12th five year plan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12th five year plan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜூலை, 2012

Put sign in hindi - L.I.C.

பல தேசிய மொழிகள்பேசும்  நாட்டில் ஒரு குறிப்பிட்ட  மொழிக்கு மட்டும் தரும் முதன்மையும் சிறப்பும்  நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் எதிர்க்கும் பிளவு மனப்பான்மையையே ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் மத்திய அரசு எல்லா வகையிலும் இந்தியைத்திணித்து வருகிறது. உடனடியாக இந்த ஆணையை த் திரும்பப பெற வேண்டும். அவரவர் தாய்மொழியில் கையொப்பம் இட்டால் போதுமானது என அறிவிக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், இந்தி மொழியில் கடிதத் தொடர்பு குறைந்து வருவதால், "அனைத்து ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள், இந்தியில் கையெழுத்திட வேண்டும்' என, ஆயுள் காப்பீட்டு கழகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் காப்பீட்டுக் கழக, தென்மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:"தென்மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதப் போக்குவரத்து, இந்தியில் குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க வேண்டும். இதற்காக, அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக, திங்கள் கிழமைகளில், இந்தியில் கையெழுத்திட வேண்டும்; கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.'இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை, "அதிக முக்கியத்துவம்' என்ற தலைப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளது.இந்தி மொழியில் கையெழுத்திடுவதை, வலியுறுத்துவது தொடர்பாக, ஜூன் 29ம் தேதி, அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டம், மண்டல அளவில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமலர்  சிறப்புச் செய்தியாளர்


ஏக இந்தி என்று எந்தமிழை மாய்க்க வந்தால்  சாக இந்தி என மாய்த்திடுவோம்!

ஞாயிறு, 15 ஜூலை, 2012

எந்த அகவை யிலும் எவரெசுட்டு ஏறலாம்; சொல்கிறார் யப்பான் தமாய்

 
 
எந்த அகவை யிலும் எவரெசுட்டு ஏறலாம்; 
சொல்கிறார்  யப்பான் தமாய்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகவும் வயதான பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த தமேய் வடானபி. இவர் சிகரத்தின் உச்சியை தொட்ட போது இவரது வயது 73 ஆண்டுகளும், 180 நாட்களுமாகும்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவரான தமேய் சிறு வயது முதலே கடுமையான உழைப்பாளியாவார். அதிகாலை எழுந்து அப்பாவுடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் ஆண்களுக்கு நிகரான வேலைகளை அசராமல் பார்த்துவிட்டு, பிறகு ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு நடந்தே போய் படித்துவிட்டு திரும்புவார். திரும்பிய பிறகு மலையென குவிந்திருக்கும் வீட்டு வேலைகளையும் செய்து முடித்துவிட்டே உறங்கப்போவார்.

இவரது இந்த உழைப்புதான் மலையேற அழைப்பு விடுத்தது எனலாம். அங்குள்ள பள்ளியொன்றில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது முதன் முதலாக ஒரு சிறு மலைமீது ஏறும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவருக்கு வயது 27. அந்த சம்பவம் தந்த சந்தோஷம் காரணமாக பிறகு ஜப்பானில் உள்ள மலைகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கிவிட்டார். மலையேறுவதே இவரது பொழுதுபோக்கு என்றானாலும், பொருளாதாரம் காரணமாக எவரெஸ்ட் ஏறுவது மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற பியூஜி மலையேறும் குழுவினருக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார். இந்த நிலையில்தான் தமேய்க்கு எவரெஸ்ட் சிகரம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது அவருக்கு வயது 62.

சாகசசம் புரிய நினைப்பவர்களின் உச்சகட்ட சாதனையே எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான். இதற்காக இளமை முறுக்கோடு கிளம்பிய 284 பேர்களில் இவர்தான் வயதானவர். ஆனால் 284 பேரில் குளிர்தாங்காமல் இறந்தவர்கள், ஏற முடியாமல் நின்றவர்கள், இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாலும் இறந்துவிடுவேன் என்று அடித்து பிடித்து திரும்பியவர்கள் எல்லாம் போக எவரெஸ்ட் சிகரம் தொட்ட 82 பேர்களில் இவரும் ஒருவர்.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட வயதானவர் என்ற சாதனையை தனது 62 வயதில் ஏற்படுத்திய தமேய், தன் சாதனையை தானே முறியடிக்கும் வகையில் 11 ஆண்டுகள் கழித்து தற்போது கடந்த வாரம் தனது 73 வயதில் மீண்டும் எவரெஸ்ட் சிகரம் தொட்டு திரும்பியுள்ளார்.

இடையில் தனது 65 வயதில் ஒரு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறும்போது கடுமையான பனிப்புயலில் சிக்கி முதுகில் பலத்த காயமடைந்தார். எழுந்து நடக்கவே மாட்டார் என்று எல்லோரும் கருதியபோது, தனது மனவலிமை காரணமாக துள்ளி எழுந்தவர் கடுமையான பயிற்சி எடுத்து இந்த முறை வீழ்ச்சியின்றி எழுச்சி பெற்றுவிட்டார்.

இந்த சாதனை தனக்கு சந்தோஷம் தந்தாலும் கடந்த பதினொரு ஆண்டுகளில் எவரெஸ்ட் மிகவும் மாறிவிட்டதாக வேதனையும் படுகிறார், முன்பு பனி படர்ந்து அடர்ந்து இருந்த இடங்கள் எல்லாம், இப்போது நீர் நிலையாக நீண்டு காணப்படுகிறது. இது உலகம் வேகமாக வெப்பமயமாகி வருவதன் (குளோபல் வார்மிங்) அறிகுறியே, இதனை தடுத்து நிறுத்திட நிறைய விழிப்புணர்வு தேவை அது இளைஞர்களிடம் இன்னும் தேவை, ஏனெனில் இனி உலகம் அவர்களின் கையில்,அவர்களது உலகத்தை காப்பாற்ற அவர்கள்தான் முன்வரவேண்டும் என்கிறார்.


- முருகராஜ்

புதன், 16 நவம்பர், 2011

கணித்தமிழ் மேம்பாட்டிற்கான கருத்துருக்கள் :


கணித்தமிழ் மேம்பாட்டிற்கான கருத்துருக்கள் :

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011



கணித்தமிழ் மேம்பாட்டிற்காக ஐந்தாண்டுத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியனவும் உடனடி நடவடிக்கைக்கு உரியனவுமான சிலவற்றைத் தெரிவிக்கின்றேன்.
01. கணி விசைப்பலகையில் தமிழ் எழுத்துகள் இலங்க வேண்டும்.
02. இப்போதைய தமிழ் விசைப்பலகைகளில் ஒவ்வொரு முறையிலும் வெவ்வேறு வகையாக எழுத்துகளுக்கான விசைகள் பயன்பாட்டில் உள்ளன. சான்றாக, ஆங்கில க்யூ இடத்தில் ஹ,ங,ணு, என வெவ்வேறு வகை; காற்புள்ளி, முற்றுப்புள்ளி ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு விசை ஒதுக்கீட்டு முறை என்பனவாக உள்ளன. எனவே, வெவ்வேறு எழுத்துருக்களைக் கணியச்சிடும் பொழுது ஒவ்வொரு வகையாக விசைப் பயன்பாடு அமைகின்றது. இதானால் குழப்பமும் பிழைகளும் நேர இழப்பும் ஏற்படுகின்றன. இவை யெல்லாம் மன நலனுக்கு எதிரானவை. மேலும், வெவ்வேறு விசை ஒதுக்கீட்டு முறையால் கணியச்சிட்டவற்றைச் சீருரு(யூனிகோடு) அல்லது வேறோர் எழுத்துருவிற்கு மாற்றும் பொழுது பிழைகள் நேர்கின்றன. நெடில் எழுத்துகள், குறியீடுகள் முதலானவை மாறி வருகின்றன. எனவே, விசைப்பலகைகளில் விசைக்கான எழுத்துகள் அமைவிற்கு ஒரு குழுவை அமைத்து அனைவருக்கும் ஏற்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தி அதற்கிணங்கவே விசைப்பலகைகள் அமைய வேண்டும்.
03. தமிழ் மொழியில் அயல் எழுத்துகளுக்கு இடம் கொடுத்ததால்தான் அயற் சொற்கள் புகுந்து தமிழ் தான் பேசும் பரப்பளவை இழந்துசுருங்கி உள்ளது. இதை நினைவில் கொண்டு கணிணி விசைப்பலகையில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கணிணியில் குறியீடுகள் என்னும் பகுதியில் இவற்றிற்கு இடமளித்தால் இன்றியமையாது வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் விசைப்பலகை என்பது தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்டதாகவும் தமிழ் எண்கள் உடையதாகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04. கணித்தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இதழ்களுக்கு அரசு நேரடியாகவும் விளம்பரங்கள் மூலமும் பொருளுதவி அளிக்க வேண்டும்.
05. நல்ல தமிழில் வரும் கணியிதழ்களை அரசே வாங்கிக் கல்விக்கூடங்களுக்கும் நூலகங்களுக்கும் அளிக்க வேண்டு
06. கணிச்சொல் அகராதிகள் வெளியிட அரசு முழு நிதியுதவி அளித்தல் வேண்டும்.
07. கணிணி தொடர்பான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முழு நிதியுதவி அளித்தல் வேண்டும்.
08. கணிணி தொடர்பான நூல்களுக்குத் தனியாகப் பரிசளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும்.
09. தமிழ்ப் பயன்பாடு உள்ள கணிணிகள் மட்டுமே தமிழ்நாட்டில் விற்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. தமிழ்நாட்டில் விற்கப்படும் அனைத்து அலைபேசிப் பொறிகளிலும் தமிழ்ப்பயன்பாட்டிற்கு வழிவகை செய்தல் வேண்டும்.
11. கல்விக்கூடங்களில் கணியறிவைத் தமிழில் தருநருக்கு நிதியுதவி அளித்தல் வேண்டும்.
12. கணித்தமிழ் மன்றம் ஒன்றை அரசே அமைத்துத் தமிழில் கணிணியறிவு பெருகுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவற்றின் மூலம் கருத்தரங்கங்கள், ஆய்வரங்கங்கள், சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற வேண்டும்; நூல்களும் அகராதிகளும் வெளியிடப்பெற வேண்டும்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர் ,தமிழ்க்காப்புக்கழகம்
அமைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்<
7 / 1 , மாவு ஆலை முதல் தெரு,
மயிலாப்பூர், சென்னை 600 004
பேசி : 98844 81652
மின்வரி : thiru2050@gmail.com
0