villivakkam_vellam-floodvijayakanth

அரசியல் ஆதாயம் தேடாமல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாக உதவுக:

அரசுக்கு விசயகாந்து வேண்டுகோள்!

  அதிமுகவினர் துயர்துடைப்புப்பணி செய்வதுபோன்று படம்காட்டுவதை நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதாபிமானத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று தேமுதிக தலைவர் விசயகாந்து கூறியுள்ளார்.
  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் கோரதாண்டவத்தால், சென்னை, புறநகர்ப் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வெள்ளக்காடாக மிதக்கின்ற நிலையில், தற்போதைய முதன்மைத் தேவை மழைநீரை வடியச் செய்வதும், செய்வதறியாது திகைத்து நிற்கின்ற பொதுமக்களுக்குக் குடிநீர், உணவு, உடை வழங்கவேண்டியதுமாகும்.
  தேமுதிக முதலான பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் துயரீட்டுப் பணிகளைத் தங்களால் முடிந்த அளவிற்குச் செய்துவருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இன்றிப், பல்வேறு கெடுபிடிகள் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்குக்கூட வழியில்லாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். துயரீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரோ, தொண்டு நிறுவனமோ யாரும் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்தி கொள்ளவில்லை. மனிதநேய அடிப்படையில் அனைத்தையும் செய்துவருகிறார்கள்.
  ஆனால், வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் நான் வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டு வரும்போது, அதிமுகவை சேர்ந்தவர்கள் கும்பலாக நின்றுகொண்டு சென்னை மாநகராட்சியின் அகழ்பொறி, குப்பை அள்ளும் சுமையூர்திகளை வைத்துக்கொண்டு, செயலலிதாவின் படத்துடன்கூடியபதாகை, அதிமுக கட்சிக்கொடியுடன் அப்பகுதியில் துயரீட்டுப் பணிகளைப் மேற்கொள்வதுபோல் பாவனை காட்டிக்கொண்டு, ஊடகங்களை வரவழைத்துக் காட்சிப்பதிவைச் செய்துகொண்டிருந்தார்கள். அதிமுகவினரின் பாணியில் சொல்லவேண்டும் என்றால் வெள்ளத்துயரீட்டுப் பணியில் அரசியல் ஆதாயம் தேடிப் படம்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
  தலைமைச்செயலகத்திலிருந்து தமிழக அரசின் பல்வேறு துறைச்செயலாளர்கள் இன்று தொலைக்காட்சியில் அதிமுக அரசைக் காப்பாற்றும் விதமாகப் பல்வேறு கருத்துகளை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். செயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசு துறையின் செயலாளர்கள், ஒரே சமயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாபெரும் விந்தை நிகழ்ந்துள்ளது.
  நல்வாழ்வுத்துறை செயலாளர் கூறும்போது சென்னை மியாட்டு மருத்துவமனையில் அவசரமருத்துவம் பெற்ற 18பேர் பல்வேறு காரணங்களால் இறந்துபோனார்கள் எனக் கூறியுள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செயற்கைமூச்சு அளிக்க இயலாமல், அனைவரும் இறந்துள்ளார்கள் என அவர்களின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டும்போது, தமிழக முதலமைச்சர் செயலலிதாவைக் காப்பாற்றுவதற்காக நல்வாழ்வுத்துறைச் செயலர் இதுபோன்ற தவறான தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்கிறார். பொறுப்புள்ள அதிகாரியான அவரே இதுபோன்று கூறலாமா?
  அவர் மட்டுமல்ல பிற அரசுத்துறை செயலாளர்களும், தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு ஆதரவாகவே பேட்டியளித்தனர். இதையெல்லாம் தமிழக மக்கள் நம்புவதற்கு ஆயத்தமாக இல்லை. இதுநாள் வரையிலும் தமிழக முதல்வர் செயலலிதா மற்றும் அமைச்சர்கள் தவிர வேறு யாரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து கூறியதில்லை.
  ஆனால், மக்களின் கோபத்திற்கு அதிமுக அரசு ஆளாகியுள்ள இந்த நேரத்தில், அமைச்சர்கள் அருகில் அமர்ந்துகொண்டு துறையின் செயலாளர்களைப் பேட்டியளிக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் என்ன?எல்லாவற்றிற்கும் நான், நான் என உரிமை கொண்டாடி விடையிறுக்கும் தமிழக முதல்வர் செயலலிதாவும், பிற அமைச்சர்களும் எதுவும் கூறியிருக்கலாம் அல்லவா?
  அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் இதைப்பார்த்த பிறகாவது புரிந்துகொள்ளுங்கள். சிக்கல் என்று வரும்போது அதிகாரிகள் மீது பழியைச் சுமத்தும், அதிமுகவின் போக்கை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதிமுகவினர் துயரீட்டுப்பணி செய்வதுபோன்று படம் காட்டுவதை(சீன்போடுவதை) நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதநேயத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.
  சென்னை மாநகரத்தலைவரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்த்து மக்கள் கேட்கும் ஒரே கேள்வி, “உங்கள் ஆறுதல் எங்களுக்கு தேவை இல்லை, செயலலிதாஉகப்பூர்தியில் (எலிகாப்டரில்) இருந்து பார்ப்பதால் எங்கள் சிக்கல் தீர்ந்துவிடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உணவு கொடுங்கள், தேவையான உதவிகளைச் செய்யுங்கள்” என்றுதான் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள்.
  இதற்கு மாறாக நேரடியாகச் சென்று உதவுவதுபோல், அதிமுகவினர் பதாகைகள், துண்டறிக்கைகள் மூலம் விளம்பரப்படுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களின் வயிற்று எரிச்சலை இன்னும் அதிகமாக்குமே தவிர, எந்த விதத்திலும் உதவாது. இதை கருத்தில் கொண்டு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று விசயகாந்து தெரிவித்துள்ளார்.