திங்கள், 13 ஜூன், 2011

Ka.Pa.Aravaanan about engineering education: பொறியியல் கல்வி படும்பாடு: க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்

பொறியியல் கல்வி படும்பாடு: 
க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்
தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?

அண்மையில் வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியின்படி, நம் பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்லூரிகளில் இருந்தும் வெளிவரும் நூறு பொறியியல் பட்டதாரிகளில், இரண்டு பட்டதாரிகள் மட்டுமே, அவர்கள் படித்து வெற்றி பெற்ற பாடத்தில், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். இச்செய்தி, நம் நாட்டில் உள்ள பொறியியல் கல்வித் தரம் பற்றிய ஐயத்தை பன்மடங்கு ஆக்குகிறது.பொறியியல் கல்வியை தனியார் வசமும், தனியார் வணிக வசமும், நம் மேதகு அரசுகள் ஒப்படைத்தன. அதன் பிறகே, ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், ஆங்காங்கே தோன்றின. இக்கல்லூரியின் தரம் பற்றி ஆராய, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையில், "60 சதவீத பொறியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என்ற பெயருக்கே தகுதியில்லாதவை. போதிய அளவு சோதனைச்சாலைகள் இல்லை, வகுப்பறைகள் இல்லை.பணியாற்றும் ஆசிரியர்கள், மிகத் தகுதி குறைவானவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. பெரும்பாலானோர் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில், கடந்த அரசிலும், அதற்கு முன் இருந்த அரசிலும் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் கணிசமானோருக்கு, பொறியியல் கல்லூரிகள் சொந்தமாக இருக்கின்றன. இவை அமைச்சர்களாலும், செல்வந்தர்களாலும், வணிகர்களாலும் நடத்தப்படுவதற்கு அடிப்படை காரணம், பணம் காய்ச்சி மரங்களாக இக்கல்லூரிகள் இருப்பது தான். இந்தக் கல்வி ஆண்டில் தான், பொறியியல் கல்லூரிக்கு வரும் விண்ணப்பங்களின் பெருகிய எண்ணிக்கை குறைந்திருக்கிறது.பல நிறுவனங்கள், பெறும் பணத்திற்கு ரசீதும் கொடுப்பதில்லை. பல கல்வி நிறுவனங்கள், காசோலையாகவோ, டி.டி.,யாகவோ கட்டணத்தைப் பெறுவதில்லை. "ரொக்கமாக கொடுக்க வேண்டும்' என, நிபந்தனை போடுகின்றன. கணக்குக் காட்டுவதிலிருந்து தப்புவதற்கு இந்த ஏற்பாடு.சரி, தமிழகத்தில், பொறியியல் கல்வி பெருகினால் நல்லது தானே என்று நினைக்கலாம். பெரும்பான்மையான பாடத் திட்டங்களும், அமெரிக்க வேலைவாய்ப்பை நம்பியே அமைக்கப்படுகின்றன. அதாவது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, இங்கே கல்வி உற்பத்தி நடக்கிறது.சரியான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அந்த மண்ணுக்குரிய, அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இங்குள்ள ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?

தமிழகத்தை ஒட்டி, பொறியியல் கல்வி செய்ய வேண்டிய பணிகள், கண்டுபிடிப்புகள், சவால்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றை மட்டும் பட்டியலிடுவோம்.

1. உணவின் ஒரு பகுதியாக இருப்பது தண்ணீர். வேளாண் தொழிலுக்கு வேண்டிய தண்ணீர், பருகுவதற்கு வேண்டிய தண்ணீர். நம் நாடு, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளைப் போல, ஆண்டு முழுவதும் மழை பொழியும் நாடு அல்ல. குளம், குட்டை, கிணறு, ஏரி முதலானவற்றில் தண்ணீர் தேக்கி வைப்பதைப் பற்றி, விரிவாக சிந்திக்க வேண்டும். இவற்றை தூர்வாருதலுக்கு எளிய வழிகளையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இவற்றில் தேங்கியிருக்கும் நீர், வெயிலில் எளிதாக ஆவியாகாதவாறு, ஏதேனும் யுக்திகள் இருக்கின்றனவா என்று ஆராயப்பட வேண்டும்.
இன்னொரு வகையில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கடல் நீர் ஒரு பெரும் பேறாகும். கன்னியாகுமரியில் இருந்து, தமிழக வட எல்லை வரை, வங்காள விரிகுடா விரிந்து கிடக்கிறது. இந்த தண்ணீரை, குடிநீராக வேதியியல் மாற்றம் செய்வது பற்றி, வேதியியல் பொறியியல் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா, செயல்படுத்த வேண்டாமா? தமிழக ஆறுகளில் தண்ணீர் இல்லாத காலங்களில், பனிரெண்டு மாதமும் ஓடும் கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா முதலான ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றி திட்டங்கள் தீட்ட வேண்டாமா?

2. தமிழகத்தில் வாழக்கூடிய ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்களில், எல்லாருக்கும் போதிய உடை கிடைத்தபாடில்லை. அத்தனை பேருக்கும் உடை கிடைக்கும் வண்ணம், குறைந்த செலவில், எந்தெந்த மூலப்பொருளை வைத்து சட்டை, வேட்டி, பேன்ட், சேலை முதலானவற்றை நெய்யலாம் என்பது பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டியவர்கள் பொறியியலாளர்கள் தானே?

3. நம் சுகாதாரக்கேட்டின் உச்சம், கிராமங்களிலும், நகர சேரிப்பகுதிகளிலும், போதிய கழிப்பறைகள் இல்லாததுதான். பல நோய்கள், தொற்று நோய்களாக பெருகுவதற்கு, இது பெரும் காரணம். மலிவு கழிப்பறை பற்றி இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

4. கணினி, இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. கணினியை, இன்னும் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது பற்றி ஆராய வேண்டாமா?

5. சிவில் இன்ஜினியர்கள், வீடு கட்டுவதற்கு உரிய புதிய மூலப்பொருட்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.செங்கல் தொழிலும் தற்போது அறைகூவலாகி விட்டது. மாற்றாக, சிமென்ட் கற்கள் வந்துள்ளன. தக்கைக் கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் பற்றி சிந்திக்கவேண்டும்.

6. தமிழகத்தில் மிகப்பெரிய அறைகூவலாக இருப்பது மின்சக்தி. சோவியத் புரட்சியைச் சாதித்த மாவீரர் லெனின் புரட்சி நடந்து முடிந்து, தான் தலைமை ஏற்ற உடனே செய்த முதல் வேலை, சோவியத் ஒன்றியம் முழுவதும் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றது தான். மின் விளக்குகள், ரஷ்ய மொழியில், "விளாதிமிர் லெனின்' என்றே அழைக்கப்படுகின்றன. மின்சக்தி அனைவருக்கும் கிடைத்தல் அத்தனை முதன்மையானது என்பதை அவர் கண்டுகொண்டிருந்தார். 21ம் நூற்றாண்டு வந்த பிறகும், நாம் இன்னும் மின்சக்தியை முழுமையான தேவைக்கு உற்பத்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு உள்ள வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியவர்கள் பொறியாளர்கள் தானே?ஆக, நம் நாட்டுத் தேவைகள் நூற்றுக்கணக்கில் நமக்கு முன்னே மண்டிக்கிடக்க, வெறும் பேப்பர் பட்டங்களைப் பெற்று வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞர்களை உருவாக்குவதுதான் நம் பொறியியல் கல்வியின் நோக்கமா? அதற்காக எவ்வளவு பணம், எத்தனை இளைஞர்களின் உழைப்பு? நியாயமா...? சிந்தித்துப் பார்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக