதலை, சட்டத்தின் முன் சமத்துவம், சட்டத்துக்குப் புறம்பான கைது, சிறையீடு அல்லது நாடு கடத்துதலுக்கு எதிரான பாதுகாப்பு, நியாயமான விசாரணை என இந்த உரிமைகள் தொடர்கின்றன. இத்தனை மனித உரிமைகளையும் காலிலே போட்டு மிதிக்கும் இலங்கை அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; எச்சரிக்கைகள் மட்டுமே பலன் தந்துவிடுமா? ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் எல்லாம் முடிந்த பிறகு கொழும்பு சென்றார். ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டார். அவர் சென்றபோது தென்பகுதியில் சிங்களர்கள் "வெற்றி விழா' கொண்டாடிக் கொண்டிருந்தனர். வடக்கே தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைபட்டு, போதிய உணவு, மருந்து, தண்ணீர் இன்றி வேதனையின் விளிம்பில் இருந்தனர். இதேபோன்று ருவாண்டா, போஸ்னியா, காஸô மற்றும் டாவூரில் இனப்படுகொலை நடந்தபோதும் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. இதனால் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடு இல்லை. எஞ்சியோர் உயிர் பிழைப்பதற்காகவே இடம்பெயர்ந்தனர். ஐ.நா. அமைப்பு ஒருசில நாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பாதுகாப்பு அவையில் விவாதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவர விரும்பியபோது சீனா அதன் "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாகக் கூறி அதனைத் தடுத்துவிட்டது. பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பினர்களும், 10 சாதாரண உறுப்பினர்களும் இருக்கின்றனர். அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகளுக்கே "வீட்டோ' அதிகாரம் உள்ளது. பெரிய சோஷலிச நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனா இனப்படுகொலையை ஆதரிக்கிறதா? ஐ.நா. மனித உரிமை அவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 16 நாடுகள் கையொப்பமிட்டால்தான் ஒரு தீர்மானம் விவாதிக்க முடியும் என்பது விதி. இலங்கையில் இருதரப்பும் இழைத்த போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானமும் கைவிடப்பட்டது. இதற்கு மாறாக இலங்கை முன்மொழிந்த தீர்மானம் 20 - 12 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் உள்பட 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை அரசைப் பாராட்டி ஐ.நா. மனித உரிமை அவை நிறைவேற்றிய தீர்மானம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. "இந்த முடிவு ஏமாற்றத்தைத் தருகிறது; இது மனித உரிமை அவையின் கையாலாகாத் தன்மையைக் காட்டுகிறது' என மன்னிப்பு சபை சாடியுள்ளது, "ஐ.நா. மனித உரிமை அவை படுதோல்வியைச் சந்தித்துள்ளது' என்று லண்டன் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இந்த இனப்படுகொலையை முற்போக்கு முகாமைச் சேர்ந்த சீனா, ரஷியா, வியட்நாம், கியூபா முதலிய இடதுசாரி நாடுகள் ஆதரித்து வருவதையே உலகம் வேதனையோடு விமர்சனம் செய்கிறது.இவர்களுக்கு மானிட விடுதலை பற்றி அக்கறையே இல்லையா? சொந்த நாட்டின் சுயநலத்தில் அடங்கிவிட்டார்களா? மனித உரிமை பற்றியும், உலக அமைதி பற்றியும் பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?  இந்தியாவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. 'காந்தியம்' என்பதும் "ராஜீவ் காந்தியம்' எனக் குறுகிப் போய்விட்டது. இந்திய நாடு இலங்கையை ஆதரித்து நிற்பது ஒன்றும் வியப்பல்ல. "இந்தியாவின் போரை இலங்கை நடத்தியது' என இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாகவே பேசியுள்ளார். இந்தியா இதனை மறுக்காமல் பெருமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் யாருக்கும் வெட்கமில்லை. மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதுபோல உலகத்தின் அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. அவை வலிமைமிக்கதாக இருக்க வேண்டாமா? இல்லாவிட்டால் மூன்றாவது உலகப் போரை உலகம் சந்திக்கும்.  அதன்பிறகு மனித இனமே இருக்காது.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

உலக எண்கள் தமிழ் எண்களே!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என முனைந்திருப்பதும் சரியான  திசைவழியில் ஒரு நல்ல நடவடிக்கையே. அத்துடன் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்ற முதல்வரின் அறிவிப்பும் பல்லாண்டு கால தமிழ் உணர்வாளர்கள்  கோரிக்கையின் வெற்றியே. ஆங்கிலத்தில் எழுதும்போதும், பேசும்போதும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சும் படித்தவர்கள் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என எண்ணுகின்றனர். அதனால்தான் தமிழ் எண்களை ஆங்கில எண்கள் என்றும், அரபு எண்கள் என்றும், உலக எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் ஆளுக்கு ஆள் பிழைபடப் பேசியும், எழுதியும் வருகின்றனர். இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே! மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. "எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன்.  "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது. ""இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996). மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை. இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார்.""அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார். டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்).அவர் எழுதுகிறார்: ""1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும். இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார்  (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358). இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும். இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம். செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள். தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே! இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே!
கருத்துக்கள்

உலக எண்கள் தமிழ் எண்களே என்பதில் ஐயம் ஏதும் இல்லை. எனினும் மூலததமிழ் எண் வடிவங்களை அனைவரும் அறிந்திருக்க வகை செய்ய வேண்டும். உட்பிரிவு எண்களாக உரோமன் எழுத்தையோ ஆங்கில எழுத்தையோ குறிப்பிடாமல் மூலத் தமிழ் எண்களைக் குறிப்பிடும் பழக்கம் வர வேண்டும். கட்டுரையை ந்னறாக எழுதியிருப்பினும் அட்டவணையில் இன்று உள்ளவை பகுதியில் முதல் வரிசை இரண்டாவதாகவும் இரண்டாவது வரிசை முதலாவதாகவும் வந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் எண்களின் மாற்ற முறை நன்கு புரியும். உதயை மு.வீரையனுக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/2/2010 3:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 12 மார்ச், 2010

வேலியைத் தாண்டும் போலிகள்



போலிச் சாமியார்கள் பற்றிய செய்திகள் இல்லாத நாள்களே இல்லை என்று கூறலாம். இந்தச் செய்திகள் சமுதாயச் சீர்கேடுகளைப் பறைசாற்றுகின்றன. தீமைகள் பெருகுவது நன்மைக்கான சோதனை என்றே சொல்லலாம். அந்தச் சோதனையே நாட்டுக்கு வேதனையாகிறது.புத்த, சமண, சைவ, வைணவ சமயங்கள் எல்லாம் ஆன்மிக நோக்கத்துடன் அவதரித்தவை; தமிழ்நாட்டின் சித்தர்கள் எல்லாம் ஆன்மிகவாதிகளே! எனினும் அவர்கள் மக்கள் நலனையே கருதியவர்கள்; இராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார் போன்றவர்களையும் இவர்களுடன் சேர்க்கலாம்.""உலகமே எனது நாடு; பிறருக்குச் சேவை செய்வதே என் மதம்; மனித வர்க்கமே என் உடன்பிறப்பு'' என்பது விவேகானந்தரின் வார்த்தைகள்.இதையே காந்தியடிகளும் கூறுகிறார்: ""மனித வர்க்கத்துக்குச் செய்யும் சேவையின் மூலம் கடவுளைக் காண நான் முயன்று வருகிறேன். ஏனெனில், கடவுள் சுவர்க்கத்திலோ, கீழேயோ இல்லை; ஒவ்வொருவருக்குள்ளும் அவர் இருக்கிறார் என்பதை நான் அறிவேன்...''இப்படிப்பட்ட ஆன்மிகவாதிகளால் மனித சமுதாயம் நம்பிக்கை பெறுகிறது; ஆறுதல் பெறுகிறது; முயற்சி செய்து முன்னேறுகிறது; "நல்லவர்களால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது' என்று மக்கள் நினைக்கிறார்கள்.போலிச் சாமியார்களைப்போல போலி இன்ஸ்பெக்டர்கள், போலி டாக்டர்கள், போலி வழக்கறிஞர்கள், போலி ஆசிரியர்கள் என இவர்கள் மிகச்சிலராக இருக்கலாம்; ஆனால் இவர்களால் ஏற்படும் தீமைகள் சமுதாயத்தைப் பின்னோக்கி நகர்த்திவிடும்; இது தடுக்கப்பட வேண்டும்.இந்த நிலை கல்வித்துறையிலும் தொடர்கிறது. போலி பல்கலைக்கழகங்கள், போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், போலி ஆசிரியர்கள், போலி மாணவர்கள் எனவும் காணப்பட்டுள்ளனர்; கல்வித் துறைகளில் போலிகள் பெருகுவது நாட்டுக்கே நல்லதல்ல. இந்த நிலை தொடர்வதற்கு யார் காரணம்?அரசாங்கம் அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அறிவிப்பு மட்டுமே செய்கிறது. "இந்தக் கல்விக்கூடங்கள் அரசு அங்கீகாரம் பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்' என வேண்டுகோள் விடப்படுகிறது. தங்கள் குடிமக்கள்மேல் அரசுக்கு அவ்வளவு அக்கறையாம்.இப்போது மத்திய அரசு நியமித்த பி.என். தாண்டன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, 13 மாநிலங்களிலுள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் மட்டும் 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து ஆனது; இதனால் 2 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பல இடங்களில் மாணவர்களின் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.இதனால் இந்தக் கல்வி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்துக்கே போய் தடையாணை பெற்றுள்ளன. இருப்பினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்க பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புக்கொண்டது, ஏன்? இப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?நாடு முழுவதுமுள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்த குழு, 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதாகவும், பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாகிகளின் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறி, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.உணவுப் பொருள் வழங்குதுறையிலும் இதே நிலைதான். தமிழகத்தில் மொத்தம் 1.86 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இவற்றில் போலிகள் ஏராளமாக இருப்பதால் அவற்றைக் களையும் பணி நடைபெற்றது; இப்போது இந்தப் பணி நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.13 மாவட்டங்களில் 7.66 லட்சம் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 20 மாவட்டங்களில் 16.28 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர்களது மேல்முறையீட்டுக்குப் பின் அவற்றில் எத்தனை ரேஷன் அட்டைகள் போலியானவை என்பது தெரியவரும். அதன் பிறகே நீக்கப்படும் அட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர ரேஷன் அரிசி கடத்தல் என்பது ஒரு தொடர்கதையாகிவிட்டது. லாரிகளில் கடத்துவது மாறி, ரயில்வே வேகன்களில் கடத்தப்பட்டன; இப்போது அதுவும் மாறி கப்பலில் கடத்தப்படுகின்றன.அண்மையில் தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்குக் கப்பல் மூலம் கடத்த முயன்ற ரூ. 4 கோடி மதிப்புள்ள 44 ஆயிரம் மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மாலத்தீவுக்கு ஐ.ஆர். 64 ரக அரிசி ஆந்திர மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும், மாலத்தீவு மாநில வாணிபக் கழகத்துக்கு ஏற்றுமதியாகிறது என்றும் கூறி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; கண்டுபிடிக்கப்படாதது இன்னும் எவ்வளவோ?மக்களின் பொது விநியோகத் திட்டத்திலேயே இவ்வளவு மோசடிகள் நடமாடுகின்றன. இதன் பரிணாம வளர்ச்சிதான் போலி ரேஷன் அட்டைகள். இது எடுக்க எடுக்கக் குறையாதவை; எண்ண எண்ண மாளாதவை; இந்த அசுர வளர்ச்சிக்கு அடிப்படையே அரசியல்தான்; யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலையில் மாற்றமில்லை.உயிர்வாழ உதவும் உணவைத் தொடர்ந்து, மக்கள் உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் போலிமருந்து நிறுவனங்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டு மக்களின் உடலோடும், உயிரோடும் விளையாடுகிற கூட்டம் பல்கிப் பெருகியுள்ளது; ஏழை மக்களின் உறுப்புகளைத் திருடும் மருத்துவர்கள் இருக்கும்போது எதுதான் நடக்காது?போலி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பற்றித் தகவல் தருபவர்களுக்கு ரூ. 25 லட்சம் வரை பரிசளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் இதுவரை 14 போலி மருத்துவ நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.இந்த 14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தி, அவை தயாரித்த போலி மருந்துகளைப் பறிமுதல் செய்யவும், அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.இங்கு சட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் குறைவில்லை. ஆனால், "இந்த வழக்குகளின் முடிவு என்ன ஆனது?' என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஜாதி, சமயம், கட்சி, பணம் இவையெல்லாம் அவர்களைத் தண்டனையிலிருந்து தப்புவித்துவிடும். 2001-ம் ஆண்டு பரபரப்போடு பேசப்பட்ட போலி முத்திரைத்தாள் மோசடி இப்போது யாருக்காவது நினைவிருக்கிறதா? இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்ட அப்துல் கரீம் தெலகி உள்பட 33 பேரைக் கைது செய்து பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர பாட்டீல் கடந்த 2010 பிப்ரவரி 10 அன்று தீர்ப்பு கூறினார். இதில் தெலகி உள்பட 22 பேர் குற்றவாளிகள் என்றும், மற்ற 11 பேர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.இவ்வாறு எல்லா நிலைகளிலும் போலிகள் பெருகுவதற்குக் காரணம் என்ன? அரசின் மெத்தனப் போக்கு என்று கூறுவதா? "உலகமயம்' என்ற பெயரால் பன்னாட்டு நெருக்குதலுக்குப் பணிந்து போகிறதா?÷பன்னாட்டுக் குளிர்பானங்களான கோககோலா, பெப்சி தயாரிக்கும் நிறுவனங்களின் 12 வகையான பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவு கலக்கப்படுவதாக "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்' கண்டறிந்து அறிவித்தபோது நாடே அதிர்ச்சியடைந்தது; ஆங்காங்கு கிளர்ச்சிகளும் வெடித்தன.இதனால் இதுபற்றிய உண்மையைக் கண்டறிய சரத் பவார் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அது விசாரணை நடத்தி, "உண்மையானதே' என்று அறிவித்தது. இந்த அறிக்கை 2004 பிப்ரவரி 4 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்போது எல்லாம் மறந்துவிட்டது. பழையபடியே எங்கும் நுரை கக்கும் இந்தக் குளிர்பான விளம்பரங்கள்! பழைய நடிகர்-நடிகைகளுக்குப் பதிலாக புதிய நடிகர், நடிகைகள்! படித்தவர்களும், மேல்குடி மக்களும் இவை தங்கள் உயிரைக் குடிப்பதை அறியாமல் பெருமையோடு குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.குடியைக் கெடுக்கும் குடியையே அனுமதித்துக் கொண்டிருக்கும் இந்த அரசுகள் இதைப் பற்றியா கவலைப்படப் போகின்றன? ஆண்டுக்காண்டு அதன் விற்பனை சாதனை அளவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2008-09-ம் ஆண்டு ரூ. 10,601 கோடி மது வருமானம் என்பதைத் தமிழக அரசு பெருமையோடு அறிவித்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 1,780 கோடி அதிகமாம். இதிலும் போலி மது விற்பனை உண்டு.வேலியைத் தாண்டும் வெள்ளாடுகளை அனுமதித்தால் விவசாயம் பாழாகும். இயற்கை நீதி மற்றும் சட்ட, ஒழுங்கு வேலிகளைத் தாண்டும் இந்தப் போலிகளை அனுமதித்தால் தேசமே சீரழியும். தேசப்பற்று என்பது எல்லைகளைக் காப்பது மட்டுமல்ல, எல்லாவற்றையும் மீறும் போலிகளிடமிருந்து மக்களைக் காப்பதுமாகும்.

கருத்துகள்
போலிகளைக் கண்டு மயங்கும் மக்கள உள்ள வரையும் மக்களுக்கு உண்மையான பகுத்தறிவுக் கல்வி வழங்கப்டும் வரையிலும் அரசியல்வதிகளே தஞ்சம் என மக்கள் செல்லும் நிலை மாறும் வரையிலும் வேலிகளை உருவாக்கும் போலிகளே ஆட்சி செய்வர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 2:59:00 AM

புதன், 24 பிப்ரவரி, 2010

தாயை மறந்த தமிழ் மக்கள்



உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது.​ இந்தியாவிலும் இந்த நாள் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது.​ உலகெங்கும் தாய்மொழியின் அவசியத்தைத் தெரிந்துகொண்ட அளவுக்குத் தமிழ்நாட்டில் அதன் முக்கியத்துவம் உணரப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப் போய்விட்டனர்;​ நாட்டுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று நம்பி நாமும் சுதந்திர நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்;​ ஆனால்,​​ உண்மை நிலை என்ன?​ ஆங்கிலேயர் அகன்றுவிட்டபோதிலும் அவர்களது மொழியும்,​​ பண்பாடும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இப்போதும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது;​ இதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?​ நமக்கு அதிகாரப்படியான "அரசியல் விடுதலை' மட்டுமே கிடைத்திருக்கிறது;​ சமுதாய,​​ பொருளாதார,​​ பண்பாட்டு விடுதலைகள் இனிமேல்தான் கிடைக்க வேண்டும்.​ உலகில் எத்தனை ஆதிக்கங்கள் உண்டோ,​​ அத்தனைக்கும் நாம் அடிமைகளாகவே இருக்கிறோம்.​ நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்தி,​​ புரிய வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.​ மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்த நிலை இன்று மாறிவிட்டது.​ மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது.​ மொழியின் வழியில் மாநிலங்கள் பிரிவினை செய்யப்பட்டதற்கும்,​​ அதனை எதிர்ப்பதற்கும் இதுவே காரணமாகும்.​ மொழி இல்லையேல் இனமில்லை;​ நாடும் இல்லை;​ இதற்கான வரலாறும் இல்லையன்றோ?​ உலகத்திலுள்ள கல்வியாளர்களும்,​​ சமூக ஆய்வாளர்களும்,​​ உளவியல் வல்லுநர்களும் தாய்மொழிக் கல்வியையே ஆதரிக்கின்றனர்.​ அதுதான் இயற்கையானது;​ அதனை விட்டு வேறு மொழியில் கற்பது செயற்கையானது;​ இது காலால் நடப்பதற்குப் பதிலாகக் கைகளால் நடப்பது போன்றதாகும்.""குழந்தை தன் முதல் பாடத்தைப் படிப்பது தாயிடமிருந்துதானே!​ ஆகவே குழந்தைகளின் மனவளர்ச்சிக்குத் தாய்மொழியையல்லாது வேறொரு மொழியை அவர்கள் மேல் சுமத்துவது நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நான் கருதுகிறேன்...'' என்றார் காந்தியடிகள்.காந்தியடிகளின் புகழ்பாடும் தேசத்தில் அவர் பேச்சைக் கேட்பதில்லை என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம்.​ வணக்கத்துக்குரியவர்களின் வார்த்தைகளை மறந்துவிடும் சமுதாயம் எப்படி முன்னேறும்?​ அசலைப் புறக்கணித்து விட்டு,​​ போலிகளைப் பின்பற்றும் தலைமுறைகளுக்கு எதிர்காலம் ஏது?இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் தாய்மொழி மூலம் கல்வியறிவை வளர்த்துக் கொண்டவையே!​ அமெரிக்காவின் அணுகுண்டால் பெரும் பாதிப்புக்குள்ளான ஜப்பான்,​​ அதிக மக்கள்தொகையால் திணறிக் கொண்டிருந்த சீனா,​​ போராலும்,​​ புரட்சியாலும் பாதிக்கப்பட்ட ரஷியா என்னும் இந்த நாடுகள் இன்று சாதனைக்கு மேல் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றன.​ அரசியலிலும்,​​ அறிவியலிலும் மேலைநாடுகளோடு போட்டியிடுகின்றன.​ இவைதவிர மேலை நாடுகளில் பிரான்சும்,​​ ஜெர்மனியும் தாய்மொழியையே பராமரிக்கின்றன.கிரேக்க, ​​ ரோமநாட்டு அறிஞர்களிடமிருந்தும்,​​ ஜெர்மன் விஞ்ஞானிகளிடமிருந்தும் ஆங்கிலேயர் அறிந்து கொண்ட செய்திகள் பல.​ அவற்றையெல்லாம் அவர்கள் தங்கள் தாய்மொழியின் வாயிலாகவே கற்றுத் தெளிவடைந்தனர்;​ அதனால் அவர்களும் உயர்வடைந்தனர்;​ அவர்களது மொழியும் வளம் பெற்றது.13-ம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பேணி வளர்ப்பதற்காக 1525-ம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை உருவாக்கினார்.​ ஆனால்,​​ வளமாக வாழ்ந்த பண்டையத் தமிழ்மக்கள்,​​ தம்மொழியை வளர்ப்பதற்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல சங்கங்களை நிறுவியுள்ளனர்.முடியுடை மூவேந்தர்களில் பாண்டியர்கள் தங்கள் தலைநகரங்களில் மூன்று சங்கங்களை நிறுவி தமிழ் வளர்த்ததை வரலாறு கூறுகிறது.​ இதுபற்றிய குறிப்புகளை "இறையனார் களவியல்' நூலுக்கு நக்கீரர் எழுதிய உரை மூலம் அறியலாம்."சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' என்றும்,​​ "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்றும் பாரதி பாடிய பெருமைமிக்கது நம் தாய்மொழியே!தமிழ்மொழி பழமையிலும்,​​ சொல்வளத்திலும்,​​ இலக்கணச் செழுமையிலும்,​​ செய்யுள் ஆளுமையிலும்,​​ பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்தது என்பது மொழிநூலார் கூற்றாகும்.​ உலகத்தின் ​ உயர்தனிச் செம்மொழிகளான கிரேக்கம்,​​ எபிரேயம்,​​ வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாக ரைஸ் டேவிட்ஸ் கூறியுள்ளார்.உலக நாகரிகத்தின் அளவுகோலாக மதிக்கப்படுவது மொழியாகும்;​ மிகப் பழைய நாகரிகமாகக் கூறப்படுவது சுமேரிய நாகரிகம்.​ அதன் அடையாளமான சுமேரிய மொழி சொல்வளம் மிக்கது;​ ஆயினும் தமிழை நோக்க அம்மொழி இளமையான பிற்பட்ட மொழியாகவே கருதப்படும் என்றார் அறிஞர் எஸ்.​ ஞானப்பிரகாசர்.வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழியையே பேசினர் என்றும்,​​ அவர்கள் பேசிய சொற்களில் பலவற்றைத் தமிழில் காணலாம் என்றும்,​​ ஆதலின் இப்போது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழமையானது என்றும் ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்.இத்தனை சிறப்புகள் இருந்தாலும் இன்று இதன் நிலை என்ன?​ தமிழகத்தில் "எங்கும் தமிழ்,​​ எதிலும் தமிழ்' என்று அலங்காரமாகப் பேசப்படுகிறதே தவிர,​​ "எங்கே தமிழ்?' என்று கேட்கும் நிலையே இங்கும்,​​ எங்கும்,​​ அன்றும்,​​ இன்றும்.​ இதில் மாற்றமில்லை.​ 1956-ல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது.​ 1957 ஜனவரி 19 அன்று இச்சட்டம் ஆளுநரின் அனுமதியைப் பெற்றது.​ ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.வணிக நிலையங்களில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டும் என்ற சட்டமும் சட்டமாகவே இருக்கிறது.அரசு அலுவலகங்களிலும்,​​ நீதிமன்றங்களிலும் ஆங்கிலம்;​ பள்ளி,​​ கல்லூரிகளில் ஆங்கிலமே பயிற்சி மொழி;​ இசையரங்குகளில் தெலுங்கு;​ ஆலயங்களில் வடமொழி;​ மெத்தப்படித்த மேதாவிகளின் வீடுகளில் தமிழ் இடம்பெறுவது இல்லை.அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ள சமச்சீர் கல்வியையும் தாய்மொழி வழியாகக் கொண்டுவர முடியவில்லை.​ தாய்மொழியை ஒரு பாடமாகப் படிப்பதற்கும் இங்கு எதிர்ப்புக்குரல் எழுகிறது என்றால் இதனை என்னவென்பது?"தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை' என்று பாரதிதாசன் கூறியிருப்பது இன்னும் உண்மைதான் என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.2003 யுனெஸ்கோ அறிக்கையின்படி இன்று உலகில் பேசப்படும் மொழிகள் சுமார் 6700 என்றும்,​​ இவற்றில் பாதிக்கும் மேல் 2100-ம் ஆண்டுக்குள் அழிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.​ இந்த அறிக்கையில் ஒரு மொழியின் அழிவுக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படும் 9 காரணிகளும் நமது தாய்மொழிக்கும் பொருந்துவதாக அமைந்திருப்பதுதான் மிகவும் வேதனையானது.1952-ம் ஆண்டு.​ வங்க தேசம் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த காலம்.​ அங்குள்ள மக்களின் தாய்மொழி வங்காளம்.​ பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை நீக்கிவிட்டு,​​ உருது மொழியைத் திணிக்க முயன்றபோது,​​ மொழிப்போர் வெடித்தது.டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அடக்குமுறையை மீறி மாணவர்கள் கூட்டம் நடத்தினர்.​ காவல்துறை கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியது.​ இதில் நான்கு மாணவர்கள் உயிர் இழந்தனர்;​ நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.இந்த மொழிப்போரில் உயிர்நீத்த இளைஞர்களின் நினைவாகவே இந்நாள் "உலகத் தாய்மொழி நாள்' என்று 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.இந்த மொழிப்போரைப் போலவே தமிழ்நாட்டிலும்,​​ "இந்தி எதிர்ப்புப் போர்' நடைபெற்றது.​ இதனால் தாய்மொழி பயனடையவில்லை;​ அன்னிய மொழியான ஆங்கிலமே பயனடைந்தது.""ஒரு மொழி மக்களின் தொடர்பு இழந்து விடுமானால் அது உயிருள்ள,​​ வலுவுள்ள,​​ மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாக இருப்பதைவிடுத்து,​​ தன் வீரியத்தையிழந்து உயிரற்ற செயற்கைப் பொருளாகிவிடும்...'' என்று நேரு கூறுகிறார்.​ ​​ 1961-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1652 தாய்மொழிகள் இருந்தன.​ இதில் 14 மொழிகளை தேசிய மொழிகளென அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டது.​ இதில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரியதாகும்.தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்று கோரும் நாம் தமிழகத்தில் தமிழின் நிலை என்ன என்று சிந்திக்க வேண்டாமா?உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறப் போகும் இந்த வேளையில் வாயளவில் இல்லாமல் செயல் அளவில் செய்ய வேண்டியதே தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.​ தாயை மறந்த தமிழ் மக்களை தாயே மன்னித்தாலும் தலைமுறை மன்னிக்காது.

சனி, 28 நவம்பர், 2009

இந்தியப் பெருங்கடல் யாருக்காக?



இந்தியா புவியியல் அடிப்படையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரிய தீபகற்ப நாடாகும். இமயமலையை ஓர் எல்லையாகவும் மற்ற மூன்று பக்கங்களும் கடல்களே எல்லைகளாகவும் இருப்பது இயற்கையின் கொடை. உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலும், பரப்பளவில் ஏழாவது இடத்திலும் இருக்கிறது. இதன் அழகிய கடற்கரை 6,100 கி.மீ. நீளமானது. இந்த நீண்ட கடற்கரை எல்லையாக மட்டும் இல்லாமல் உணவுத் தேவையை நிறைவு செய்யும் மீன்வளம் நிறைந்தது. கடல்வாழ் உயிரினங்களும், கனிம வளங்களும், நிலத்தடி நீரும், கண்கொள்ளாக் காட்சிகளும் கொண்டவை. இந்தக் கடல்வளம் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். உலகமயம் மற்றும் தனியார்மயம் என்கிற பெயரால் இந்தியாவின் கடல் எல்லைகளை அந்நிய நாட்டு வணிகக் கப்பல்களுக்குத் திறந்து விடுவதற்கே மத்திய அரசு துடிக்கிறது. சொந்த நாட்டு மீனவ மக்களைத் துரத்தியடிக்கிறது. இதற்கு ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நிர்பந்தம் என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது. இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்களின் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில், வெளிநாட்டுக் கப்பல்களை மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்திருப்பது, சுதந்திரமான ஆட்சியுரிமைக்கே அறைகூவல் இல்லையா? அயல்நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் தேசிய மீன் இறக்குமதிக் கொள்கையும் இந்திய மீன்பிடித் தொழிலை முடக்கிப்போடும் முக்கிய நடவடிக்கைகளாகும். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1980-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி மாநில முதலமைச்சர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதன்படி கடற்கரையில் 500 மீட்டர் வரை மீனவர் பயன்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது 21 முறை திருத்தம் செய்யப்பட்டு 1991-ல் கடற்கரை மேலாண்மைச் சட்டமானது. இது மேலும் திருத்தப்பட்டு இந்திய நாட்டுக்குள் ஓர் அந்நியப் பிரதேசமாக உருவெடுத்துவரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இந்திய நாட்டுக் கடற்கரையை ஒழுங்குபடுத்தி உரியவர்களுக்கு அளித்திடவே 2009 சட்டம் வருகிறது. இதன் முன்வடிவு இதுவரை மீனவர்களுக்குத் தரப்படவில்லை. ஈழத் தமிழரைப் போலவே இந்தியத் தமிழ் மீனவர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. அவர்களைப் பற்றிய செய்திகள் இல்லாமல் பொழுது விடிவதில்லை. இலங்கை கடற்படைத் தாக்குதல், சிறைப்பிடிப்பு, மீனவர்களைக் காணோம், மீனவர்கள் காயம், மீனவர்கள் சாவு, மீனவர்களின் படகுகளும் மீன்களும் வலைகளும் பறிமுதல் என இது விரியும். மீனவர்களின் வாழ்க்கையே அபாயகரமானதுதான். தொன்றுதொட்டு அவர்கள் செய்துவரும் தொழில் எதிர்பாராத முடிவுகளைக் கொண்டதுதான். அவர்கள் அந்த அலைகடலைக் கண்டு அச்சம் கொண்டதில்லை. அந்தக் கடல்தாய் காப்பாற்றுவாள் என்கிற அசையாத நம்பிக்கை அவர்களுக்குண்டு. ஆனால், அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் மேல் பழியைப் போட்டு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வரும் போக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஆதரவு தரும் துணிவுதான். இப்போது சீன - சிங்கள கூட்டுக் கடற்படைகள் செய்யும் ஆதிக்கம் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதுபற்றி தமிழக அரசு பொறுமையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்போது மீன்பிடிக்கும் தொழிலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. கடலில் 12 கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் ரூ. 9 லட்சம் வரை அபராதம்; 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்; அத்துடன் உரிமத்தை ரத்து செய்யலாம்; சோதனை செய்யும் அதிகாரிகளைத் தடுத்தால் 10 லட்சம் அபராதம்; ஓராண்டுச் சிறை; கைதாகும் மீனவர்கள் ஜாமீனில் வெளிவர வேண்டுமானால் படகு உள்ளிட்ட உபகரணத்தின் மதிப்பில் பாதியை ஜாமீன் தொகையாகச் செலுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டுக் கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் நமது எல்லைக்குள் வருவதற்குத் தடையேதும் இல்லை; அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது~இவ்வாறு மத்திய அரசின் புதிய சட்டம் கூறுகிறது. கடல் மீன்தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்டம் 2009 என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இந்தப் புதிய மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல மீனவ மக்களிடையே வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா உள்நாட்டு மக்களுக்கு வழியை அடைத்துவிட்டு, அயல்நாட்டு வணிகர்களுக்கு வசதி செய்து கொடுக்கிறது. வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில்கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்கவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது எனத் தெரிகிறது. இறையாண்மையைப் பற்றி வாய்கிழியப் பேசும் இந்திய அரசு, இப்படியொரு சட்டம் கொண்டுவர வேண்டிய தேவை என்ன? கச்சத்தீவை இலங்கைக்கு எடுத்துக் கொடுத்ததுபோல் இப்போது இந்தியப் பெருங்கடலும் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொடுக்கப்படுகிறதா? இந்திய முதலாளிகளிடம் பணத்தையும், ஏழை மக்களிடம் வாக்குகளையும் வாங்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்கள், யாருக்காகச் சேவை செய்யப் போகிறார்கள்? உள்நாட்டு மக்களுக்கா? உலக வர்த்தகத் திமிங்கிலங்களுக்கா? இதற்கான விடையை இந்தப் புதிய மசோதா கூறாமல் கூறுகிறது. காலமெல்லாம் கடலோடு போராடிக் கொண்டிருக்கும் மீனவ மக்கள் இனிமேல் இந்திய அரசோடும், இலங்கை அரசோடும் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசு இன்னமும் ஒரு பார்வையாளராகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியா இயற்கை வளங்கள் நிறைந்தது. இந்தியக் கடற்கரைகள் உலகின் மிகச்சிறந்த சூழலியல் வளங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. இதில் தமிழகக் கடற்கரை குமரியிலிருந்து சென்னை வரை 1026 கி.மீ. நீளமானது. இங்கு 12 ஆயிரம் விசைப்படகு மீனவர்களும், ஒன்றேகால் லட்சம் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி 10 லட்சம் பேர். தலைமுறை தலைமுறையாக இந்தக் கடற்கரைகளையே தங்களது தாய்மடிகளாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் கடன்பட்டுக் கடன்பட்டு கண்ணீரிலேயே மூழ்கிக் கொண்டிருப்பவர்கள்; துன்பப்பட்டுத் துயரப்பட்டு மனமும், உடம்பும் மரத்துப் போனவர்கள். இனிமேல் இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்கள். செத்த பாம்பை எத்தனை முறை அடிப்பது? அவர்கள் இந்தக் கடல் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தவிர கண்ட சுகமென்ன? அந்த மக்களுக்குக் கல்வியில்லை; வேலைவாய்ப்பு இல்லை; இருப்பதற்கு இடமில்லை; உடுப்பதற்குத் துணியில்லை; கவலைகளைத் தவிர சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நேரமே இல்லை. கடல் தோன்றியபோதே தோன்றிய மீனவர்கள் சமுதாயம் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. நாடு விடுதலை பெற்று இத்தனை காலமாகியும் இந்தத் தேர் நகரவே இல்லை. இழுப்பதற்கான முயற்சிகளில் இதன் கயிறுகள் இற்று இற்று அறுந்து விழுகின்றன. மண்டல் குழு பரிந்துரையின் மையக் கருத்தாக, ""ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான தேவைகள் அரசியல் சட்டத்துக்கு உள்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய இயலும்'' எனக் கூறப்படுகிறது. ஆனால் இதன் பரிந்துரைகள் கவனிக்கப்படவில்லை. மண்டல் குழு மற்றும் மண்டைக்காடு கலவரத்தை விசாரித்த வேணுகோபால் குழு பரிந்துரைத்தபடி மீனவர் சமுதாயத்துக்குத் தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி மத்திய - மாநில அரசுகள் ஏதும் செய்யவில்லை; மௌனமாகவே இருக்கின்றன. மீனவர்களின் அரசியல் பங்கேற்புக்கான கோரிக்கை இது. அரசியல் பிரவேசம் அவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றனர். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் ஏறுகிறவர்களுக்கு ஏணியாகவே இருக்க முடியும்? நாங்களும் ஏறிப் பார்க்க வேண்டாமா? என்று கேட்கின்றனர். ""2020-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல, இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குங்கூட அல்ல, ஒரு பணி இலக்கு...'' என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். அந்த வளர்ந்த இந்தியா இந்நாட்டு குடிமக்களுக்கான இந்தியாவாக இருக்க வேண்டாமா? புதிய கடற்கரை மேலாண்மைச் சட்டம் இந்தியப் பெருங்கடல் யாருக்காக என்ற பெரிய கேள்வியை எழுப்புகிறது.

புதன், 5 ஆகஸ்ட், 2009

மனித உரிமை என்ன ஆனது?



இலங்கையின் மறுவாழ்வுக்காக பன்னாட்டு செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) மூலம் சுமார் ரூ. 11,200 கோடி கடன் தருவதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் எதிர்த்து வாக்களிப்பைப் புறக்கணித்துள்ளன. அமைப்பின் மற்ற உறுப்பு நாடுகள் கடனை அனுமதித்துள்ளன. விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த மே மாதம் முடிவடைந்த பிறகும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதன் மூலம் மனித உரிமை அப்பட்டமாக மீறி வருகிறது. எனவே அந்த நாட்டுக்குக் கடன் வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று அந்த மூன்று நாடுகளும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியாவும், இடதுசாரி நாடுகளும் இலங்கையின் அடாவடிப் போக்கை ஆதரித்து வாக்களித்துள்ளன. இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுள்ள இலங்கைத் தமிழர் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றி இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது; அநியாயங்களுக்குத் துணை போகிறது. மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் வாய் கிழியப் பேசும் சீனா, ரஷியா, கியூபா, வியட்நாம் முதலிய கம்யூனிஸ்ட் நாடுகளும் இலங்கையின் இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இந்த நாடுகளுக்காகக் குரல் எழுப்பி ஆதரவு இயக்கங்கள் நடத்திய தமிழர்கள் இப்போது என்ன பதில் கூறப் போகிறார்கள்? பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தானம், இராக் முதலிய நாடுகளுக்காகக் குரல் கொடுக்கிற இந்தியா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் இரண்டாந்தர மக்களாக்கி இனப் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்காமல் ஓடி ஒளிவது ஏன்? முற்போக்கு முகாமின் இந்த இரட்டை வேடம் எத்தனை நாளைக்கு? "பயங்கரவாதிகளை எதிர்த்துப் போர்' என்ற பெயரால் ஈழ மக்களின் மேல் முப்படைகளையும் கொண்டு படையெடுத்து மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது இலங்கை அரசின் சிங்கள ராணுவம். தன் நாட்டு மக்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தி வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் மாதா கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. தப்பி ஓடி வந்த மக்களை கம்பி வேலிக்குள் போட்டு பூட்டி வைத்துள்ளது. உணவுக்கும், குடிநீருக்கும் தவிக்கும் நிலையை உருவாக்கி அவர்களைச் செயலற்றவர்களாக - நடைப்பிணங்களாக ஆக்கியுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பிரித்து உறவை அறுத்து வேடிக்கை பார்க்கிறது. போரில் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தவர்களின் உறுப்புகளை அறுத்துக் கொண்டு போகும் அக்கிரமத்தைக் கேள்விப்பட்டதுண்டா? நாகரிக உலகத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளது; அந்த மண்ணையே நஞ்சாக்கியுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மருத்துவர்களின் மனிதநேயக் கடமை. அப்படி வடகிழக்குப் பகுதியில் மருத்துவ உதவிகள் செய்துவந்த சத்தியமூர்த்தி, வரதராஜா மற்றும் சண்முகராஜா கைது செய்யப்பட்டு, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதுகூடத் தெரியவில்லை. நாட்டில் பலமுறை அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது; சுதந்திரமாக நடமாட முடியவில்லை; ஜனநாயகம் தினந்தோறும் கொலை செய்யப்படுகிறது. பத்திரிகையாளர்களும், செஞ்சிலுவைச் சங்கங்களும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எப்படி நாகரிக சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? இந்த அக்கிரமங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக அகிம்சையைப் போதித்த காந்தியின் தேசம் ஆதரவு தருகிறது. ""இந்தியாவுக்காகப் போரிட்டோம்'' என்று அந்த நாட்டு அதிபர் பகிரங்கமாக அறிவிக்கிறார். இந்தியா அடக்கத்தோடு அமைதி காக்கிறது; இனப்படுகொலையை ஆதரிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, 1948 டிசம்பர் 9 அன்று நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு (தடுப்பு) ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்பட 140 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. ""இனப்படுகொலை என்பது ஒரு தேசிய இனம் அல்லது மதக்குழுவை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு, குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ சேதம் விளைவிப்பது, குழுவின் மீது திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அதன் உடல் சார்ந்தவற்றிற்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிவை ஏற்படுத்த முனைவது, குழுவினரிடையே பிறப்பு நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கோடு செயல்படுவது, ஒரு குழுவின் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இன்னொரு குழுவுக்கு மாற்றுவது...'' - இதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது "இனப்படுகொலை நடவடிக்கை' என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. உலக மக்களையே உலுக்கிவிட்ட இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா. அவையின் மனித உரிமை ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. மேற்கு நாடுகள் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் முதன்முறையாக பிற நாடுகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபட்ச, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர்க்குற்றவாளிகளாக விசாரிப்பதற்காக விவாதிப்பதற்குக்கூட எதிர்ப்புத் தெரிவித்து சீனாவும், ரஷியாவும் "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டன. கம்யூனிசத்தையே உலகத்துக்கு அறிமுகப்படுத்திய மாமேதை லெனின் வழிவந்த ரஷியாவும் மாபெரும் புரட்சியாளர் மாவோ வழிவந்த சீனாவும் மனித இனப்படுகொலைக்குத் துணை போகின்றன. கியூபா, பொலிவியா, நிகராகுவா முதலிய சோஷலிச நாடுகள், "இலங்கை இனப்படுகொலை செய்யவில்லை; மனித உரிமைகள் மீறவில்லை' என்று வாக்களித்துள்ளன. கியூபாவும், வியட்நாமும் நடத்திய விடுதலைப் போரை ஆதரித்தோம்; அதன் மாபெரும் தலைவர்களான ஃபிடல்காஸ்ட்ரோவையும், கோசிமின்னையும் தூக்கி வைத்துக் கொண்டாடினோம். ஆனால், இந்த நாடுகள் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் இனப்படுகொலையை ஆதரித்துக் குரல் கொடுத்தனவே! தேசிய இன விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது முற்போக்கு நாடுகளின் கடமையில்லையா? உலகெங்கும் பாதிக்கப்படுகிற மக்களைத் தேடிச் சென்று உதவும் கடமை அந்நாடுகளுக்கு இல்லாமல் போய்விடுமானால் அவர்கள் பேசும் கொள்கைகளும், செயல்பாடுகளும் பொய்மைதானா? கடந்தகால வரலாறு இப்படித்தான் இருந்ததா? கியூபா புரட்சியின் நாயகர்களில் ஒருவரும், ஃபிடல்காஸ்ட்ரோவின் நெருங்கிய தோழனாகவும் இருந்த எர்னஸ்டோ சேகுவேரா உலக மக்களின் உரிமை வாழ்வுக்காக உயிரையே தந்தவர். கியூபாவில் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, 1959 ஜனவரி 9 அன்று குடியரசுத் தலைவரின் ஆணைப்படி குடியுரிமை பெறுகிறார். அர்ஜென்டினாவில் பிறந்து, மருத்துவராகப் பட்டம் பெற்று, புரட்சிப் போராளியாக மாறிய சேகுவேரா கியூபாவின் தொழில்துறை அமைச்சராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் நியமனம் பெறுகிறார். ஒருநாள் அத்தனையையும் துறந்துவிட்டு எங்கு போனார்? 1965 ஏப்ரலுக்குப் பிறகுதான் அவர் கியூபாவில் இல்லை என்பது தெரிய வந்தது. ""இப்போது உலகில் வேறு பாகங்களுக்கு எனது சிறிய பணிகள் தேவைப்படுகின்றன. கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் தாங்கள் இருப்பதால் தாங்கள் ஆற்ற முடியாத கடமைகளை நான் ஆற்ற முடியும். ஆகவே அந்தப் பணியில் நான் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது...'' என்று தன் தோழர் ஃபிடல்காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, பொறுப்புகளை முறைப்படி ராஜிநாமா செய்துவிட்டே புறப்படுகிறார். ஈழ மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது உலக நாடுகள் ஊமைகளாக இருந்தன. அநியாயங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. மனசாட்சிமிக்க சில ஐரோப்பிய நாடுகள் அரைகுறையாகக் குரல் எழுப்பின. ஆனால் புரட்சிகர கம்யூனிஸ்ட் நாடுகள் இனப்படுகொலைக்கு ஆதரவாக நின்றன என்பது வரலாற்று ஏடுகளில் மாறாத களங்கமாய் இருந்து கொண்டேயிருக்கும். உலக அவை எனப்படும் ஐ.நா. மன்றம் எதற்காக இருக்கிறது? வெறும் வார்த்தைக் கண்டனங்களை வாரி இறைப்பதற்குத்தானா? இதன் சட்டங்களும், விதிமுறைகளும் பேசுவதற்கு மட்டும்தானா? செயல்படுத்துவதற்கு இல்லையா? ஏழை எளிய சிறுபான்மை மக்கள் உலகில் வாழத் தகுதியில்லாதவர்கள்தானா? இந்தப் போக்கற்ற மக்களுக்கு புகலிடமே இல்லையா? இன்றுவரை உலகில் பேசப்பட்டுவரும் நீதி, நியாயம், அறம், அமைதி, சமாதானம் என்பதெல்லாம் நீதிநூல்களில் மட்டும்தானா? புரட்சியாளர் சேகுவேரா போன்றவர்களின் தியாகமெல்லாம் படிப்பதற்கு மட்டும்தானா? உலகில் எங்கெல்லாம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களோ அவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஒரு புரட்சியாளனின் கடமை என்பதை அவரின் வரலாறு கூறவில்லையா? உலகம் எங்கும் உயிர்வதை தடை செய்யப்பட்டுள்ளது. விலங்குகளையும் பறவைகளையும் துன்புறுத்துவதைத் தடுக்கவும் சட்டம் இருக்கிறது. ஆனால் இலங்கையில் மனித உயிர்களும், உரிமைகளும் வேட்டையாடப்படுகின்றன. இதனை நாகரிக உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? பயங்கரவாதம் என்பது தனிமனிதர்களுக்கு மட்டும்தானா? அரசாங்கங்களுக்கு இல்லையா? எங்கே தீப்பற்றி எரிந்தாலும் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது.