puthinam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
puthinam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜூலை, 2009

ஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்திய வகுத்துள்ள புதிய உபாயம்: புதுடில்லியில் இரகசியப் பேச்சுக்கள்
[வெள்ளிக்கிழமை, 17 யூலை 2009, 08:51 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்]
ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பைப் பயன்படுத்தியே தனது மறைமுக வேலைத் திட்டம் ஒன்றை இந்தியா தற்போது வகுத்துவருவதாக தெரியவந்திருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாகத்தான் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் தமிழர்களை உடனடியாக மீளக்குடியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ள இந்தியா, கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்தியப் படையைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் பிரிவையும் அவசரமாக அனுப்பிவைப்பதற்கு முன்வந்திருக்கின்றது.

இலங்கையில் தற்போது ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நம்பகரமான கட்சிகளோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்களோ எதுவும் இல்லை என்று கருதியே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை பயன்படுத்துவதற்கு இந்தியா தற்போது திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் இருந்து செயற்பட்டுவந்த பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு முக்கிய பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் நட்புச் சக்தியாகக் காட்டக்கூடிய கட்சிகள் எதுவும் இலங்கையில் இதுவரையில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விநாயகமூர்த்தி முரளிதரன் விலத்தப்பட்ட காலப்பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்துடன் கிழக்கு மாகாணத்துக்கு வந்திருந்தனர்.

இணைந்து பணியாற்றுவது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவையடுத்து ஈ.என்.டி.எல்.எப். அமைப்பினர் வெளியேறிச் சென்றுவிட்டனர்.

'றோ' வகுத்திருந்த திட்டம் ஒன்றின் அடிப்படையிலேயே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த சிலர் இரகசியமாக கிழக்கு மாகாணத்துக்கு வந்து விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு முனைந்ததாகக் கூறப்படுகின்றது.

அதேவேளையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவை தனது செல்வாக்குக்குள் கொண்டுவருவதற்காக 'றோ' மேற்கொண்ட முயற்சிகளும் பெருமளவுக்கு வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகின்றது.

வடக்கு - கிழக்கில் தற்போது செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரையில் அவை அனைத்தும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடனேயே செயற்படுகின்றன.

இந்நிலையில் 'றோ' வின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது தமது இருப்பையே கேள்விக்குறியாகிவிடும் என இந்த அமைப்புக்கள் கருதுகின்றன. அதனால்தான் இந்தியாவின் கைகளில் விழாமல் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதற்கே அவை முன்னுரிமை கொடுக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கு 'றோ' தீர்மானித்திருப்பதாகத் தெரிகின்றது.

ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் தலைவர் பரந்தனைச் சேர்ந்தவர். அத்துடன், இந்தியப் படையினர் வடக்கு - கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இந்த அமைப்பு கிளிநொச்சியை மையப்படுத்தியே தனது செயற்பாடுகளை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் அப்போது அமைந்திருந்தன.

மீண்டும் கிளிநொச்சியை மையப்படுத்தி ஈ.என்.டி.எல்.எப் கட்சி செயற்படும் விதமாக 20 ஆயிரம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பது இந்தப் பின்னணியில்தான். இதற்காகத்தான் அவசர அவசரமாக இந்தியப் படை முதற்கட்டமாக கண்ணிவெடிகளை அகற்றப் போகிறது. இதற்காக இந்தியப் படை கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த 500 பேர் கிளிநொச்சிக்கு அனுப்பப்படவிருக்கின்றனர்.

இந்த முயற்சியை நோக்கமாகக் கொண்டு ஈ.என்.டி.எல்.எப் உறுப்பினர்களை மீள ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டில் மீண்டும் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

கிளிநொச்சியில் 20 ஆயிரம் மக்களை மீளக்குடிமயர்த்தும் போது, தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் என்ற பெயரில் ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்களில் சிலரையும் கிளிநொச்சிக்கு அனுப்ப முடியும். அத்துடன், ஈ.என்.டி.எல்.எப். அமைப்பு ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதன் செயற்பாடுகளையும் சிறிலங்கா அரசினால் தடுத்து நிறுத்த முடியாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் கருத்துக்களை மீறி மகிந்த அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதால் மகிந்த அரசை வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைப் பயன்படுத்துவதற்கு 'றோ' திட்டம் வகுத்திருக்கின்றது என புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் கருதுகின்றன. ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் வருகை மேலும் குழப்பங்களை ஏற்படுத்துவதாக மட்டுமே அமையும் என்றே கூறவேண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர் போராட்டத்தினை மேலும் முன்னெடுப்பதற்கு இந்தியாவின் உதவியை வேண்டி நிற்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

செவ்வாய், 14 ஜூலை, 2009

போரில் வெற்றி பெற்றாலும்
சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரசு தோல்வி:
மங்கள சமரவீர
[திங்கட்கிழமை, 13 யூலை 2009, 07:51 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரை அரசு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்ற போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரச தோல்வியடைந்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.

'சுதந்திரத்துக்கான மேடை' என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இன்று திங்கட்கிழமை அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டம் மலையக நகரான தலவாக்கலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது பிரச்சினையின் ஒரு பிரதிபலிப்பே தவிர பிரச்சினை அதுவல்ல எனத் தெரிவித்த மங்கள சமரவீர, இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வைக் காணவில்லை என்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

அரசியல் தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சனி, 20 ஜூன், 2009

(2ம் இணைப்பு)நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்
[செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயபூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானதுமுழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ். தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாக உள்ளது.

முகாம்களில் உள்ள மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அரசு அனுமதிக்க வேண்டும்: ஐ.நா.
[சனிக்கிழமை, 20 யூன் 2009, 07:37 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
போரினால் இடம்பெயர்ந்த மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிப்பதன் மூலமே வடக்கு - கிழக்கில் உள்ள பதற்றத்தை தணிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மே மாதம் போர் நிறைவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு தெரிவித்திருந்த போதும் போரினால் இடம்பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிப்பதன் மூலமே வடக்கு - கிழக்கில் உள்ள பதற்றத்தை தணிக்க முடியும்.

உதவிப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை அரசு முகாமுக்குள் அனுமதிக்கின்றது. ஆனால் முகாம்களுக்கு செல்லும் முழு சுதந்திரமும் எமக்கு வழங்கப்பட வேண்டும்.

அங்கு இடநெருக்கடி, குடிநீர் பற்றாக்குறை போன்ற பல நெருக்கடிகள் உள்ளன. பருவ மழை தொடங்கினால் அங்கு தொற்று நோய்கள் அதிகரிக்கலாம். முகாம்களின் தரம் கவலை தருகின்றது. அங்குள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதில்லை.

இது தொடர்பாக ஐ.நா.வின் அதிகாரிகள் சிறிலங்கா அரசுடன் மிகவும் காத்திரமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவ

இனத்தின் விடிவை நோக்கி அனைவரும் பராபட்சமின்றி பயணிக்க வேண்டும்: பிரித்தானிய கவனயீர்ப்பு நிறைவில் உறுதி
[வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 04:14 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
வரலாறு இட்ட வழிகாட்டலில், காலமிட்ட கட்டளையில் அனைவரும் ஒன்றிணைந்து - பாரபட்சமின்றி - எமது இனத்தின் விடிவை நோக்கி பயணிப்பதற்கு உறுதிபூண வேண்டும் என பிரித்தானியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வின் நிறைவு குறித்து தமிழ் மாணவர்கள் வெளியிட்டிருக்கும்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 73 நாட்களாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்நாள் புதன்கிழமை நிறைவடைந்தது.

பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் கடந்த ஏப்ரல் 6 ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடைபெற்று வந்தது.

நாளாந்தம் அங்கு குவிந்த தமிழ் மக்கள் இரவு - பகல் பாராது இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தினால் குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளையும் பிரித்தானிய மற்றும் அனைத்துலக நாடுகள் மேற்கொண்டிருந்தன.





அத்துடன், போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அங்கு தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களும் இடம்பெற்றன.

குறிப்பாக பரமேஸ்வரன் தொடக்கம் ரிம் மாற்றின் வரை பலர் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்நாள் புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் நிறைவுக்கு வந்தது.

இதனையடுத்து, இந்த போராட்டம் குறித்து பிரித்தானிய தமிழ் மாணவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழீழ தாயகத்தில்மனித நாகரீகமற்ற ஓர் அரக்கத்தனமான இன அழிப்பும் இனச் சுத்திகரிப்பும் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த கொடூரம் தாங்காது பொங்கி எழுந்து, உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப நாம் அனைவரும் திரண்டெழுந்து, எமது உரிமைக்காய் குரல் கொடுத்து, உலகளாவிய தமிழர் போராட்டங்களுக்கு வித்திட்டோம்.

எமது போராட்டங்கள் உலக மனச்சாட்சியை முழுமையாக மாற்றத் தவறினாலும், எங்களால் முடிந்தவரை காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதே உண்மை.

இருந்தபோதும், தமிழீழ தாயகத்தில் நடந்தேறிய - நடைபெறும் சம்பவங்கள் எங்கள் அனைவரது மனக்கூண்டினுள்ளும் மாறாத வடுவாக - உயிர் உள்ள வரை எம்முள் எரியும் வேதனைத் தீயாகவே, ஒவ்வொரு இன மானமுள்ள தமிழனுக்கும் இருக்கும்.

இந்த வடு அல்லது வலி என்பதை நாம் வார்த்தைகளாகவோ உணர்வுகளாகவோ வெளிக்கொணர முடியாதவர்களாக, தாயகத்தில் அந்த மக்கள் மகிழ்வாக வாழவேண்டும் என்று அங்கலாய்த்துக்கொண்டு, இவைகள் யாவும் கனவாக இருந்து விடக்கூடாதோ என்ற ஆதங்கத்தோடும், நாம் அனைவரும் செய்வதறியாது மனப்புழுக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது.



இந்த நிலையில் இங்கு கடந்த 73 நாட்களாக தங்களை வருத்தி உண்ணாநிலையில் இருந்து இவர்களுக்கு பக்கபலமாக அடையாள உண்ணாநிலையில் இருந்து இவர்கள் அனைவருடனும் சேர்ந்து நாளாந்தம் இந்த சதுக்க முன்றலில் உலகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப நாளாந்தம் அயராது அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்து, போராட்டங்கள் செய்து, வேதனை மிகுதியால் இந்த நாட்டில் வீதி மறியல்களையும் செய்து, நாம் காட்டிய தீவிரம் இன்று துயர் சூழ்ந்து இழப்புகளுக்கு மத்தியில் இழப்பதற்கு ஏதும் இன்றி வாழும் மக்களுக்கு ஆறுதலாகவும் எதிரிக்கு வெறுப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

தமிழன் என்ற ஒரு இனம் காலம் காலமாக அடிமைப்பட்டு சேவகம் செய்து வந்த நிலையில் தமிழன் தன்மானம் கொண்டவன் வீரமிக்கவன். இனத்துக்காய் தன்னுயிர் கொடுப்பவன். மாற்றானை நேசிப்பவன், மண்டியிடமாட்டான். போராட்ட குணமும் பண்பும் கொண்ட எமது விடுதலைப் போராளிகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் எம்மை ஒரு பண்பானவர்களாகவும் உலகத்தின் முன் தலை நிமிரவும் வைத்துள்ளது.

இன்னும் தமிழன் என்றால் அவன் யார் என்று அடையாளம் காட்டியுள்ளது.

நாம் எந்த இனத்திற்கோ எந்த நாட்டிற்கோ எதிராக எமது போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. நாம் எமது மக்களுக்காக, நாம் காலம் காலமாக வாழ்ந்த மண்ணுக்காக, எமது விழுமியங்களுக்காவே குரல் கொடுத்து புகலிட தேசங்களில் அந்தந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு முரண்படாது எமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இனிவரும் காலங்களிலும் இதையே தொடருவோம்.

சீன - இந்திய அரசுகளின் மேலாதிக்க போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள்: மூத்த ஊடகவியலாளர் சோலை
[வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 05:53 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கப் போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர் சோலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை இதழான குமுதம் ரிப்போட்டருக்கு அவர் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரையில் நமது வெளிநாட்டுக் கொள்கை நடு நாயகமாக இருந்தது. அதனைத் தங்கள் திசைக்கு இழுக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுத்த முயற்சிகள் முனை மழுங்கிப் போயின.

தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு அதன் மண்ணின் மைந்தர்களையே இரும்புக் கால்களால் நசுக்கி தாண்டவம் ஆடியது. அங்கே நசுக்கப்பட்ட மக்களுக்காக பண்டிட் ஜவகர்லால் நேரு குரல் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை இந்திரா குரல் கொடுத்தார். அங்கே இனப் படுகொலைக்கு எதிராக இந்தியா எழுந்து நின்றது.

அமைதி வழியில் போராடி தங்கள் உரிமைகளைப் பெற முடியவில்லை என்ற நிலை வந்த போதுதான் சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். அன்னை இந்திராவும் அமரர் எம்.ஜி.ஆரும் இருந்த வரை அவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். கலைஞரும் கரம் கொடுத்தார்.

தனி ஈழம் மலர்ந்தால் இந்தியாவில் தமிழ்நாடும் தனி நாடாகும் என்று சிங்கள அதிபர்கள் காட்டிய பூச்சாண்டியை இந்திரா நம்பவில்லை. ஆனால், அவருக்குப் பின்னே வந்த அவருடைய மைந்தன் ராஜீவ் காந்தி நம்பினார்.

அதன் விளைவாக, ஈழம் பற்றிய இந்திய அரசின் பார்வை திசை மாறியது. போராளிகளை ஒடுக்க இந்திய இராணுவம் ஈழத்தில் இறங்கியது. ஆனால் சோதனைகளைத்தான் சந்தித்தது. அழைத்த இராணுவத்தை சிங்கள அரசே "சீக்கிரம் வெளியேறு" என்றது. காரணம், இந்திய இராணுவத்தால் பிரபாகரனைக் கூட பிடிக்க முடியவில்லையே என்று சிங்கள இனவாதம் சீற்றம் கொண்டது.

சிங்களம் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே இனம் - ஒரே மதம் என்ற அவர்களுடைய சித்தாந்தம் சிதையத் தொடங்கியது. ஆகவே, அவர்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள். ஈழ மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கு அவர்கள் கஜானாவைக் காலி செய்து ஆயுதங்கள் வாங்கிக்


குவித்தனர். சீனமும், பாகிஸ்தானும் உதவ முன்வந்தன.

கூர்ந்து பார்த்தால் இந்துமாக்கடல் பிரதேசத்தில் தனது செல்வாக்கை, -ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனம் தொடர்ந்து முயன்று வருவது தெரியும். இந்தியாவிற்கு எதிராக ஒரு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது என்றும் பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடாகவே இருக்க வேண்டும் என்பது அதன் லட்சியம்.

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் முறையில் சீனத்து எல்லையிலிருந்து அந்த காஷ்மீரத்துக் கானகங்களுக்குள் விரிவான சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இப்போது இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. எனவே, ஈழ மக்களின் நியாயத்தை உணர்ந்தாலும் அவர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க சிங்கள அரசிற்கு ஆயுத சேவை செய்கிறது.

இந்தியா என்ன செய்கிறது? இலங்கை சீனத்தின் செல்லப்பிள்ளையாகி விடக்கூடாது என்பதற்காக ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க எல்லா வழிகளிலும் உதவி செய்கிறது.

ஈழத் தமிழர்களும் இங்கே தாய்த் தமிழக மக்களும் இரத்த உறவுகள் என்பதனை இந்திய அரசு மறந்துவிட்டது. ஈழம் மயானமானாலும் தொடர் குண்டு வீச்சுக்களால் தமிழ் இனம் அழிந்தாலும் தப்பிப் பிழைத்த அரும்புகளையாவது காக்க வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிறது. அங்கே பனை மரங்கள் கூட பஸ்பமாகிவிட்டாலும் அதன் சாம்பலில் பிறக்கும் புதிய ஜீவன்கள் நெருப்பின் புதல்வர்களாக எழுந்து வருவார்கள்.

ஆனால், சிங்கள இனவாதத்திற்கு சீனத்திற்குப் போட்டியாக தாமும் உதவி செய்வதில்தான் இந்திய அரசு துடிப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் சீனத்தின் செல்வாக்கையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? இன்றைக்கு இலங்கையில் சீனம் இரண்டு கப்பற்படைத் தளங்களை அமைத்து வருகிறது.

இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது.

இறுதிப் போர் என்று அண்மையில் சிங்கள இராணுவம் ஈழத்தின் மிச்ச மீதங்களைக் கூட பாஸ்பரஸ் குண்டுகளால் எரித்தது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் சீனமும் கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டுகொள்ளவில்லை.

ஐ.நா.மன்றத்தில் சிங்கள அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவும் சீனமும் சிங்கள அரசிற்குத் துணையாக நின்றன. மனித இனப்படுகொலைகளைக் கண்டிக்க மறுத்தன. அந்தக் கொடுமையை உள்நாட்டுப் பிரச்சினை என்று இரத்தத் திரையிட்டு மறைத்தன.

இன்றைக்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது யார்? நடைமுறையில் சீனம்தானா? அதனால்தான் இந்தியா அநியாயங்களுக்குத் துணை போகிறதா?

நமக்கு அண்மையிலுள்ள மியான்மர் (பர்மா) கடந்த முப்பது ஆண்டுகளாக இராணுவ சர்வாதிகாரத்தின் கோரக்கரங்களில் துடித்துக் கொண்டிருக்கிறது. இராணுவ ஆட்சியைத் தூக்கி எறிய மியான்மரின் இளைய தலைமுறை போராடுகிறது. மியான்மரின் தந்தை அவுங்சானின் புதல்வி சூயிகி பத்தாண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறார்.

இந்திரா காந்தி ஆட்சிக்காலம் வரை மியான்மர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா கரம் உயர்த்தியது. மியான்மர் மாணவர்கள் சுதந்திரமாக டெல்லித் தலைநகரில் தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறி வந்தனர். இந்திய எல்லைக்குள் மியான்மர் மக்களின் விடுதலை இயக்க முகாம்கள் விடிவெள்ளிகளாகப் பூத்திருந்தன.

இந்தியா எந்த இராணுவ ஆட்சியையும் ஆதரித்ததில்லை. ஆனால், காலப்போக்கில் மியான்மரின் இராணுவ ஆட்சியை ஆதரிக்க ஆரம்பித்தோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கிரீடம் சூட்டப்பட்ட இந்தியா, மியான்மர் மக்களின் ஜனநாயகப் போராட்டப் பாதையை அடைத்தது. டெல்லியில் கேட்டுக் கொண்டிருந்த விடுதலை கீதம் கெடுதலை ஓலமாகக் கருதப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் இராணுவ ஆட்சியோடு மன்மோகன் சிங் அரசு நேசம் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மர் சீனத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் முடங்கி விடக் கூடாது என்று கருதுகிறது. வெற்றி பெற்றதா? இல்லை.

இன்றைக்கு தென்னிந்தியாவை நோக்கி மியான்மர் தீவில் சீனம் கப்பற் படைத்தளம் அமைத்தே விட்டது.

ஆம். மியான்மர் இராணுவ ஆட்சிக்கு ஒரு பக்கம் சீனா ஆதரவு தருகிறது. இன்னொரு பக்கம் இந்தியா தோள் கொடுக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க இராணுவத் தளங்களை எதிர்த்து ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் இன்ன பிற நாடுகள் போராடின. தங்கள் மண்ணில் அத்தகைய தளங்களுக்கு இடமில்லை. ஏனெனில், அணுகுண்டுகள் மீது தலை வைத்துத் தங்களால் தூங்க முடியாது என்று அந்த நாடுகள் அறிவித்தன. அந்த நாடுகளின் போராட்டங்களுக்கு சீனம் ஆதரவு அளித்தது. ஆனால், இன்றைக்கு அதே சீனம் இலங்கையிலும் மியான்மரிலும் தனது கப்பற் படைத்தளங்களை அமைத்து வருகிறது.

இன்றைய சீனத் தலைமையின் போக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்திற்கு வெடிகுண்டுப் பற்களைக் கட்டிக் கொடுத்ததில் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, சீனத்திற்கும் பங்கு உண்டு.

இலங்கையிலும் மியான்மரிலும் சீனம் செல்வாக்குப் பெறுவது தமது நலன்களுக்கு எதிரானது என்று கருதியே இந்திய அரசு ஈழ இனப் படுகொலையையும் மியான்மர் இராணுவ ஆட்சியையும் ஆதரித்து மவுன சாட்சியாக நிற்கிறது. இதே காரணத்திற்காக இப்போது நேபாள அரசியலையும் இந்தியா குழப்புகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மன்னராட்சிக்கு முடிவு கட்ட நேபாள மக்கள் பல்லாண்டுகளாக மாவோயிஸ்டுகள் தலைமையில் போராடினார்கள். அப்போதெல்லாம் ஒரு பக்கம் சீனமும் இன்னொரு பக்கம் இந்தியாவும் மன்னராட்சிக்குத்தான் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தன.

நேபாளத்திலும் எண்ணற்ற கட்சிகள். இரண்டொன்றைத் தவிர எல்லாமே அரண்மனை வாசலில்தான் பாடம் படித்துக் கொண்டிருந்தன. மாவோயிஸ்டுகள் தலைநகரையும் கைப்பற்றுவர் அரண்மனையையும் மியூசியம் ஆக்குவர் என்ற நிலை வந்த போதுதான் அந்தக் கட்சிகள் புரட்சிக்கு ஆதரவளித்தன. புரட்சியில் மட்டுமல்ல; அடுத்து வந்த தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் மகத்தான வெற்றி பெற்றனர். கூட்டணி அரசு அமைந்தது.

புஷ்பகமல் தகால் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா பிரதமரானார். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தை அவர் செயல்படுத்தத் தொடங்கினார். பிரச்சினைகள் எழுந்தன. மன்னராட்சிக்கு விசுவாசமாக இருந்த இராணுவத் தளபதியை மாற்ற முயன்றார். அந்தத் தளபதியோ ஏற்கெனவே ஓய்வு பெற்று வீட்டிற்குப் போய் விட்ட இராணுவ அதிகாரிகளை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அதற்காகச் சொல்லப்பட்ட காரணம், இராணுவத்தை பிரசண்டா தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதுதான்.

பிரசண்டா பதவி விலகினார். இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டார். பிரதமராகும் வரை அவரை அங்கீகரிக்காத சீனம் அவரை அங்கீகரித்தது. அதற்காக அவர் சீனத்தின் பக்கம் சாய்ந்துவிடவில்லை. ஆனால் அப்படிச் சாய்கிறார் என்று இந்தியாவிற்குச் சந்தேகம் வந்தது. அதன் விளைவாகத்தான் அவர் பதவி விலகினார். அதனை அவரே பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்தபேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இனி நேபாளத்திற்கு என்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அரசமைப்பு சபைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதன் தலைவர் சி.பி.கொய்ராலா பிரதமராக வேண்டும். இதுதான் இந்தியாவின் விருப்பம் என்று அண்மையில் நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதை இங்கே நினைவுகூர வேண்டும்.

அப்படி ஓர் நிலை வந்தால் என்ன நடைபெறும்? மீண்டும் மன்னராட்சி சிம்மாசனம் ஏறும். பெயரளவில் நாடாளுமன்றமும் நகர்ந்து கொண்டிருக்கும். ஏனெனில், கொய்ராலாக்கள் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்தே ஆட்சி செய்து அனுபவப்பட்டவர்கள்.

பொதுவாக, சீனமும் இந்தியாவும் அண்டை நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்த போட்டி போடுகின்றன என்ற கருத்து உருவாகி வருகிறது. அந்தப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள். மியான்மரே இராணுவ முகாமாக உருமாறி இருக்கிறது. நேபாளத்தில் வாக்குப்பெட்டி மூலமே 40 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்ற மாவோயிஸ்டுகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சரித்திரத்தின்


மீது இரத்தத் துளிகளைத் தெளிக்கிறார்கள். பார்ப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 13 ஜூன், 2009

தமிழர்களின் அடிப்படை உரிமைகளில்
எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் இருக்காது:
அத்வானியிடம் த.தே.கூ. எடுத்துரைப்பு
[வெள்ளிக்கிழமை, 12 யூன் 2009, 11:40 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறும் தமிழர்களுக்கான தாயகம் - தன்னாட்சி - சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு வழங்குமாறும் இந்திய எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எல்.கே.அத்வானியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

புதுடில்லியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:30 நிமிடம் தொடக்கம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு இச்சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா புதினத்திடம் தெரிவித்துள்ளதாவது:

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தடுப்பு முகாம்களில் படும் அவலநிலை குறித்தும் அந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாப்பட்டது.

அத்துடன், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள ஆயிரம் கோடி ரூபா பணம் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்தும் அத்வானிக்கு விரிவாக விளக்கியிருக்கின்றோம்.

குறிப்பாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் காயமடைந்த நிலையில் - மருத்துவ வசதிகள் ஏதுமின்றி - முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதோடு அவர்களை விரைவாக மீள்குடியேற்றமும் செய்ய வேண்டும். அத்தகைய மீள்குடியேற்ற நடவடிக்கையில் மீள்குடியேற்றத்திற்குரிய தரம் பேணப்படுவது அவசியமானது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக, வன்னியில் இராணுவ முகாம்களை அமைப்பதிலும் கரையோரங்களில் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்துவதிலும்தான் அக்கறை காட்டி வருகின்றது.

குறிப்பாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பௌத்த துறவிகள் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து போரில் வெற்றிபெற்றுள்ள படையினருக்கு வன்னியில் நிலங்களை வழங்க வேண்டும் என்றும் -

வன்னியில் பௌத்த சின்னங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அங்கே மீண்டும் பௌத்த சின்னங்களை பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் -

போர் இடம்பெற்ற பகுதிகளில் பௌத்த விகாரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய நிலை உருவாகுவதை நாங்கள் ஏற்கப் போவதில்லை.

தற்போதைய நிலையில் முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றமே முதன்மையான விடயமாக உள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 19 பேரடங்கிய சிறப்பு செயலணிக்குழு ஒன்றை அமைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இக்குழுவில் தமிழ் மக்களின் இந்த அவலநிலைக்கு காரணமான படைத் தளபதிகளும், சிங்களவர்களாக உள்ள செயலாளர்களும் ஒரு முஸ்லிம் இனத்தவரும்தான் உள்ளனர். எந்தவொரு தமிழ்ப் பிரதிநிதியும் இந்த குழுவில் இல்லை என்பதுடன் மேற்படி முஸ்லிம் இனத்தவரும் அமைச்சு ஒன்றின் செயலாளராகவே பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் படுகொலை செய்யப்பட்டும் படுகாயமடைந்தும் அவலப்படுவதற்கு காரணமான இவர்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உறுப்பினர்களாக இருப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவர்கள் மீது நம்பிக்கை வைக்கவும் நாங்கள் தயாராக இல்லை.

மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பாக நிபுணத்துவம் பெற்ற தமிழர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். அரசாங்க உயர் பதவிகளில் தமிழர்கள் பலர் உள்ளனர். அந்தப் பகுதிகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே இவர்கள் அடங்கிய குழுவை மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பாக நியமிக்க வேண்டும்.

இதேவேளையில் 10 ஆயிரம் வரையிலான புலிகளை தாம் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக சிறிலங்காப் படையினர் அறிவித்திருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கையிலான புலிகள் அங்கே இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் புலிகளாகவும் இருக்க முடியாது. மக்கள் பலர் இன்று புலிகள் எனக்கூறப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசன்னத்துடன் இவர்கள் யார் என்பதை பரிசீலிக்க வேண்டும்.

அத்துடன், சரணடைந்து பின்னர் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஜே.வி.பிக்கு சிறிலங்கா அரசாங்கம் எப்படி மன்னிப்பு வழங்கியதோ அதேபோல தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும்.

இதைவிட 13 ஆயிரம் பேரைக் காணவில்லை என்று மனித உரிமைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் குறித்த எந்தவொரு பதிவுகளும் இல்லை. இது அபாகரமான விடயம். எனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு காணாமல் போன மக்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மோதல் நடைபெற்ற பகுதியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்த நிலையில் மருந்தின்றி மடிந்திருக்கின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி இந்த 25 ஆயிரம் பேரும் அழிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புக்களும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வருகின்ற போது இந்தியா அதற்கு தடையாக நிற்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த தீர்மானத்தை எதிர்த்து நின்ற இந்தியா வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இன்னமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இத்தகைய நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

13 ஆவது அரசியமைப்பு திருத்தச் சட்டத்திற்கமைவான தீர்வுதிட்டம் குறித்து அரசாங்கம் கதைக்கிறது. இந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இறந்துபோன ஒன்று. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இன்னமும் இரண்டு மாதங்களில் அந்த தீர்வுத்திட்டத்தை முன்வைப்போம். அதற்கு இந்தியாவின் ஆதரவும் பங்களிப்பும் அவசியமானது.

தமிழர் தாயகம் - தமிழர் தன்னாட்சி - தமிழர் சுயநிர்ணய உரிமை என்பனவற்றின் அடிப்படையிலேயே எமது தீர்வுத்திட்டம் அமையும். அதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடம் இருக்காது என்பது உட்பட்ட மேற்படி தகவல்களை அத்வானியிடம் எடுத்துக் கூறினோம்.

இந்த தீர்வுத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

எமது கருத்துக்களை முழுமையாக செவிமடுத்த அவர் தமிழ் மக்களுக்கான தமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும் என்றும் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேசுவதாகவும் உறுதிமொழி வழங்கியிருக்கிறார்.

இந்த தகவல்களையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பிலும் தெரிவித்தோம் என்றார்.

இன்றும் நேற்றும் நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பை முடித்துக்கொண்டு நாளை இவர்கள் கொழும்பு திரும்புகின்றனர்.

செவ்வாய், 2 ஜூன், 2009

தமிழின அழிப்பு கொலைக் களத்தின் இறுதிக் கட்டம்: கனரக பீரங்கிகளின் தாக்குதலோடு தொடங்கிவிட்டது சிங்களப் படை! காயமடைந்து வீழ்ந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!!
[திங்கட்கிழமை, 18 மே 2009, 08:34 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.

கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன.

தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.

காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.

விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் - சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடலங்களும் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன.

திரும்பிய பக்கம் எல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடலங்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.

இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர்.

படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.

படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள் மக்கள் - அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக்கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.

அதேபோல - காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு 'சையனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.

பதுங்கு குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.

இவ்வாறு கூறிய எமது செய்தியாளர், கடைசியாக - "இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு - யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும் போது - மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது?" என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.

2003 ஆம் ஆண்டில் இருந்து 'புதினம்' நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து - உண்மையான செய்திகள் மட்டுமே வெளிவர உழைத்து - 'புதினம்' நிறுவனத்தின் இரத்தமும், சதையுமாக இயங்கிய அந்த செய்தியாளர், கடைசியாக - "என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்" என்று கூறினா
தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர்: 'அமெரிக்கா' வார ஏடு
[செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2009, 07:09 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
வன்னிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என 'அமெரிக்கா' என்ற தேசிய கத்தோலிக வார சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் இடம்பெற்ற இறுதிச் சமரில் சில நாட்களில் சிறிலங்கா படையினர் 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தும் காயப்படுத்தியும் உள்ளதாக உதவிப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொத்துக்குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் என்பனவற்றின் செறிவான பிரயோகத்தினாலே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டதாக ஒரு தொண்டர் நிறுவனப்பணியாளர் தெரிவித்துள்ளார். இந்த வகை ஆயுதங்கள் அனைத்துலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாகும்.

தற்போது மோதல் இடம்பெற்ற பகுதி சுடுகாடாக காட்சி தருகின்றது. அங்கு எதுவுமே இல்லை. கட்டடங்களோ, தேவாலயங்களோ அங்கு இல்லை எல்லாம் அழிவடைந்த நிலையில் உள்ளதாக தொண்டு நிறுவனப் பணியாளர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை குறிப்பிடவில்லை.

ஏனெனில் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கொடுமையான சம்பவங்களை பார்வையிட்ட சாட்சி அவர்.

அவர் அனைத்துலக மனிதாபிமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர். வன்னிப் பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய அவர், கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியிலேயே அங்கிருந்து வெளியேறியிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 1 ஜூன், 2009

61 ஆண்டு கால தமிழர் படுகொலை வரலாறு:
ஒரு முழுமையான தொகுப்பு
[திங்கட்கிழமை, 11 மே 2009, 03:41 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசு தலைமையில் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு வரலாறு நீண்டது. பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இன அழிப்பில் முதன்மையான வடிவமாக இருந்து வருவது நேரடியான படுகொலைகளாகும். இந்த படுகொலைகளின் அத்தியாயங்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறாக கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) ஒரு தொகுப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த படுகொலைகள் நடைபெற்ற சூழ்நிலைகள், அவை தொடர்பான சாட்சியங்கள் என்பன முடிந்த அளவிற்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

அந்த சாட்சியங்கள் தாம் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய விடயங்கள் மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப் படுகொலைகளின் சில பகுதிகளை மட்டுமே ஒரு சாட்சி கண்ணால் பார்த்திருக்க முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த படுகொலைகள் எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான வரைபடமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர என மக்களால் எழுப்பப்பட்ட நினைவு கட்டடங்களின் படங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் இறுதி பக்கங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஓவ்வொரு படுகொலைகள் தொடர்பான உண்மையான பல தகவல்களை மேலும் விபரமாக ஆராய்வதாக இருந்தால் அதற்கு மேலதிக நேரமும், தகவல்களும் தேவை. ஆனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் அவற்றை இப்போது செய்வது கடினமானது.

இருந்தாலும் தற்போதைய சூழலில் எந்த அளவுக்கு முழுமையாகத் தகவல்களைத் திரட்ட முடியுமோ அந்த அளவுக்கு முழுமையாக தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன.

வெளி இணைப்பு: 61 அண்டு கால தமிழர் படுகொலை வரலாற்றுத் தொகுப்பு

4,795+... தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...
[வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 09:59 பி.ப ஈழம்] [தி.வழுதி]
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.

பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -

இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -

கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.

வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.

போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.

வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.

இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.

"இலங்கை விடயத்தில் இருந்து நீங்கள் வெளியில் போய் விடுங்கள்" என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் நேரடியாகவே சொன்னதாக, எரிக் சொல்ஹெய்ம் எனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.

மேலும், அண்மையில் - தம்மால் "அதிசயம் எதனையும் நிகழ்த்த முடியாது" என்று சொன்ன எரிக் சொல்ஹெய்ம், "அமெரிக்காவோடு பேசுவேன், ஜப்பானோடு பேசுவேன், ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேசுவேன்" என்றுவிட்டு இந்தியா பற்றி வாய் திறப்பதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டார்.

ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்த நோர்வேயை, இப்போது - சிறிலங்காவை வைத்து அதிகாரபூர்வமாகவே அங்கிருந்து வெளியேற்றிவிட்டது இந்தியா.

இன்னொரு வகைளில் சொல்லப் போனால் - 'இலங்கைப் போரை நாம் தான் நடத்துகின்றோம்; வேறு யாரும் அங்கு தலையிடத் தேவையில்லை' என்று மேற்குலகிற்கு இந்தியா அரசு சொன்ன செய்தி அது.

'போரை நிறுத்து' என்று சும்மா சொன்னால் போர் நிற்காது என்பது தெரிந்திருந்தும், 'போரை நிறுத்து' என்று புலம்புகின்றது இந்த உலகு.

ஈழத் தமிழனைக் காப்பதே தன் 'கடைசிச் சாதனை' என்று வாய்ச் சவடால் விட்ட கருணாநிதியோ, தமிழனை 'அம்போ' என்று கைவிட்டுவிட்டு, தனது ஏதோ ஒரு கடைசி ஆசைக்காக காங்கிரஸ் காரர்களின் கால்களில் விழுந்து நக்கத் தொடங்கிவிட்டார்.

எல்லோருமாகச் சேர்ந்து - தமிழனின் காதிலே பூ சுற்றி, அவனின் தலையிலே இப்போது மிளகாயும் அரைக்கின்றார்கள்.

சிங்களப் படையெடுப்பை நிறுத்தி, நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்கத் திராணியற்ற உலகமோ, இப்போது - உலகத் தமிழ் செயற்பாட்டாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு - 'போருக்குப் பின்னான காலம்' என்றும் 'புலிகளுக்குப் பின்னான காலம்' என்றும் பசப்பு வார்த்தைகள் பேசத் தொடங்குகின்றது.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்த பின்னர் - ஏதோ அவர்களே இறங்கி நல்ல தீர்வு வாங்கித் தருவார்கள் என்று எம்மை நம்பவைக்கும் விதமாகப் பேசி மயக்கத் தொடங்குகின்றது உலகு.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்து போன பின்னர் யாரும் தமிழனை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது, சொல்லுகின்ற அவர்களுக்கும் கேட்கின்ற எமக்கும் தெளிவாகவே தெரியும்.

யாருடைய மயக்குதலுக்கும் நாங்கள் இனி ஆளாகத் தேவையில்லை; எல்லாம் முடிந்து போன பின்னர், கருணாநிதியின் கருணையும் எமக்குத் தேவையில்லை.

இந்த உலகத்தையே இப்போது நாங்கள் உலுக்க தொடங்கிவிட்டோம்.

சிவப்பும், மஞ்சளும், புலி பாயும் எங்கள் செங்கொடியுமாக - உலகத் தலைநகரங்களை நாங்கள் நிறைத்த பின்னர்தான், எமது செய்தி என்ன என்பதை நிதானமாகக் கேட்கின்றது உலகு.

'பயங்கரவாத'ப் பட்டம் சூட்டி - நிராகரித்து - எம்மைப் பயமுறுத்தி வைத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போயே போய் விட்டது.

உலக ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகளுக்கு நேர் முன்னால் நின்று - "விடுதலைப் புலிகள் எங்கள் சுதந்திரப் பேராளிகள்!" என்று நேரடியாகச் சொல்ல நாம் துணிந்து விட்டோம்.

"புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழர்களுக்கு எதிரான போரேதான்" என்று நாம் உரக்கச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.

புலிகளைத் தடைசெய்து விட்டு - 'பயங்கரவாதிகள்' என்று தமிழனைக் கொச்சைப்படுத்தி ஒதுக்கிய நாடுகளின் காவல்துறையும், சட்டமும் - இன்று, புலிக்கொடிகள் தாங்கி நாங்கள் லட்சக்கணக்கில் அவர்களது தெருக்களிளேயே அணிவகுக்கின்றபோது - ஒரு ஓரமாகப் பார்த்து நிற்கின்றன என்பது தான் யதார்த்தம்.

இப்படி ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பனை கூடச் செய்து பார்த்தது கிடையாது.

புலிக்கொடி பிடித்தாலோ அல்லது புலிகள் பற்றிக் கதைத்தாலோ இந்த உலகம் எம் கதையைக் கேட்காது என்று மிக அண்மைக்காலம் வரை நாமே எமக்குச் சொல்லிக்கொண்டு சும்மா கிடந்தோம்.

ஆனால், இவ்வளவு காலமும் எமது போராட்டங்களுக்குச் செவிமடுக்காத உலகு, இன்று - புலிக்கொடிகளோடு நாங்கள் வீதிகளில் இறங்கிய பின்னர் தான் எங்கள் கதையைக் கேட்கின்றது.

விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்த தொடங்கிவிட்டோம்.

இருந்தாலும் - எமக்குச் சாதகமாக உலகில் எதுவும் நடக்காதது போல எமது பார்வைக்கு இப்போது தோன்றலாம்; அதில் இப்போதைக்கு ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம்.

புலிக்கொடிகளோடு நாம் அலைந்து திரிவது தான் அதற்குக் காரணம் என்று சிலர் சொல்லப்பார்க்கின்றார்கள்; ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல.

எமக்குச் சாதகமான சூழல் வெளிப்படையக அமைவது தாமதம் ஆகுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் உள்ளன:

ஒன்று -

தங்களது தலைநகரங்களை நிறைத்துப் போராடுகின்ற தமிழரது உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள தமது 'மனிதாபிமான விழுமியங்களுக்கும்' (Humanitarian Values) -

சிறிலங்காவைத் தனது கைப்பொம்மையாக வைத்து ஆட்டுகின்ற இன்றைய இந்திய அரசுடனான தமது 'வெளியுறவுக் கொள்கை'க்கும் -

தென்னாசிய, இந்த சமுத்திர பிராந்தியத்தில் தமக்கு இருக்கின்ற 'கேந்திர நலனுக்கும்' இடையில் பின்னப்பட்டிருக்கின்ற 'இராஜதந்திர' வலையில் இந்த உலகு சிக்குண்டிருக்கின்றது.

இரண்டாவது -

அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டின் அரசாங்கம் (Government of a Sovereign State) என்ற வகையில் - தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள நிலம் மீதும், மக்கள் மீதும் தனது சக்தியையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமை சிறிலங்கா அரசிற்கு உள்ளதால், தனது அதிகார பலத்தை தனது எல்லைக்குள் மட்டும் பிரயோகிக்கும் ஒர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத 'சட்ட வலைக்குள்ளும்' இந்த உலகு சிக்குண்டுள்ளது.

எமக்குச் சாதகமான சூழல் உலகில் ஏற்படாதது போல தோன்றுவதற்கு இவை இரண்டுமே முதன்மைக் காரணிகள்; ஒரு அளவுக்கு மேல் எம்மால் எதனையும் இந்த உலகிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது.

உலகை ஆளும் இயங்கு மையம் 'மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி' நகர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் இப்போது நிலைகொள்வதாகச் செல்லப்படுகின்றது.

'ஒற்றை வல்லரசு' தகுதியை அமெரிக்கா இழந்துவர - 'பூகோள வல்லரசு' என்ற நிலைக்காக இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுவதாகவும் நோக்கப்படுகின்றது.

இவற்றுக்குப் பின்புலமாக - பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கேந்திர நலன்கள் கொண்ட - நுணுக்கமான பல காரணங்கள் இருக்கின்றன.

நடந்துவரும் இந்த உலக மாற்றத்தைப் பின்னணியாக வைத்தே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்தியாவை மீறி இப்போதைக்கு இந்த உலகம் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் இந்தப் பின்னணியை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.

2001 செப்ரெம்பருக்குப் பின்னான உலகச் சூழலைச் சரிவரக் கணிக்காமல் விடுதலைப் புலிகள் இயக்கம் விட்ட சில அரசியல் - இராஜதந்திர - இராணுவத் தவறுகளும் இன்றைய பின்னடைவு நிலைக்குக் காரணம் என்பதும் உண்மைதான்.

ஆனால், இன்று நிலைமை எப்படி இருந்தாலும், எமக்கான காலம் உலகில் கனிந்து வருகின்றது என்பது தான் உண்மை; ஆனால், அது சற்று காலதாமதம் ஆகின்றது.

அடுத்து வருகின்ற ஓரிரு மாத காலம் தான் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற காலம்.

இதுதான் உச்ச நேரம்; இந்த ஒரிரு மாத காலத்தின் ஒவ்வொரு நாளும் பெறுமதியானவை.

உலக ஓட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விடயம் எமக்குத் தெளிவாகப் புரியும்; இனத் துடைத்தழிப்புப் படுகொலைகள் உலகில் நிகழ்ந்த போது, எங்குமே அவை தடுக்கப்பட்டதில்லை.

இன அழிப்புக்கள் நிகழும் போது யாரும் அதில் தலையிடுவதுமில்லை: அவ்வாறு தலையிடாமல் இருப்பதற்கு அவரவருக்கு அவரவரது சொந்தக் காரணங்கள் உண்டு; யாரையும் இதில் குற்றம் சாட்டவும் முடியாது.

எல்லாம் முடிந்த பின்னர் தலையிட்டு - விசாரணை, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அது, இது என்று அடுக்கெடுப்பது தான் உலக வழமை.

அதுதான் - "Post Conflict Scenario"

இப்போது - எமது விடயத்திலும் - போரும் முடிந்து, இன அழிவும் முடிந்த பின்னர் - பெட்டி படுக்கைகளோடு வந்து இறங்குவதைத் தான் "போருக்குப் பின்னான காலம்" என்று பேசுகின்றார்கள்.

ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் -

முன்னைய காலங்களில் இனத்-துடைத்தழிப்புக்கு உள்ளாகிய இனங்களுக்கு இருந்திருக்காத சாதகமான புற மற்றும் அகச் சூழ்நிலைகள் எமக்கு இப்போது உள்ளன என்பது தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம்.

நான்கு விடயங்கள் முக்கியமானவை:

ஒன்று - எப்போதோ முடிந்துவிடும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மிகப் பலமாக இன்னமும் தொடரும் விடுதலைப் புலிகளின் மரபுவழி ஆயுதப் போராட்டம்.

இரண்டாவது - அனைத்துலக அரங்கில் தமிழர்கள் நடத்தும் - மிக வலிமையான - உதாசீனம் செய்து ஒதுக்கிவிட முடியாத பேரெழுச்சிப் போராட்டங்கள்.

மூன்றாவது - தமிழ்நாட்டு மக்களின் - கேள்விக்கிடமற்ற - ஏகோபித்த துணையும், உலகத் தமிழினம் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருக்கும் பலமும்.

நான்காவது - உலக வல்லரசு நிலைமாற்றங்கள், தென்னாசியாவின் வளர்ந்து வரும் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றுடன், இந்தியத் தேர்தல்.

இந்த நான்கில் முதல் இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.

இன அழிப்புப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று போராடினால் தான் உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, ஆயுதப் போராட்டம் உச்சமாக நிகழ்கின்ற போது முன்வைத்தால்தான் எமது அரசியல் கோரிக்கைகளும் எடுபடும் என்பதும் அதே அளவுக்கு உண்மை.

இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் போராடினால், சில சமயம் இன அழிப்பைத் தடுக்க முடியாமலே கூட போய்விடலாம்; ஆனால், தெளிவான அரசியல் கோரிக்கையையும் முன்வைத்துப் போராடினால் - இன அழிவையும் தடுத்து, அரசியல் உரிமைகளையும் பெற்றுவிடும் சாதகச் சூழல் எமக்கு கனிந்து வருகின்றது.

எனவே - இன அழிப்பைத் தடுக்கும் படி போராடி உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈர்க்கப்பட்ட அந்தக் கவனத்தின் முன்னால் எமது தெளிவான அரசியல் போரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டும்.

அதற்கு இது தான் மிகச் சரியான நேரம்.

அடிப்படையான எமது அரசியற் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.

அந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது; ஏனெனில், அவை இரண்டுமே, மேற்குலகு போற்றும் 'ஜனநாயக' வழிமுறைகளினூடாகத் தமிழர்களால் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட விடயங்கள்.

ஒன்று - 'தமிழீழத் தனியரசே எமக்கான தீர்வு': 1977 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தத் தீர்வுக்கு வக்களித்து, நாம் அதனைத் தெளிவாகச் சொல்லியாகிவிட்டது. அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை; தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க இனி ஒரு பொதுவாக்கெடுப்பும் (Referendum) தேவையில்லை.

இரண்டாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே எமது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் (Authentic representatives): 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அங்கீகாரத்திற்கு வாக்களித்து, விடுதலைப் புலிகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த மாற்றத்திற்கும் இனி இடமில்லை.

இந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைளையும் இந்த உலகம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விதமான புறச்சூழல் நிச்சயமாக ஏற்படும்.

- 'புலிகள் எங்கள் சுதந்திரப் போராளிகள்' என்பதை இந்த உலகத்தின் செவிப்பறை கிழிய நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க -

- சிங்களப் படைகளின் முன்னேற்றங்களுக்கு எதிராகப் புலிகள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க -

- காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ள -

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்றபோது - எமக்கான ஒருநாள் நல்லவிதமாக விடிந்தே ஆகும்.

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்ற போது - இந்த உலகம் எமது குரலைக் கேட்டுத்தான் ஆகும்; எமக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துத்தான் ஆகும்.

வன்னிப் போரைப் புலிகளும், இந்தியத் தேர்தலை எம் தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக்கொள்ள - எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

சிலையாய் நிற்கின்ற நேரு மாமாவின் தலையை உடைத்து, சும்மா கிடக்கின்ற சிறிலங்கா தூதரகத்தை நொருக்கி - எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.

ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.

எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....

படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;

எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;

தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதி பிரிகேடியர் தீபனின் புதைகுழியின் மேலே கைகளை வைத்து!

தி.வழுதி

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்:
இந்திய ஊடகம்
[ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2009, 07:59 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]
அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகத்தின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர் தொடர்பாக பத்து கேள்விகளை இந்திய ஊடகமான 'கௌண்டர் கரண்ட்ஸ்' முன்வைத்திருக்கின்றது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.

கொழும்பு அரசாங்கத்தின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு பின்னால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்கள் பேசமுடியாத விடயங்களாக உள்ளன. அது தொடர்பான தவறுகளை தவிர்ப்பதற்கு வன்னியில் நடைபெற்ற போரில் இறுதி வாரங்களில் என்ன நடைபெற்றது என்பதை சிறிலங்கா மக்கள் எல்லோரும் திரும்பி பார்க்க வேண்டும்.

அதாவது, இந்த போரானது அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கொடுமையான கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள அனைத்துலகம் கண்மூடிக்கொண்டு இருந்துள்ளது அல்லது இந்த போரில் ஒரு பக்கத்தில் மரணிப்பவர்கள் கருமையான தோலைக்கொண்ட ஏழை மக்கள் எனவும் அவர்கள் எண்ணி மௌனமாக இருந்திருக்கலாம்.

எவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு அப்பால் அவர்கள் மீது இனச்சுத்திகரிப்பு என்ற பதமும் பிரயோகிக்கப்படவில்லை.

உலகின் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ச்சியாகவும், வரலாற்று ரீதியாகவும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகி வருகின்றனர்.

எனவே தமது உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை.

இதன் தொடக்கமாக உடனடியாக விடை காணப்படவேண்டிய பத்து கேள்விகள் உள்ளன.

1. இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது?

2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன?

3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை?

4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்?

5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்?

6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன?

7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்?

8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்?

9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?

இவ்வாறு 'கௌண்டர் கரண்ட்ஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் கொலைக்கு பழிவாங்க காங்கிரஸ் அரசு துடித்தது; இனப்படுகொலைக்கு இந்தியா துணைபோனது: படை அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
[திங்கட்கிழமை, 01 யூன் 2009, 05:17 பி.ப ஈழம்] [வி.நவராஜன்]
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா மறைமுகமாக துணை போயிருப்பதாக இந்தியப் படையின் முன்னாள் அதிகாரி அசோக் மேத்தாவும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கியதாகவும் அசோக் மேத்தா கூறியிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கைப் போரின் கடைசி பகுதியில் சிறிலங்காவுக்கு இந்தியா மறைமுகமாக துணை போனது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த இந்தியா, இறுதி வரை அதில் உறுதியாக இருந்தது. அதே நேரத்தில் களத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து தடுக்க இந்தியா தவறிவிட்டது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு வருத்தமளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று இந்தியப் படையில் உயரதிகாரியாகப் பணியாற்றியவரும் இலங்கை சென்ற அமைதிப் படையின் தளபதியாக இருந்தவருமான அசோக் மேத்தா லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சிறிலங்காவுக்கான ஆயுத விற்பனையை சீனாவும் பாகிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்தன. இலங்கையில் அந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியாவும் சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்கியது.

அது மட்டுமின்றி இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கம் விரும்பியது என்றும் அசோக் மேத்தா கூறினார்.

இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கும் போதிலும் அவர்களின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் சிறிலங்காப் படையினருக்கு ஆயுத உதவி, போர்ப் பயிற்சி ஆகியவற்றை இந்தியா வழங்கியது விடுதலைப் புலிகள் குறித்த உளவுத் தகவல்களையும் சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்தது என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி சிறிலங்கா அரசுக்கு இந்தியா தொடர்ந்து தூதரக வழியில் ஆதரவு தெரிவித்தது என்றும் போர்ப் பகுதியில் சிக்கியிருந்த தமிழ் மக்களை காப்பாற்ற, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்ததாக 'த ரைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை சீனா, ரசியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவும் முறியடித்தது.

மேலும் சிறிலங்காவை புகழ்ந்து அந்நாடே கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் காசா பகுதி மீது குண்டுவீச்சு நடத்தி 926 பேரை படுகொலை செய்ததற்காக இஸ்ரேல் மீது போரியல் குற்ற வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்த இந்திய அரசு,
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை மட்டும் எதிர்த்ததாக 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போருக்கு இந்தியா உதவியதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிறட் அடம்சும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்த பிறகும் இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணங்களை கூறினாலும் அதனை ஏற்க முடியாது.

இதில் இந்தியா சற்று தீவிரமாக செயல்பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என 'த ரைம்ஸ்' நாளிதழிடம் பிறட் அடம்ஸ் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பெருமளவிலான மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது தெரிந்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் போரை இந்தியா முழுமையாக ஆதரித்தது என்று பொது மன்னிப்புச் சபையின் ஆசிய இயக்குநர் சாம் ஜரிஃபி கூறியுள்ளார்.

இலங்கைப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

ஆனால், இந்தியத் தரப்பிடம் இருந்து எந்த வலியுறுத்தலும் வரவில்லை. இந்தியாவின் சார்பில்தான் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் போரிடுகிறோம் என்பது இந்திய அரசுக்கு தெரிந்திருக்கும் என்று என்.டி.ரி.வி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்திய அரசு எங்களுக்கு அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானது என்று 'தி வீக்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் மகிந்த ராஜபக்ச கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.