hindi compulsion லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
hindi compulsion லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜூலை, 2012

Put sign in hindi - L.I.C.

பல தேசிய மொழிகள்பேசும்  நாட்டில் ஒரு குறிப்பிட்ட  மொழிக்கு மட்டும் தரும் முதன்மையும் சிறப்பும்  நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் எதிர்க்கும் பிளவு மனப்பான்மையையே ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் மத்திய அரசு எல்லா வகையிலும் இந்தியைத்திணித்து வருகிறது. உடனடியாக இந்த ஆணையை த் திரும்பப பெற வேண்டும். அவரவர் தாய்மொழியில் கையொப்பம் இட்டால் போதுமானது என அறிவிக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், இந்தி மொழியில் கடிதத் தொடர்பு குறைந்து வருவதால், "அனைத்து ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள், இந்தியில் கையெழுத்திட வேண்டும்' என, ஆயுள் காப்பீட்டு கழகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் காப்பீட்டுக் கழக, தென்மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:"தென்மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதப் போக்குவரத்து, இந்தியில் குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க வேண்டும். இதற்காக, அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக, திங்கள் கிழமைகளில், இந்தியில் கையெழுத்திட வேண்டும்; கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.'இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை, "அதிக முக்கியத்துவம்' என்ற தலைப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளது.இந்தி மொழியில் கையெழுத்திடுவதை, வலியுறுத்துவது தொடர்பாக, ஜூன் 29ம் தேதி, அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டம், மண்டல அளவில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமலர்  சிறப்புச் செய்தியாளர்


ஏக இந்தி என்று எந்தமிழை மாய்க்க வந்தால்  சாக இந்தி என மாய்த்திடுவோம்!

ஞாயிறு, 10 ஜூன், 2012

மறைமுகமாக இந்தியைத் திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

நேரடியாகவே பல வகைகளிலும் இந்தித்திணிப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு எதிராகத் தமிழக அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? ஆண்டிற்கு ஒரு முறை வீர வணக்க நாள் நடத்துவதாலோ எப்பொழுதாவது வீரமாகப் பேசுவதாலோ இந்தித் திணி்ப்பு நிற்காது.  தேசிய மொழிகளின் வளர்ச்சி குறித்தும்  இந்தித்திணிப்பால் அவை தாழ்வுறுவது குறித்தும் பிற மொழியாளர்களிடமும் விளக்கி  அவர்களுடன் இணைந்து வலிமையாக  எதிர்த்தால்தான் வெற்றி காண இயலும்.




மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

First Published : 10 Jun 2012 06:34:47 PM IST


புதுச்சேரி, ஜூன் 10: மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சிபிஎஸ்இ பாடத்திட்டம் 12-ம் வகுப்பு புத்தகத்தில் விடுதலைக்கு பின் இந்தியா என்ற தலைப்பில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் சித்திரம் இடம் பெற்றுள்ளது. 1965-ம் ஆண்டு அப்போது நடைபெற்ற போராட்டத்தை எதிர்த்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வந்த கார்ட்டூனை பாடப்புத்தகத்தில் போட வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசு உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து இந்த கார்ட்டூனை நீக்க வேண்டும். இதை போடுவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

செவ்வாய், 15 ஜூன், 2010

தேசிய மொழிகள் ப்ல உள்ள நாட்டில் ஒரு மொழி மட்டும் அறிந்தால்தான் பதவி உயர்வு என்ற நிலையை மாற்ற வேண்டும். மாறாக அந்த மொழியைக் கற்காதவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை எனவே, அதனைக் கற்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. இந்தியா வலிவும் பொலிவும் மிக்க நாடாகத் திகழ உடனே இந்தித்திணிப்பைக் கைவிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++
"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை

ராமநாதபுரம் : ""அனைத்து தகுதிகளிலிருந்தும் இந்தி மொழி தெரியாததால், ராணுவத்தில் முக்கிய பதவிகளை தமிழர்களால் பெற முடியவில்லை,'' என கர்னல் தாமஸ் ஆபிரகாம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவையிலுள்ள ராணுவ சேர்க்கை மையம் மூலம் தொடர்ந்து ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, இத்தேர்வு நடைபெறும். தென்னிந்தியாவிலிருந்து தான் அதிகமானோர் ராணுவத்தில் சேர்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு பெரும்பான்மையாக உள்ளது. இந்த இளைஞர்களிடம் தான் சரியான வலு மற்றும் உடற்தகுதி உள்ளது. அதனால் தான் ராமநாதபுரத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராணுவத்துக்கு ஏற்ப எல்லா அமைப்புகள் பெற்றிருந்தும், "இந்தி' மொழி தெரியாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் உயர் பதவியைப் பெற முடிவதில்லை.


ஒவ்வொருவரும் ராணுவத்தில் சேர்ந்த பின்னரே இந்தியை கற்றுக்கொள்கின்றனர். ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை சாதகமாக்கி, சில இடைத்தரகர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்; இதை யாரும் நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். எந்த பாரபட்சமுமின்றி, சரியான வழியில் தான் தேர்வு நடக்கிறது. தேர்வாளர்களின் எண்கள் ரகசியம் காக்கப்படுவதால், அதில் எந்த சாதகமும் செய்ய வாய்ப்பில்லை. இதை அனைவரும் உணர வேண்டும். இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாமஸ் கூறினார்.


போலி சான்றிதழ்: இருவர் கைது: நேற்று நடந்த முகாமில், அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இதில், திண்டுக்கலைச் சேர்ந்த செல்வம், விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர், போலியான கல்விச் சான்றிதழ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிய ராணுவ அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தைப் பார்த்த போலி சான்றிதழ் கொண்டு வந்த சிலர், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் நடையை கட்ட ஆரம்பித்தனர்.


செவ்வாய், 22 டிசம்பர், 2009

தமிழர்களுக்கு மூடப்படும் மத்திய அரசின் கதவுகள்



மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகை தரப்படுகிறது,​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன.தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.​ ​இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ ​அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​ ​மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​ ​
கருத்துக்கள்

செய்தியைப் படித்தாலே நடவடிக்கை எடுக்கும் முத்தமிழறிஞர் இதைப்படித்தால் நடவடிக்கை எடுப்பார். ஆனால், இதையெல்லாம் படிக்க அவருக்கு நேரம் இருக்காது. ஆனால், தமிழ் புறக்கணிக்கப்படுவதும் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதும் நன்றாகவே தெரியும். மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பு திமுக விற்கு இருக்கும்போது என்ன செய்ய முடியும்? பூனைக்கு மணியைத் தினமணி கட்டி விட்டது. இனி, அரசயில்வாதிகள் விழிப்பாக இருந்து காபபாற்றுவார்கள் என்று எண்ணக் கூடாது. இந்தியாவில் உள்ள பிற மொழிகளுக் கெல்லாம் சேர்த்து 10% நிதி ஒதுக்கப்படுகிறது என்றால் இந்திக்கு 90% நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே, தமிழ் மக்கள் விழிப்பாக இருந்து நம் தலைமுறையினரையும் வருகின்ற தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/22/2009 3:50:00 AM

இலங்கைப் பிரச்சனைக்குப் பிறகு எல்லோரும் நான் தமிழின தலைவர் என்று சொல்ல அருகதை இல்லை என்று சொன்னார்கள். அதனால் இப்போ தமிழினத் தலைமகன் ஆகிவிட்டேன். ஹா ஹா.

By கருணாநிதி
12/22/2009 2:28:00 AM

எங்களுக்கு கவிஞர் கனிமொழி இருக்கும் வரை கவலை கிடையாது. கவிஞர் கனிமொழி தமிழை காப்பாற்றித் தருவார். முட்டள்களாகிய நாம் ஓட்டை போட்டுவிட்டு இப்பொழுது புலம்ப வேண்டி இருக்கிறது. நமது முதல்வர் இலக்கிய ரசத்தோடு கவிதை நடையுடன் ஒரு விளக்கம் கொடுப்பார். அதைக் கேட்டுவிட்டு வயிற்றில் ரெண்டு தட்டு தட்டிவிட்டு நாம் தூங்கலாம்.

By முத்து
12/22/2009 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்