சனி, 20 ஜூன், 2009

(2ம் இணைப்பு)நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்
[செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயபூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானதுமுழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ். தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக