இ.ஆ.ப. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இ.ஆ.ப. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 நவம்பர், 2018

கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

அகரமுதல

கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில்

    நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார்.
  செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத்  தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
  கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ குழந்தைகளுக்கான கதை நூலினைத்  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., வெளியிட்டார். இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி பெற்றுக் கொண்டார்.
   நூலினை வெளியிட்ட  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசும்போது, “இன்றைக்குக் குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பது என்கிற ஒற்றை இலக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். குழந்தைகளின் இலக்கு இப்படி சுருங்கிப் போனதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே முதற்காரணம். நாங்கள் பள்ளியில் படிக்கிற காலங்களில் நீதி போதனை வகுப்புகளில் எங்களுக்குக் கதைகள் சொல்வார்கள். அந்தக் கதைகளில் வரும் நீதி எங்களின் மனத்தில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களின் கவனிப்பு போதிய அளவு இல்லாத போதும், குழந்தைகள் அக்கறையோடும் ஒழுக்கத்தோடும் இருப்பார்கள்.   இன்றைய காலச்சூழலில் குழந்தைகளின் கவனம் திசை திருப்பப்படுகிறது. குழந்தைகள் தானாகச் சிந்திக்கவும் செயல்படவும் புத்தக வாசிப்பு கை கொடுக்கும். கதைகளின் வழியாக குழந்தைகள் மனத்தில் சமூக அக்கறையையும் ஒழுக்கத்தையும் மிக எளிதாக விதைக்க முடியும்.  நெகிழிப்(plastic) பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, பெரியவர்களை மதிக்க வேண்டும், எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மனத்தில் கொள்ள வேண்டும். மு.முருகேசு எழுதிய குழந்தைக் கதைகளைப் படிப்பதன் மூலமாக நாளைய தலைவர்களாக மாறவிருக்கும் இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக வருவார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.
 விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, செங்கை தாமசு, பொன்.வாசுதேவன், பேராசிரியர் கிள்ளிவளவன், நா.வீரமணி, ஆ.கிருட்டிணன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
   நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு ஏற்புரையாற்றினார். விழாவில், கதைகளுக்கான ஓவியங்களை வரைந்த இப் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவ – மாணவிகளைப் பாராட்டினர்.
 விழாவில், ஏராளமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
   நிறைவாகப், பள்ளி ஆசிரியர் பி.இரேணுகாதேவி நன்றி கூறினார்.

சனி, 26 மே, 2018

இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்



இ.ஆ.ப., இ.கா.ப.  தேர்வில்

சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்:

மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்

சென்னை: குடிமைப்பணித் தேர்வு முறையில் மத்திய அரசு புகுத்த உள்ள புதிய முறைக்குத் தாலின் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இ.ஆ.ப. முதலான அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வை நடத்தித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,  பழங்குடியினச் சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.
இப்போது குடிமைப்பணிகள் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை  இ.ஆ.ப., இ.கா.ப., முதலிய  பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும்  நீக்கிவிட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று  தலைமையர் அலுவலகம் விரும்புகிறது என மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் விசய்குமார்(சிங்கு) அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூக நீதியைத் தட்டிப் பறிக்கும் செயல்.
இரவு பகலாகப் படித்துத், தேர்வு பெற்றுப், பல தடைகளைத் தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள  பேராசிரியர்கள் சிலரிடம் ஒப்படைத்துச், சமூக நீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பாசக அரசும், தலைமையர்ர் அலுவலகமும் துணிந்து விட்டது.
“நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம்”, என்று பாசகவால் போடப்பட்டு வந்த நான்காண்டுக்  காலப் பகல் வேடம் இதன்மூலம் கலைந்துள்ளது.
தலைமையர் விரும்புகிறது என்றால், தலைமையர் நரேந்திர(மோடி) விரும்புகிறார் என்றே பொருள்.  எப்படி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகள் வாங்கிவிட்டு, மதவாதத்தைத் திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பாசக அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது  இ.ஆ.ப. முதலிய  அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் , ‘அடித்தளப் பயிற்சிமுறை’  என்ற போர்வையில், ஒருவகையிலான ” பொதுநுழைவு/நீட் தேர்வை” அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்க முயலுவதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பாசக அரசும்,  தலைமையர் நரேந்திர(மோடியும்)  புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, அடித்தளப் பயிற்சிமுறை மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்களின் இ.ஆ.ப., இ.கா.ப., கனவுகளைத் தகர்க்கும் தலைமையர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும்  ஒன்றியப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் குடிமைப்பணித் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கும் தேர்வு செய்ய வேண்டும். தவறினால் சமூக நீதிக் கொள்கையைச் சீர்குலைக்கும் மத்தியில் ஆளும் பாசக அரசை எதிர்த்து இளைஞர்களைப் பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக நடத்திடும்”
என்று  தாலின் எச்சரித்துள்ளார்.

செவ்வாய், 11 ஜூன், 2013

சிற்றூரில் இருந்து ஓர் இ.ஆ.ப.




குக்கிராமத்தில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
குக்கிராமத்தில் பிறந்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற, விஜயா கிருஷ்ணன்: நான், சிவகங்கை மாவட்டத்தின், குமாரபட்டி என்ற குக்கிராமத்தில் தான் பிறந்தேன். குமாரப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். என் தந்தையும், அப்பள்ளியில் தான் சத்துணவு ஊழியராக பணியாற்றினார். மேல் படிப்பையும், சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் தான் படித்தேன்.
அனைவரும் மருத்துவம், இன்ஜினியரிங் என, படிக்கும் போது, விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், திருநெல்வேலி, கிள்ளிகுளத்தில் உள்ள, விவசாய கல்லூரியில், பி.எஸ்சி., விவசாயம் படித்தேன். கல்லூரி இறுதி ஆண்டின் போது, என் சீனியர் மாணவர்கள் சிலர், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி, என்னையும் ஊக்கப்படுத்தினர். நானும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற என் ஆசையை, பெற்றோரிடம் சொன்ன போது, நடுத்தர விவசாய குடும்பமான நமக்கு, ஐ.ஏ.எஸ்., படிப்பெல்லாம் சாத்தியமா என, தயங்கினர்.
அந்த கஷ்டத்திலும், என் மீது கொண்ட நம்பிக்கையால், மேற்கொண்டு படிக்க சம்மதித்தனர். 2007ல் நடைபெற்ற, ஐ.ஏ.எஸ்., தேர்வில், 325வது இடமே கிடைத்து, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை இணை ஆணையராக பணியாற்றும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இங்கு மிக நேர்மையாக பணியாற்றியதை, அங்குள்ளோர் பாராட்டினர். வயது, 31 ஆனாலும், ஐ.ஏ.எஸ்., ஆனால் தான் திருமணம் என்ற வைராக்கியத்தோடு படித்தேன். ஆனால், தொடர்ந்து தேர்வு எழுதியும் பலனில்லை.
கடந்த, 2012ல் நடைபெற்ற தேர்வே, எனக்கு இறுதி என்பதால், இதில் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன். இந்திய அளவில், 32ம் இடமும், தமிழக அளவில், 3ம் இடமும் பெற்று, குக்கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியிலேயே படித்தவர்களாலும் ஐ.ஏ.எஸ்., ஆக முடியும் என, சாதித்து காட்டினேன்.
என்னுடைய இந்த வெற்றி, அரசு பள்ளியில் படிக்கும் கிராமத்து மாணவியராலும், சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க முடிந்ததில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

புதன், 13 மார்ச், 2013

இ.ஆ.ப., புதிய தேர்வு முறை : கலைஞர் மடலில் தவறுகள்



இச்செய்தியில் தகவல்கள் தவறான முறையில்  புரிந்து கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளன. (அறிக்கை தவறா?  செய்தியாக எழுதியதில் தவறா?)
1. <பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, அந்த மொழியில் தேர்வு எழுதலாம் > அப்படி அல்ல. எந்த மொழியில் பட்டம் பெற்று உள்ளார்களோ அந்த மொழியில்தான் எழுத வேண்டும். இல்லாவிடில் இந்தி அலலது ஆங்கிலத்தில் எழுதலாம்.
2.<தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்கள் மட்டுமே அந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும்> முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் குறைந்தது 25  பேர்கள் குறிப்பிட்ட மொழியில் விருப்பம் தெரிவித்து இருந்தால்தான் அந்த மொழியில் தேர்வு நடத்தப்படும். இல்லாவிடில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.
3.< தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து இருந்தாலும், தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும்>  தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தாள் தேர்வை எழுத முடியும். என்றாலும் அவர்கள்  பிற பாடங்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் எழுத முடியும். அதுபோல் தமிழ்ப்பட்டதாரிகள் அல்லாதவர்கள் தமிழ் இலக்கியத்தாள் எழுத முடியாது.
இவ்வாறு மறைமுகமாக அனைவரையும் இநதியில் எழுத வற்புறுத்துகிறது.  வெற்றி என்னும்  வாசகர் கருத்து தெரிவித்துள்ளது போன்று மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. மடல் எழுதி நாடகமாடாமல், உடனே உரிய நடவடிக்கை எடுத்து  இப்புதிய விதிமுறைகளை  நீக்கி  அரசமைப்பு மொழிப்பட்டியலில் உள்ள மொழிகளுள் ஒன்றில் யார் வேண்டுமானாலும் எழுதவும்  வினாத்தாள்களை இந்தியிலும் ஆங்கிலத்திலு்ம் மட்டும் தரும் இப்போதைய முறையை நீக்கி அனைத்து மொழிகளிலும்அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்துடன் தமிழில் மழலைக்கல்வி முதல் உயர்கல்வி வரை அளிப்பதற்குத் தமிழ்ப்பயிற்சி மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். தி.மு.க.வினர் நடத்தும் கல்வி நிலையங்கள் அனைத்தும் தமிழ் வழியி்ல்தான் நடக்கும் எனக் கலைஞர் அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பின் பிறரும் பின்பற்றுவர். அரசை வலியுறுத்துவதும் எளிதாகும். அரசும் உடனே தமிழ்வழிக்கல்வியை எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறாயின், தமிழில் பட்டம் பெறுபவர்கள் தமிழில் எழுத் தடை விதிக்க முடியாது அல்லவா? இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதை உணர்நது விழிப்படைந்து போர்க்குரல் எழுப்பித் தமிழுக்கு வாழ்வளிக்கச் செய்து தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இ.ஆ.ப., புதிய தேர்வு முறையைத் திரும்பப் பெற வேண்டும்: தலைமையருக்குக் கருணாநிதி மடல்




சென்னை:"ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு, கருணாநிதி எழுதிய கடித விவரம்:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில், சில மாற்றங்களை அறிவித்துள்ளது. பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, அந்த மொழியில் தேர்வு எழுதலாம் என்ற இந்த மாற்றம், கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.இதனால், தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்கள் மட்டுமே அந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும். இதன் மூலம் தேர்வு எழுதுபவர்கள் கட்டுப்படுத்தப் படுகின்றனர். அதே நேரத்தில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு, இது போன்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து இருந்தாலும், தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும்.இதுபோன்ற கட்டுப்பாடுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு. ஒரு தடையாக உள்ளது. அவர்கள் இந்தி அல்லது ஆங்கில வழியில் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறை மாற்றம், இந்தியை மறைமுகமாக திணிப்பது போல உள்ளது. நேருவின் வாக்குறுதியை மீறுவதாக உள்ளது.மேலும் இது, கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற, சமநிலையற்ற சூழலை உருவாக்குவதாக உள்ளது. எனவே, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறையை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ஏதாவது ஒரு மொழியில் மத்திய அரசு பணியாளர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அகில இந்திய சர்வீசஸ் தேர்வுகளை, அனைத்து பிராந்திய மொழியிலும் நடத்த வேண்டும் என்பது, தி.மு.க., வின் நீண்ட நாள் கோரிக்கை.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 வாசகர் கருத்துகள்
13-மார்-201301:30:55 IST e
vivek அண்ணா நல்லது.முதல்ல பிரதமரை விட்டுக்கு அனுப்பனும்.


Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
13-மார்-201301:29:56 IST 
Sekar Sekaran அடடடடடா..என்னே கடிதம்..பந்த் நடுவே கூட அசராத உழைப்புதான். இவருக்கே அங்கே மதிப்பில்லாதபோது...இவரது கடிதம் செல்லுமிடம் நமக்கே தெரியும்..அது வீழ்ந்த இடம் பற்றி. இதெல்லாம் ஓர் விளம்பரம்..தினமலரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சிக்கின்றார். ஆனால் தினமலர் வாசகர்களுக்கு இவர் பற்றி எல்லாமே" தெரியுமே..பேப்பர் வேஸ்ட்.இங்க் வேஸ்ட்..நோ யூஸ்..

swaminathan - london,யுனைடெட் கிங்டம்
13-மார்-201301:19:48 IST 
swaminathan கலைஞரின் கோரிக்கை சரியானதே.


Vettri - Coimbatore,இந்தியா
13-மார்-201300:37:54 IST 
Vettri ரொம்ப நாளாக ஒன்று புரியவில்லை தலைவரே. இதற்கு எதுக்கு கடிதம் எழுதணும்.உங்களுடைய கட்சியினர் மற்றும் தங்கள் அன்பு மகன் பங்கு பெற்று இருக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த பிரச்சினைகளை எழுப்பலாமே?




திங்கள், 11 மார்ச், 2013

இ.ஆ.ப.- இ.கா.ப., தேர்வை த் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்: மரு. இராமதாசு கோரிக்கை

இ.ஆ.ப.- இ.கா.ப.,  தேர்வை த் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்:  மரு. இராமதாசு கோரிக்கை
 
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது.
 
5-ந்தேதி மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழில் இளநிலை பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான முதன்மை (மெயின்) தேர்வை தமிழில் எழுத முடியும் என்றும், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இது தமிழ் உள்ளிட்ட மாநில மொழி பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் இந்தி மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர். 2009-ம் ஆண்டில் 622 பேரும், 2010ம் ஆண்டில் 561 பேரும், தமிழில் தேர்வு எழுதினர்.
 
தமிழ் இலக்கியம் படிக்காமல் மருத்துவம், பொறியியல் படித்த மாணவர்கள்கூட, தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தமிழிலேயே முதன்மை தேர்வுகளை எழுதி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வந்தனர். கடந்த ஆண்டு தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தேர்வு எழுதியவர்களில் 19.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த நிலையில் யாரிடமும் கருத்து கேட்காமல் மாநில மொழிகளில் குடிமை பணி தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு இந்தி பேசுபவர்களைத் தவிர வேறு எவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வந்துவிடக்கூடாது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதுதான் காரணமாகும்.
 
இதற்காகவே மிகவும் தந்திரமாக விதிகளை வகுத்து மாநில மொழி பேசும் மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக்கொண்டிருக்கிறது. இந்தி பேசுபவர்களுக்கு மட்டும்தான் அனைத்து சலுகைகளும் என்றால் இந்த நாடு இந்திய தேசமா? அல்லது இந்தி தேசமா? என்ற வினா எழுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போட்டித்தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் தமிழில் தயாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன்.
 
கடந்த ஜூன் 26-ந்தேதி தேதி சென்னையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நேரத்தில். இருக்கும் முக்கியத்துவத்தையும் பறிக்கும் மத்திய அரசின் செயல், மேல் ஆடை கேட்பவனின் கீழ் ஆடையையும் பறிப்பதற்கு ஒப்பானதாகும்.
 
மாநில மொழி மக்களுக்கு எதிரான அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற்று ஏற்கனவே இருந்தவாறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
 
இல்லாவிட்டால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 26-ந்தேதியன்று குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் மையங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஈழத்தமிழர்களின் நலன் காப்பதற்காக என்று கூறி வரும் 12-ந் தேதி (நாளை) டெசோ அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். வேறு சில அரசியல் காரணங்களுக்காக, ஈழத்தமிழர்களை முன்னிறுத்தி, இப்படி ஒரு முழு அடைப்பு போராட்ட நாடகம் நடத்துவதை தமிழ் உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
எனவே, ஈழப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
 
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு - கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தமிழீழம் அமைப்பதற்கு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   
மேலும் தலைப்புச்செய்திகள்

இ.ஆ.ப. தேர்வை இனி த் தமிழில் எழுத முடியாது!

இ.ஆ.ப. தேர்வை இனி த் தமிழில் எழுத முடியாது!



ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது இனி வெறும் கனவாகவே போய்விடக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையில் ஐ.ஏ.எஸ். முதன்மை (மெயின்) தேர்வில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதன்மை தேர்வு எழுதுவதிலும், விருப்பப் பாடங்களைக் குறைத்து பொது அறிவு மற்றும் பொதுப்பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதன்மைப் பாடத்தேர்வு எழுதுவோரில் குறைந்தபட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே, அந்தப் பிராந்திய மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஹிந்தி அல்லது ஆங்கிலத்துக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிராந்திய மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகக் குறையும் என கூறப்படுகிறது.
அதோடு, தமிழ் இலக்கியத்தை, தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே விருப்பப்பாடமாகத் தேர்வு செய்ய முடியும் எனவும் மற்றொரு விதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேர்வு எழுதுவோர் பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்துதான் படித்து வருகின்றனர். அவர்கள் இந்தத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சியும் பெற்று வருகின்றனர்.
2009-ல் 622 பேரும், 2010-ல் 561 பேரும் தமிழில் தேர்வு எழுதினர். கடந்த 5, 6 ஆண்டுகளில் மட்டும் தமிழில் தேர்வு எழுதிய 10-க்கும் மேற்பட்டவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்வு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முதல் கட்டத் தேர்வுக்குப் பிறகு நடைபெறும் பிரதான தேர்வை தமிழகத்தில் 300 முதல் 600 பேர் வரை எழுதுகின்றனர்.
பட்டப்படிப்பில் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற புதிய விதியால் ஓரிரு மாணவர்கள் மட்டுமே பிரதான தேர்வை தமிழில் எழுதும் தகுதியைப் பெறுவர். எனவே 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை எட்டவே முடியாது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் படித்த மாணவர்களுக்கு இந்தத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்தப் புதிய விதிகள் மறைமுகமான ஹிந்தி திணிப்பே என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் இதுகுறித்து மேலும் கூறியது:
பட்டப்படிப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற தொழில் படிப்பு முடித்த மாணவர்கள் தமிழில் தேர்வே எழுத முடியாது. பி.ஏ., பி.எஸ்சி., போன்ற படிப்புகளும் மிக அரிதாகவே தமிழ் வழியில் வழங்கப்படுகின்றன. எனவே, கிராமப்புற மாணவர்கள் இனி தமிழ் வழியில் தேர்வு எழுத முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆங்கில வழிப் படிப்புகளில் தேர்ச்சிப் பெறுவதற்கு பெரிய அளவில் ஆங்கிலப் புலமை தேவையில்லை. ஆனால், இந்தியாவில் முதல் 100 பேரில் ஒருவராக வருவதற்கு மேம்பட்ட ஆங்கிலப் புலமை நிச்சயம் தேவை. எனவே, இந்தப் புதிய திருத்தங்கள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவே உள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வரும் கோவை மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
வரலாறு, புவியியல் போன்ற விருப்பப் பாடங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலையில் தமிழ் இலக்கியத்துக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்குப் பொருந்தாது என்பதிலிருந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது மறைமுகமாக ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகவும் சில தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது: இந்தப் புதிய விதிகள் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். ஆகும் வகையில் உள்ளதாக சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் சங்கர் தெரிவித்தார்.
முதன்மைத் தேர்வில் இருந்த 2 விருப்பப் பாடங்கள் 1 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொதுப் பாடங்கள் 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், மாநில மொழிகளில் தேர்வு எழுதக் கூடாது என்பதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளது.
தமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழில் எழுத முடியும். தமிழில் எழுத முடியுமா என்று தெரிந்துகொள்ள அவர்கள் காத்திருக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அந்த மாநில மொழியில் தேர்வு எழுத முடியுமா, இல்லையா என்பது தெரியவரும். அதேபோல், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பதையும் தடுக்கும் வகையில் புதிய விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் கிராமப்புற,ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக உள்ளன என்றார் அவர்.
பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை நீக்க வேண்டும், ஏற்கெனவே இருந்தவாறு பட்டப்படிப்பை எந்தமொழி வழியாக படித்திருந்தாலும் அவர்களை தமிழ் வழியில் எழுத அனுமதிக்க வேண்டும், தமிழ் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் கோருகின்றனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதல் கட்டத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி) அப்ஜெக்டிவ் டைப் வினாக்களாக இருக்கும். அதாவது சரியான விடையைத் தேர்வு செய்யும் வடிவில் இருக்கும். பிரதான தேர்வு முழுவதும் கட்டுரை வடிவில் இருக்கும்.
இந்தக் கட்டுரை வடிவிலான தேர்வுக்கான வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். ஆனால், இதற்கான விடைகளை மாணவர்கள் தமிழிலோ அல்லது வேறு பிராந்திய மொழிகளிலோ அளிக்கலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இப்போது அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் 2 விருப்பப் பாடங்களுக்கு பதில் இனி ஒரு விருப்பப் பாடம் மட்டுமே இருக்கும்.

இந்த பகுதியில் மேலும்