bharathiyaar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bharathiyaar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

திருவள்ளுவரைப் போற்றிய பாரதியார்

பாரதியால் போற்றப்பட்டவர் வள்ளுவர்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்




 
 திருநெல்வேலி, ஆக. 25: மகாகவி பாரதியால் போற்றப்பட்டவர் வள்ளுவ பேராசான் எனக் குறிப்பிட்டார் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்.  கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியின் தெ.கு. சண்முகசுந்தரம் கலையரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கடையம் திருவள்ளுவர் கழகத்தின் 17-ம் ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:  பாரதி அன்பர்களாக இருந்துகொண்டு பாரதியின் பாதங்கள் பட்ட இடத்திற்கும் மூச்சுக்காற்று உலவிய பகுதிகளுக்கும் வருவது மெக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வதையும், காசிக்கும் ராமேசுவரத்துக்கும் ஹிந்துக்கள் செல்வதையும், ஜெருசலேமிற்கு கிறிஸ்தவர்கள் செல்வதையும் போல பெருமை தரும் விஷயம்.  ""யாமறிந்த புலவர்களில் கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்'' என்று பாரதி குறிப்பிடுவார். கம்பனையும் இளங்கோவனையும் குறிப்பிட்டது போல வள்ளுவன் என்றும் பாரதி குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. எந்த அளவுக்கு பாரதி வள்ளுவரை மதித்தான் என்பதை "வள்ளுவர்' என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் திருவள்ளுவர் கழகங்கள் தோன்ற வேண்டும், இளங்கோவுக்கும் கம்பனுக்கும் பாரதிக்கும் விழாக்கள் எடுக்கப்பட வேண்டும்; அங்கெல்லாம் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற ஏக்கம்தான் இதுபோன்ற விழாக்களில் என்னைப் பங்கேற்கச் செய்கிறது.  இப்படிப்பட்ட விழாக்களில் நான் கலந்துகொள்வதைப் பார்த்து எல்லா ஊர்களிலும் இலக்கிய விழாக்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதால்தான் நான் மறுக்காமல் திருவள்ளுவர் கழகம், கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் அழைப்பை தட்டாமல் ஏற்றுக்கொள்கிறேன். அதன் மூலமாவது இலக்கிய ஆர்வம் வளராதா, இளைஞர்களுக்கு மொழி உணர்வு ஏற்படாதா என்கிற எதிர்பார்ப்புதான் அதற்கு காரணம்.  ஊருக்கு ஊர் திருவள்ளுவருக்கு விழா எடுப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும். திருவள்ளுவர் கழகக் கூட்டங்களைப் பள்ளிகளில் நடத்தினால் அங்கு பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் உணர்வு ஏற்படும். ஏதாவது இரண்டு குறள்களையாவது அவர்கள் கற்க வாய்ப்பு உருவாகும். எனது வேண்டுகோளாக இதை வைக்கிறேன்.  தமிழின் அடையாளம்: செவ்விலக்கியங்களை சராசரி மனிதர்களால் ரசித்து விட முடியாது. அகநானூறும் புறநானூறும் அற்புதமான இலக்கியங்கள்தாம். ஆனால் அதை புரிந்து ரசிப்பதற்கு தமிழில் புலமையும் தேவைப்படுகிறது. படித்தவனோ, பாமரனோ, அறிவுஜீவிகளோ, சாமானியர்களோ எல்லோரும் ரசிக்கக் கூடியது திருக்குறள்தான். தமிழின் அடையாளமாக வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பன், பாரதி ஆகிய நால்வரும் அமைந்துள்ளனர். இதில் ஆதாரசுருதியாக இருப்பது வள்ளுவம்.  பாரதிக்கு புதுவையும், கடையமும்தான் சிறப்பு சேர்த்தவை. கடையத்தில் பாரதி பாடிய இடங்களை தகவல் பலகைகளாக வைக்க வேண்டும். திருவள்ளுவர் கழகம் அதற்கு முன்னோடியாகச் செயல்பட வேண்டும். அதற்கு "தினமணி' ஒத்துழைக்கும்.  புதுவையில் பாரதி குயில் பாட்டு பாடிய தோப்பு இன்று அழிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக ஆகப் போகிறது. பாரதியின் நினைவு இல்லம் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது. இதைக் கேள்வி கேட்க யாருமில்லை. பாரதி வாழ்ந்த கடையத்தில் பாரதிக்கு சிலை இல்லை. திருவள்ளுவர் கழகம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டால் தினமணி நிச்சயமாக ஒத்துழைக்கும். இதற்கு பாரதி அன்பர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் அவர்.  விழாவுக்கு கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். செயலர் மு.செ. அறிவரசன் அறிமுக உரையாற்றினார். பள்ளியின் செயலர் க.சோ. சேதுராமன் வாழ்த்துரை வழங்கினார்.  விழா நிகழ்ச்சிகள் பாராட்டரங்கம், உரையரங்கம், ஆடல் அரங்கம் என்று 3 பகுதிகளாக நடத்தப்பட்டது.  பாராட்டரங்கம்: இந்நிகழ்வில், கடையம் ஒன்றிய அளவில் உள்ள பள்ளிகளில் 2011-2012-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.  நிகழ்வின் 2-ம் பகுதியாக உரையரங்கம் இடம்பெற்றது. இதில், ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் சிவ. மணிமாறன் "நுணங்கிய கேள்வியர் அல்லார்' என்ற தலைப்பிலும், 11-ம் வகுப்பு மாணவி சிவ. இலக்குமி மணிபாலா "செருநரைக் காணின் சுமக்க' என்ற தலைப்பிலும் பேசினர்.  ஆடல் அரங்கம்: தொடர்ந்து ஆடல் அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யுவகலா பாரதி, கலைஇளமணி விருதுகளைப் பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த க. மோனிஷாராஜின் "பாரதிக்குப் பரதாஞ்சலி' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும், சி. காந்திமதி, இரா. கீர்த்தனா, அ.கா. அறிவரசி குழுவினரின் நாட்டியமும் இடம்பெற்றது.  விழாவில், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. மு. முத்துசங்கரலிங்கம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி சிறப்பு அலுவலர் மு. சுந்தரம், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் கே.எம். சங்கரநாராயணன், கடையம் திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் மு.அ. சித்திக், இணைச் செயலர்கள் செ. சோமசுந்தரம், ந. சுப்பிரமணியன், இர. இலாபம் சிவசாமி, ம. ஆறுமுகம், மு. வேலு, பொருளாளர் நி. இந்திரசித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் முகைதீன் அப்துல்காதர் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.  நிகழ்ச்சியில் சிறப்பாகப் பேசிய மாணவர் சிவ. மணிமாறன், மாணவி சிவ. இலக்குமி மணிபாலா மற்றும் மேடையில் திருக்குறள் கூறிய கடையத்தைச் சேர்ந்த சிறுமி அபி ஆகியோருக்கு தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.  முன்னதாக, கடையம் திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றார்.  ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். 

சனி, 21 ஜூலை, 2012

கலியின் கொடுமைக்கு முடிவு

தனக்குத் தானே தலைவனாயிருக்கும் அளவிற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன் ஆவான். இப்படிப்பட்டவன் ஆண்டவனுக்கு நிகராக மதிக்கத் தக்கவன். தரும சிந்தனை என்பது உயர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ள குணம் என்று நினைக்கிறோம். அது ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை கடமையாகும். தியானத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதனால் உண்டாகும் சக்தியை எளிதாக எடை போடாதீர்கள். மனிதன் தான் நினைத்தபடியே வாழும் தகுதியை தியானம் தரவல்லதாகும். கலியுகம் எதுவரை நீடிக்கும் என்றால், மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை நீடிக்கும். அநியாயம் நீங்கினால் உலகில் கலியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.
இந்த உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத்துன்பம் மிகவும் கொடியது. வறுமையே எல்லாச் சிறுமைகளிலும் மோசமான சிறுமையாகும். மற்ற உயிர்களிடம் கருணையும் அன்பும் கொண்டால் உயிர் வளரும். அன்பிருக்கும் இடத்தில் ஜீவசக்தி குடிகொண்டிருக்கும். அவனிடத்தில் உலகவுயிர்கள் அனைத்தும் நட்போடு உறவாடும்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கொழும்பில் பாரதியார் விழாவா?

கொழும்பில் பாரதியார் விழாவா? உடனே நிறுத்துமாறு தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகோள்.


நட்பு இணைய இதழ் பதிவு செய்த நாள் : 29/04/2012


கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து சென்னை பாரதியார் சங்கம் இலங்கையில் உலகத்தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்த உள்ளது. இதனை உடனே நிறுத்தி வேறு நாட்டில் நடத்துமாறு பாரதியார் சங்கத்திற்குத் தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இனப் படுகொலை புரிந்த நாட்டில் சுற்றுலாவாம்!


பேரினப்படுகொலை புரிந்த சிங்களக் கொடுங்கோலரசு எல்லாவகையிலும் தான் தமிழ் மக்களை மதித்து அவர்கள் நல்வாழ்வில் கருத்து செலுத்துவதுபோல் காட்ட முயன்று வருகின்றது. இந்திய அரசுடன் சேர்ந்து பல நாடகங்களையும் நடத்தி வருகின்றது. ஒரு வதை முகாமிலிருந்து மற்றொரு வதை முகாமிற்கு மாற்றி விட்டுக் குடியமர்த்தியதாகக் கதை கட்டுகிறது. அங்கே உண்மையான மனித நேய அமைப்புகளும் மனித நேய ஆர்வலர்களும் நுழைவதற்குத் தடை விதிக்கின்றது. தன் ஊதுகுழலாக உள்ளவர்களை மட்டும் உள்ளே வரவிட்டுத் தான் சொல்ல வேண்டிய பொய்களை அவர்கள் மூலம் உலவ விடுகின்றது. அங்கேதான் பாரதியார் சங்கம் விழா நடத்துகின்றது. கொழும்பு நகரில் 2.6.12 அன்று “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என வேதனையுற்ற பாரதியாருக்கு விழாவாம். அதற்கு முன்னதாக31.5.12 அன்று கண்டி சுற்றுலாவாம்; 1.6.12 அன்று கதிர்காமம் சுற்றுலாவாம். வாய்ப்பும் பாதுகாப்புச் சூழலும் நன்கு அமைந்தால் ஒருநாள் யாழ்ப்பாணப் பயணமும் அமைக்க விரும்புகின்றனராம். வாய்வாள் வீசிச் சென்ற மேதகுத் தலைவர்கள் எல்லாம் திரும்பியபின் அமைதியாக அடங்கி உள்ள பொழுது இவர்கள் மட்டும் அங்கே தமிழர்களைச் சந்திக்க முடியும் என்று நம்புவார்களா என்ன?

எதிர்க்க வேண்டியவர்கள் கை கோக்கும் கொடுமை


     “ நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் – இது
     நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
     பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் “
எனப் பாரதியார் வழியில் வாழ்வுரிமைக்குப் போராடுகின்றவர்களைப் படுகொலை செய்தநாட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் அந்த மண்ணில் சுற்றுலா செல்கிறார்களாம்!

    “என்றுதணியும் இந்த சுதந்திரமோகம்
     என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் “
என்றும்
    “ வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
     வேறொன்று கொள்வாரோ ”
என்றும் பாரதியார் வழியில் விடுதலை வேட்கை கொண்டதால்
உயிரையும் உடைமையையும் உற்றார உறவினரையும் நிலத்தையும் இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு எச்சில் துண்டுகளை எறிய நினைக்கிறது சிங்கள கொடுங்கோல் அரசு. அதற்கும் அதற்குத் துணை நிற்கும் பிற நாடுகளுக்கும்

    “ மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
      மாண்பினை இழப்பரோ? “
என்பதை உணர்த்த வேண்டிய பாரதியார் சங்கம், கொடுங்கோலர்களுடன் கைகோக்கலாமா?அங்குள்ள தமிழர்களுக்காகத்தான் விழா நடத்துவதாகச் சொல்லலாம். ஆனால், வஞ்சகக் கும்பலால் ஆட்சியில் உள்ளவர்களும் விழாவிற்கு அழைக்கப்படுவார்கள் அல்லவா?அவர்களுடன் இணைந்து அவர்கள் கொலைகாரர்கள் அல்லர் என உலகிற்குக் காட்டப் போகிறார்களா?


      “விதியே விதியே தமிழச்சாதியை
       என்செயக்கருதி இருக்கின்றாயடா? “
என உள்ளம் வெம்பிய பாரதியார்

     “ தமிழச்சாதி தடியுதை உண்டும்
     காலுதைஉண்டும் கயிற்றடி உண்டும்
    வருந்திடும் செய்தியும மாய்ந்திடும் செய்தியும்
    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
    செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
    பிணிகளால் சாதலும் …..
                             ……. நலிவினால் சாதலும்
    இஃதெலாம் கேட்டும் எனது உளம்அழிந்திலேன் ”
என உள்ளம் நைந்த பாரதியார், இன்றைக்கு இருந்தால், கொத்துக் குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பெற்ற நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை கண்டு குருதிக்கண்ணீர் வடித்து உலக மக்களைத் திரட்டி இருக்கமாட்டாரா? அவர் பெயரால் சங்கம் வைத்திருப்போர் அங்கே மக்கள் இன்பமாக வாழ்ந்து இலக்கியச் சுவை உண்பதாகக் காடடும் வகையில் அங்கே விழா நடத்தலாமா?

காந்தி நீங்களுமா?

நடத்துவது யார்? உயர்தனிச் செம்மொழித் தகுதியுடைய தமிழுக்குப் போட்டியாகத் தகுதியற்ற மொழிகள் உரிமை கொண்டாடுவதற்காக வழக்கு தொடுத்தவர் – வழக்கைத் திரும்பப் பெறுமாறு மிரட்டல் வந்தும் பணியாதவர் – நான் தமிழ்ப் போராளி பேராசிரியர் இலக்குவனார் மாணவன்; எனவேதான் தமிழ் உணர்வோடும் போராளிக் குணத்தோடும் இருக்கின்றேன் எனச் சொல்பவர் – மதிப்பிற்குரிய மூத்த வழக்குரைஞர் காந்திஅவர்கள்தாம். எனவே, அவரை உலகத்தமிழர்கள் சார்பில் தமிழ்க்காப்புக்கழகம் மூலம் அன்போடு வேண்டுகின்றோம்! தமிழ்நலம் நாடும் காந்தி அவர்களே! வரும் ஆண்டில் தமி்ழ் ஈழத்தில் பாரதியார் விழா நடத்தலாம். இப்பொழுது உடனே இத்திட்டத்தைக் கை விடுங்கள். மனிதநேய உணர்வுள்ள வேறு நாட்டில் பாரதியார் விழா நடத்துங்கள். நீங்கள் அங்கே விடுதலை விழா நடத்த வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை. பொறுமையுடன் இருங்கள்.


இவ்வாறு தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்துள்ளது போல், உலகத் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் உடனே கண்டனக் குரல் தெரிவியுங்கள்.

புதன், 18 ஜனவரி, 2012

பாரதி வருகிறார்!




ஞாயிறு கொண்டாட்டம்
பாரதி வருகிறார்!

First Published : 15 Jan 2012 12:00:00 AM IST

திருச்சி அருகே சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகளுக்கிடையே அரங்கேறிய முப்பது நிமிஷ நாடகம் சமூக அவலங்களை அம்பலப்படுத்திக் காட்டியது."பாரதி வருகிறார்' இதுதான் நாடகத்தின் தலைப்பு. மாணவ, மாணவிகளே நடித்த இந்த நாடகத்தை இயக்கியவர் பார்த்திபராஜா. திருப்பத்தூர் கல்லூரிப் பேராசிரியர்.பாரதியாரும், செல்லம்மாளும் உயிர் பெற்று சுதந்திரமடைந்த இந்த தேசத்தைக் காண வருகின்றனர். ஆசை ஆசையாய் இந்த மண்ணில் கால் வைத்த அவர்கள் இங்கு நடைபெறும் நிகழ்வுகளால் படும்பாடுதான் நாடகத்தின் கரு."காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்...' பாடல் பின்னணியில் பாரதியும், செல்லம்மாளும் வருகின்றனர்.""மறைந்து வெகுகாலம் ஆகிய பிறகு நம் தாய்த் தமிழ் நாட்டைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு, நல்ல வாய்ப்புதானே...'' என்கிறார் பாரதி.""ஆமாம்... ஆமாம்...' என ஆமோதிக்கிறார் செல்லம்மாள்.இருவருக்கும் தாகம் எடுக்கிறது. தொலைவில் தெரியும் அடிபம்பில் தண்ணீர் குடிக்க ஆர்வத்துடன் வருகின்றனர். பாரதி குழாயை அடிக்க செல்லம்மாள் தண்ணீர் குடிக்க முற்படுகிறார். தண்ணீர் வரவில்லை; காற்றுதான் வருகிறது. இருவரும் மாறி மாறி அடித்துப் பார்க்கின்றனர்.அந்த வழியே "இஞ்சி இடுப்பழகி...' பாட்டைப் பாடிக் கொண்டே செல்லும் ஓர் இளைஞன், இந்த இருவரையும் பார்த்துவிட்டு "யாருய்யா நீங்க, கார்ப்பரேஷன் குழாயைக் கழட்டிட்டுப் போக பார்க்குறீங்களா?' என அதட்டுகிறார்."இல்லை இல்லை, குழாயில் தண்ணீர் வரவில்லை' என்கிறார் பாரதி.""அடப்பாவி, என்னிக்குயா கார்ப்பரேஷன் குழாயில தண்ணீர் வந்திருக்கு?'' என்கிறார் வழிப்போக்கன்.ஒரு வழியாக பெட்டிக் கடைக்கு வழிகாட்டிவிட்டார் அவர். பெட்டிக் கடைக்காரரிடம் "அய்யா வணக்கம்' என்கிறார் பாரதி. செல்லம்மாளை தன் மனைவியென அறிமுகம் செய்து வைக்கிறார். "இருக்கட்டும் இருக்கட்டும்... என்ன வேணும்?' என்கிறார் சாவகாசமாய் பெட்டிக் கடைக்காரர்.""குடிப்பதற்கு...'' என்று பாரதி சொல்லி முடிப்பதற்குள், "அக்வாபினா' வழங்கப்பட்டது. குடித்துவிட்டு காலி பாட்டிலை பத்திரமாக கடைக்காரரிடம் கொடுக்கிறார் பாரதி. அப்போதே கடைக்காரருக்கு ஏதோ புரிந்துவிட்டது.""மிக்க நன்றி அய்யா, சென்று வருகிறோம்'' என்று கூறிவிட்டு விடைபெறுகிறார்கள் பாரதியும், செல்லம்மாளும்!கழுத்தில் கிடந்த துண்டைப் போட்டு மடக்கினார் பெட்டிக் கடைக்காரர்.""தண்ணி பாட்டிலுக்கு பதினாறு ரூபாய் எண்ணி வெச்சிட்டு நடையைக் கட்டுங்க... இல்லேன்னா இங்கேருந்து போவமுடியாது...'' என்கிறார்.பாரதி இதை எதிர்பார்த்திருக்கவில்லை.""பார்த்தாயா செல்லம்மா, தண்ணீரும் விலையாகிவிட்டது. காற்றுக்கும் விலை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே... அவமானம், அவமானம், வெட்கக்கேடு..'' என்கிறார் பாரதி.""பணம் இல்லை...'' என்றார் பாரதி.""போய்த்தொலை...'' என்று விட்டுவிடுகிறார் அந்த நல்ல மனதுக் கடைக்காரர்!வழியில் அரசியல்வாதிகள் நடத்தும் பாரதி விழா. ஓரமாக நின்று பார்க்கின்றனர். முன்னுரைகள் முடிந்து பேசத் தொடங்குகிறார் அந்தத் தலைவர்.""பாரதியார் ஒரு தொழிலதிபர்..' என்றதும் ஏகக் கைத்தட்டல். (உண்மையில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களிடமிருந்தும்)"இந்தியாவில் எத்தனையோ தொழிற்சாலைகளை நிறுவியிருக்கிறார் பாரதி. அவர் தொடங்காத தொழில் இல்லை. நான் அனில் அம்பானியையும், முகேஷ் அம்பானியையும் கேட்கிறேன்... இன்று பாரதி இருந்திருந்தால்... அவரோடு உங்களால் போட்டி போட்டிருக்க முடியுமா?'' - முழங்குகிறார் அரசியல்வாதி.வெறுத்துப் போன பாரதி, கூட்டத்தில் குறுக்கே நுழைந்தே விட்டார்."கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரன் நுழைந்துவிட்டான், அவனை கல்லால் அடிக்க வேண்டாம், சோடா பாட்டில் வீச வேண்டாம்' என அந்தத் தலைவர் சொல்லச் சொல்ல, அத்தனையும் பாரதிக்கு நடக்கிறது.அங்கே பரிதாபமாக காவல் பணியில் இருந்த காவலர்கள் பாரதியையும், செல்லம்மாளையும் விசாரிக்கின்றனர்.""யார் நீ, என்ன பண்ற?''""நான் பாரதி. இது என் மனைவி செல்லம்மாள். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்கிறார் பாரதி.இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். பாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.அப்போது வந்த ஒருவர் தனது கவிதையை யாரோ திருடிவிட்டதாகப் புகார் கூறுகிறார். என்ன கவிதை என்று கேட்டதற்கு, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' என அந்தக் கவிஞர் மெல்லத் தொடங்க, பாரதி முழுவதுமாகப் பாடி முடிக்கிறார்.இதனால் கவிதையைத் திருடியவர் பாரதி என்று முடிவு செய்கின்றனர். "இது என் கவிதை அய்யா' என்று விளக்கம் தருகிறார் பாரதி. வழக்கம்போல போலீஸார் சில விசாரணைகளைச் செய்து, பாரதி போலிக் கவிஞன் என்று முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.காவல் துறை அதிகாரி மிரட்டுகிறார். வெறுப்பின் உச்சத்தில் வெளியேறுகின்றனர் பாரதியும், செல்லம்மாளும். வெளியே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார் பாரதி. அந்த வழியே சென்ற குழந்தைகளிடம் ""நான் யாரென்று தெரிகிறதா?'' என்று கேட்கிறார்.""அய்யோ பூச்சாண்டி..'' என்கின்றனர்.""குழந்தைகளே நான் பாரதி'' என்கிறார்.""நிச்சயமாக நீ பாரதியாக இருக்க முடியாது, எங்கள் பாரதி அழமாட்டார், வீரமாகப் பாடியவர்'' என்று குழந்தைகள் சொன்னதும், குழந்தைகளை அணைத்துக் கொள்கிறார் பாரதி.""குழந்தைகள் என்னை மனதில் கொண்டிருக்கிறார்கள். எதிர்கால இந்தியா நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது'' என்கிறார் பாரதி.""பாரதின்னா துடிப்பு, பாரதின்னா வேகம், பாரதின்னா சத்தியம், பாரதின்னா அறிவுத் தீட்சண்யம்.... இங்கே அப்படியான பாரதிகள் ஏராளம் உண்டு... பத்தாய், நூறாய், ஆயிரமாய், லட்சமாய்... இதோ... இதோ...'' எனச் சொல்லச் சொல்ல, பாரதி வேஷமிட்ட ஏராளமான குழந்தைகள் மேடையில் ஏறுகின்றனர். நாடகம் நிறைவு பெறுகிறது.

வியாழன், 16 டிசம்பர், 2010

உண்மையான பாராட்டு. அனைவரின் தொண்டுகளும் தொடரட்டும்! படைப்புகளுடன் அவை பற்றிய  ஆய்வுக் குறிப்புகள் சுருக்கமாவேனும் சேர்க்கப்படுவது நன்று. வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

"சீனி.விசுவநாதன்' - பாரதியாருக்கு வாய்த்த உ.வே.சா.: அவ்வை நடராஜன் பாராட்டு

First Published : 16 Dec 2010 12:00:00 AM IST


பிரம்ம கான சபையின் சார்பில் மகாகவி பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக
சென்னை, டிச.15: ஊர்தோறும், வீடுகள்தோறும் சங்கத் தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்த "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வைப் போல, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து கால வரிசைப்படுத்திப் பதிப்பித்த பெருமைக்குரியவர் சீனி.விசுவநாதன் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பாராட்டினார். பிரம்ம கான சபையின் சார்பில் மகாகவி பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா, ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார் தொகுத்த "காலம்தோறும் பாரதி' (இரண்டாம் தொகுதி), சீனி.விசுவநாதன் பதிப்பித்த "கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' (11, 12-ம் தொகுதிகள்), கவிஞர் சுரதா கல்லாடன் எழுதிய "நல்லிதய முத்துக்கள்', கவிஞர் ஈஸ்வர் எழுதிய "நல்லி குப்புசாமி அந்தாதி' ஆகிய நூல்களை அவ்வை நடராஜன் வெளியிட, "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.நூல்களை வெளியிட்ட பிறகு, அவ்வை நடராஜன் பேசியதாவது:கண்ணில் தெரியாத செய்திகளை எல்லாம் தேடித் தேடி இந்த 12 தொகுதிகளையும் நிரப்பி வைத்திருக்கிறார் சீனி.விசுவநாதன். பாரதியாரின் பாடல்களைப் போலவே அவரது கட்டுரைகளும் ஆழமானவை. உலக நாடுகளின் அரசியல் நிகழ்வுகளை நுணுக்கமாக அவர் ஆராய்ந்து எழுதியிருக்கிறார் என்பதை அந்த உரைநடைகளைப் பார்த்தால் விளங்கும்.90 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் விடுதலை குறித்து அவர் எழுதியிருக்கிறார். அப்போதே, தமிழில் எகிப்து என்றுதான் எழுதியிருக்கிறாரே தவிர, "ஈஜிப்ட்' என்று எழுதவில்லை.ஆங்கிலச் சொற்கள் கலந்த போதும், பிரான்ஸ் நாட்டு அதிபர் பேசிய பேச்சு குறித்து எழுதும்போது வெறும் இலக்கியம் படித்தவரல்ல இந்த பிரெஞ்சு நாட்டறிஞர் என்று கூறியிருக்கிறார்."சுதேசமித்திரன்' கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் பல நுணுக்கமான ஆங்கிலச் சொற்களையெல்லாம் பாரதியார் தமிழ்ப்படுத்தி இருப்பதுதான்.இதைப் பார்க்கும்போது, பழந்தமிழ் நூல்களை எல்லாம் தேடித் தேடி, கால்கள் தேயத் தேய, நடந்து நடந்து, ஊர்தோறும், வீடுதோறும் ஏடுகளைத் தேடிய ஒரு உ.வே.சா.வைப் போல, பாரதியாருக்கு வாய்த்த உ.வே.சா. இந்த சீனி.விசுவநாதன்.சங்கத் தமிழ் என்று சொல்கிறோம், திருமுறைத் தமிழ் என பேசி மகிழ்கிறோம். அதுபோல, அறிஞர் தூரன் அவர்கள் சொன்ன தொடர்தான் "பாரதி தமிழ்' என்ற தொடர். அந்த பாரதி தமிழின் களஞ்சியத்தை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.கவிஞர் சுரதா கல்லாடன் பிறந்தநாள் முதல் எனக்குத் தெரியும். தந்தைக்கு சிலை நிறுவிய தகுதிவாய்ந்த தனயன் சுரதா கல்லாடன்.நல்லனவற்றையெல்லாம் தேடித் தொகுப்பது என்பது ஒரு பெரிய கலைப்பணி ஆகும்.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் 20, 30 நூல்கள் எழுதியிருக்கிறார். வணிகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், தன் வாழ்க்கையில் கண்ட கருத்துகள், தான் அறிந்த வரலாற்றுத் தகவல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். காலந்தோறும் பாரதியைப் பற்றிய தகவல்களை அறிஞர்கள் எவ்வாறு தொகுத்துள்ளார்கள் என்பதை தேடித்தேடி தொகுத்திருக்கிறார்.இவ்வளவு பெரிய தொகுப்பாளரான நல்லியின் இந்த நூல்களுக்குள் தேனி போல் சென்று, எண்ணி 120 தொடர்களைத் தேர்ந்தெடுத்து இது நல்லி எழுதியதல்ல; நல்லிதயம் எழுதிய கருத்துகள் என்று புத்தகப்படுத்தியிருக்கிறார் கல்லாடன்.ஒரு தொடர் முடிந்தால், முடிந்த தொடரை வைத்து அடுத்த பாடலைத் தொடர்வதற்கு அந்தாதி என்று பெயர்.அந்தாதி பாடுவது என்பது அளப்பரிய புகழுடன் விளங்கும் தலைவனை மனம் நெகிழ்ந்துபோய் புலவன் பாடுவது ஆகும். இதை எப்படி எழுதுவது என்பதற்கு உதாரணமாக ஈஸ்வர் "நல்லி குப்புசாமி அந்தாதி' படைத்திருக்கிறார்.பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் கடந்த மூன்று நாள்களாக எங்கும் நிகழ்ச்சிகள் கிறுகிறுக்க வைக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இந்த நூல் வெளியீட்டு விழாவும் உள்ளது.இந்த நூல்கள் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் கலைச் செல்வங்கள் ஆகும். இந்தத் தொகுதிகளை அனைவரும் வாங்க வேண்டும். தமிழுக்கு, நமக்கு கிடைத்த பெரும் செல்வம் இது. இதை வெளியிட கிடைத்த வாய்ப்பால் நான் பெருமிதமடைகிறேன் என்றார் அவ்வை நடராஜன்.பிரம்ம கான சபாவின் துணைத் தலைவரும், சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநருமான ஏ.நடராஜன் வரவேற்றார். பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன் ஏற்புரை வழங்கினார். முன்னதாக, பாரதியார் பாடல்களை கே.காயத்ரி குழுவினர் பாடினர்.

Dinamani editor about Bharathiyar articles : பாரதி பற்றி "தினமணி' ஆசிரியர்

திரு சீனிவிசுவநாதன் அவர்கள் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. பாரதியார் வரலாற்றுப் பிழையாக ஆரிய நாடு என நம் நாட்டைக் குறிப்பிட்டது தவறு எனப் பாரதியாரே ஒப்புக் கொண்டுள்ளார். இது போன்ற சில தவறுகள் பாரதியார் பாடல்களில் உள்ளன. அவரது சில உரைநடைப்  படைப்புகள் அவருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பதால் மறைக்கப்பட்டுள்ளன என்பதைத் தினமணியே அறியும். எனவே சொத்தை அற்ற  சொத்து என அவரது படைப்புகளைக் கூற முடியாது. இருப்பினும் பாரதியார்  படைப்புகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவையே. அவற்றைத் திரட்டுவோருக்கும் வெளியிடுவோருக்கும் தமிழுலகு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஒற்றை எழுத்துக்கூட சொத்தை கிடையாது! - பாரதி பற்றி "தினமணி' ஆசிரியர்

First Published : 15 Dec 2010 02:16:55 AM IST


"தினமணி'ஆசிரியர் கே.வைத்தியநாதன்: சீனி.விசுவநாதன் இதுவரை பாரதியாரின் படைப்புகளை 12 தொகுதிகளாகக் காலவரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கிறார். அதில் 5 தொகுதிகளின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளதை பிறவிப் பயனாகக் கருதுகிறேன்.இரண்டு ரூபாய்க்கு கடலை வாங்கினால் கூட அதில் சொத்தைக் கடலைகள் ஒன்றிரண்டு இருக்கும். ஆனால், பாரதியின் எழுத்தில் சொத்தை எழுத்து என்று எடுத்துப்போட ஒற்றை எழுத்துக்கூட கிடையாது என்பதுதான் சிறப்பு.பாரதியைப் பற்றி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. பாரதியின் கவிதை எளிமையான நல்ல தமிழில் இருந்தாலும், உரைநடையில் வடமொழிக் கலப்பிருக்கிறது என்பதே அது.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்குத்தான் தெரியும். பத்திரிகையில் கட்டுரை எழுதுவது பாமரர்களும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. அதனால், அன்றைய காலக்கட்டத்தில் பேச்சுவழக்கு எப்படி இருக்கிறதோ, எப்படி எழுதினால் எல்லோருக்கும் புரியுமோ அப்படி எழுதியாக வேண்டும்.பாரதி வாழ்ந்த காலத்தில் நமஸ்காரம், விசேஷம், பொதுஜனங்கள், பிரிட்டிஷ் ராஜாங்கம் போன்ற வார்த்தைகளை சாமானியர்களும் பேசினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.அன்றைய வாசகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, அப்போது வழக்கில் இருந்த சொற்களையே பத்திரிகைகளில் பாரதி பயன்படுத்தினார். பத்திரிகையாளனாக அவர் செய்தது மிகச்சரியானதே! பாரதிக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களின் உரைநடையிலேயே பல வடமொழிச் சொற்கள் இருக்கும்போது, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பாரதியின் உரைநடையில் வடமொழிக் கலப்பு இருந்ததில் என்ன வியப்பு?தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி: எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்ற மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை பிரம்ம கான சபையின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.சீனி.விசுவநாதன் 15 வயதில் இருந்தே கடந்த 50 ஆண்டுகளாக  பாரதியார் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்து வருகிறார். இவற்றை புத்தகங்களாகக் கொண்டுவருவது குறித்து பேசினோம்.இது பல பக்கங்கள் வரும் என்றார். நீங்கள் புத்தகமாக பதிப்பிக்க வேண்டும். எங்களைப் போன்ற பாரதி நேசர்கள் உள்ளனர். அதற்கான செலவை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தேன்."இது 800 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகள் வரும்' என்றார். கிடைப்பதை எல்லாம் தேடிப்பிடித்துத் தொகுத்துப் புத்தகமாக்குங்கள். அதற்கு எவ்வளவு செலவானாலும் நானும், பாரதி நேசர்களும் உங்களுக்குக் கொடுத்து உதவத் தயாராக இருக்கிறோம் என்றேன்.பாரதி எந்த வருஷம், மாதம், எந்தச் சூழ்நிலையில் இதை எழுதினார் என்ற குறிப்போடு சீனி.விசுவநாதன் எழுதியுள்ளார். இதற்காகவே நிறைய நேரம் செலவானது.50 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதியின் எழுத்துகளைத் தொகுத்திருந்தால் மிகவும் எளிதாக இருந்திருக்கும்.  சுதேசமித்திரனில் இருந்து இதை எடுத்துத் தொகுத்திருக்கலாம்.சுதேசமித்திரன் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த இடம் மழையில் நனைந்து அவை வீணாகி விட்டன.எனவே, தில்லியில் உள்ள நேரு மியூசியத்தில் சுதேசமித்திரன் பிரதிகள் மைக்ரோ பிலிம் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து பாரதி எழுத்துகளை எடுத்து இதில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. இவரிடம் இருந்த நிறைய ஆவணங்களை புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு அளித்துள்ளார்.அவரது அயராத உழைப்பால்தான் இந்தத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன்: இந்த நூல்களைப் பதிப்பிக்க எனக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், அந்தத் தகவல்களைச் சேகரிக்க 50 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்காக நான் ஏறாத படிகள் இல்லை. ஏராளமான பழையப் புத்தகங்களையும் புரட்டிப்  பார்க்க வேண்டியிருந்தது. இந்த 12 தொகுதிகளும் வெளிவரும் வரை எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த நல்லி குப்புசாமிக்கு நன்றி.
கருத்துகள்

தமிழர்கள் அனைவரும் திரு சீனி விசுவநாதன் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறது .
By ச. ஹேமச்சந்திரன்
12/15/2010 2:07:00 PM
சீனியார் தமிழுக்கு கிடைத்த சீனி!
By DhanaGunasekaran
12/15/2010 12:05:00 PM
அய்யா உங்களை போன்றவர்கள் பாரதியின் உண்மையான தொண்டர்கள்,பாரதியின் நினைவை போற்ற எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் என்னை போன்றோருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படும் அளவிற்கு உள்ளது உங்கள் தமிழ் தொண்டு,வாழ்க!
By வல்லம் தமிழ்
12/15/2010 7:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 13 டிசம்பர், 2010

To long live Thamizh : தமிழ் வாழ்க என்ற வெற்று முழக்கத்தால் தமிழ் வளராது:

தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும். ஆனால் தமிழ் வாழ்ந்தால்தான் தமிழினம் இருக்கும். இந்தியக் கண்டத்தின் பல பகுதிகளிலும் அயல்நாடுகளிலும் கடந்த நூற்றாண்டில் ௬௦ விழுக்காட்டிற்கும் மேல் இருந்த தமிழர்கள் தம் மொழியைத்  துறந்ததால் அங்கெல்லாம் தமிழினம் அழிந்தது என்பதை மறக்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் வாழ்க என்ற வெற்றுக் கோஷத்தால் தமிழ் வளராது: 
தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள்

தூத்துக்குடி, டிச. 11: தமிழ் வாழ்க என்ற வெற்றுக் கோஷத்தால் தமிழ் வளராது என, எட்டையபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் குறிப்பிட்டனர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா, தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி மகா குரு பாலபிரஜாபதி அடிகளார் பேசியதாவது: தமிழ் வாழ்க என வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். தமிழ் வாழ்க என வெற்றுக் கோஷம் போடுபவர்களை நம்பக் கூடாது. தமிழர்களைக் காப்பவர்களைதான் நம்ப வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதில்லை. தக்க வைத்தால் போதும். அதற்கு தமிழனைக் காக்க வேண்டும் என்றார் அவர். புதிய பார்வை ஆசிரியரும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கப் புரவலருமான ம. நடராசன் பேசியதாவது: வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தமிழை அருமையாகப் பேசுகிறார்கள், வளர்க்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை. இலங்கையில் தமிழ் இனமே அழிக்கப்பட்டபோது இந்திய அரசும், தமிழக அரசும் வேடிக்கைதான் பார்த்தது. இதுவே பாரதியார் இருந்திருந்தால் பார்த்துக் கொண்டிருப்பாரா. தனது பாடல்களாலேயே அதனை தடுத்திருப்பார்.  பாரதியாரின் பாடல்களைச் சொன்னால் மட்டும் போதாது. அவரது வழிகளைப் பின்பற்றி தமிழை வளர்க்க வேண்டும். பாரதிக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று இங்கு பேசிய பலரும் குறிப்பிட்டார்கள்.  நோபல் பரிசைவிட உயர் பரிசுக்கு உரியவர் பாரதி, அதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர். விழாவில், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலர் சுடர் முருகையா பேசியதாவது: எட்டையபுரம் மண்ணை மிதிக்காத யாரும் தமிழ்க் கவிஞனாக இருக்க முடியாது. பாரதி பிறந்த மண்ணைத் தொட்டு வணங்காத எவரும் தமிழ் எழுத்தாளராக இருக்க முடியாது.  தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு இதுதான் புண்ணிய பூமி என்றார் அவர். மதுரை பாரதி சிந்தனை மன்றத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் பேசுகையில்,  பாரதியாரின் கவிதைகளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். பாரதியார் நாணயம் வெளியிட வேண்டும்.  பாரதியாருக்கு ஐ.நா. சபை சார்பில் மனித உரிமை விருது வழங்க வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் புகழ்பரப்ப சிறப்புக் காட்சி ரயில் இயக்கியதுபோல பாரதியாருக்கும் சிறப்புக் காட்சி ரயில் இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.  ஆனால், மத்திய அரசு எந்தப் பதிலையும் இதுவரை சொல்லவில்லை. எனவே, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் விக்கிரமன் இந்த ஆண்டு விழாவுக்கு வரவில்லை. இருப்பினும் செல்போன் வாயிலாக விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், திருவையாற்றில் ஆண்டுதோறும் அனைத்து இசைக் கலைஞர்களும் ஒன்று திரண்டு விழா எடுப்பது போல, பாரதியார் பிறந்த நாளில் அனைத்து தமிழ் எழுத்தாளர்களும், கவிஞர்களும் எட்டையபுரத்தில் திரண்டு மகாகவிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார்.
கருத்துகள்

// தமிழ் வாழ்க என வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். தமிழ் வாழ்க என வெற்றுக் கோஷம் போடுபவர்களை நம்பக் கூடாது. தமிழர்களைக் காப்பவர்களைதான் நம்ப வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதில்லை. தக்க வைத்தால் போதும். அதற்கு தமிழனைக் காக்க வேண்டும். // . . . . . . . . . . 1924-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை நடந்து(!) கொண்டிருக்கும் துர்பாக்கியமான தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளை தாமதமாகவேனும் தெரிந்து கொண்டீர்களே, சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி மகா குரு பாலபிரஜாபதி அடிகளார் அவர்களே!
By நல்லரசு
12/12/2010 9:22:00 PM
பாரதியின் பாடல்கள் இசையுடன் இணைந்தது. ஆக, திரு. விக்ரமனின் வேண்டுகோளான எட்டையபுர தமிழ் இசை விழா மிகப் பொருத்தமானதே. எழுத்தாளர்கள் சங்கம் முன் நின்று நடத்த வேண்டும். அரசு ஏற்று நடத்தாவிடினும், மற்றையோர் ஆதரவிற்கு குறையிருக்காது. செய்தியே கவிதை போல் இருந்தது!
By அஷ்வின்
12/12/2010 5:56:00 PM
until B.Litt degree exists, tamil cannot live.
By a.k
12/12/2010 5:19:00 PM
முதலமைச்சர் அவர்களே தமிழை வளர்க்க சூப்பரான ஒரு ஐடியா, இனிமேல் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மற்றும் அரசாங்க சம்பளம் வாங்குபவர்களின் வாரிசுகள் அனைவரும் கட்டாயமாக அரசு பள்ளிகளில் தமிழில்தான் படிக்க வேண்டும். மீறினால் அரசாங்க வேலைக்கு கல்தா என்று ஒரு போடு போடுங்கள். தமிழும் வளரும், அரசு பள்ளிகளின் தரமும் உயரும். டமில் வால்க! டமில்நாடு வால்க!
By Inbaa
12/12/2010 3:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 11 டிசம்பர், 2010

Bharathi and V.O.C

பாரதியாரின் பிறந்தநாளில் நாட்டு மக்களால் மறக்கடிக்கப்படுகின்ற செக்கிழுத்த செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரானர் அவர்களுடன் இணைத்துக் கட்டுரை படைத்துள்ளமை பாராட்டிற்குரியது. பாரதி வழி நின்று பைந்தமிழ் வளர்ப்போம்! வ.உ.சி.வழி நின்று வண்டமிழ் வளர்ப்போம்! நாட்டு விடுதலைக்கான தீவிர வாதம் தவறல்ல என வாழ்ந்த அப்பெருமக்கள்  வழி நின்று ஈழத் தமிழர்களை  ஆதரிப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வ.உ.சி. கண்ட பாரதி


பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயரும் வ.உ.சி.யின் தகப்பனார் உலகநாதன் பிள்ளையும் நல்ல நண்பர்கள். சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் சமஸ்தானத்து உயர்மட்ட ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே சமஸ்தானத்தின் வக்கீலாகத் திகழ்ந்தவர் உலகநாதன் பிள்ளை. வ.உ.சி.யின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் அப்போது தாலூகா நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருந்தன. சமஸ்தான அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வருகிறபோதெல்லாம் தனது அலுவலக சகாவும் நண்பருமான வக்கீல் உலகநாதன் பிள்ளையின் வீட்டில்தான் தங்குவார் சின்னச்சாமி ஐயர். அவ்வாறு தங்கிய நேரங்களில் நண்பர்கள் இருவரும் மற்றும் சிலரும் ஓய்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலி என்றும், தமிழில் சுயமாகப்பாடும் திறன் பெற்றவன் என்றும் உலகநாதன்பிள்ளை தனது மகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சி.சுப்பிரமணிய பாரதி குறித்துப் பெருமையாகச் சொல்வதுண்டு. அப்போது வ.உ.சி. பதினைந்து வயதுப் பாலகனாக இருந்தார். பின்னர் வளர்ந்து வழக்கறிஞரான பிறகு தனது பணியின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியிலிருந்து நகரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியாரின் வீடு அங்கிருப்பதை அறிந்தார். அடிக்கடி அவ்வீட்டைத் தாண்டிச் சென்ற வ.உ.சி., ஒருநாள் அவ்வீட்டுக்குள் திருமலாச்சாரியாரைச் சந்திக்கும் நோக்கில் சென்றார். அதிபர், வீட்டின் மாடிப்பகுதியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மாடிக்குச் சென்று  திருமலாச்சாரியாரைப் பார்த்துத்  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வ.உ.சி. வ.உ.சி. தனது ஊரையும் பெயரையும் உச்சரித்து முடித்தவுடனேயே திருமலாச்சாரியார் மாடியின் உள்ளே அமைந்த அரங்கை நோக்கி ""பாரதி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார்'' என்று உரக்கச் சொல்ல, உள்ளே இருந்த பாரதி, அதிபர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். இவர்தான் ஆசிரியர் சுப்பிரமணியபாரதி என்று வ.உ.சி.க்கு பாரதியை அறிமுகப்படுத்தினார் திருமலாச்சாரியார். முதல் சந்திப்பே இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்தது. இருவருமே ஒருவரையொருவர் நேரில் அதுவரை பார்த்ததில்லையாயினும் இருவரின் பள்ளிப்பருவ காலத்திலேயே இரண்டு பேரின் தந்தைமார்களும் தங்களின் மகன்களைப் பற்றி அக்காலத்திலேயே கருத்துகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருந்த காரணத்தால்,  ஒருவரைப்பற்றியொருவர் நன்கு அறிந்திருந்தனர். பழைய நினைவுகளைப் பாசத்தோடும் பரவசத்தோடும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்ததோடு  பாரதி, திருமலாச்சாரியார், வ.உ.சி. மற்றும் இந்தியா இதழில் பணியாற்றும் இன்னொரு நண்பர் என நால்வரும் பேசியவாறே திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரை மணலில் அமர்ந்தபடி அன்றைய நாட்டு நடப்பு குறித்து விரிவாக வெகுநேரம் மிகுந்த அக்கறையோடு கலந்து பேசினர். பெரும் பகுதி நேரம் பாரதியும் வ.உ.சி.யுமே உரையாடினர். தனது முதல் சந்திப்பு குறித்து வ.உ.சி., ""அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது'' என்றும், ""என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது'' என்றும் பதிவு செய்துள்ளார். சென்னை செல்கிறபோதெல்லாம் அன்றாடம் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று பாரதியுடன் மெய்மறந்து உரையாடியதையும், அவர்கள் இருவரும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று நீண்ட நெடுநேரம் அன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் குறித்துப் பேசுவதுமாக இருந்ததாகவும் வ.உ.சி. தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பாரதியின் அரசியல் பிரவேசத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகத் தொடங்கிவிட்டன. 1893-ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதரதிலகரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக வ.உ.சி.யே குறிப்பிட்டுள்ளார். 1898-ல் வ.உ.சி. காங்கிரஸ் மகாசபையில் அங்கம் பெற்று அமைப்புரீதியாகவே செயல்பட்டு வந்துள்ளார். வ.உ.சி.யின் அரசியல் தெளிவை, தேசிய இலக்கிய மாத இதழான விவேகபாநு இதழில் 1906-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சுதேசாபிமானம் எனும் அவரது முதல் அரசியல் கட்டுரையின் மூலம் நன்கு உணரலாம்.  1906-ன் தொடக்கத்தில் பாரதியை தான் முதன்முதலாகச் சந்தித்ததாக தனது வாழ்க்கைக் குறிப்பில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். பாரதியை முதலில் சந்தித்தபோதே அரசியல் தெளிவோடும் கொள்கை உறுதியோடும் விளக்கியுள்ளார். வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. முதல் சந்திப்பில் தன் உள்ளத்தில் தேசாபிமான நெருப்பு விளக்குபோல் ஒளிவிட்டுப் பிரகாசித்த செய்தியை வ.உ.சி. பாரதியிடம் சொல்லி முடித்தவுடன் மாலை 4 மணியிலிருந்து மெய்மறந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், ""சக்திதுணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி  எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி'' என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி. அடிக்கடி இவ்வாறான இருவரின் சந்திப்பு நிகழ்ந்ததோடு பாரதி வீட்டுக்கு வ.உ.சி.  செல்வதும் வ.உ.சி. தங்கியிருந்த இல்லத்துக்கு பாரதி வருவதும், இருவருமாகச் சேர்ந்து உண்பதும் உறங்குவதுமாகத் தோழமை வேரூன்றியது. அந்தச்சூழலில் பிரான்ஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டம்  குறித்தும் இன்னும் இதுபோன்ற கிளர்ச்சிகள் பற்றி வெளிவந்திருந்த ஆங்கிலக்கவிதைகள் குறித்தும் பாரதி, வ.உ.சி.க்கு உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார். இவர்களின் உறவின் நெருக்கம் மாமனார், மருமகன் என்று முறை வைத்துத் தங்களுக்குள் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தது. திருவல்லிக்கேணியிலிருந்த தேசபக்தர்களான மண்டயம் குடும்பத்தாரிடம்- குறிப்பாக திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பின்னர் பாரதியும் வ.உ.சி.யும் முன்னின்று சென்னை ஜனசங்கம் என்ற தேசாபிமான சங்கத்தை அமைத்தனர். தீவிரவாத தேசியத்தையும் மிதவாத தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்த சூழலில், திலகர் தலைமையில் திரண்ட தீவிரவாத தேசியப் பிரிவின் முன்னணிப் படைத்தளபதிகளாக வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர் விளங்கினர். சூரத்தில் 1907-ம் ஆண்டு நடைபெற்ற இருபத்து மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டதோடு அம்மாநாட்டின் நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர்கள் பாரதியும், வ.உ.சி.யும். வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி வெள்ளையனுக்கு எதிராக இரண்டு சுதேசிக் கப்பல்களை ஓடவிட்டது, அங்குள்ள கோரல் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது, விபின்சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாடியது போன்ற புரட்சிகர வடிவங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றபோது பாரதி இந்தியா இதழில் இந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிதவறாமல் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இதழ்மூலம் தமிழகத்தில் ஒரு புத்தெழுச்சியையே உருவாக்கினார் பாரதி. வ.உ.சி., சிவா ஆகியோரை ஆங்கிலேய அரசு அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அளித்தபோது வெகுண்டெழுந்தார் பாரதி. ""தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயிலில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம்போல் எண்ணெய் ஆட்டும் செக்கிழுக்கும்படி செய்கிறாராம். நடு வெயிலில் தீப்பறக்கும் செக்கிழுத்துக் கஷ்டமடைகிறாராம். அந்தோ இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போதே நெஞ்சுருகுகிறதே... இங்கெழுதும் போதே கை நடுங்குகிறதே... இக்கொடுந்துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்ஙனமோ கடவுளேயறிவர்''. ""கைதிகளுக்கு எத்தனை வேலைகள் இருக்க இத்தேசபக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் யந்திரம் சுழற்றும் வேலையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்களுக்கு விலங்கிடுவதேனோ?'' எ ன்று 1908-ம் ஆண்டு இந்தியா இதழில் மனம் பதைபதைக்க நெகிழ்ந்துபோய் எழுதியுள்ளார் பாரதி. வெறும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வின்ச், வ.உ.சி.யிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுமொழி சொன்னதாகவும் பாரதி வடித்த இரண்டு கவிதைகள் ஒரு காவியம்போல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்து விட்டவை. தொடக்கத்தில் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யும் சிவாவும் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாளையங்கோட்டை சென்று சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருவரையும் சிறைச்சாலைக்குள் பார்த்து உரையாடிவிட்டு வந்தார் பாரதியார்.இந்நிகழ்வு குறித்து எழுதும்போது ஸ்ரீசிதம்பரம் பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸýடனும் விளங்கியதோ அதே மாதிரியிலேயே  இப்பொழுதும் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவி மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டது. வரலாறு காணாத பேரெழுச்சி திருநெல்வேலியில் மூண்டு விட்டது. இந்த மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறை களமிறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டது. குண்டடி பட்டுச்சாவு, படுகாயம் என்று மக்கள் பதறிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் விளைவுகளை நேரில் கண்டறிந்து இந்தியாவில் எழுதுவதற்காக பாரதி திருநெல்வேலிக்கே சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து விசாரித்தறிந்து தனது இதழில் விளக்கமாக எழுதினார். பாரதி புதுச்சேரியில் இருந்த காலங்களில் அவரைச் சந்திப்பதற்கென்றே புதுச்சேரிக்குச் சென்று அவருடன் தங்கியிருந்து தன்னுடைய தோழமையை வெளிப்படுத்தியவர் வ.உ.சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் திரிசூலம் என்றும் மும்மூர்த்திகள் என்றும் போற்றப்பட்டவர்கள் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர். இதில் வ.உ.சி., சிவா உறவு குறித்தும், பாரதி-சிவா நட்பு குறித்தும் தனித்தனியாக விரித்துச் சொல்லும் அளவுக்கு ஆழமானவை. 1936-ல் வ.உ.சி. மரணப்படுக்கையிலிருக்கும் வேளையில் காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை அழைத்து பாரதி பாடலைப் பாடப் பணித்தார். "என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்' என்ற பாடலை உருக்கம் கலந்த எழுச்சியோடு சிவகுருநாதன் பாட அதைக் கேட்டுக் கொண்டே வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010


தலைவனுக்குரிய எல்லா தகுதியும் பாரதிக்கு இருந்தது


புதுச்சேரி, அக். 2: பாரதி கவிஞனாக இருந்தாலும் தன்னை உலகை உய்விக்க வந்த தலைவனாகக் கருதிச் செயல்பட்டவன். தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் பாரதியிடம் இருந்தது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்."புதுவை பாரதி' மாத இதழின் வெள்ளிவிழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தினமணி ஆசிரியர் ஆற்றிய சிறப்புரை:சிற்றிதழ் நடத்துவது சாதாரண விஷயமல்ல. சிற்றிதழ்களில் தமிழ் காப்பாற்றப்படுகிறது. நல்ல இலக்கியங்கள் நிலை நிறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிற்றிதழ்கள் பற்றி அதிகம் பேசி வருகிறேன். கால் நூற்றாண்டு காலம் வெளிவந்துள்ள புதுவை பாரதி இதழையும், ஆசிரியர் பாரதிவாணர் சிவாவையும் வாழ்த்துகிறேன்.பாரதியின் நூற்றாண்டு விழா முடிந்துவிட்டது. 2021-ல் பாரதி இறந்து 100 ஆண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால் இன்னும் பாரதியைப் பற்றி பேசுகிறோம். பாரதி இறந்த பிறகு மயானத்துக்கு 1 டஜன் பேர் கூட போகவில்லை. ஆனால் பாரதி பேசப்படுகிறான். அதற்கு என்ன காரணம்? காலத்தை மீறி எழுத்தும், செயல்களும்தான் பதிவு செய்யப்படும்.பாரதியைப் பற்றி விமர்சனம் செய்யும் சிலர் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். பாரதியின் காலத்தில் இருந்துதான் அவர்கள் பாரதியையும், பாரதி படைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்படியில்லாமல் இன்றைய சூழலில் ஆய்வு நடத்த முடியாது. அப்படி செய்தால் அந்த ஆய்வு சரியாக இருக்காது.பாரதியைப் பற்றி கண்ணதாசன் குறிப்பிடுகையில், நான் வாழும்போதே என்னுடைய கவிதையை மற்றவர்கள் பாராட்டுவதையும், என்னுடைய பாடல்களை லட்சக்கணக்கானவர்கள் பாடுவதையும் கேட்டு மகிழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவன் நான். ஆனால் பாரதிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. என்ன எழுதினோம், அதை மற்றவர்கள் எப்படி ரசித்தார்கள் என்று அனுபவிக்கக் கொடுத்து வைக்காதவன் கவிஞன் பாரதி என்கிறார்.பாரதியிடம் தலைவனுக்குரிய எல்லா தகுதியும் இருந்தன. மக்களிடம் மூடநம்பிக்கையை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறான். வறுமை ஒழிய வேண்டும் என்று விழைகிறான். தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று பராசக்திக்கு வேண்டுகோள் விடுக்கிறான். வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றும், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றும் பாடியவன் பாரதி. இது போன்ற சமூக சிந்தனையுடன் கூடிய தலைவனின் பார்வை காரணமாகத்தான் காலத்தைக் கடந்து நிற்கிறான் பாரதி என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
கருத்துக்கள்

பாரதி மட்டுமல்ல ;எந்த ஒரு படைப்பாளியும் அவரது காலச்சூழலுக்கேற்பத்தான் ஆய்வு செய்யப்பட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/3/2010 3:37:00 AM
I want to know "what honour has been given to Our Maha kavi Barathi and Kaviyarasar kannadasan in the Sentamiz Manadu conducted by our Government of Tamilnadu".
By Ram
10/3/2010 1:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதியின் இறுதிப் பேருரை



தேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார். 1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது. குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கபெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி. சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி. ""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி. தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி. ""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி. ""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை. சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி. "நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி. ""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி. ""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர். ""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி. ""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி. ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர். தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர். பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார். பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார். ""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார். 1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது. ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!(இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள்)

திங்கள், 20 ஜூலை, 2009

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் முழங்க வேண்டும்

திருக்கோவிலூர், ஜூலை 19: "தெருவெல்லாம் தமிழ் முழக்கம் முழங்க வேண்டும்' என்று பாரதி கண்ட கனவை நாம் அனைவரும் நனவாக்க வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார்.திருக்கோவிலூரில் கபிலர் விழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இவ் விழாவில் பாராட்டு மன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அரசின் ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் என்.விட்டலுக்கு "நேர்மையின் சிகரம்' விருதையும், அன்பு பாலம் நிறுவனத் தலைவர் பா.கல்யாணசுந்தரத்துக்கு "சேவையின் சிகரம்' விருதையும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியது:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு இணையான ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் ஆணையர் பதவியை வகித்தவர் என்.விட்டல். இந்த மண்ணின் மைந்தரான இவருக்கு வழங்கப்படும் "நேர்மையின் சிகரம்' விருது மற்றும் பாராட்டு திருக்கோவிலூர் மக்களுக்கே வழங்கப்படும் பாராட்டு. இந்த விருதை வழங்க வாய்ப்பளித்த திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்துக்கு மனமார்ந்த நன்றி.தியாகம், தொண்டு என்ற வார்த்தைக்கு தமிழர்கள் அகராதியில் புதிய விளக்கம் பாலம் கல்யாணசுந்தரம். இவரது சேவைக்காக வழங்கப்படும் "சேவையின் சிகரம்' விருது திருக்கோவிலூர் மக்களுக்கே வழங்கப்படும் விருது.இதுபோன்ற இலக்கிய விழாக்கள் பள்ளி, கல்லூரிகள்தோறும் நடத்தப்பட வேண்டும், தமிழ் இலக்கிய அமைப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று நான் முந்தைய விழாக்களில் பேசி வந்தேன். திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இது போன்ற விழாக்கள் ஊர்தோறும் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற விழாக்களை நடத்தி முத்தமிழை வளர்ப்பதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாளைய தலைமுறையிடம் தமிழ் சீர்குலையாமல் சென்றடையும்.தினமணி முன்னாள் ஆசிரியர்கள் ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக விழாவுக்கு வந்துள்ளனர். அந்தப் பாரம்பரியம் தற்போது என் காலத்திலும் தொடர்வது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது."தெருவெல்லாம் தமிழ் முழக்கம் முழங்க வேண்டும்' என்று பாரதி கண்ட கனவை நனவாக்க வேண்டும். இதற்கு திருக்கோவிலூர் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடத்துவதுபோல் பல்வேறு இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் என்.விட்டல் பேசும்போது, "இந்த விருது எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் பதவியில் இருந்தபோது என்னிடம் பலர் ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்டனர். அவர்களிடம் நான் முடியும் என்று கூறினேன். ஊழலை ஒழிக்க ஒரே வழி வெளிப்படையான நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும்' என்றார்.பா.கல்யாணசுந்தரம் பேசும்போது, "ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்போது, அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைகள் அதிகம் கிடைக்கும். அதில் ஒரு சதவீதத்தை அவர்கள் சேவைக்காகச் செலவிட்டால் கல்வியில் தன்னிறைவு அடைய முடியும். வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு சேவைகள் செய்ய வேண்டும்' என்றார்.சென்னை டாக்டர் சாமிநாதன் தனது பாராட்டுரையில் "இந்த விருதுகள் மிகச் சரியானவர்களுக்கு, மிகச் சரியான முறையில் வழங்கப்படுகிறது. தினமணி ஆசிரியர் பங்கேற்று விருதுகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.விருது பெற்ற என்.விட்டல் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக இருந்தவர். இந்திய நிர்வாகத் துறையிலும், தொழில் துறை மேலாண்மையிலும் 42 ஆண்டுகள் பணி புரிந்தவர். இவரது நேர்மைக்கு இந்த விருது வழங்கப்பட்டது.பா.கல்யாணசுந்தரம் தனது 14 வயதில் சேமிப்பு தொகையைக் கொண்டு கல்வி மேம்பாட்டுக்கான சங்கம் அமைத்தார். தனது ஊதியம், ஓய்வூதியப் பயன் ஆகியவற்றையும் கல்வி மேம்பாட்டுக்கு நன்கொடையாக வழங்கியவர். அன்பு பாலம் என்ற பத்திரிக்கை நடத்தி வருகிறார்.இந் நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கவிஞர்கள் சி.உதயன், பாலகிருஷ்ணன், மூர்த்தி, நடராஜன், அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவுக்கு முன் சேலம் காயத்ரி வெங்கடேசன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள்

நாளைய தலைமுறையினரிடம் தமிழ் சீர்குலையாமல் சென்றடைய வேண்டும் என்னும் நல்ல கருத்தைத் தினமணி ஆசிரியர் தெரிவித்துள்ளமை அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். அவர் பேசியவாறு பாரதிகனவை நனவாக்கத் தெருவெல்லாம் தமிழ் முழங்கச் செய்ய அரசியல்வாதிகளும் பிற ஊடகத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் படித்தவர்கள் உண்மையிலேயே தமிழ் மீது ஈடுபாடு காட்டி ஊர்கள் தோறும் தமிழ விழாக்கள் நடைபெற வழிகாட்ட வேண்டும். திருக்கோவிலூர் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்திற்குப் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2009 2:53:00 AM