இரத்த ஈழம் 02 : eezham_written_in_blood02தலைப்பு : இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம்ூ eezham_written_in_blood

1

 பாரீசு கொடுமையைக் குறிப்பிடும்போது, ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘மென்மையான இலக்கு’ (SOFT TARGET) என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றைக் கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதைத்தலைவனை வழிக்குக் கொண்டு வர, அவன் குழந்தையைக் கடத்துகிற கயவனை(வில்லனை) எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு மென்மையான இலக்கு என்கிற சொல் புதிதன்று! அதுதான் இது!
  பிரான்சுப் படுகொலைகளைத் தொடர்ந்து, கயவன் யார், கதைத்தலைவன் யார் எனவெல்லாம் அக்பர் சாலை ஏதிலியர்கள்(அகதிகள்) முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், தமிழகத்திலிருந்து ஒலிக்கிற ஒரு குரல், மானுடத்தை நேசிக்கிற தமிழர்களின் பார்வையை ஈர்ப்பதாக இருக்கிறது. அது, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சவாகிருல்லாவின் குரல்.
  “பாரீசில் நடந்திருப்பது காட்டுமிராண்டித்தனமான வன்கொடுமைத் (பயங்கரவாதத்) தாக்குதல். எந்த வகையிலும் அதைச் சரி எனக் கூற முடியாது. ஏதுமறியா மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இ.அ.(IS) இயக்கம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘ஏதுமறியாத ஒருவனைக் கொல்வது ஒட்டுமொத்தக் குமுகாயத்தையும் (சமுதாயத்தையும்) கொல்வதற்கு ஒப்பானது’ என்கிற திருக்குர்-ஆன் வரிகளை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் சவாகிருல்லா.
  இங்கிருந்து ௨௬(26)ஆவது கல்(மைல்) தொலைவில் ஏதுமறியாத் தமிழ் மக்களைச் சிங்களப் படை விரட்டி விரட்டிக் கொன்றபோது, அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை உண்மையாகவும் வன்மையாகவும் கண்டித்தவர்கள் மனிதநேயக் கட்சியினரும் முசுலிம் முன்னேற்றக் கழகத்தினரும்!
  ஈழத்தில், சிங்களப் படையின் வன்கொடுமைத் (பயங்கரவாதத்) தாக்குதலுக்கு இரையானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களும் கிறித்தவர்களும். வாய் கிழியப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிற இராம.கோபாலன்களும் எச்.இராசாக்களும் அந்த மக்களுக்காகப் பேச மறுத்தபோது, எம் உறவுகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள் சவாகிருல்லாக்களும் தமீமுன் அன்சாரிகளும்! அந்த அடிப்படையில், எந்த வன்கொடுமைத் (பயங்கரவாதத்) தாக்குதல் குறித்தும் கருத்துச் சொல்வதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன, பேராசிரியர் சவாகிருல்லாவுக்கு!
  தன் நாட்டின் ஏதுமறியா குடிமக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்று குவித்த இலங்கைக்கும், அப்படிக் கொல்ல எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து இழிவான வரலாற்றைப் படைத்த இந்தியாவுக்கும் பாரீசு சம்பவம் குறித்துக் கருத்துச் சொல்வதற்கான தகுதி .000000001 விழுக்காடு கூடக் கிடையாது.
  மருத்துவமனைகள் மீது குண்டுவீசி நோயாளிகளையும், பள்ளிக்கூடங்களைத் தாக்கி மழலைகளையும், தேவாலயங்கள்-கோயில்களைத் தாக்கி இறையன்பர்களையும் கொன்று குவித்த காட்டுமிராண்டிகள் இவர்கள்.
  அந்தக் கொடூரமான தாக்குதலிலிருந்து எமது குழந்தைச் செல்வங்களைக் காப்பாற்ற, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தின் அருகிலும் பதுங்கு குழிகளை அமைத்த வீரர்கள், தமிழர் தாயகத்தின் மாவீரர்கள். அந்த இனப்படுகொலைக்கு ஆணையிட்ட கையோடு, தமது பாதுகாப்புக்காகக் கொழும்பு நகரின் நட்ட நடுவில் சொகுசுப் பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருந்த கோழைகள், கோத்தபாயாவும் மகிந்த இராசபக்சவும்! அந்தக் கோழைகளைத்தான் நடுவீட்டில் வைத்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது எமது இந்தியா.
  பாரீசு நிகழ்வு பற்றி வாயைத் திறக்கத் தகுதியே இல்லாத இலங்கை, சாவுவீடு என்கிற வெட்கம் கூட இல்லாமல், ‘பந்தலிலே பாகற்காய், தொங்குதடி பார்த்துக்கோ’ என்கிற தன்னல ஒப்பாரியை உடனடியாகத் தொடங்கிவிட்டது. நூற்றைம்பதாயிரம் தமிழரின் குருதி வாயோரம் வழிந்துகொண்டேயிருக்க, அதைப் பற்றிக் கவலையேபடாமல், உலகுக்கே அறிவுரை கூறத் தொடங்கிவிட்டார்கள், அந்த பௌத்தப் பொறுக்கிகள். பாரீசு வன்கொடுமையைக் காட்டிலும் கொடூரமானது இவர்களது அறிவுரை.
  தலைகீழாகக் குத்துக்கரணம் அடிப்பது, பௌத்த சிங்கள அரசியலாளர்களுக்குக் கைவந்த கலை. (கூட்டமைப்பே அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறது இதை!) அதிலும் பழம் தின்று கொட்டை போட்டவர், மகிந்த இராசபக்ச அரசிலும் அமைச்சராக இருந்து, இரணில் – மைத்திரி அரசிலும் அமைச்சராக இருக்கிற நிமால் சிறிபால டி’சில்வா என்கிற பெரியமனிதர். இந்தச் சில்வாதான், பாரீசு நிகழ்வை அடுத்து ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் வகுப்பெடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
  “வன்கொடுமைத்தனத்தைத் (பயங்கரவாதத்தைத்) தடுக்க முடியாமல் தடுமாறி வருகிற பிரான்சு – அமெரிக்கா – பிரிட்டன் முதலான நாடுகள், வன்கொடுமைத் தனத்தை அடியோடு ஒழித்துவிட்ட இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படியொரு அருவினையைச் (சாதனையைச்) செய்த இலங்கை அரசுக்கு, அந்த நாடுகள் மாலையிட்டு மண்டியிட்டு மரியாதை செலுத்தவேண்டும்” என்கிற சில்வாவின் அறிவுரை, பன்னாட்டுக் குமுகத்துக்கும் கண்டிப்பாக எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.
  போகிற போக்கில் உலக நாடுகளின் முகத்தில் ஓங்கி மிதித்திருக்கிறார் சில்வா. உளறுவதென்று முடிவு செய்துவிட்ட பிறகு, அதற்கு வரையறை ஏதாவது இருக்கிறதா என்ன? கொஞ்சம் விட்டால், இதில் திருவாளர் சுவாமியையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது சில்வா! விடுதலைப் புலிகளுடனான மோதலின்போது, சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்று இலங்கைக்குப் பாடம் நடத்தியவர்கள்தாம், இப்போது வன்கொடுமைத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் – என்பது உளறுவாயர் சில்வாவின் மேலான கருத்து.
  இலங்கையில் நல்லாட்சியா நடத்தச் சொல்கிறீர்கள்? நல்லிணக்கத்தையா வலியுறுத்துகிறீர்கள்? வெளிநாட்டு நீதிபதியை வைத்தா விசாரிக்கச் சொல்கிறீர்கள்? – இவ்வளவு கேள்விகளும் இருக்கின்றன சில்வாவின் அறிக்கையில்!
  வைகோ – சவாகிருல்லா முதல், ஈழத் தமிழர் மக்களவை – நாடு கடந்த தமிழீழ அரசு வரை, ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் ஒருமித்த குரலில் பாரீசு நிகழ்வைக் கண்டிக்கிறோம். சொந்த அரசியலைத் திணிக்காமல், பிரெஞ்சு மக்களின் துயரிலும் கண்ணீரிலும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் பங்கேற்கிறோம். இலங்கையோ, இப்படியொரு துயரச் சூழலிலும், தன்னுடைய அருவெறுப்பு அரசியல் மூலம் தான் யார் என்பதை அம்பலப்படுத்துகிறது.
  மகிந்த இராசபக்சவின் ஊதுகுழலான சில்வா மட்டுமில்லை, பௌத்த சிங்கள ஊதுகுழல்கள் அனைத்தும், பாரீசு நிகழ்வைப் பயன்படுத்தி, இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற உசாவலைக் குழிதோண்டிப் புதைக்க முயலுகின்றன. வன்கொடுமைத்தனத்துக்கு எதிரான போரில் என்ன நடந்தது என்பவற்றையெல்லாம் தோண்டித் துருவிப் பார்க்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அப்படிப் பார்த்தால் எப்படி வன்கொடுமைத்தனத்தை முறியடிக்க முடியும் – என்பது அவர்களது கேள்வி. மைத்திரி – இரணிலின் பின்னணி இல்லாமலா இவையெல்லாம் நடக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?
  எதை வன்கொடுமைத்தனத்துக்கு எதிரான தாக்குதல் என்கிறார்கள் இவர்கள்? பாரீசு தாக்குதல் எவ்வளவு கோழைத்தனமானதோ, எவ்வளவு கொடுமையானதோ,அதே அளவுக்கு’க் கொடுமையானது – கோழைத்தனமானது – வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நானூறாயிரம் (நான்கு இலட்சம்) ஏதுமறியாத் தமிழ் உறவுகள் மீது இலங்கைப் படை நடத்திய கொலைவெறித் தாக்குதல். அதுதான் அப்பட்டமான வன்கொடுமை.
  எமது ஈழ உறவுகளின் முறையான நேர்மையான மனிதநேய மனநிலையை முழுமையாக அறிந்தவன் என்கிற உரிமையுடன்தான் ‘அதே அளவுக்கு’ எனக் குறிப்பிடுகிறேனே தவிர, அஃது எனது சொந்தச் சொல்லன்று!
  பாரீசு தாக்குதலில் கொல்லப்பட்ட ஏதுமறியா மக்களின் எண்ணிக்கைக்கும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பேயில்லை. இதைப் போலப் பல நூறு மடங்கிருக்கும் அது!
  ஆனால் இரண்டிலுமே, கொல்லப்பட்டவர்கள்-ஏதுமறியாதவர்கள்…. ஆயுதம் இல்லாதவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இரண்டு படுகொலைகளும் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டன. பாரீசு படுகொலைகள் வன்கொடுமை யாளர்களால் செய்யப்பட்டன என்பதும், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஓர் அரசாலேயே செய்யப்பட்டன என்பதும்தான் வேறுபாடேயன்றி, வேறென்ன வேறுபாடு இருக்கிறது? இ.அ.(IS) வன்கொடுமையும், சிங்கள அரசு வன்கொடுமையும் வேறு வேறா என்ன!
ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு
புகழேந்தி தங்கராசு : pughazhendhi-thangarasu
— தமிழக அரசியல் – கார்த்திகை 3, 2046 / 19.11.2015.
தரவு :மடிப்பாக்கம் அறிவொளி