ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மார்ச், 2013

திருமலை - கூண்டுக்குள் அடையத் தேவையில்லை

எத்தனை ஆண்டுகளாகத் திருப்பதிக் கோயிலில் ஊழல் நடக்கிறது என்று தெரியாது. ஆனால், எனக்குத் தெரிந்து 40 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர் ஒருவர், அங்கு இறையன்பர்கள் காணிக்கையாக அளிக்கும்  தரமான தங்க நகைகளைக்கூடத் தரங்குறைந்தது என்ற பெயரில் குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதுபோல் காட்டி விற்பதாகக் கூறினார். எவ்வளவு நகை வேண்டுமானாலும் மிகக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறினார்.  நான் சில முறை திருப்பதி சென்றுள்ளேன். எனக்கு நேர்ந்த பட்டறிவுதான் பிறருக்கும் நேர்ந்துள்ளது. என்ன வென்றால் கூட்டமே இல்லாத பொழுதும் கூட்டம் இருப்பதுபோல் செயற்கையாகக்காட்டுவதற்காக வேண்டுமென்றே மக்களை அடைத்து வைக்கின்றார்கள். சில திங்களுக்கு முன்பு சென்றிருந்தபொழுது மிக மிகக் குறைவான கூட்டம் இருந்தது.  அதனால்  தொடக்கத்தில் உள்ள ஆய்வு முகப்பில் ஒன்றுமட்டுமே திறந்திருந்தது. ஆனால், வேண்டுமென்றே மணிக்கணக்கில் ஒவ்வொரு கூண்டாக அடைத்து வைத்தனர்.  காலையில் 4  மணிக்கே வந்திருந்தும் அடைத்து வைத்துப் பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் ஒரு கூண்டிலிருந்து மற்றொரு கூண்டிற்கு அனுப்பியதாக க் கட்டணமில்லாப் பார்வைக்கு வந்த  ஒருவர்  கூறினார். என்ற போதும், மூலவர் இடம் வந்தபொழுது  வேண்டுமென்றே திமுதிமு என்று திரளாகப்போகுமாறு செய்து யாரையும் வணங்கவிடாமல் வழக்கம் போல் விரட்டி அடித்தனர்.  கூட்டம் இல்லை என்பதால் புகழ் குறைந்து கூட்டம் மேலும் குறையும்  என்பதால் அவ்வாறு செய்கின்றனராம்.  அந்த இடத்தில் வரிசையாக உள்ளே செல்ல விட்டால் மணிக்கணக்கில் அல்லது நாள்கணக்கில் காத்திருந்தவர்கள் அமைதியாக இறை வழிபாடுசெய்ய வாய்ப்பிருக்கும். ஆனால், செய்வதில்லை. கழிவறைகளில் தண்ணீர் வசதியே இல்லை. இதையெல்லாம் கேட்டதற்கு, வருவோர்  எண்ணிக்கையைப்போலியாக உயர்த்திக் காட்டினால்தான் இறையன்பர்களுகு்குத் தரும் பால், உணவு முதலானவற்றில் கொள்ளை அடிக்க முடியும் எனத் திட்டமிடுபவர்கள்  வசதி செய்து தருவதில் கருத்து செலுத்துவதில்லை என்று அங்குள்ள ஒருவர் கூறினார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே, திருப்பதி அன்பர்கள் சில நாளேனும்  திருப்பதிக்குச் செல்வதைப் புறக்கணித்தால்தான் உண்மை உணர்ந்து  தொடர்புடையவர்கள் திருந்துவர்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




திருமலையில் இலவசப்பார்வையில்  மாற்றம்: கூண்டுக்குள் இனி அடைய த் தேவையில்லை

நகரி: திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள் நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வைகுண்டம்: திருமலையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன. இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மொட்டை: என்ன தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கைரேகை: திருமலையில், வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள் வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம் வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல், கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.


வி.ஐ.பி., தரிசனம்: வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் சிலர், தரிசன நேரத்தின் போது, அவர்கள் வராமல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வருகின்றனர். இனி வி.ஐ.பி.,க்களுடன் இணைந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல், வி.ஐ.பி.,க்களும், வி.ஐ.பி., சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களும், தவறாமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.



வெள்ளி, 15 மார்ச், 2013

ஊழல் குறையுமா?






ஊழல் குறையுமா?

இந்தியாவில் நடைபெறும், மிகப் பெரிய ஊழல்களை, மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய, வினோத் ராய்:

நான், சி.ஏ.ஜி., எனும் இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் தலைவராக பணியாற்றுகிறேன். அரசு செயல்படுத்தும் பல கோடி மதிப்புள்ள திட்டங்களின் கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதா என்பதை, தணிக்கை செய்கிறோம்.இந்த அமைப்பில், இந்தியாவின் தணிக்கை மற்றும் கணக்கு துறை உள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டால், அரசின் தவறான செயல்பாட்டை கண்டிக்க முடியாமல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல், அனைத்திற்கும் சரி என, ஒத்துழைப்பு தர நேரிடும் என்பதால், இத்துறையை நிர்வகிக்கும் சி.ஏ.ஜி., அமைப்பிற்கு, சுயமாக செயல்படும் அதிகாரத்தை, இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின், மொத்த கணக்கு வழக்குகளை தணிக்கை செய்கிறோம். அரசு சார்பில் நடைபெறும் ஏலங்கள், நேர்மையாக நடத்தப்பட்டதா, அரசுக்கு லாபமா, நஷ்டமா என, ஆராய்ந்து, பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், வருமான இழப்பை அறிக்கையாக தாக்கல் செய்கிறோம்."2ஜி' அலைக்கற்றை இழப்பு, காமன்வெல்த் போட்டிக்கான நிர்வாக முறைகேடு, நிலக்கரி சுரங்க உரிமைக்கான முறைகேடு, ஹெலிகாப்டர் பேர ஊழல் என, பல வகையில் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதால், சுட்டிக் காட்டினேன்.

எவ்வித விருப்பு வெறுப்பும் இன்றி, எங்களின் பணிகளைச் செய்கிறோம்.அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பை சுட்டிக் காட்டும் போது, அரசின் கொள்கை முடிவுகளில் நாங்கள் தலையிடக் கூடாது எனவும், அடிக்கடி நாங்கள் வரம்பு மீறி செயல்படுவதாக, மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.அரசின் இழப்பை தடுப்பது தான், அமைப்பின் நோக்கம். அதைத் தான் செய்கிறோம். எனவே, இந்த அமைப்பு குற்றம் சொல்லாமல் இருக்க, அரசு மற்றும் அரசியல்வாதிகள், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து, அரசின் வருமான இழப்பை குறைக்க வேண்டும்.




ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள்

உரத்த சிந்தனை :  
ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள் : 
எசு.ஏ.சுந்தரமூர்த்தி

மக்கள் வளம் முதல், எல்லா வளமும் நம் நாட்டில் உள்ளது. இந்த வளத்தை, பலத்தால் அடைய வேண்டும் என்று, எத்தனையோ படையெடுப்புகள், இந்தியா மீது துவங்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் இந்தியா, புதுபொலிவுடன் தன்னைக் காத்துக் கொண்டது.

லட்சக்கணக்கான உயிர்களை இழந்து, ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டி, மக்கள் கண்ட சுதந்திரம் என்று வர்ணிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் பாலும், தேனும் ஓடும் என்றனர். ஆட்சி மாறியது; ஆனால், காட்சி மாறவில்லை. உலகக் கொள்ளைக்காரன் போய், உள்ளூர் கொள்ளைக்காரர்கள் பலர் வந்து விட்டனர்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் அடிப்படையில் எல்லாருக்கும், "சம நீதி' என்று நாம் படைத்து, நாமே ஏற்றுக் கொண்ட அரசியல் சாசனம், நம்மை வழிநடத்த துவங்கியது. புனிதமான அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறும் நிலைக்கு வந்துவிட்டது.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய போது, ராணுவத்திலும், பொது வினியோகத்திலும் உள்ள லஞ்சம் மற்றும் ஊழலை கண்டறிய, "சிறப்பு காவல் அமைப்பு' 1941ல் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், "டில்லி சிறப்பு காவல் அமைப்பு' எனும் பெயரில், உள்துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் லஞ்சம், ஊழல் குறைய வேண்டும் என்று எண்ணிய அன்றைய பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல், தன் சட்ட ஆலோசகர் கரம் சந்த் ஜெயின் மூலம், டில்லி சிறப்பு காவல் படையை நிர்வகித்து வந்தார்.இந்த, டில்லி சிறப்பு காவல் அமைப்பு, 1963, ஏப்., 1ம் தேதி முதல், மத்திய புலனாய்வு அமைப்பு என்றும், சி.பி.ஐ., என்றும் அழைக்கப்பட்டது.

இப்போது சி.பி.ஐ., இத்தாலி ஆயுத இடைத்தரகன், போபால் விஷவாயுக்கு சொந்தக்காரனை, "யுனைடெட் கார்பைடு' என்று, உலக குற்றவாளிக்கு உதவி வருகிறது. உள்ளூரில் நடக்கும் கொலை, கொள்ளைகளை கண்டறியும், "துப்பறியும் சாம்பு'வாக மாறிவிட்டது சோகத்திலும் சோகம்."ஊழல் ஒழியவே இல்லை. இந்தியா இனி உருப்படாது' என்று சந்தானம் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த பின் உருவானது தான், ஊழல் கண்காணிப்பு ஆணையம், 1964ல் ஏற்படுத்தப்பட்டது.
*இது ஒரு ஆலோசனைக் குழு, இதன் முடிவை ஏற்க வேண்டுமா என, முடிவு செய்யும் அதிகாரம் அரசிடமே உள்ளது.
*1,500 துறைகள் (மாநில - மத்திய) ஊழலை கண்காணிக்க, 300 ஊழியர்களுடன் உலா வருகிறது.
*சி.பி.ஐ.,க்கு விசாரணை செய்ய உத்தரவிட்டாலும், வழக்கு விவரங்களை சி.பி.ஐ.,யிடம் கேட்க முடியாத ஆணையம்.
*ஆளும் கட்சியான பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆணையரை தேர்வு செய்யும் போது, மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவரால் எதிர்ப்பு மட்டுமே காட்ட முடியும். திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து, பி.ஜே.தாமசை துரத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற வேண்டி வந்தது. உத்தரவு வந்த பின்பும் நாற்காலியை
காலி செய்யாமல் அடம்பிடித்த புண்ணியவான்.

ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்தை கைப்பற்ற, ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஆனால், பல் பிடுங்கிய பாம்பை பார்த்து, நாம் மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 324வது ஷரத்து படி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம், கொள்ளைக் கூட்ட தலைவன் கூட தேர்தலில் நின்றால், ஒன்றும் சொல்லாது. "கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்கக் கூடாது' என்று அறிக்கை தர அச்சப்படுகிறது. எப்படியோ, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுப் பெறுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 148 ஷரத்துப்படி உருவாக்கப்பட்டது தான், இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் பதவி. மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவுகளை தணிக்கை செய்து, ஜனாதிபதியிடமோ, மாநில கவர்னரிடமோ அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தற்போது, தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராய், 2008ல் தலைமைத் தணிக்கையாளராக பதவி ஏற்றார். இவருக்கு முன், 10 பேர் இந்த பதவியை வகித்துள்ளனர்.அரசுக்கு சாதகமாக இவர்கள் போனதால், பல பல ஊழல்கள் வெளிச் சத்திற்கு வராமல் போய்விட்டன. வினோத் ராய் பதவி ஏற்ற பின், பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.தற்போது கிட்டத்தட்ட, 59 அறிக்கைகளை மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து வருகிறது. தலைமைத் தணிக்கையாளர் தந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு, விவரம் பெற்று, மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து, ஓர் இறுதி அறிக்கை தரும் முன் லோக்சபா, ஆயுள் காலம் முடிந்து விடும். மத்திய கணக்குக் குழுவின் தலைவராக உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், ஆளும் கட்சியாக மாறிவிடுவர்.
தற்போது, இந்தியத் தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராயின் பதவி காலம், மே. 22, 2014 வரை உள்ளது. அதற்குள் எத்தனை ஊழலை இவர் அம்பலப்படுத்துவார் என்று, ஆளும் கட்சி அரண்டு போய் உள்ளது.

எல்லாத் துறைகளையும் போன்று, நீதித் துறையிலும் ஊழல் வேர் விட்டுள்ளது. நீதித் துறையையும் ஆளும் கட்சி ஆட்டிப் படைக்க முடியும் என்பதை, ஆள் கொணர்வு வழக்கு, 1976ல் உணர்த்தியது. இந்திரா கொண்டு வந்த மிசா சட்டத்தில், "சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்க, அரசுக்கு அதிகாரம் உண்டு' என, நான்கு நீதிபதிகள் கூறினர். தலைமை நீதிபதி ஏ.என்.ராய், பி.என்.பகவதி, யு.வி.சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகியோர் தான் அவர்கள்.ஆனால், "மிசா' சட்டம் செல்லாது; சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையில் அரசு தலையிட முடியாது' என்று, நீதிபதி எச்.ஆர்.கன்னா மட்டும் கூறினார். இந்திராவின், "மிசா' சட்டத்திற்கு எதிராகத் தனிப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மூப்பின் அடிப்படையில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரவேண்டிய அவருக்கு வாய்ப்பு தராமல், ஜன., 29, 1977ல், எம்.எச்.பெக் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

எனவே, தன் பதவியை கன்னா, ராஜினாமா செய்தார். அவர் தலைமை நீதிபதியாக இருந்திருந்தால், ஜூலை.2, 1977 வரை, பதவியில் இருந்து இருப்பார். "மிசா' சட்டத்தை எதிர்த்த எச்.ஆர்.கன்னா தலைமை நீதிபதியாக வருவதை, இந்திரா விரும்பவில்லை.இந்திராவுக்கு சாதகமான அடிப்படையில் தீர்ப்பு கூறிய பிற நீதிபதிகள் எல்லாம், இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துச் சென்றனர்.

இந்திய ஜனாதிபதிக்கு இணையாக உள்ள தலைமை நீதிபதி, தன் மருமகன்கள் பெயரில் சொத்துகளை குவித்தபின், இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை அலங்கரிப்பது என்பது, நம் நாட்டில் மட்டுமே முடியும்.மதுரையில் வெடிகளை வைத்து, "பல்லவ மன்னன்' போல கல்லை எல்லாம் குடைந்து விட்டனர். ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல், இது நடந்து இருக்குமா? மலையை காணவில்லை எனவும், குளத்தை காணவில்லை எனவும் எப்.ஐ.ஆர்., போட வேண்டிய நிலை."எல்லா வளமும் போய் சேரும் வெளிநாட்டில்... நாம் கையை நக்க வேண்டும் உள்நாட்டில்...'
இ-மெயில்: asussusi@gmail.com

எசு.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்  -தினமலர்


புதன், 8 டிசம்பர், 2010

குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற பிரசாந்த் பூசணுக்கு மீண்டும் வாய்ப்பு

நீதித்துறையிலும் ஊழல் இருப்பது உண்மைதான். எனவே  பிரசாந்துபூசன்   துணிந்து வழக்கை எதிர் கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற பிரசாந்த் பூஷணுக்கு மீண்டும் வாய்ப்பு
First Published : 08 Dec 2010 02:11:26 AM IST


புது தில்லி, டிச. 7: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் பிரபல் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். இதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் அல்டமாஸ் கபீர், சிரியாக் ஜோசப், எல்.எல். தத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், செவ்வாய்க்கிழமை கூறுகையில் "தான் கூறிய குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கோரினால் பூஷண் மீது தொடரப்பட்ட வழக்கு தானாகவே முடிவுக்கு வந்து விடும். அத்துடன் பிரச்னை முடிந்து விடும்' என்று கூறியது.  முன்னதாக இப்போதைய தலைமை நீதிபதி கபாடியா மீதும் முன்னாள் தலைமை நீதிபதிகள் 5 பேர் மீதும் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 13 நவம்பர், 2010

ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!


லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்படும் செய்திகள் தினமும் வருகின்றன. ஆனால், ஊழல் புரிந்ததாகப் புகார் கூறப்படுபவர்கள் யாரும் கைதுசெய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை. லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா?' என்றான் பக்கத்து வீட்டுச் சிறுவன்.  பதில் தெரியாமல் விழித்ததைப் பார்த்து, "சிறிய அளவில் வாங்கினால் அது லஞ்சம், அதுவே பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் சுருட்டினால், ஊழல். அப்படித்தானே' என அவனே பதிலும் சொன்னான். அது சரியாகவேபட்டது.   பத்திரிகைகளில் "லஞ்சப் புகார்-இன்றைய கைது நிலவரம்' எனத் தலைப்பிட்டே செய்தி வெளியிடலாம் என்ற அளவுக்கு அந்தப் புகாரில் கைதாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.   பயணப்படி, மருத்துவப்படி, பஞ்சப்படி எனப் பலவகையாக அரசு படியளந்த போதிலும் தாங்கள் சொன்னபடி கையில் லஞ்சம் வைத்தால்தான் பொதுமக்களின் பணிகளை நிறைவேற்றுவது என இவர்கள் தீர்மானித்துக் கொண்டனரோ என நினைக்க வைக்கிறது. இத்தகைய அதிகாரிகளால், நேர்மையான முறையில் பணியாற்றும் பிற அதிகாரிகளுக்கும் தலைக்குனிவுதான்.  மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு நண்பர் ஒருவர் கடிதம் எழுதினார்.அதில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்தியைக் குறிப்பிட்டு அவரை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாராம். ராஜாஜி எழுதிய பதில் கடிதத்திலோ, அந்த ஆட்சியரை தன்னால் மாற்ற இயலாது என எழுதியிருந்தாராம். படித்த நண்பருக்கு அதிர்ச்சி. ஆனால் கடிதத்தில் இருந்த வரிகளைத் தொடர்ந்து படித்தபோது நண்பருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் மேலிட்டன.   ""ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு மாற்ற விரும்பில்லை. அந்த ஆட்சியர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரங்கள் அனுப்புங்கள். அவரை சிறைக்கே அனுப்புவோம்'' என எழுதப்பட்டிருந்ததாம்.  இன்றைக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினால்கூட அவற்றைக் கண்டு சம்பந்தப்பட்டோர் அதிர்ச்சிக்குள்ளாவதில்லை. ஆதாரம் கிடக்கட்டும், ஊழலில் கிடைத்த தொகை சேதாரம் இல்லாமல் சேருமிடம் சேர்ந்ததா என்பதும், அதன் மூலம் தங்களின் பொருளாதாராமும், தங்கள் கட்சிகளின் பொருளாதாரமும் மேம்பட்டனவா என்பதும் மட்டுமே அவர்களின் கவலை.  லஞ்சமோ, ஊழலோ இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியவைதான். அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என லஞ்சம் வாங்குவோர் கையும் லஞ்சமுமாகக் கைது செய்யப்பட்டு விடுகின்றனர். பின்னர் அவர்கள் நிலையும், அவர்கள் மீதான வழக்குகளின் நிலைமையும் என்னாகிறது என்பது தனிக்கதை.  ஆனால், கோடிகளில் ஊழல் புரிந்ததாகக் கூறப்படுபவர்கள் மீதோ நடவடிக்கை என்பது சிறிதும் இல்லை என்றே தோன்றுகிறது. மாறாக அவர்களுக்கு எப்போதும் ராஜமரியாதைதான்.அத்தகைய ஊழல் பேர்வழிகள் பதவி வகிக்கும் அரசோ, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமையோ அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் "ஊழலை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்' என்பதுபோன்ற அறிக்கைகள் விடுவதும் வாடிக்கையான செய்திகளாகிவிட்டன.  அண்மைக்கால ஊழல் தொகைகள் சாமானிய மக்களை "ஆ' என வாய் பிளக்கவைக்கும் விதத்தில் உள்ளன. லட்சம், கோடிகளில் என்பதையெல்லாம் தாண்டி ஊழல் இன்று லட்சம் கோடிகளில் நடைபெறுகிறது. நடக்கும் ஊழல் கோடிகளில்; நடவடிக்கை மட்டும் பூஜ்யம்.  "எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்ற பழமொழியை மாற்றி "இருக்கும் பதவியில் சுருட்டியது வரை லாபம்" எனச் சொல்லலாம் என்ற அளவுக்கு நாட்டில் பல துறைகளிலும் தற்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது.   விமானத்தைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படுகிறது. ஊழலும் ஒருவகையில் கடத்தல்தான். உண்ண ஒருபிடிச் சோறும், உடுக்க ஒரு முழத் துணியும் இல்லாத லட்சக்கணக்கானோர் வாழும் நாட்டில், ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதியை, பொதுமக்களின் சொத்துகளைக் "கடத்துவதே' ஊழல். அதில் கிடைத்தத் தொகையை தங்கள் வளைகளுக்குள் சேர்த்துவைத்துக் கொள்ளும் ஊழல் பெருச்சாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அவசியம்.  ராஜிநாமாக்கள் கண்துடைப்பாகவும், விசாரணைகள் காலம் கடத்த மட்டுமே உதவுவதாகவும் ஆகிவிடக் கூடாது. முறையான விசாரணை, பாரபட்சமற்ற அணுகுமுறை, அரசியல் தலையீடின்மை போன்றவற்றால் நீதி விரைவில் நிலைநாட்டப்படுவதே முக்கியம். கிராமப்புறத்தில் அதிகம் படிக்காதோர் ஜீரோவை முட்டை என்பர். இன்றைக்கு நாட்டில் நடக்கும் ஊழல்களில் உள்ள தொகைகளுக்கு எத்தனை முட்டை என்பதைவிடவும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ வாரத்துக்கு ஐந்து முட்டை கிடைத்ததா என்பதே சராசரி குடிமகனின் கவலையாக இருக்கிறது. வாய்ப்பிருந்தால் இரண்டு முட்டைகூட கிடைத்தாலும் அவனுக்கு அந்த அளவில் மகிழ்ச்சிதான்!  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்றார் அய்யன் திருவள்ளுவர். இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார்: "ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!'
கருத்துகள்

எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! என்பதே அரசியல்வாதிகளின், அரசுகளின், அதிகாரிகளின் கொள்கையாக மாறிவிட்டபிறகு ஊழலுக்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்பது மிகப் பொருத்தமாக உள்ளது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

சனி, 4 ஜூலை, 2009

ஆலோசனை வழங்குங்கள்:
துணை முதல்வர்
தினமணி


சென்னை, ஜூலை 3: தமிழக அரசில் தம்மிடம் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதைத் திறம்படச் செய்ய மக்களின் உதவியையும், ஆலோசனைகளையும் தாம் நாடுவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக தனது பிரத்யேக இணையதளத்தில் (www.mkstalin.net) இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: ""துணை முதல்வராகப் பொறுப்பேற்று இருப்பதை தமிழினத்துக்குப் பணியாற்றக் கிடைத்த கூடுதல் வாய்ப்பாக நினைக்கிறேன். வேகமாக வளர்ந்து வரும் உலகில் தொழில் வளர்ச்சி முக்கியமானது. முதல்வர் கருணாநிதியின் வழியில் தொழில் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த வேண்டும் என்பதை கடமையாகக் கருதுகிறேன். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழில் உற்பத்தி பெருகுவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். தமிழக முதல்வர் கருணாநிதி எனக்கு (மு.க.ஸ்டாலின்) கூடுதல் பொறுப்பினை அளித்திருக்கிறார். இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்திட மக்களின் உதவியை நாடுகிறேன். அவர்களது பங்கேற்பை வரவேற்கிறேன். இளைஞர்களும், மகளிரும், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை வழங்க வேண்டும்'' என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து திறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மையைப் பெற 'செவி கைப்ப பிறர் சொல் கேட்கும்' பண்பு பாராட்டிற்குரியது. நல்லன செய்யும் பொழுது அல்லனவற்றையும் களைய வேண்டும். உற்றார் உறவினர் என்று இல்லாது அல்லனவற்றைக் களையும் துணிவும் மனமும் இருப்பின் நான் முதல்வரின் துறையிலேயே நடைபெற்ற சில ஊழல்களைக் கூறுகிறேன். நடவடிக்கை எடுப்பாரா? தம் கடடுரையி்ன் பின்னூட்டங்களை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதாயின் எழுச்சியுள்ள துணைமுதல்வருக்குப் பாராட்டுகள்! அவ்வாறு எதுவும் நிகழவில்லை எனில், 'ஒப்புக்குச் சப்பாணியாக' இடம் பெற்றுள்ள கட்டுரை பற்றி நாம் ஒன்றும் மகிழத் தேவையில்லை.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thilruvalluvan
7/4/2009 3:03:00 AM