chennai corporation flood relief works

துயரீட்டுப்பணிகளில் சென்னை மாநகராட்சி

  சென்னையில் துப்புரவுப் பணிகளை தீவிரப்படுத்தக் கூடுதலாக 1,139 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
  சென்னை மாநகராட்சி இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
  சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், துப்புரவுப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
  சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1,070 துப்புரவுப் பணியாளர்கள் என மொத்தம் 1,139 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 52 குப்பையூர்திகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
  மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, நாள்தோறும் 1இலட்சத்து 32 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான உணவு, 252 அம்மா உணவகங்கள், 4 மையச் சமையல் கூடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  200 வகுதி(வார்டு)களிலும் 292 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் தேங்கிய பகுதிகளில்   வெளுப்புத்தூள் தூவப்பட்டு வருகிறது.
  இவ்வாறு  சென்‌னை மாகராட்சிச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  
.