கடலூரில் இடைவிடாத கொட்டும் மழை!
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து
பெய்துவரும் கனமழையால் மாவட்ட மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
நவ.9 பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்டு, 66
உயிர்களை பலிவாங்கியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக மழை சற்று
விட்டு விட்டுப் பெய்த நிலையில் துயரீட்டு உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச்
சென்றடைந்தன.
இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாகப்
பெய்துவரும் கனமழையால் மாவட்டம் மீண்டும் தத்தளிக்கிறது. கெடிலம்,
தென்பெண்ணையாறு, பரவானாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.
இதனால் கரையோர ஊர்களின் மக்கள் பெரும்
தவிப்புக்குள்ளாயினர். இதேபோன்று மாவட்டத்தின் உட் பகுதிகளில் வசிப்போரும்
கதியில் இருந்தவாறு சொல்ல முடியாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். கடலூர்
நகரப் பகுதிகளான கோண்டூர் சுப்ராயலு நகர், குமளங்குப்பம், சதாசிவம்நகர்,
பீமாநகர், வரதராசன் நகர் முதலான பகுதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாயின.
தற்போது பெய்த மழையினால் மேலும் 13 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடலூர் இன்று சராசரி மழையளவு 63 கீழ்க்கோல்(மி.மீ.) அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 10 சிறுகோல்(செ.மீ.) மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் ஆற்றங்கரையோரப் பகுதிகள்,
நகரப் பகுதிகளில் மட்டுமே துயரீட்டுப் பணிகள் நடைபெறுவதாகவும்,
மாவட்டத்தின் உட்புறப் பகுதிகளான பண்ருட்டி,சிதம்பரம்,
குறிஞ்சிப்பாடி,நெய்வேலி சுற்று வட்டார ஊர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள
நிலையில் அங்கு துயரீட்டுப்பணிகளே நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.
மழையால் சேதமடைந்த சாலைகள் இடைக்காலமாகச்
சீரமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மழையில் மிக மோசமான நிலைக்கு
மாறியுள்ளன. இதுவரை 210 புதுக்கல்(கி.மீ) தேசிய நெடுஞ்சாலையும், 485
புதுக்கல் மாநில நெடுஞ்சாலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்
ஊர்திகள் ஆங்காங்கே பழுதாகி நிற்கின்றன.. அவற்றைச் சரிசெய்யக்
கம்மியர்களும் கிடைக்காத பரிதாப நிலை நிலவுகிறது.
இதனிடையே கனமழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வெளி
மாவட்டங்களிலிருந்து அலுவலர்கள், பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாக
மாவட்ட நிருவாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள தேசிய
நெடுஞ்சாலையில் போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள தற்போது உள்ள
அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒரு கோட்டப்
பொறியாளர், 3 துணைக்கோட்டப் பொறியாளர்கள், 3 உதவி பொறியாளர்கள், திருப்பூர்
மாநகராட்சியிலிருந்து ஒரு செயற்பொறியாளர், 1 உதவி செயற்பொறியாளர் ஆகியோர்
தலைமையில் 100 பணியாளர்கள் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மூழ்கடித்து விட்டதா சென்னை வெள்ளம்?
கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு
இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இலட்சக்கணக்கான வீடுகள் தண்ணீரில்
மூழ்கி உள்ளன. ஆயிரக் கணக்கான காணி(ஏக்கர்)ப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி
அழுகிக் கொண்டு இருக்கிறன.
சென்னைக்குப் பாதிப்பு என்றால் தமிழகமே
பாதிக்கப்பட்டு விட்டது என்பார்கள். சென்னையில் 24 மணி நேரமும் மின்சாரம்
இருந்தால் தமிழகம் முழுவதும் மின்சாரம் இருப்பதாக் கூறுவார்கள். ஆனால்
சென்னை தவிர மற்ற பகுதிகளில் 8 மணி நேரம்கூட மின்சாரம் இல்லாத நிலையில்
இருந்தது. அதைப்போலத்தான் சென்னை பாதிப்பு கடலூர் மாவட்ட சேதத்தை
மூழ்கடித்து விட்டது.
எனவேதான் சென்னையைப் பார்வையிட்ட
தலைமையமைச்சர் கடலூர் மாவட்ட வெள்ளச் சேதத்தை பார்வையிடவில்லை. சென்னைதான்
தமிழகமா? சென்னை மக்கள்தான் தமிழக மக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? எனக்கடலூர்
மாவட்ட சமூக ஆர்வலர்கள் முகநூலில் தங்கள் பதிவுகளை மேற்கொண்ட வண்ணம்
உள்ளனர்.
என்.முருகவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக