ஈழம்-நீறுபூத்த நெருப்பு : eezham_ashcoveredfire02

நீறு பூத்த நெருப்பு 2


  எட்டுக் கோடித் தமிழக மக்களின் முதல்வராயிற்றே – என்று கூடப் பாராமல், உடன்பிறந்தாள் செயலலிதா குறித்துப் பொறுக்கித்தனமாக நையாண்டிச் சித்திரம்(கார்ட்டூன்) போட்ட திவயினதான், இப்போது இப்படி எழுதுகிறது. எந்த வழக்கும் இல்லாமல் ௨௦(20) ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாதவர்கள் மீது ‘புலிகள்’ என முத்திரை குத்தப் பார்க்கிறது.
 சிறையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கற்பூரம் கொளுத்தி ஆணையிட்டு விட்டு, அரசியல் கைதிகள் போராடிய பிறகு உண்மையை ஒப்புக் கொள்கிறது இலங்கை என்கிற இழிவு. பௌத்த சிங்கள இலங்கையின் அழகு வேறெது? இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது புரிகிறதா இல்லையா?
  அமெரிக்காவைக் குறை சொல்ல முடியாது. அது ஒரு வணிகமையம். நண்பனாக யாரையும் வைத்துக் கொள்ளாது, கூட்டாளியாகத்தான் வைத்திருக்கும். இந்தியா அப்படியில்லை. ‘இலங்கைதான் என் நண்பன்’ என்று இனப்படுகொலை முடிந்த பிறகு கூட ஒற்றைக்காலில் நின்ற நாடு. “ஏண்டா இப்படியெல்லாம் பொய்புரட்டு(கோல்மால்) செய்கிறீர்கள்?” என நண்பனிடம் ஒரு சொல் கேட்க வேண்டாமா அது!
  சட்டப்படிச் செயல்படும் இலங்கைச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையே மறைக்க முயன்ற இலங்கை அரசு, சட்டப்புறம்பான தடுப்பு முகாம்களில் ஆயிரமாயிரம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைத் தானாகவே ஒப்புக்கொள்ளப் போகிறதா என்ன? தானே பழுக்காத கனியைத் தடியால் அடித்துத்தானே பழுக்க வைக்க வேண்டும்… அந்த வேலையைத்தான் செய்திருக்கிறது காணாது போனோர் தொடர்பான ஐ.நா உசாவல் குழு.
  ‘சட்டப்புறம்பான தடுப்பு முகாம்கள் இருக்கின்றன’ என்று முதலில் குற்றஞ்சாட்டியவர் வடமாகாணஅவை முதல்வர் விக்கினேசுவரன். அதற்குப் பிறகு, தமிழர் நலனில் அக்கறை கொண்ட கறுப்பின உடன்பிறந்தாள் இயாசுமின் சூகாவின் மனித உரிமை அமைப்பு ஒன்று, இலங்கையில் சட்டப்புறம்பான தடுப்பு முகாம்கள் இருப்பதைச் சான்றுடன் அம்பலப்படுத்தியது. மிகவும் கொடூரமான ஒரு சித்திரவதை முகாம் இருக்கிற இடத்தைக் கூட வரைபடம் மூலம் காட்டியிருந்தது சூகாவின் அமைப்பு. அப்போதெல்லாம், இதை மறுத்தது இலங்கை. இப்போது, ஐ.நா குழுவே அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. இதை மறுக்கப் போகிறார்களா, ஏற்கப் போகிறார்களா?
  இலங்கை அரசு நடத்துகிற சட்டப்புறம்பான தடுப்பு முகாம்கள் எத்தனை, அந்தச் சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களில் சித்திரவதைகளுக்குப் பலியானவர்கள் எவ்வளவு பேர், உயிரோடிருப்பவர்கள் எவ்வளவு பேர், அந்த முகாம்களுக்குப் பொறுப்பானவர்கள் யார், இலங்கை அரசின் உயர்மட்டத்தில் இவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பது யார் – என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள், பாதிக்கப்பட்ட எமது மக்கள்.
  விக்கினேசுவரனிடம் இதுபற்றிப் பேசியபோது எமது உறவுகள் சிந்திய கண்ணீரின் ஈரம் காய்வதற்கு முன்பே, ஒவ்வோர் உண்மையாக அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. “உண்மைகளை அறியாமல் எப்படி நல்லிணக்கம் என்பது இயலும்”, என்று விக்கினேசுவரன் எழுப்பிய கேள்வி, அந்தக் கண்ணீரால்தானே எழுதப்பட்டது!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
– என்கிறான் வள்ளுவன்.
  வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி நசுக்கப்பட்ட எம் இனத்தின் கண்ணீர்தான், இலங்கையின் இறைவனைப்போல் அரியணையில் அமர்ந்திருந்த மகிந்த எனும் விலங்கைக் குப்பைக்கூடையில் தூக்கியெறிந்தது. இனப்படுகொலை ஒன்றைச் செய்து முடித்ததுடன், அதை மூடி மறைக்கவும் முயன்ற குற்றத்துக்கு அது மட்டுமே தண்டனையில்லை. இன்னும் மிச்சம் இருக்கிறது.
  மகிந்தன் செய்த அதே குற்றத்தைத்தான் செய்கிறார்கள் இரணிலும் மைத்திரியும்! எந்த இனப்படுகொலையை மூடி மறைக்க முடியாதோ, அந்த இனப்படுகொலையை மூடி மறைக்க முயல்கிறார்கள். இதற்கான விலையைக் கண்டிப்பாக அவர்கள் தர வேண்டியிருக்கும்.
  பன்னாட்டுக் குமுகாயத்தின்(சமுதாயத்தின்) கண்ணில் மண்ணைத் தூவி, சித்திரவதை முகாம்களை நடத்திக் கொண்டிருக்கின்றன, பௌத்த சிங்கள விலங்குகள். பாலியல் வன்முறைகள் மூலம் எமது இனத்தைப் பழி வாங்க முய ல்கின்றன. ‘பெண்கள் மீது மட்டுமல்ல, ஆண்கள் மீதும்….’ என்கிற சொற்கள், எம் இனத்துக்கு இழைக்கப்படுகிற கொடுமையின் கடுமையை விலாவாரியாக விவரிக்கின்றன.
  இவ்வளவுக்குப் பிறகும் – ‘நீயே உன்னை உசாவிக் கொள்ளலாம்’ என அந்த விலங்குகளிடம் சொல்கிற உலகத்தைப் பார்க்கும்போது ‘தன்னிரக்கம்’ வரவில்லை நமக்கு! அப்படிச் சொல்கிற அவர்களைப் பார்த்துத்தான் இரக்கப்படுகிறோம். தனக்கான நீதியை உலகம் வழங்கத் தவறிய நிலையில், அந்த நீதியைத் தனக்குத் தானே தேடிக் கொண்ட இனம் தமிழினம். அந்த வரலாறுதான் திரும்ப வேண்டுமென்கிறார்களா? உலகம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
  ஐரோப்பிய ஒன்றியம், ‘வன்கொடுமைத் தடைச் சட்டத்தை விலக்கு’ என்கிறது. ஐ.நா குழு வந்து, சித்திரவதை முகாம் இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. இவ்வளவும் சொல்லிவிட்டு, ‘நீயே உனக்கு நீதியரசர்’ என்று சொல்வது, ஒழுங்கீனமா இல்லையா? இலங்கை சித்திரவதை முகாமை நடத்துமா, நீதி உசாவலை நடத்துமா? அல்லது இரண்டையும் சேர்த்தே நடத்துமா?
  “நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன், நீ அழுவதைப் போல அழு” என இலங்கையுடன் சொல்லி வைத்துவிட்டு விளையாடுகிற நையாண்டிக்கூத்து தொடர்ந்ததென்றால், ‘நச்சுப் பெருச்சாளியை நாமே நாலு மிதி மிதிக்க வேண்டியதுதான்’, என்கிற எண்ணம்தான் பாதிக்கப்பட்ட இனத்துக்கு எழும். அதன் அழுகையிலிருந்துதான், அடுத்த கட்டம் தொடங்கும். பன்னாட்டுக் குமுகாயத்துக்கு இது விளங்குகிறதோ இல்லையோ – இந்தியாவுக்கு இது விளங்குகிறதா இல்லையா?

ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு

புகழேந்தி தங்கராசு+ூ pughazhendhi-thangarasu+
— தமிழக அரசியல் – கார்த்திகை 6, 2046 / 22.11.2015
தரவு : மடிப்பாக்கம் அறிவொளி