மாற்றுத்திறனாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றுத்திறனாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 அக்டோபர், 2013

அத்தனைக்கும் ஆசைப்பட்டேன்.. அவ்வளவையும் அடைந்தேன்..!

அத்தனைக்கும் ஆசைப்பட்டேன்.. அவ்வளவையும் அடைந்தேன்..!

Comment (3)   ·   print   ·   T+  
சேட்டை சேது
சேட்டை சேது
சேட்டை சேது - பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெஸ்ட் என்டர்டெய்னர், தன்னம்பிக்கைச் சுடர் போன்ற விருதுகளை பெற்ற  வானொலி தொகுப்பாளர். ஐ.ஆர்.எஸ். நிறுவனம் நடத்திய சர்வேயில் மதுரையின் நம்பர் ஒன் ரேடியோ ஜாக்கியாக இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவர், இப்போது இருப்பது சூரியன் எஃப்.எம்-மில்.
விரைவில் சினிமாவில் அரிதாரம் பூசவிருக்கும் சேது, மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியான அச்சம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பிறக்கும்போதே போலியோ பாதிப்பால், தொடைவரை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கூடத்துக்கு கையால் தவழ்ந்து செல்லும் நிலை. அப்படிப்பட்டவர் இன்றைய நிலையை எப்படி எட்டினார் என்பதில் ஒரு தன்னம்பிக்கை கதை அடங்கியிருக்கிறது.
“இருக்குறதுலயே கொடுமையான சித்ரவதை நம்மை மற்றவர்கள் பரிதாபமாகப் பார்ப்பதுதான். அதனால், எனக்கு என் மீது பரிதாபப்படுபவர்களைப் பார்க்கவே பிடிக்காது. 16 வயசு வரைக்கும் பள்ளிக்கு தவழ்ந்தேதான் போனேன். கொளுத்தும் வெய்யில்ல தார் ரோட்டைத் தாண்டிப் போகணும். அப்பவும் நான் யார்கிட்டையும் ஹெல்ப் கேட்டதே இல்லை. மத்தவங்க என்னைய தூக்கிச் சுமக்கணுமேனு, ஸ்கூல் டூர்க்கு கூப்பிட்டாக்கூட நான் போக மாட்டேன்.
எப்பப் பாத்தாலும் ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பேன். நம்மளும் சிரிக்கணும் நம்மள சுத்தி இருக்கவங்களையும் சிரிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். என்னோட ஆசைகள் எல்லாமே ரொம்ப பெருசு. தவழ்ந்துபோகும் காலத்திலேயே பைக் ஓட்ட ஆசைப்பட்டேன். அதுக்கு முந்தியே கார் வாங்கணும்னு நினைச்சேன். சுயமா நடக்கணும்கிற ஆசை வெவரம் தெரியுறதுக்கு முந்தியே வந்திருச்சு. 17 வயசுல நானே தட்டுத் தடுமாறி கம்பை ஊன்றி நடக்கப் பழகிட்டேன். இப்ப என்னோட பைக், கார் ஆசையும் நிறைவேறிடுச்சி - என்னோட சுய சம்பாத்தியத்துல. நான் ஓட்டுற பைக், கார் எல்லாத்தையும் எனக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிட்டேன். அதுதான் வாழ்க்கை. இருக்கிற இடத்திற்கும், சவாலுக்கும் தகுந்த மாதிரி நம்மை நாமே மாத்திக்கிடணும்" தனது அனுபவத்தைச் சொல்லிக் கொண்டே காரைவிட்டு இறங்கிய சேது, தொடர்ந்தும் பேசினார்.
"சென்னையில் கிடைச்ச சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை விட்டுட்டு திண்டுக்கல்லுக்கு ஓடியாந்துட்டேன். அங்க ஒரு லோக்கல் சேனல்ல வாய்கிழியப் பேசுற வேலை, தாவித்தாவி பல வேலைகள்ல இருந்தேன். எதுவுமே செட் ஆகலை. 2007 செப்டம்பரில் மதுரையில் முதன் முதலாக தனியார் எஃப்.எம். ஆர்.ஜே.வுக்காக நடத்திய இன்டர்வியூல செலக்ட் ஆன ஏழு பேருல நானும் ஒருத்தன்.
இப்பத்தான் உங்கக்கிட்டத்தான் முதன்முதலா நான் மாற்றுத் திறனாளிங்கிறதை ஒத்துக்கிட்டிருக்கேன். மற்றபடி அரசல் புரசலாக கேள்விப்பட்டு, போன் போட்டு துக்கம் விசாரிப்பாங்க. ஆர்வம் மிகுதியால என்னைய ஆபீஸுக்கு வந்து பார்க்கிறவங்க, கண்கலங்குவாங்க. அடுத்து ஷோ கேட்கும்போது, 'சேது நீங்க ஜோக் அடிச்சாக்கூட எனக்கு அழுகை அழுகையாக வருது'ன்னு அன்பே சிவம் மாதவன் மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நான் சொல்ல வர்றது ஒண்ணு தான். சாதாரணமானவங்களை விட நமக்கு ஏதோ ஒரு திறமை கொஞ்சம் கூடுதலா இருக்கும். அதைக் கண்டுபிடிங்க. யாரையும் பரிதாபமாகப் பார்க்கவிடாதீங்க. சாதிக்கலாம். நீங்க எதுவாக மாறணும்னு நினைக்கிறீங்களோ, அதுவாக மாறுவது நிச்சயம்” நெத்தியடியாய் சொன்னார் சேட்டை சேது.

திங்கள், 30 செப்டம்பர், 2013

முடங்கவில்லை; முயல்கிறேன் : தன்னம்பிக்கை ஊட்டும் மாற்றுத்திறனாளி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81566920130930005635.jpg

முடங்கவில்லை; முயற்சி செய்கிறேன் : தன்னம்பிக்கை ஊட்டும் சேலம் மாற்றுத்திறனாளி
 
 
சேலம்:விபத்தில் பாதிக்கப்பட்டு, இரு கால்களும் செயல் இழந்ததாலும், தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தானே தயாரித்த, "தொட்டி ஆட்டோ'வில் வலம் வருகிறார், சேலம் மாற்றுத்திறனாளி இன்ஜினியர்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியாளர் சிவானந்தம். இடைப்பாடி, ஆரியப்பாளையம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவானந்தம், 49. டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளார். தன்னுடைய, 25வது வயதில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றினார். பின், சவுதி அரேபியாவில், ராணுவ விமான நிலையத்தில் பணியாற்றினார்.கடந்த, 1994ம் ஆண்டு, கார் விபத்தில் சிக்கியதில், அவருடைய முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஆறு மாதத்துக்கு பின், வீல் சேருடன் தாயகம் திரும்பினார். வயதான தாய், இரண்டு சகோதரன், இரண்டு சகோதரி, அனைவரும் தனியாக வசிக்கும் நிலையில், அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என, ஓமலூர் இந்திரா நகரில், கையில் இருந்த பணத்தை கொண்டு, சொந்தமாக வீடு கட்டினார்.

கால்கள் இயங்காதபோதும், தனக்கான வசதியை, வீட்டிலேயே ஏற்படுத்திக் கொண்டார். சைக்கிள் பழுது பார்க்கும் கடை, ஜெராக்ஸ் கடை நடத்தி, அதன் மூலம் வருவாயை ஈட்டினார். அவருடன் பணியாற்றிய, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிலிப்டேனியல் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன், அவரை பார்க்க ஓமலூர் வந்தார்.அவரது யோசனைப்படி, கைனெட்டிக் ஹோண்டாவின் முன்பகுதியை மட்டும் வைத்து, மெக்கானிக்குகளை கொண்டு, கைகளால் இயக்கும் வசதியுடன் கூடிய தொட்டி ஆட்டோவை தயாரித்தார்.வீல் சேரில் இருந்தபடியே, தொட்டி ஆட்டோவில் ஏறுவதற்கும், கையால் இயக்கி, கதவை திறந்து வெளியே வருவதற்கும், பெட்ரோல் டேங்க், கிக் ஸ்டாட்டர் என அனைத்து வசதியையும் உருவாக்கினார். அதிலேயே, ஓமலூரில் இருந்து பெங்களூரு, மதுரை, தென்காசி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறார்.அதே ஆட்டோவில் சென்று, தண்டுவட பாதிப்பால் முடங்கி கிடப்போருக்கு ஊக்கம் அளிக்கும் சேவையை செய்கிறார். தன்னார்வ தொண்டு அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.சிவானந்தம் கூறியதாவது:கார் விபத்து, என் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. கால்கள் செயலழிந்த நிலையில், தவித்த எனக்கு ஆதரவாக இருப்பது இந்த ஆட்டோ மட்டுமே. ஆட்டோவில் இருந்து இறங்கும் போது, வீல்சேரில் இருந்தபடியே பல்டி அடித்த சம்பவங்களும் உண்டு. என்னை போல் உள்ளோரை இனம் கண்டு, அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதே என்னுடைய பணியாக உள்ளது, என்றார்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மாற்றுத்திறனாளியின் 2,467 அ.கோ./கி.மீ., மிதிவண்டிப் பரப்புரை

விவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளியின் 2,467  அ.கோ./கி.மீ., மிதிவண்டிப் பயணம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_788754.jpg 

கும்மிடிப்பூண்டி:விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு, இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தும் நோக்கில், கோல்கட்டா முதல் கன்னியாகுமரி வரை, மூன்று சக்கர கைவண்டியில் 2467 கி.மீ., பயணத்தை மேற்கொண்டு வரும் மாற்று திறனாளிக்கு வழி எங்கும்உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த இரத்தினம், பூதங்கம் தம்பதியரின் மகன் தங்க இராசா, 32; மாற்றுத்திறனாளியான இவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கேந்திர தகவல் மையத்தின், ஊழியராக பணியாற்றி வருகிறார்.விவேகானந்தரின் சிந்தனைகள் மீது இருந்த உன்னத ஈடுபாட்டின் வெளிப்பாடாக, அதை இந்திய இளைஞர்களிடம் கொண்டு சென்று எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பது, அவரின் தீராத வேட்கையாக இருந்தது.அதன் எதிரொலியாக கோல்கட்டாவில் இருந்து, கன்னியாகுமரி வரை, தன் மூன்று சக்கர கைவண்டியில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம், 22ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தில் விவேகானந்தர் பிறப்பிடமான பெல்லுார்முட் பகுதியில் இருந்து, ஒடிசா, ஆந்திரா வழியாக கன்னியாகுமரி வரையிலான 2467 கி.மீ., தூர பயணத்தை, வருகிற செப்டம்பர் மாதம், 11ம் தேதி அன்று முடிக்க திட்டமிட்டுள்ளார்.பயணத்தின் முக்கிய நோக்கமாக, மேற்கண்ட மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று விவேகானந்தரின் சிந்தனைகள் குறித்து, அந்தந்த இடத்திற்கு ஏற்றபடி ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர மாநில பயணங்களை முடித்து, நேற்று காலை, தமிழக எல்லைப் பகுதியான, கும்மிடிப்பூண்டிக்குள் நுழைந்தபோது, அப்பகுதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயணத்தின் அனுபவம் குறித்து, தங்கராஜா கூறுகையில், பயணத்தின் களைப்பு தெரியாதபடி மேற்கு வங்கம், ஓடிசா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றைய இளைஞர் சமுதாயம் கட்டாயம், விவேகானந்தரின் வழியை பின்பற்ற வேண்டும். விவேகானந்தரின் சிந்தனைகள் செழிக்க, என் பயணம் மேலும் தொடரும் என, தெரிவித்தார்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இரு!

மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இரு!


சென்னை ஐ.ஐ.டி.,யில்,மேனேஜ்மென்ட் துறையில்,பிஎச்.டி., பட்டம் பெற்ற,பார்வையற்ற மாற்றுத்திறனாளி கே.சிரீராம்: கண்பார்வையுடன் தான்பிறந்தேன். நான்கு வயதில், விழித் திரையில்ஏற்பட்ட நோய் காரணமாக, கண் பார்வைமெல்ல மெல்ல மங்க துவங்கி, 25வது வயதில் பார்வை முற்றிலும் பறிபோனது.இருந்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தேன்.சென்னை, லயோலாகல்லூரியில், பி.காம்.,பெங்களூரு, ஐ.ஐ.எம்.,மில் மேனேஜ் மென்ட் படிப்பு படித்தேன். இதனால், மேனேஜ்மென்ட் துறையில்,பிஎச்.டி., பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னை, ஐ.ஐ.டி.,யில் சேர்ந்தேன். அங்கு, "கார்ப்பரேட் நிறுவனங்களின்சமூக அக்கறை'குறித்து, என் ஆய்வை வடிவமைத்தேன். அறிவியல் துறையில்,பிஎச்.டி., பட்ட ஆய்வுகளில், நிறைய பக்கங்களுக்கு இடமில்லை. ஆனால் மேனேஜ்மென்ட் படிப்பு களில்,அதிக அளவில் ஒப்பாய்வு செய்வதால்,ஆய்வு கட்டுரை அதிகபக்கங்கள் இருக்கும்.என் ஆய்வுகட்டுரை, தலையணைபோல் தூங்குவதற்காக இல்லாமல், படிப்பவர்களுக்கு பயனுள்ளதாகஇருக்க கடினமாகஉழைத்தேன் .இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களின்சமூக அக்கறை குறித்துமுழுமையாக அறிய,"ஜாஸ்' எனும் கணினிமென்பொருள் உதவியுடன், அது தொடர்பான புத்தகங்களைமுழுமையாக படித்தேன். நன்கு தெரிந்தபின்பே, ஆய்வைஆரம்பித்தேன். இதனால்,ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க,ஆறு ஆண்டுகள்ஆனது. இருப்பினும்,ஆய்வை சரியாகசெய்த மனதிருப்தி கிடைத்தது. நான் தயாரித்த ஆய்வேடு,மேனேஜ்மென்ட்துறை படிக்கும் மாணவர்களுக்கு, சிறந்த வழி காட்டியாக இருக்கும்என, பேராசிரியர்கள்பாராட்டினர்.சென்னை ஐ.ஐ.டி.,யின், 50வது பட்ட மளிப்பு விழாவில்,மாற்றுத் திறனாளியானஎனக்கு, முனைவர்பட்டம் வழங்கப்பட்ட போது, அரங்கத்தில்உள்ள அனைவருமேகை தட்டி ஊக்கப்படுத்தினர். என்னைபார்த்து, மற்றவர்களும் நன்றாக படிக்கவேண்டும் என, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க, பேராசிரியராக பணியாற்றவிரும்புகிறேன்.

செவ்வாய், 18 ஜூன், 2013

விருதுநகர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இலவசமாக மூன்று ஆண்டு பட்டய படிப்பு மற்றும் 3 மாத தொழில் நுட்ப பயிற்சி பெறுவதற்கு அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இருபாலரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
மத்திய அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் கை, கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்கல்லூரியில் கட்டட பிரிவு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம், அச்சுக்கலை, இயந்திரவியல், எலக்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறியியல் பட்டயம் ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து படிக்கிறவர்களுக்கு படிப்புக் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணப்படியும் வழங்கப்படும்.
அதேபோல், பிரின்டிங், தையல், மின்சாதன வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கம் பயிற்சி, ஸ்கிரின் பிரிண்டிங் உள்ளிட்ட 3 மாத பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சிகளை பெறுவதற்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் ஊனத்தின் தன்மை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்கவும் வேண்டும். இதில், சேர்வதற்கு மாற்றுத்திறனாளிகள் 10-வது அல்லது 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ள அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்களை நேரில் இலவசமாக பெற்று வருகிற 26-ம் தேதிக்குள் பெற்று விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

ஞாயிறு, 19 மே, 2013

மாற்றுத்திறனாளி அல்லர் பலரை மாற்றும் திறனாளி கோவை செகதீசு

மாற்றுத்திறனாளி அல்லர் பலரை மாற்றும் திறனாளி கோவை செகதீசு
"வணக்கம் அண்ணா''


அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனையும், கண்ணீரும் குபுக்கென்று பொங்குகிறது.


காரணம்


சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே உள்ள பாகங்களில் கைவிரல்களில் மட்டுமே அசைவு உண்டு, அதுவும் லேசாக.
அந்த லேசான அசைவுகளையும், தனக்குள்ளான ஆர்வத்தையும், கம்ப்யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களை பெற்றுள்ளார்.
ட்வீட்டரும், பேஸ்புக்கும், பிளாக்கிலும் புழங்குகிறவர்களுக்கு "ஜகூ' என்ற வார்த்தை பிரபலம், "ஜகூ' என்ற வார்தைக்கு பின் இருப்பவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் கோவை ஜெகதீஷ்.
எல்லோரும்தான் எழுதுகிறார்கள் ஆனால் ஜெகதீஷின் தனித்துவம் அவரது எழுத்தில் இருக்கிறது.
வெட்டி அரட்டை எல்லாம் இல்லை, எந்த ஓரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவீரமாகவும் விமர்சிக்கிறார்.
இந்திய பொருளை வாங்கு இந்தியனாக இரு என்பதை தீவிரமாக சொல்கிறார்.
தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு "ஆன் லைனில்' தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்.
கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றவர்.அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்துவருகிறார்.
தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் நான் இறங்கத்தயார் அதுவும் உத்தமமான மாணவர் அமைப்போடு என்று அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், நான் கப்பல் என்ஜீனியர் எனக்கான புராஜக்டை என்னால் முடிக்க முடியவில்லை நீங்கள் உதவமுடியுமா?என்று கேட்ட என்ஜீனியருக்கு ஓ...தாரளமாக என்று முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஓரு பக்கம் என்று மனதால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று ஒடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம் இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்பமுடிகிறதா ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.
வலியும்,வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை,
வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினரின் ஒரே மகனான ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு, ஆனால் கண்பட்டது போல நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது. மூன்று வயதில் உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் முகத்தின் பற்கள் சேதமடைந்தது, ஏழு வயதில் நிற்கவைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது, மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம் உயிரை விட்டுவிட்டு உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது, இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, சேமித்த பணம் போனது கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது...
தந்தை தனது தொழிலைவிட்டுவிட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவராயிருக்கிறார், ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், அந்தக்கால பிகாம் படிப்பாளியான ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து ஜெகதீஷின் குடும்பம் பசி, தாகம் அறியாது காத்து வருகிறது.
இந்த நிலையில் ஜெகதீஷ் தனது ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனது தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இண்டர்நெட் உதவியுடன் உதவியுடன், மெத்த படித்த கம்ப்யூட்டர் அறிவாளிகளுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில் தனது அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.
யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார், எங்காவது போவது என்றால் பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருவார், மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில் இயர் போனை செருகிக்கொண்டு இடது கையின் நடுவிரலை அசைத்து,அசைத்தே, நம்மில் பலராலும் முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார், இல்லையில்லை செதுக்குகிறார்.
இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், இதைவிட மேலானாது, தான் கற்றதையும், பெற்றதையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார். தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்க விரும்புகிறார்.
இவரிடம் கம்ப்யூட்டர் திறமை நிறைய இருக்கிறது, தமிழில் வளமையான அறிவு இருக்கிறது, எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும் இருக்கிறது, எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவு இருக்கிறது.
இல்லாதது, நிரந்தர வருமானம். என்னைப்பெற்ற அவர்களது மனதிலும்,கண்ணிலும் மகிழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன்,அதற்காக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறேன், இனியும் இவன் சுமை அல்ல, சுகமானவனே என என்னைச் சார்ந்தவர்களை அனைவரும் எண்ணும்படி மாறவேண்டும், அதற்கு உழைக்க தயராக இருக்கிறேன். ஆனால் என் தகுதி அறிந்து வேலை தருபவர் யாரும் உண்டா? என்பதை தினமலர் இணையதளம் மூலம் அறிய விரும்புகிறேன்.
வறுமையும், திறமையும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா வாசகர்களே
உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையை,தொழிலை தர எங்கள் வாசகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்கள் உங்கள் எண்ணில் தொடர்பு (9791497906) கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அவருள் விதைத்துவிட்டு விடைபெற்றேன்.
(வேலை தருவதற்காக இல்லாவிட்டாலும் பராவாயில்லை இவருடன் நேரம் கிடைக்கும் போது பேசிப்பாருங்கள், கொங்கு மண்ணின் மரியாதை என்றால் என்ன என்பது தெரியவரும், இவரது ஆளுமை புரியவரும்.)
விடைபெறும் போது பாசமும், அன்பும் இழையோட ஜெகதீஷிடம் இருந்து குரல் வந்தது
"நன்றி!அண்ணா''!

வெள்ளி, 29 மார்ச், 2013

செருமனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...

12 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர், பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் உயரம் தாண்டுதலில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார்.

கடந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் டெலானா 1.74 மீட்டர்தான் தாண்டியிருந்தார்.

செங்கல் சூளையில் வேலை செய்து 70 ரூபாய் தினக்கூலி பெற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் மாரியப்பனின் தாய் சரோஜா. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தனது மகனுக்கு தகுதி இருந்தும் வறுமை தடையாய் இருப்பதை எண்ணி வேதனையில் உழல்கிறார்.

தேசிய அளவிலான போட்டியின் மூலம் தனது திறமையை நிரூபித்த மாணவர் மாரியப்பன், சர்வதேச போட்டிகளிலும் அதனை நிரூபிக்க முனைப்பாக இருக்கிறார்.

அதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கித் தருமானால், மாரியப்பனால் ஃப்ரான்சில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்த வாய்ப்புக்காகவும் உதவிக்காகவும் காத்திருக்கிறார் மாரியப்பன் நம்பிக்கையுடன்.

காணொளி: http://youtu.be/WeC_CN1vNAs

www.puthiyathalaimurai.tv

சனி, 16 மார்ச், 2013

அருவினை ஆற்ற ஊனம் தடையல்ல: முதல் இடம் பெற்றார் மாற்றுத்திறனாளி






அருவினை ஆற்ற ஊனம் ஒரு தடையல்ல: பல்கலை., முதல் இடம் பெற்றார் மாற்றுத்திறனாளி

கோவை: "சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்' என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - மல்லிகா தம்பதியர். இவர்களின் ஒரே மகன் சங்கர் சுப்ரமணியம், 26. பிறவியிலேயே 90 சதவீத பார்வை குறைபாடு உடையவர்; இரண்டு கால்களுக்கும் வளர்ச்சியில்லாமல், நடக்க முடியாது. பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாக தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; எந்த விஷயத்தையும் எளிதில் மறந்துவிடாத, நுட்பமான ஞாபக சக்தி உண்டு. அதைவிட மேலாக, சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதி மனதில் உண்டு. இதுவே, சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றி வருகிறது. முழுமையாக பார்வை குறைபாடு இருப்போர், "பிரெய்லி' முறையில் படிக்க முடியும்; ஆனால், சங்கர் சுப்ரமணியத்துக்கு 10 சதவீத பார்வை இருக்கிறது; எனினும், பாட புத்தகங்களை படிக்க முடியாது; பிறரை வாசிக்கச் சொல்லி தான், இவரால் படிக்க முடியும். பாடங்களை மனம் பாடம் செய்து, "ஸ்கிரைப்' ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதி வருகிறார்.

கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் 62 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். பாட புத்தகத்தை புரட்டாமல், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தந்த பாடங்களை மனதில் பதிய வைத்தே, இவர் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார். தற்போது, சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில், முதல் ரேங்க் வாங்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலையில் நடந்த விழாவில், கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்கி, சாதனை மாணவர் சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் அருகேயுள்ள காற்றாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். தாய், தந்தையின் தளராத ஊக்கமும், அரவணைப்பும், சிறப்பாசிரியர்களின் பயிற்சியும் சங்கர்சுப்ரமணியத்தை, படிப்பின் சாதனை படிகளில் ஏற வைத்துள்ளது. ""பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதே, எனது அடுத்த லட்சியம்,'' என்கிறார், சங்கர் சுப்ரமணியம்.

அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மல்லிகா கூறியதாவது: பிறவியிலேயே கால்கள் ஊனம், கண் பார்வை குறைவுடன் பிறந்ததால், குழந்தையை வளர்ப்பதும், படிக்க வைப்பதும் சிரமம் என கருதினோம். எனினும், அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தோம். இன்று, அந்த குழந்தை சாதனை இளைஞனாக மாறி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளான். முதலில், பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம்; பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். அங்குள்ள ஆசிரியர்களின் ஊக்குவிப்பு, சிறப்பு ஆசிரியர்கள் ரகுபதி ஐயர், பத்மநாபன் ஆகியோரின் பயிற்சி ஆகியவை, எங்கள் மகனின் திறமையை வெளியே கொண்டு வர மிகவும் உதவியது.

சங்கர் சுப்ரமணியத்துக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. கோவை அரசு இசைக்கல்லூரியில் குரலிசை பிரிவில் படிக்க "அட்மிஷன்' கிடைத்தது. பார்வை குறைபாடு மற்றும் கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, வாரம் இரு முறை மட்டும் வகுப்புக்கு வர தனிப்பட்ட சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பேட்டையில் இருந்து கோவைக்கு காரில் வர வேண்டும் என்றால், தினமும் 1,000 ரூபாய் செலவாகும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வேலை அளித்து உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


புதன், 13 மார்ச், 2013

இவரால் முடியுமென்றால் நம்மால் ஆகாதது என்ன? காட்சிப்படம்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும், விடா முயற்சி வெற்றி தரும், உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை( ஒருவர்க்கு ஊக்கம் மிகுதியே வலிமையாகும்) முதலான தமிழ் நெறிகளுக்கு எடுத்துக்காட்டானவரைப்பாருங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/






http://external.ak.fbcdn.net/safe_image.php?d=AQDQs9BbJcoqny0w&url=http%3A%2F%2Fvthumb.ak.fbcdn.net%2Fhvthumb-ak-ash4%2Fs403x403%2F245596_259029007465310_259024590799085_64587_2000_b.jpg&jq=100

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஓய்வூதியம் இல்லையேல் உயிர்த்துறப்பு


"ஓய்வூதியம் கொடுங்கள்; இல்லை உயிரை விட அனுமதியுங்கள்!' குடி.தலை வருக்குக் கடிதம்


மும்பை: " எங்களுக்கு மூன்று மாதங்களாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம். வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்குங்கள்; இல்லையெனில், எங்கள் உயிரை போக்கிக் கொள்வதற்கு, அனுமதி கொடுங்கள்' என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 164 பேர், ஜனாதிபதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சிலர், மத்திய அரசின் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை ஆகியோருக்கான, ஓய்வூதியங்களை பெற்று வந்தனர்.மூன்று ஆண்டுகளாக, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; பல்வேறு தரப்பினரை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஓய்வூதியம் கிடைக்காத, 164 பேர், நேற்று, யவத்மாலில் உள்ள, வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த தாசில்தாரிடம், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு எழுதிய, கையொப்பமிட்ட மனுவை அளித்தனர்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:

குடியரசு தினத்தில் தற்கொலை :

மூன்று ஆண்டுகளாக, எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால், பட்டினியில் வாடுகிறோம். எங்களுக்கு, வேறு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. எனவே, வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில், அதற்கு அடுத்த நாள்; அதாவது, குடியரசு தினத்தில், ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, யவத்மால் கலெக்டர், அஸ்வின் முட்கால் கூறியதாவது: சம்பந்தபட்ட பகுதிகளில், போலியான தகவல்களை கொடுத்து, ஓய்வூதியம் பெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து, ஒரு சிலருக்கு, ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அஸ்வின் முட்கால் கூறினார்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

மாற்றுத்திறனாளி செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபடத் தடையா? வீரமணி கண்டனம்

மாற்றுத்திறனாளி செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபடத் தடையா? வீரமணி கண்டனம்

மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகளுடன் கோவிலில்  ''இறை சன்னதி வரை''  சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது மனித உரிமைக்கு எதிரான போக்கு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் நோக்கம் - தணிக்கையே தவிர, இந்து மத பிரச்சாரம் செய்வதோ, பக்தியைப் பரப்புவதோ அல்ல. அது சட்டம் இயற்றிய நீதிக்கட்சி காலத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
(அ) இந்திய அரசியல் சட்டத்தில் கூட, மத விஷயங்களில், உள் தத்துவங்கள் முதலியவற்றைத் தவிர, பல வகையில் சீர்திருத்தம் செய்யவும் தெளிவாக இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் பிரிவு 25இல் மதச் சார்பற்ற மற்ற விஷங்களில் அரசுகள் தலையிட, மாற்றம் செய்ய உரிமை உள்ளது.
(ஆ) இந்த உரிமைகளில்கூட எல்லை வகுப்படாத முழு உரிமைகள்(Ansolute rights) அல்ல, பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகாதாரம், இவற்றோடு இந்திய அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவின் மற்ற விதிகள் இவைகளுக்குட்பட்டதே அவ்வுரிமைகள்.
இந்நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக்கை, ஆணை - மாற்றுத் திறனாளிகளாக உள்ள பக்தர்கள் ஊன்றுகோல், செயற்கைக்கால் மற்றும் செயற்கை உபகரணங்களில் தோல் சம்மந்தப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டுள்ளது என்பதனால், கோவில்களில் வழிபட அத்தகைய மாற்றுத் திறனாளிகளை கோயில் ''இறை சன்னதி வரை''  சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது போன்ற நிலை மனிதநேயத்திற்கும், மனித உரிமைகளுக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும் .
இன்று கோவில் உள்ளே எண்ணெய் விளக்குக்குப் பதில் மின்சார விளக்குகளைப் போடுவதும், பெரிய கோவில்களில் ஏர்கண்டிஷன் அமைத்துள்ளதும், பக்தர்களை மெட்ட டிடெக்டர் வைத்து சோதித்து அனுப்பும் முறையும், திருப்பதி லட்டு, பழனி கோவிலில் இழுவை ரயில் மூலம் கோவிலுக்கு அனுப்புவதும், ஆகம விதிகளில் உண்டா?
ஆண்டவன் சேவைக்கு அனுமதிக் கட்டணம் வசூலிக்க ஆகமங்கள் கூறுகின்றனவா?
எல்லா கோவில்களும் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளனவா?
ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்கள் அறநிலையப் பாதுகாப்பு துறையின்கீழ் இருக்கலாமா? இருக்கிறதே அதற்கென்ன பதில்?
மாற்றுத்திறனாளிகளுக்கு, மற்ற மனிதர்களுக்கு உள்ள இரிமை மறுக்கப்படக் கூடாது என்ற நியதியின் அடிப்படையிலேயே நான் இதனை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து கேட்கிறேன்.
உடனடியாக பரிகாரம் கிடைக்காவிட்டால், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட நேரிடலாம். அந்நிலைக்கு முன்பே பரிசிலித்து நீதி வழங்கிடுமாறு  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு இதுகுறித்து 06.09.2012ல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு இந்த நிலையை அனுமதிக்காததை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 8 ஜூன், 2012

மன எழுச்சியை வளர்த்துக் கொண்டேன்!




பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ள, இரண்டே முக்கால் அடி உயரமுள்ள, மாற்றுத் திறனாளி பிரியா: என் சொந்த ஊர், பெரம்பலூர் மாவட்டம், மாவலிங்கை கிராமம். என் அப்பா விவசாயக் கூலி. எப்பொழுதாவது தான் வேலை கிடைக்கும். அதனால், வருமானம் குறைவு தான். நான் பிறக்கும் போதே, மிகக் குறைந்த உயரத்துடன் பிறந்தேன். நான்கு வயதான போதும், உடல் வளர்ச்சியில்லாததால், பதறிப்போன என் பெற்றோர், மருத்துவர்களிடம் சென்று காட்டியபோது, "இது பிறப்பின் இயல்பு என்பதால், இந்தக் குறைபாட்டை சரி செய்ய முடியாது' என்றனர்.ஆனால், என் குறையை எண்ணி, பெற்றோர் கவலைப்படாமல், என்னை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியிலேயே, என்னை சேர்த்து விட்டனர். நான் நன்றாகப் படித்து, ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்றதைப் பார்த்த என் பெற்றோருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
பின், செட்டிகுளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டனர். ஆறாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை விடுதியில் தங்கிப் படித்தேன்.குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து, இரவு பகல் பாராமல் படித்து, பிளஸ் 2வில், 1,040 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.அப்பா விவசாயக் கூலி என்பதால், எதையும் சேர்த்து வைக்க முடியாமல், குடும்பச் செலவிற்கும், நான், என் தம்பி, தங்கை மூன்று பேரின் படிப்புச் செலவிற்கும் சிரமப்பட்டு, தினம் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.நான் நன்றாகப் படித்து, சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் என் எதிர்கால லட்சியம். தமிழ் வழியில் படித்திருந்தாலும், ஆங்கிலம் சரளமாகப் பேசுவேன்; எழுதுவேன்.குள்ளமாக இருப்பதைப் பார்த்து, பலர் என்னை கிண்டல் செய்துள்ளனர். அதை பெரிதுபடுத்தி, வருத்தமடையாமல், எனக்குள் மன எழுச்சியை வளர்த்துக் கொண்டேன்.