ஒட்டிகள் ஒட்டுவதில் காட்டும் அக்கறையைப்
பொருள்கள் வழங்குவதில் காட்ட வேண்டும்!
கும்மிடிப்பூண்டியில் ஏறத்தாழ உரூ. 10 இலட்சம் மதிப்புள்ள துயரீட்டு உதவிகளை வழங்க வந்த தி.மு.க பொருளாளர் மு.க..தாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டத்திலுள்ள 61 ஊராட்சிகளைச் சேர்ந்த 81ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000பேர்களுக்கு மழை வெள்ளத்துயரீடுகள் வழங்கப்படும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தை சேர்ந்த 1000 பயனாளிகளுக்கு உரூபாய் 10 இலட்சம் மதிப்புள்ள 6 பேரெடை (டன்) அரிசி, 1000 புடைவைகள், 1000 போர்வைகள், உணவுப் பொருட்களை வழங்கிச்செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொருளாளர் மு.க.தாலின் தமிழக்த்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்குத் துயரீட்டுப் பொருள்கள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுகிறது. தமிழக அமைச்சர்கள் துயரீடு வழங்க மக்களைச் சந்திக்கவே தயங்குகின்றனர். ஏனெனில் மக்களின் கோபம் எங்கே இவர்கள் மீது திரும்பி விடுமோ என்ற அச்சம். அ.தி.மு.க அரசு துயரீட்டுப் பொருட்கள் மீது ஒட்டிகள் ஒட்டுவதில் காட்டும் அக்கறையைத் துயரீட்டுப் பொருள்கள் வழங்குவதில் காட்ட வேண்டும்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் மூலம் துயரீட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்தோடு அறிவாலயத்தின் மூலம் துயரீட்டுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. தமிழக அரசிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி, பல மாநில அரசுகள் தந்த நிதி, மற்றும் பலர் அளித்த நிதியை தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டுக் குழுவைக் கூட்டி ஆய்ந்து முறையாக உரிய பயனாளிகளுக்கு மொத்த நிதியும் போய்ச் சேர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக