ka.pa.aravaanarn லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ka.pa.aravaanarn லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 நவம்பர், 2011

நூலகம் மூடல் : நம் மனப்போக்கு எப்படி?- க.ப.அறவாணன்






காவல் நிலையம் இருப்பது, அப்பகுதியில் குற்றவாளிகள் இருப்பதற்கு அடையாளம். மருத்துவமனைகள் இருப்பது, அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதன் அடையாளம். நூலகங்கள் இருப்பது, அவ்விடம் புத்தக ஆர்வலர்கள் இருப்பதன் அடையாளம். இவற்றுள் ஆரோக்கியமான அடையாளம், நூலகங்கள்தான்.

ஒரு பெரும் நூலகத்தை இடம் மாற்றி, அப்பெரு நூலகம் இருந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வருவது சரியான செயலா? சில மாதங்களுக்கு முன், செம்மொழிக்காக அமைக்கப்பட்ட பழைய சட்டசபை நூலகம் மூடப்பெற்று, இடம் மாற்றப்பட்டது.கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் படை எடுத்தபோது, தீப்ஸ் என்ற நாட்டை வென்றார். அப்படை எடுப்பு நடக்கும் போது, அந்நாட்டில் கிரேக்க கவிஞர் பிண்டார் என்பவருடைய இல்லம் இருந்தது. கிரேக்க வீரர்கள், நகரையே நாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அது கவிஞரது இல்லம் என்று, மகா அலெக்சாண்டரிடம் சொன்னவுடன், "அந்த அறிவாளியின் இல்லத்தைத் தீண்டாதீர்கள்' எனத் தடுத்து ஆணை போட்டார். தமிழக வரலாற்றில், பகை அரசர்களால் சோழ நாட்டின் ஒரு பகுதி வெல்லப்பட்டபோது, அவ்வூரில் இருந்த ஓர் இல்லம், உருத்திரங்கண்ணன் என்ற புலவனுடையது என்று சுட்டிக்காட்டப்பட்டது. "அப்புலவனின் இல்லத்தை ஒன்றும் செய்து விடாதீர்கள்' என்று அரசன் ஆணையிட்டான்.

பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நம் மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களில், நூலகம் வைத்துப் பராமரிக்கப்பட்டது. அந்நூலகத்தில் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட நம்முடைய இதிகாசங்களும், காப்பியங்களும், தேவார, திருவாசகங்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும், ஓலைச்சுவடிகளில் கைவலிக்க எழுத்தாணியால் எழுதப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. அக்காலத்து அரசர்களும், செல்வந்தர்களும், பழைய ஓலைச்சுவடிகளை, புதிய ஓலைச்சுவடிகளில் எழுதி, பத்திரப்படுத்துவதற்காக நன்கொடைகள் வழங்கினர்.அந்நன்கொடைகள், "சாத்திர தானம்' என்று அழைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்ட இடம், சரஸ்வதி பண்டாரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. முதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவியின் மகன் என, இருவருக்கும் இடையே நடந்த சகோதரச் சண்டையால், தமிழகம், டில்லி இஸ்லாமியருக்குச் சரணாக்கப்பட்டு, அதன் விளைவாக, மாலிக்காபூர் என்ற இஸ்லாமியத் தளபதி, தமிழகத்தின் மேல், 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தான். தமிழகத்தையே நிர்மூலப்படுத்தினான். கண்ணில் பட்ட கோவில்களை எல்லாம், அடித்து நொறுக்கினான்.ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் முதலான இடங்களில் இருந்த பெரும் கோவில்கள், மாலிக்காபூர் எனும் இஸ்லாமியப் படைத்தளபதியால் மண்மேடாக்கப்பட்டன. ஆனால், அவன் செய்த ஒரு நல்ல காரியம், "கோவில்களில் பத்திரப்படுத்தப்பட்ட சரஸ்வதி பண்டாரத்திற்கு, எந்தவித ஊறும் செய்யக் கூடாது' என ஆணையிட்டான்.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாகக் கருதப்படும் ஒரு பெரும் நூலகம் மூடப்பட்டு மருத்துவமனையாக்கப்படுவது, வரவேற்கத்தக்கதா என அனைவரும் சிந்திக்க வேண்டும். அவ்வாணையை, மறுபரிசீலனை செய்வது தான் அறிவு தர்மம்.இந்திய நூலகத்தின் வரலாறு, மிகத் தொன்மை வாய்ந்தது. புகழ் பெற்ற அரசர் அக்பர் காலத்தில், அவராலேயே ஒரு நூலகம் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக் கழகத்தில் அழகான நூலகம் நிர்வகிக்கப்பட்டது. தர்மபாலன் பிறந்த காஞ்சிபுரத்தில், புத்த சமயம் சார்ந்த நூலகம் இருந்தது. தமிழை வளர்ப்பதில் முன்னணியில் இருந்த பாண்டியர், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து, நூல் அரங்கேற்றத்தை முறைப்படுத்தி இருந்தனர்.தஞ்சாவூரை மகாராஷ்டிர சரபோஜி மன்னர்கள் ஆண்டபோது, உலகிலேயே புகழ் பெற்ற பழமை வாழ்ந்த சமஸ்கிருத ஓலைச் சுவடிகளையும், தமிழ் ஓலைச் சுவடிகளையும் பெற்று, பத்திரப்படுத்தி வைப்பதற்காகவே சரஸ்வதி மஹால் நூலகம் அமைக்கப்பட்டது.தமிழகத்தில், 1925க்குப் பிறகு நூலக உணர்வும், எண்ணங்களும் மிகுதியாக வெளிப்படத் தொடங்கின. 1928 ஜனவரி, 30ல், கிருஷ்ணசாமி அய்யர் என்பவரின் தலைமையில், சென்னை மாகாணத்தில், நூலக இயக்கத்தைப் பரப்ப, சென்னைப் புத்தகாலய சங்கம் அமைக்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர், அறிஞர் எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆவார். இச்சங்கம், தன் சீரிய செயல்பாட்டால், மக்களுக்கு பல நூலக நன்மைகளைச் செய்தது.

உள்ளாட்சிகள், 1948ல், சொத்து வரி மற்றும் வீட்டு வரியின் மீது, ஒரு ரூபாய்க்கு, 3 காசுகள் நூலக வரி பெற வழி வகுத்தது. பின், 1972ல் அது, 5 காசாக உயர்த்தப்பட்டது. 1993 முதல் அது, 10 காசுகளாக உயர்ந்தது. இதன் வழி, தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. இப்பணம் முற்றுமாக, நூல்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. மிகக் குறைந்த சதவீதத் தொகையே, நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியத் தொகை, நூலக ஊழியர்களுக்காகவும், நூலகக் கட்டட வாடகைக்காகவும், செலவழிக்கப்படுகிறது.இந்நிலையில் தான், நூலகத்திற்கு என, சொந்தமாக ஒரு கட்டடம், 172 கோடியில் கட்டப்பட்டது. தற்போது, இதுவும் பறிபோகிறது.இந்தியாவில் நூலகத் துறையில் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகப் போராசிரியராகவும் இருந்த, எஸ்.ஆர்.ரங்கநாதன், "கோலன் பகுக்கும் முறை' என, நூல் அடுக்கு முறையை முதன் முதல் வகுத்துக் காட்டினார். தமிழகத்தில், நூலகங்கள், வெள்ளைக்கார அரசாட்சியிலேயே தொடங்கி, சுதந்திரம் பெற்ற பின், ஒரு பேரியக்கமாக வளர்ந்தது. தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயில, வாய்ப்பாக பொது நூலகங்கள் அமைக்கப்பட்டன.

இந்தியாவில் புத்தகங்களை வெளியிடுவதிலும், ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதிலும் கேரளாவும், மேற்கு வங்கமும் முன்னிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம், போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. வாசிக்கும் பழக்கமும் போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் அரசுக்கும், சமுதாயத்திற்கும் தலையாயக் கடமை.

அதற்கு ஒரு பெரும் வழி, பொது நூலகங்களை விரிவுபடுத்துவது, வசதிப்படுத்துவது. அதற்குச் சரியான எடுத்துக்காட்டு, சென்னையில் புகழ்பெற்ற அண்ணாசாலையில் நாம், நம் மக்களின் மனப்போக்குக்கு தக, திரைப்பட அரங்கைக் கட்டினோம். அதை, "ஏசி' ஆக்கினோம். அதற்கு நேர் எதிரில் அமெரிக்க தூதரகம் ஒரு நூலகத்தைக் கட்டியது. அதை முழுதும், "ஏசி' ஆக்கியது. நம் மனப்போக்குக்கு இதைவிட வேறு சான்று காட்டத் தேவையில்லை.


மேலும் பொது செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-11-17 03:41:42 IST Report Abuse
அதிமுக ஜெயித்ததே தமிழகத்துக்கு நடக்கும் ஏழரை சனியின் அறிகுறிதான் அதான் ஒரே அழிவா இருக்கு. இந்த ஆறு மாசத்துல மக்களுக்கு என்ன நல்லது நடந்தது ? ஒண்ணுமே இல்ல , படிச்சவங்க ஆட்சிக்கு வந்தா படிப்போட அருமை தெரியும் அரசியல வியாபாரமா நினைச்சு வந்தவங்களுக்கு நல்ல திட்டம் எதுவும் வெச்சுருக்க மாட்டாங்க

Rajamanickam Appavu - Nagapattinam ,இந்தியா
2011-11-17 02:41:31 IST Report Abuse
மிகச்சரியாக சொன்னீர்கள், இக்கருத்து ஆட்சியாளர்களின் செவிகளுக்கு சென்றடைய வேண்டும்.

செவ்வாய், 26 ஜூலை, 2011

அலைக்கற்றை ஊழல்: மன்மோகன், ப. சிதம்பரத்துக்கும் பொறுப்பு

2 ஜி: மன்மோகன், ப. சிதம்பரத்துக்கும் பொறுப்பு

First Published : 26 Jul 2011 01:58:34 AM IST

Last Updated : 26 Jul 2011 03:28:42 AM IST

புது தில்லி, ஜூலை 25: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றதாக சிறப்பு நீதிமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் சுசீல் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.  பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ஆ.ராசா சார்பில் வழக்கறிஞர் சுசீல் குமார் ஆஜராகி வாதிட்டார்.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக அப்போது அவர் கூறினார். அவர் மேலும் கூறியது:  மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகள் எதிலும் தவறு இல்லை. முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளையே அவரும் பின்பற்றினார்.  2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நடைமுறை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதே இருந்து வந்தது. அதே நடைமுறையைத்தான் ஆ.ராசா பின்பற்றி வந்துள்ளார். இதில் அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை; கொள்கையையும் மாற்றவில்லை.  சட்ட விதிகளுக்கு உள்பட்டே டி.பி. ரியாலிட்டி, யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பிரதமர் நன்றாக அறிவார். இதனை அவர் மறுக்க மாட்டார். தவறு இருந்திருக்கும் பட்சத்தில் பிரதமர் இந்த ஒதுக்கீட்டை அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாம்.  மத்திய அமைச்சரவை வழங்கிய அறிவுரையின் பேரில் நடந்த இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ஒப்புதல் அளித்திருந்தார்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த அருண் செüரி 26 உரிமங்களும், பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் 25 உரிமங்களும் வழங்கியிருக்கின்றனர்.  ஆ.ராசா தொலை தொடர்பு துறையின் அமைச்சராக பணியாற்றியபோது 122 உரிமங்கள் அளித்திருக்கிறார். எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தில் ஆ.ராசாவிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன்? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது?  ஆ.ராசா குற்றமற்றவர். முந்தைய அரசுகளின் கொள்கையைப் பின்பற்றியது தவறு என்றால் 1993 முதல் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த அனைவரும் ஆ.ராசாவுடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.  அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திறமையாகப் பணி புரிந்தார். அந்தக் கால கட்டத்தில்தான் மொபைல் அழைப்புக் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. நாட்டில் ரிக்ஷா ஓட்டுபவர் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களும் பயன் அடைந்துள்ளனர் என்று வாதிட்டார் சுசீல் குமார்.  இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படலாம் என "தினமணி' கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

திங்கள், 13 ஜூன், 2011

Ka.Pa.Aravaanan about engineering education: பொறியியல் கல்வி படும்பாடு: க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்

பொறியியல் கல்வி படும்பாடு: 
க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்
தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?

அண்மையில் வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியின்படி, நம் பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்லூரிகளில் இருந்தும் வெளிவரும் நூறு பொறியியல் பட்டதாரிகளில், இரண்டு பட்டதாரிகள் மட்டுமே, அவர்கள் படித்து வெற்றி பெற்ற பாடத்தில், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். இச்செய்தி, நம் நாட்டில் உள்ள பொறியியல் கல்வித் தரம் பற்றிய ஐயத்தை பன்மடங்கு ஆக்குகிறது.பொறியியல் கல்வியை தனியார் வசமும், தனியார் வணிக வசமும், நம் மேதகு அரசுகள் ஒப்படைத்தன. அதன் பிறகே, ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், ஆங்காங்கே தோன்றின. இக்கல்லூரியின் தரம் பற்றி ஆராய, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையில், "60 சதவீத பொறியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என்ற பெயருக்கே தகுதியில்லாதவை. போதிய அளவு சோதனைச்சாலைகள் இல்லை, வகுப்பறைகள் இல்லை.பணியாற்றும் ஆசிரியர்கள், மிகத் தகுதி குறைவானவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. பெரும்பாலானோர் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில், கடந்த அரசிலும், அதற்கு முன் இருந்த அரசிலும் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் கணிசமானோருக்கு, பொறியியல் கல்லூரிகள் சொந்தமாக இருக்கின்றன. இவை அமைச்சர்களாலும், செல்வந்தர்களாலும், வணிகர்களாலும் நடத்தப்படுவதற்கு அடிப்படை காரணம், பணம் காய்ச்சி மரங்களாக இக்கல்லூரிகள் இருப்பது தான். இந்தக் கல்வி ஆண்டில் தான், பொறியியல் கல்லூரிக்கு வரும் விண்ணப்பங்களின் பெருகிய எண்ணிக்கை குறைந்திருக்கிறது.பல நிறுவனங்கள், பெறும் பணத்திற்கு ரசீதும் கொடுப்பதில்லை. பல கல்வி நிறுவனங்கள், காசோலையாகவோ, டி.டி.,யாகவோ கட்டணத்தைப் பெறுவதில்லை. "ரொக்கமாக கொடுக்க வேண்டும்' என, நிபந்தனை போடுகின்றன. கணக்குக் காட்டுவதிலிருந்து தப்புவதற்கு இந்த ஏற்பாடு.சரி, தமிழகத்தில், பொறியியல் கல்வி பெருகினால் நல்லது தானே என்று நினைக்கலாம். பெரும்பான்மையான பாடத் திட்டங்களும், அமெரிக்க வேலைவாய்ப்பை நம்பியே அமைக்கப்படுகின்றன. அதாவது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, இங்கே கல்வி உற்பத்தி நடக்கிறது.சரியான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அந்த மண்ணுக்குரிய, அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இங்குள்ள ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?

தமிழகத்தை ஒட்டி, பொறியியல் கல்வி செய்ய வேண்டிய பணிகள், கண்டுபிடிப்புகள், சவால்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றை மட்டும் பட்டியலிடுவோம்.

1. உணவின் ஒரு பகுதியாக இருப்பது தண்ணீர். வேளாண் தொழிலுக்கு வேண்டிய தண்ணீர், பருகுவதற்கு வேண்டிய தண்ணீர். நம் நாடு, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளைப் போல, ஆண்டு முழுவதும் மழை பொழியும் நாடு அல்ல. குளம், குட்டை, கிணறு, ஏரி முதலானவற்றில் தண்ணீர் தேக்கி வைப்பதைப் பற்றி, விரிவாக சிந்திக்க வேண்டும். இவற்றை தூர்வாருதலுக்கு எளிய வழிகளையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இவற்றில் தேங்கியிருக்கும் நீர், வெயிலில் எளிதாக ஆவியாகாதவாறு, ஏதேனும் யுக்திகள் இருக்கின்றனவா என்று ஆராயப்பட வேண்டும்.
இன்னொரு வகையில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கடல் நீர் ஒரு பெரும் பேறாகும். கன்னியாகுமரியில் இருந்து, தமிழக வட எல்லை வரை, வங்காள விரிகுடா விரிந்து கிடக்கிறது. இந்த தண்ணீரை, குடிநீராக வேதியியல் மாற்றம் செய்வது பற்றி, வேதியியல் பொறியியல் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா, செயல்படுத்த வேண்டாமா? தமிழக ஆறுகளில் தண்ணீர் இல்லாத காலங்களில், பனிரெண்டு மாதமும் ஓடும் கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா முதலான ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றி திட்டங்கள் தீட்ட வேண்டாமா?

2. தமிழகத்தில் வாழக்கூடிய ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்களில், எல்லாருக்கும் போதிய உடை கிடைத்தபாடில்லை. அத்தனை பேருக்கும் உடை கிடைக்கும் வண்ணம், குறைந்த செலவில், எந்தெந்த மூலப்பொருளை வைத்து சட்டை, வேட்டி, பேன்ட், சேலை முதலானவற்றை நெய்யலாம் என்பது பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டியவர்கள் பொறியியலாளர்கள் தானே?

3. நம் சுகாதாரக்கேட்டின் உச்சம், கிராமங்களிலும், நகர சேரிப்பகுதிகளிலும், போதிய கழிப்பறைகள் இல்லாததுதான். பல நோய்கள், தொற்று நோய்களாக பெருகுவதற்கு, இது பெரும் காரணம். மலிவு கழிப்பறை பற்றி இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

4. கணினி, இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. கணினியை, இன்னும் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது பற்றி ஆராய வேண்டாமா?

5. சிவில் இன்ஜினியர்கள், வீடு கட்டுவதற்கு உரிய புதிய மூலப்பொருட்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.செங்கல் தொழிலும் தற்போது அறைகூவலாகி விட்டது. மாற்றாக, சிமென்ட் கற்கள் வந்துள்ளன. தக்கைக் கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் பற்றி சிந்திக்கவேண்டும்.

6. தமிழகத்தில் மிகப்பெரிய அறைகூவலாக இருப்பது மின்சக்தி. சோவியத் புரட்சியைச் சாதித்த மாவீரர் லெனின் புரட்சி நடந்து முடிந்து, தான் தலைமை ஏற்ற உடனே செய்த முதல் வேலை, சோவியத் ஒன்றியம் முழுவதும் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றது தான். மின் விளக்குகள், ரஷ்ய மொழியில், "விளாதிமிர் லெனின்' என்றே அழைக்கப்படுகின்றன. மின்சக்தி அனைவருக்கும் கிடைத்தல் அத்தனை முதன்மையானது என்பதை அவர் கண்டுகொண்டிருந்தார். 21ம் நூற்றாண்டு வந்த பிறகும், நாம் இன்னும் மின்சக்தியை முழுமையான தேவைக்கு உற்பத்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு உள்ள வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியவர்கள் பொறியாளர்கள் தானே?ஆக, நம் நாட்டுத் தேவைகள் நூற்றுக்கணக்கில் நமக்கு முன்னே மண்டிக்கிடக்க, வெறும் பேப்பர் பட்டங்களைப் பெற்று வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞர்களை உருவாக்குவதுதான் நம் பொறியியல் கல்வியின் நோக்கமா? அதற்காக எவ்வளவு பணம், எத்தனை இளைஞர்களின் உழைப்பு? நியாயமா...? சிந்தித்துப் பார்ப்போம்!

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

Postal services should be in Thamizh -ka.pa.Aravaanan: அஞ்சல் துறை சேவை தமிழில் இருக்க வேண்டும்: க.ப. அறவாணன்

நீண்டநாள் வேண்டுகோள்கள். அஞ்சல் துறையும் மத்திய அரசும் கேளாச்செவிகளாக உள்ளன. முனைவர் க.ப.அறவாணன் வேண்டுகோள் தமிழ் மக்களின் வேண்டுகோள் என்பதை உணர்ந்து  உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். தமிழில் தொலை வரி என்பது ஏமாற்று வேலையாக உள்ளது. சில பகுதிகளில் மட்டும் வாழ்த்துச் செய்திகளைத் தமிழில் அனுப்பலாம். தமிழில் செய்தியை அனுப்ப விருமபினால் எங்களுக்கு அந்த வசதி  இல்லை என்றே அஞ்சகலகங்கள் தெரிவிக்கின்றன. கணிணிக் காலத்தில் இருந்து கொண்டு தமிழில் தொலைவரி அனுப்ப முடியவி்ல்லை என்றால் இழிவல்லவா? அலைபேசிகளும் மின்மடல்களும்  பெருகிய பின் தொலைவரியின் பயன்பாடு குறைந்தாலும் அதன் தேவையும்  இருக்கத்தான் செய்கின்றது. எனவே, தொலைவரியைத் (தந்தியைத்) தமிழில் அனுப்பவும் பிற நடவடிக்கைகள்  அனைத்தையும்
தமிழில் மேற்கொள்ளவும் நடவடிக்கை  தேவை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 







அஞ்சல் துறை சேவை தமிழில் இருக்க வேண்டும்: க.ப. அறவாணன்

First Published : 26 Apr 2011 04:42:24 AM IST


சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் "இந்திய அஞ்சல் வரலாறு - தமிழகத்தின் மீதான பார்வை' என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் என். ராம் வெளியிட, பெற்றுக்
சென்னை, ஏப். 25: பணவிடைத் தாள் உள்ளிட்ட அஞ்சல் துறை சேவைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் வலியுறுத்தினார்.  அஞ்சல் துறைத் தலைவர் (தமிழ்நாடு வட்டம்) கே. ராமச்சந்திரன் எழுதிய "இந்திய அஞ்சல் துறை வரலாறு - தமிழகம் மீது ஒரு பார்வை' என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், க.ப. அறவாணன் பேசியதாவது:  நமது அஞ்சல் துறையின் அருமையும் வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. 1977-ல் பிரான்ஸ் நாட்டில் பணியாற்றியபோது எனது சொந்த ஊரில் இருந்து கடிதம் வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அங்குள்ளவர்களை விசாரித்தபோதுதான் அங்கு வீடு தேடி கடிதம் வராது என்பதை அறிந்தேன். அஞ்சலகத்தில் பணம் செலுத்தினால், உங்களுக்கு என ஒரு அஞ்சல் பெட்டியும், சாவியும் வழங்கப்படும். அதில் உங்களுக்கு வரும் கடிதங்கள் போடப்படும். அதை நீங்களே சென்று சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.  ஆனால், நம் நாட்டில் வீடு தேடி வந்து கடிதங்களைச் சேர்க்கும் அஞ்சல் துறையையும், ஊழியர்களையும் என்னவென்று பாராட்டுவது. மக்களிடையே நெருக்கமான துறையாக அஞ்சல் துறை திகழ்கிறது. வாக்குச் சாவடிச் சீட்டுகளைக் கூட தபால் ஊழியர் மூலம் வாக்காளர்களுக்குச் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதியது.  நமது சித்த வைத்தியம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றத் தவறிவிட்டோம். இதனால்தான் தேவையற்ற மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ளன. வீட்டுத் தோட்டத்து இலைகள் மூலமே நோயெல்லாம் தீர்ந்திருக்கும்.  இதேபோல நமது பாரம்பரிய அஞ்சல் முறைகளை, செய்தி பரிமாற்ற வழிகளை பின்பற்றத் தவறிவிட்டோம். சங்க இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு மாதவி எழுதிய மடலே முதல் கடிதம். நாரை, கிளியை தூது விடுவதன் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.  அஞ்சல் துறை குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ள இந்த நூல் தமிழில் வெளியிடப்பட வேண்டும். கடந்த கால நிகழ்வுகள் அடங்கிய வரலாறும் இலக்கியம் ஆக மாறும். பிரிட்டன் குறித்து அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஆற்றிய உரைகளே அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.  இதேபோல நேரு தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் டிஸ்கவரி ஆஃப் இந்தியா, கிளிம்சஸ் ஆஃப் வேர்ல்ட் ஹிஸ்டரி என்ற இரு படைப்புகளாக வெளியாகின.  அஞ்சல் துறையின் சேவையை மேம்படுத்த புதிய சிந்தனைகள் தேவை. திருவள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்குக்கூட போராட வேண்டிய நிலை கூடாது. தமிழகத்தில் அஞ்சல் துறையின் சார்பில் பணவிடைத் தாள் (மணியார்டர் படிவம்) உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் தமிழில் இருக்க வேண்டும் என்றார் க.ப. அறவாணன்.  அஞ்சல் துறை முதன்மை தலைவர் (தமிழ்நாடு வட்டம்) சாந்தி நாயர் பேசியதாவது: நாட்டில் 1.55 லட்சம் அஞ்சலகங்களில் 5.30 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.  அஞ்சல் துறை பல்வேறு கட்டமாக வளர்ச்சி பெற்ற போதும் எதிர்காலத்தில் மக்களின் சேவையை மேலும் சிறப்பாக்குவதே இப்போதைய கனவாக உள்ளது.  இந்த நூல் இளைய தலைமுறை ஊழியர்களுக்கு அஞ்ல்துறை வரலாற்றை விளக்குவதோடு, வழிகாட்டியாக அமையும். இதே போல அஞ்சல் துறையின் நீண்ட வரலாற்றை அலுவலர்கள் பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றார் சாந்திநாயர்.  முன்னதாக பத்திரிகையாளர் என். ராம், நூலை வெளியிட சாந்தி நாயர் பெற்றுக் கொண்டார். வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் கே. ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார்.    

சனி, 23 ஏப்ரல், 2011

ka.pa.aravaanan article about thamizh in dinamalar : தமிழ் இனி மெல்ல வளரும்: கா.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்

 அருமையான கட்டுரை. வரும் அரசு தொடரும் அரசாக இருந்தாலும் புதிய ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்கும் வகையில் கல்வி, ஆட்சி, வழிபாடு முதலான எல்லாவற்றிலும் தமிழே இருக்கச் செய்ய வேண்டும். தமிழ் சார்ந்த குழுக்களில் தமிழார்வமும் தமிழ்ப்புலமையும் உள்ளவர்களையே அமர்த்தல் வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசு, மத்திய அரசு, பிற அரசு,. தனியார் என்ற வேறுபாடின்றி  அனைத்து அலுவலகங்களிலும் தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும். ஊடகங்களில் தமிழ் கொச்கையாகவும் பிழையாகவும் எழுதவும் பேசவும் படுவன நிறுத்தப்பட வேண்டும். கிரந்தத் திணிப்பையும் பிற அயல்மொழிச் சொற்கலப்பையும் அடியோடு தடுக்க வேண்டும்.ஈழத்தமிழர் நலனும் உலகத்தமிழர் நலனும் பேணப்பட வேண்டும். மத்திய அரசில் தமிழுக்குச் சமஉரிமை கிடைக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /  
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




மொழி வளர்ச்சி பற்றி சிந்தித்து திட்டமிடும் போது, தமிழ்மொழிக்கு நிகரான பழமையும், செழுமையும் வாய்ந்த உலக மொழிகள் எப்படி வளர்ந்தன என்று ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும். அந்த மொழிகளுடைய வளர்ச்சி அனுபவங்கள் நமக்கு வழிகாட்டும்; வழி துணையாக இருக்கும். யூதர்களின் ஹீப்ரூ, சீனர்களின் சீனம், கிரேக்கர்களின் கிரேக்கம், ரோமானியர்களின் லத்தீன் ஆகியவற்றின் வரலாறு நமக்கு தெளிவாக பாடம் புகட்டுகிறது.

தமிழ் மொழியை போல பல்வேறு அன்னிய ஆதிக்கங்களையும், இடையூறுகளை ஹீப்ரூ மொழி சந்தித்தது. உலகம் முழுவதும் நாடற்றவர்களாக பரவிய யூதர்கள், தம் மொழியை செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்து சென்று பொத்தி பொத்தி வளர்த்தனர். 1948ல் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய போது, அனைத்து மட்டங்களிலும் ஹீப்ரூ மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். சீனர்களை பொறுத்தவரை, நம்மைவிட பல நூற்றாண்டு பழமையான வரலாறு உடையவர்கள். தங்கள் மொழியை அவர்கள் எந்த கட்டத்திலும் கைவிட்டதே இல்லை. கிரேக்கர்களும், ரோமானியர்களும் அதே வரலாற்றை உடையவர்கள். இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஆங்கிலம், அது பிறந்த இங்கிலாந்து நாட்டிலேயே, கி.பி.14ம் நூற்றாண்டு வரை ஆட்சி பீடத்தை அடையவில்லை. அங்கு, எங்கும், எதிலும் ரோமானியர்களின் லத்தீன் மொழியே தலைமை வகித்தது. அதன்பின் வந்த சாசர் கால அரசர்களால் ஆங்கிலம் அனைத்து மட்டங்களிலும் இடம் பெற்றது. ஆங்கிலேயர்களின் துணிச்சலாலும், அரசியல் சாதுர்யத்தாலும், வாணிக நோக்கினாலும், உலகெங்கும் ஆங்கிலேய காலனி நாடுகள் உருவாகின. அந்நாடுகளில் இருந்த பூர்வீக மொழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆங்கில மொழியை அரியாசம் ஏற்றினர். இவ்வாறு உலகத்தில் மொழி வளர்ச்சி அமைந்ததற்கு காரணம், அந்தந்த நாட்டு மக்களின் மொழிபற்றே! ஒரு மொழியை கற்கும்போது அந்த மொழியின் கலாசாரமும் கற்பிக்கப்படுகிறது. எனவே தான், மொழி வழியே அந்த மொழிக்குரிய கலாசாரமும் கற்போருக்கு படிந்து விடுகிறது.

தமிழகத்தில் ஐரோப்பியர் காலத்தில் துவங்கிய ஆங்கிலேய கல்வி, சுதந்திரம் பெற்ற நாளோடு விடைபெறவில்லை. மாறாக, எல்லா இடத்திலும் மேலும் செங்கோலோச்ச துவங்கி விட்டது. பேச்சில், எழுத்தில், கல்வியில், ஆட்சியில் என, அனைத்து பயன்பாட்டு தளங்களிலும் இருக்க வேண்டிய தமிழை ஒதுக்கிவிட்டு, ஆங்கிலம் குடியமர்ந்து விட்டது. குடிசையில் ஒண்ட இடம் கேட்டு வந்த ஒட்டகம், குடிசைக்குரியவனை வெளியேற்றி விட்டதைப் போல, ஆங்கில ஒட்டகம் தமிழை வெளியேற்றி விட்டது என்பதே உண்மை. ஆங்கில மொழி வழி பயிலுகிற இளம்சிறார்கள், மொழியை பயில்வதோடு இல்லாமல், ஆங்கில மொழிக்குரிய ஐரோப்பிய கலாசாரத்தையும் பயில்கின்றனர். விளைவு, தமிழகத்தில் தமிழ் கலாசாரத்தையே இழந்த இளைஞர்களையும், குழந்தைகளையும் பார்க்கிறோம். இன்னும் ஒருபடி மேலே போய், நம் இளைஞர்களும், குழந்தைகளும், தங்கள் மொழி, கலாசாரம், உணவு, உடை, உறை முதலானவற்றையும் தாழ்வாக கருத துவங்கி விட்டனர். தங்கள் பராம்பரியத்தை தாழ்வாக கருதுவதால், அயல் பாரம்பரியத்தை உயர்வாக எண்ணுகின்றனர். இதனால், ஒருவகை தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி விட்டனர். இவர்களை இந்த நிலையிலிருந்து முழுவதும் மீட்பதே நம் கருத்தும், கவலையுமாக இருத்தல் வேண்டும்.

இந்நோக்கில் அண்ணல் காந்தியடிகள் மிக சரியாக சிந்தித்தார். காந்தி காட்டிய வழியைவிட்டு எதிர் திசையில் சென்றுக் கொண்டிருக்கும் நம் அரசுகளும், அமைப்புகளும் மாற வேண்டும். இல்லை யென்றால், நம் பாரம்பரியத்தை படுகுழியில் புதைத்தவர் ஆவோம். அயல்நாட்டு பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும் அடிமைகளாக தொடர்வோம். அடுத்து அமையும் அரசு, முதல் அடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் -சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை தவிர, முதல் ஐந்து வகுப்புகள் வரையிலாவது தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு படித்து வந்தவர்களுக்கு மட்டுமே, அரசிலும், தனியார் நிர்வாகத்திலும் வேலை என்று, முறைப்படி சட்டம் இயற்ற வேண்டும். எந்த மொழியும் நிலைபெற வேண்டுமானால், அது பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தமிழ் மொழியின் பயன்பாடு கடந்த 60 ஆண்டுகாலமாக சுருங்கிக் கொண்டே வருகிறது. மறுதலையாக அது வெறும் வீட்டுமொழியாக மட்டும் ஆகிக் கொண்டிருக்கிறது. தெருவிலோ, பொதுஇடங்களிலோ, குறிப்பாக, நகரங்களில் தமிழ்மொழி பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. வீட்டில்கூட காலப்போக்கில் ஆங்கில வழி கற்றவர் குடும்பங்களில், தமிழ் பேச்சு மொழி அந்தஸ்தையும் இழந்துவிடும் ஆபத்து உள்ளது. இந்நிலை, பள்ளிக்கல்வியை தமிழ்வழிக் கல்வியாக மாற்றும் போதுதான் காலப்போக்கில் மாறும். அதுபோலவே, ஆட்சிமொழியாக தமிழ் எல்லா தளத்திலும் இடம்பெறுவதை உறுதியாக்க வேண்டும். மத்திய அரசு நடத்தக்கூடிய, யு.சி.ஜி., ராணுவ சேவை தேர்வுகள் அனைத்தும் தமிழ்மொழியில் நடத்தப்படுவதில்லை. இவற்றை எல்லாம் தமிழ்மொழியில் நடத்த வேண்டும். புது அரசு, இதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.