சிற்றூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்றூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜூன், 2013

சிற்றூரில் இருந்து ஓர் இ.ஆ.ப.




குக்கிராமத்தில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
குக்கிராமத்தில் பிறந்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற, விஜயா கிருஷ்ணன்: நான், சிவகங்கை மாவட்டத்தின், குமாரபட்டி என்ற குக்கிராமத்தில் தான் பிறந்தேன். குமாரப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். என் தந்தையும், அப்பள்ளியில் தான் சத்துணவு ஊழியராக பணியாற்றினார். மேல் படிப்பையும், சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் தான் படித்தேன்.
அனைவரும் மருத்துவம், இன்ஜினியரிங் என, படிக்கும் போது, விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், திருநெல்வேலி, கிள்ளிகுளத்தில் உள்ள, விவசாய கல்லூரியில், பி.எஸ்சி., விவசாயம் படித்தேன். கல்லூரி இறுதி ஆண்டின் போது, என் சீனியர் மாணவர்கள் சிலர், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி, என்னையும் ஊக்கப்படுத்தினர். நானும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற என் ஆசையை, பெற்றோரிடம் சொன்ன போது, நடுத்தர விவசாய குடும்பமான நமக்கு, ஐ.ஏ.எஸ்., படிப்பெல்லாம் சாத்தியமா என, தயங்கினர்.
அந்த கஷ்டத்திலும், என் மீது கொண்ட நம்பிக்கையால், மேற்கொண்டு படிக்க சம்மதித்தனர். 2007ல் நடைபெற்ற, ஐ.ஏ.எஸ்., தேர்வில், 325வது இடமே கிடைத்து, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை இணை ஆணையராக பணியாற்றும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இங்கு மிக நேர்மையாக பணியாற்றியதை, அங்குள்ளோர் பாராட்டினர். வயது, 31 ஆனாலும், ஐ.ஏ.எஸ்., ஆனால் தான் திருமணம் என்ற வைராக்கியத்தோடு படித்தேன். ஆனால், தொடர்ந்து தேர்வு எழுதியும் பலனில்லை.
கடந்த, 2012ல் நடைபெற்ற தேர்வே, எனக்கு இறுதி என்பதால், இதில் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன். இந்திய அளவில், 32ம் இடமும், தமிழக அளவில், 3ம் இடமும் பெற்று, குக்கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியிலேயே படித்தவர்களாலும் ஐ.ஏ.எஸ்., ஆக முடியும் என, சாதித்து காட்டினேன்.
என்னுடைய இந்த வெற்றி, அரசு பள்ளியில் படிக்கும் கிராமத்து மாணவியராலும், சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க முடிந்ததில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஊரக அருவினைப் பெண்

முதல் பெண்காவலர்!
காவல் துறையில் சேவை செய்வதற்காக வே, திருமணம் செய்யாமல், 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆய்வாளர், செல்வி. வசந்தி: என், சொந்த ஊர் விழுப்புரம். அப்பா சாரங்கன், டீசல் இன்ஜின் மெக்கானிக். நான், எஸ்.எஸ்.எல்.சி., படித்து முடித்த நேரத்தில், தமிழக காவல் துறைக்கு, முதன் முறையாக, பெண்களையும் தேர்வு செய்வதாக, பத்திரி கையில் படித்தேன். வீட்டிற்கு தெரிந்தால், தடுத்து விடுவர் என, எண்ணி, பக்கத்து வீட்டிலுள்ள ஆசிரியர் துணையுடன், காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தேன்.கடந்த, 1973ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்வில், நான் உட்பட, 21 பெண்கள் தேர்வு பெற்றோம். முதல் பெண்கள் குழு என்பதால், இரவு பகல் பாராமல், கூடுதல் பயிற்சிகள் நடைபெற்றன. திருமணம் மற்றும் பல காரணத்தால், என்னைத் தவிர அனைவரும், காவலர் பணியில் தொடர முடியாமல், பாதியில் விலகினர்.எனவே, திருமணத்தை வேண்டுமென்றே தவிர்த்தேன். ஒரு கட்டத்தில், குடும்பமே வலியுறுத்திய போது, திருமணமே வேண்டாம் என, மறுத்தேன். அவர்கள் கோபத்தில் என்னை திட்டி தீர்த்தனர். காவல் பணி கொடுத்த ஊக்கத்தால், உறுதியுடன் நின்றேன்.சமுதாயக் கொடுமைகளிலிருந்து, ஒரு பெண்ணாக துணிய முடியாததை, ஒரு காவல் துறை அதிகாரியாக துணிந்து, எதிர்த்து நின்றேன் என்பதில் மகிழ்ச்சி. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட பலரை, நீதிமன்றங்கள் மூலம், சரியான தண்டனை வாங்கி தந்துள்ளேன். உறவு முறைகளின், எந்தவித நல்ல, கெட்ட நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. அப்படி சென்றாலும், மற்றவர்களைப் போல் புடவையில் இல்லாமல், காவலர் சீருடையிலேயே செல்ல வேண்டியிருக்கும்.பணிக் காலங்களில், 10 ஆண்டுகள் காவல் துறை ஆய்வாளராக பணியாற்றி இருக்கிறேன். காவல் துறை பணியை, மக்களுக்கு உதவும் கருவியாக, பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை; அதை கடைசி வரை நிறைவேற்றியதால், மன நிறைவு கிடைத்தது.

கிராமத்து சாதனைப் பெண்!

ஒரு பெண்ணாக, விவசாயத்தில் வெற்றி பெற்று, "கிராமிய சாதனையாளர் விருது' பெற்ற, செல்வி: நான், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பத்தாம் வகுப்பு வரை, படித்திருக்கிறேன். எனக்கு திருமணம் செய்து கொடுத்த இடமும், புதுக்கோட்டையின் குருந்தடிமலை கிராமத்திலுள்ள, விவசாயக் குடும்பம் தான். வயல் வேலைகளை செய்து, பால் கறந்து கடைகளில் விற்று வந்தேன். இதன் மூலம், ஒரு குண்டு மணி தங்கம் கூட, சேர்க்க முடியவில்லை. வறுமையால், பிறந்த இரண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல், எதிர் காலம் கேள்வி குறியாக நின்றது."சக்தி மகளிர் சுய உதவிக் குழு' என்ற பெயரில், 20 பெண்களைச் சேர்த்து, குழு துவங்கினேன். வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி, விவசாயம் செய்வதை தவிர்த்து, குழு மூலம், வங்கியில் விவசாயக் கடன் வாங்கி, விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்."வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்' உளுந்து பயிரிட, தொழில்நுட்ப பயிற்சியும், சொந்த நிலம் இருந்தால், உளுந்து பயிரிட தேவையான பொருள் உதவி செய்வதையும் அறிந்து, பயிற்சிக்கு சென்றேன். முன்பு, கடையில் விற்பதை வாங்கி, கண்மூடி தனமாக விவசாயம் செய்தேன். பயிற்சியில் கிடைத்த தகவல் மூலம், ஒரு ஏக்கருக்கு, 8 கிலோ விதையை, வரிசை முறையில் விதைக்கிறேன். இதற்கு, 6,500 ரூபாய் செலவாகும். மகசூல், 30 ஆயிரத்திற்கும் குறையாது. லாபம் மட்டும் குறைந்தது, 20 ஆயிரம் கிடைக்கும். புதுரக உளுந்திலும், நல்ல மகசூலை கொண்டு வந்தேன்.உளுந்து அறுவடைக்கு குறைந்தது, 65 முதல், 75 நாட்கள் மட்டுமே ஆகும். எனவே, குறைந்த நாட்களில், லாபம் ஈட்டலாம். விதை உளுந்தாக விற்றால், கூடுதல் லாபம் என்பதால், நான் விதையாக விற்று, "சிறந்த விதை உற்பத்தியாளர்' என, பாராட்டு சான்றிதழும் பெற்றிருக்கிறேன்.

வியாழன், 8 நவம்பர், 2012

சிற்றூர்களுக்கும் வேண்டும் நவீன மருத்துவக் கருவி

சிற்றூர்களுக்கும் வேண்டும் நவீன மருத்துவக் கருவி
 
மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வேலு: என் அப்பா, நூலகராகப் பணி யாற்றினார். எனக்கு, மருத்துவராக வேண் டும் என்று ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மருத்துவத் துறை சார்ந்த படிப்பையாவது, படிக்க வேண்டும் என, நினைத்து, "பார்மசி அண்ட் பயோமெடிக்கல்' படிப்பை டில்லியில் படித்தேன். பயிற்சிக்காக, சென்னை புற்று நோய் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போது தான், மருத்துவத் துறையில் நவீன கருவிகளின் தேவை, பயன்பாடு குறித்து, நுட்பமாகப் புரிந்து கொண்டேன்.
நவீன மருத்துவ வசதிகளுக்காக, அதிகளவில் மக்கள், சென்னைக்கு வருவதை கண்டேன். எனவே, நவீன மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்வதை தொழிலாகவும், சேவை யாகவும் செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன். இதற்கான அனுபவத்தைப் பெற, மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்து, வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக் குச் சேர்ந்தேன்.அதற்குப் பின், மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், ஏழு ஆண்டுகள் பணியாற்றி, இத்தொழில் குறித்த விவரங்களை, தெளிவாக அறிந்து கொண்டேன். அதன் பிறகே, தனியாக நிறுவனத்தைத் துவங்கினேன்.
என் இலக்கு, மாநகரங்களைத் தாண்டி, இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளாகத் தான் இருந்தன. அவர்களுக்கு நவீன மருத்துவக் கருவிகள் குறித்த தேவையை உணர்த்தினேன்.அடுத்த சில ஆண்டுகளில், நான் ஒப்பந்தம் செய்து வைத்திருந்த சில நிறுவனங்கள் விலகியதால், திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், அதை உந்து சக்தியாகக் கொண்டு, சொந்தமாக கருவிகளைத் தயாரிக்கத் துவங்கினேன். படிப்படியான வளர்ச்சியால், இப்போது, மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில், இந்திய நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறோம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறோம். நவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு, கிராமப்புறங்களுக்கும் செல்ல வேண்டும் என்பது தான் என் ஆசை.