சாகித்ய அகடமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாகித்ய அகடமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2013

வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்

 வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்
 கோர்ட்டில், வழக்கு நிலுவையில் இருந்த போதும், சாகித்ய அகடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்தை, மத்திய அரசு தந்துள்ளது. இதன்மூலம், செம்மொழி வரிசையில், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளோடு, தற்போதுமலையாளமும் சேர்ந்துள்ளது.

"ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனில், குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் உள்ளடக்கிய தாக, அந்த மொழி இருக்கவேண்டும்' என, "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.

இலக்கண தொன்மை:அதன்படி, ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனில், அந்த மொழியானது, குறைந்தது, 2,000ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். அதே கால அளவுக்கு, பேச்சுவழக்கிலும், அந்த மொழி இருந்திருக்கவேண்டும். வேற்று மொழி சொற்கள் கலந்திருக்காமல், தனக்கே உரிய இலக்கண தொன்மையுடன், அந்த மொழி உயரிய பழம்பெருமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை எல்லாம், பூர்த்தி செய்த மொழிகள் என்பதால், சமஸ்கிருதம், ரோமன், கிரேக்கம், சைனீஷ் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன. இந்த மொழிகள் அனைத்திற்கும், எந்த வகையிலும், குறைச்சல் இல்லாத பழமையும், பெருமையும் வாய்ந்த மொழி தமிழ் என்பதால்,அதையும் செம்மொழியாகஅறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கடந்த, 2004ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதல் ஆட்சிக் காலத்தில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., செல்வாக்குடன் திகழ்ந்த அந்த ஆட்சியில், தமிழை செம்மொழியாக்கும் நடவடிக்கைகள் துவங்கப் பெற்று, அமைச்சரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, மத்திய கலாசார துறை அமைச்சராக இருந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி, தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தந்திரம் செய்தார். அதாவது, "செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு, 2,000 ஆண்டுகள் பழமையாக இருக்க வேண்டும் என்ற விதியை, 1,500 ஆண்டுகள், பழமையானதாக இருந்தால் போதும்' என, மாற்றினார்.

இந்த திருத்தம், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்த போது, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க., அமைச்சர்கள் யாரும் எதிர்க்கவில்லை.இந்த வரலாற்று பிழை காரணமாக, தமிழுக்கு நிகரான அந்தஸ்தை, பிற மொழிகள் பெற வழி ஏற்பட்டது. தொன்மை குறித்த நிபந்தனை, 2,000 ஆண்டுகளாகவே இருந்திருக்க வேண்டும் என, தி.மு.க., உறுதியாக எதிர்த்து இருக்க வேண்டும். அதைச் செய்ய தவறி விட்டதாக, தமிழறிஞர்கள் குறைபட்டனர்.அதனால், செம்மொழிஅந்தஸ்தை, தமிழின் பெருமைக்கும், தொன்மைக்கும் சற்றும் நெருக்கத்தில் வர முடியாத, பிற மொழிகளும் பெற நேர்ந்தது.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்காக, பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. ஆனால், செம்மொழியான
தமிழ்மொழி, பத்தோடு பதினொன்றாக ஆன கதை, பெரிதாக பேசப்படவில்லை.தமிழுக்கு பிறகு, ஜெய்பால் ரெட்டி நினைத்தபடியே, தெலுங்கும் செம்மொழி ஆக்கப்பட்டது. பின், கன்னடமும் செம்மொழியானது. தென் மாநில மொழிகளில், மலையாளம் மட்டுமே பாக்கி இருந்தது. இது கேரள மக்களுக்கு, பெரும், "ஈகோ'பிரச்னையாக உருவெடுக்கவே, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை,மளமளவென துவக்கினர்.

மத்திய அரசிடம், இந்த கோரிக்கை தீவிரமாக வைக்கப்பட்டது. அப்போது, நாட்டின் மிகப்பெரிய அமைப்பான, சாகித்ய அகடமியின் மொழிகள் பிரிவு பரிசீலனைக்கு, இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டது. "மலையாளத்திற்கு, செம்மொழி அந்தஸ்து பெற தகுதி இல்லை' என்ற, கடுமையான எதிர்ப்பை, சாகித்ய அகடமி பதிவு செய்தது.

மலையாள செல்வாக்கு:ஆனாலும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் தலைமையில், இதற்கென குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசில் உள்ள மலையாள செல்வாக்கை, பயன்படுத்தும் பணிகள் ஆரம்பமாகின.இதற்கிடையில், "மலையாள மொழியை செம்மொழி ஆக்கக் கூடாது. அதற்கான தகுதி அந்த மொழிக்கு இல்லை' என்று வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து வழங்குவது என, முடிவெடுக்கப்பட்டது. இருந்தாலும், இது, சென்னை ஐகோர்ட்டில் தொடரப் பட்டுள்ள வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்புக்கு உட்பட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நமது  தில்லிச் செய்தியாளர்  -

வெள்ளி, 8 மார்ச், 2013

சாகித்ய அகடமி விருதுவாங்கப் பணமில்லா மலர்வதி

சாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி ப்  பெண்: விருது வாங்கச் செல்ல பணமில்லாததால் கவலை
நாகர்கோவில்: தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை கதையின் கருவாக கொண்டு உருவாக்கிய படைப்புக்கு, சாகித்ய அகடமி விருது வென்று, குமரி மாவட்ட இளம் பெண் மலர்வதி சாதனை படைத்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, வெள்ளிக்கோடு கிராமம். இங்கு அமைந்துள்ள, வியாகுல அன்னை ஆலயத்தை ஒட்டி, டூவீலர் செல்வதற்குக் கூட சிரமப்படும், ஒரு சிறிய ஒற்றையடி பாதை. அதன் உள்ளே, சற்று தூரம் நடந்து சென்றால், ஒரு முழுமை பெறாத வீடு. சுற்றுச் சுவர்கள் சிமென்ட்டின் அரவணைப்பை எதிர்பார்த்து காத்திருக்க, தரையும், மண் துகளுடன் ஏதோ ஒரு சோகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கு ஒரு ஏழை குடும்பம். அதுதான், படைப்பாளிகளை தற்போது திரும்பி பார்க்கச் செய்யும், மேரி புளோரா என்ற, மலர்வதியின் வீடு. இவர் அண்மையில், "தூப்புக்காரி' (ஸ்வீப்பர்) என்ற ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பலர் உதவியுடன் வெளியிட்ட, ஐந்தாவது நாவல். பல மூத்த எழுத்தாளர்கள் அளித்த ஊக்கத்திலும், பாராட்டிலும், தன், "தூப்புக்காரியை' சாகித்ய அகடமி விருதுக்காக அனுப்பி வைத்தார்.

ஒரு மாத பத்திரிகை அலுவலத்தில், சராசரி சம்பளத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு, சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இருந்து, ஒரு கடிதம் வந்தது. அதில், "தூப்புக்காரி நாவல் எழுதியதற்காக இந்த ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகடமி விருது வழங்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. வரும், 22ம் தேதி, கவுகாத்தியில் நடைபெறும் விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. செப்பு பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் விருதாக வழங்கப்படுகிறது. இப்படி உயரிய விருதை பெற்ற மேரி புளோரா என்ற மலர்வதி, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தந்தை எலியாஸ்; தாய் ரோணிக்கம்; அக்கா லதா; அண்ணன் ஸ்டீபன். இவர், தாயின் வயிற்றில் வளர்ந்த போதே, தந்தை, குடும்பத்தை தவிக்க விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து, சென்று விட்டார். தந்தை சென்ற பின், வறுமை சூழலில் தவித்த குடும்பத்துக்கு உதவியாக, தாய் ரோணிக்கத்துக்கு, வெள்ளிக்கோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், தூப்புக்காரி வேலை கொடுக்கப்பட்டது. வெறும், 30 ரூபாய் சம்பளத்தில், மூன்று பிள்ளைகளை வளர்க்க, ரோணிக்கம், மிகவும் சிரமப்பட்டார். தன் தாய், கழிவறைகள சுத்தம் செய்யும் போது, தாயின் முந்தானையை பிடித்து நடந்த மலர்வதிக்கு, அந்த துர்நாற்றமும், பினாயில் மணமும், இன்னும் மூக்கை விட்டு விலகவில்லை. அந்த வலியும், கடினமான அனுபவமும் தான், "தூப்புக்காரி' நாவலை உருவாக்க உதவியது என்கிறார் மலர்வதி. தற்போது மலர்வதிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. ஆனால், அந்த பாராட்டுக்களால் மலர்வதியால் மகிழ முடியவில்லை. காரணம், கவுகாத்தி செல்ல வேண்டும்; துணைக்கு, அண்ணன் செல்ல வேண்டும். மொழி பெயர்க்க, வேறு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். ரயிலில் சென்றால் மொழிபெயர்க்க செல்பவர், "10 நாள் செலவிட முடியாது' என்கிறார். விமானத்தில் செல்ல வேண்டும். அதற்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை வேண்டும். தன் ஒரு சவரன் செயினை, அடகு வைத்து விடலாம். அதற்கு மேல் பணத்துக்கு என்ன செய்வது என்ற யோசனையின் இறுக்கத்தில், மலர்வதி, வாடியுள்ளார்.

சனி, 22 டிசம்பர், 2012

எழுத்தாளர் செல்வராசின், "தோல்' புதினத்திற்குச் சாகித்ய அகடமி விருது


எழுத்தாளர் செல்வராசின், "தோல்'  புதினத்திற்குச்  சாகித்ய அகடமி விருது

புதுதில்லி: இந்தாண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில், திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர், டி.செல்வராஜ் எழுதிய, "தோல்' என்ற நாவலுக்கு, விருது கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில், வெளியாகியுள்ள கதை, நாவல்களில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு, ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டு, 24 இந்திய மொழிகளில் இருந்து, கவிதை நூல்கள் 12, சிறுகதை 4 , நாவல்கள் 4 மற்றும் சுயசரிதை, விமர்சனம் பிரிவில் தலா ஒரு நூல்கள் தேர்வு பெற்றுள்ளன.தமிழில் திருநெல்வேலியை சேர்ந்த, டி. செல்வராஜ் எழுதிய, "தோல்' நாவல், விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது.
தமிழில் சிறந்த நூலை தேர்வு செய்யும் குழுவில், பேராசிரியர் கே.வி. பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான், சா.கந்தசாமி ஆகியோர், இடம் பெற்று இருந்தனர்.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார்.திண்டுகல்லை சுற்றி செயல்படும் தோல் பதனிடும் தொழிலை மையமாக வைத்து, "தோல்' நாவலை எழுதியுள்ளார்.