நீறு பூத்த நெருப்பு 1
‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’
– என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக
நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள்
உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா
என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே
முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை
முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன் (David Cameroon).
அவரது அதிரடி யாழ்ப்பாண வருகையும், கொழும்புச் செய்தியாளர் சந்திப்பும்
இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட உச்சந்தலையடி மருத்துவங்கள். அதன் பிறகுதான்,
நவநீதம் பிள்ளையை நுழையவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது பௌத்தத் திமிர்
பிடித்த அந்தத் தீவு.
இப்போதும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மாற்றம் எதுவும் இலங்கையில் ஏற்பட்டு விடவில்லை. ‘ஐ.நா. குழுவையெல்லாம் உள்ளே விடவே முடியாது’ என்று
இராசபக்ச காலத்தில் அடம் பிடித்ததைப் போலவே, வெளிநாட்டு நீதியரசர்களையும்
வழக்கறிஞர்களையும் நுழைய விடவே முடியாது என மைத்திரிபாலா காலத்தில் அடம்
பிடித்துக் கொண்டிருக்கிறது அது.
பெரிய ஓசை இல்லாமல் ஐ.நா.
உசாவல்(விசாரணை) குழு ஒன்று இலங்கைக்கு வந்து திரும்பியிருப்பது ஒன்றுதான்,
அண்மைக் காலத்திய ஒரே தலையாய நிகழ்வு. வலுக்கட்டாயமாக, காணாமல்
போயிருப்போர் தொடர்பாக உசாவ (விசாரிக்க) வந்திருந்தது அந்தக் குழு. அதில்
மூன்று உறுப்பினர்கள். மூவரும் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் சித்திரவதைக்கூடம்
இருந்ததையும், ௨௦௧௦(2010)க்குப் பிறகு கூட அங்கே கொடிய சித்திரவதைகள்
இடம்பெற்றிருப்பதையும், அதன் தடயங்களாகச் சுவர்களில் குருதிக்கறையும்
கைக்கோடுகளும்(கைரேகைகளும்) இருப்பதையும் அந்த மூவர் குழு திகைப்புடன்
சுட்டிக் காட்டியிருக்கிறது. இதைப் போன்ற இன்னும் பல சித்திரவதை முகாம்கள்
இலங்கையில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று வெளிப்படையாகக்
குற்றஞ்சாட்டியிருக்கிறது அந்தக் குழு.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றை
நேரடியாகச் சந்தித்துப் பேசிய அந்தக் குழு, இந்தச் சந்திப்புகள் பற்றி
ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்க வேண்டா என்று அவர்களிடம் முன்கூட்டியே
தெரிவித்திருந்தது. தகவல் தெரிவித்தவர்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டு
விடக் கூடாதே என்கிற கவலைதான் அதற்குக் காரணம். அஃது இப்போதுதான் தெரிய
வந்திருக்கிறது. கொழும்பிலிருந்து புறப்படும் முன் அதை வேதனையோடு
குறிப்பிட்டிருக்கிறார்கள் அவர்கள்.
“எங்களைச் சந்தித்துப் பேசியவர்களில்
பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அந்தச் சான்றுரைஞர்களைப் (சாட்சிகளைப்)
பாதுகாக்க இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைக்
குமுகாயப் பகராளுநர்களும்(சிவில் சமூகப் பிரதிநிதிகளும்),
பாதிக்கப்பட்டோர், காணாமல் போனோர் ஆகியோரின் உறவினர்களும் எந்தவித அச்சமும்
அச்சுறுத்தலும் இல்லாமல் செயல்பட வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கு
நேர்மாறாக, அவர்கள் அச்சுறுத்தல்களையும் பாலியல் வன்முறைகளையும் சந்திக்க
வேண்டியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தக் கொடுமைகளில் புலனாய்வுப்
பிரிவினர் நேரடியாக இறங்குகின்றனர் என்பது பரவலான குற்றச்சாட்டு.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிற வன்கொடுமைத் (பயங்கரவாதத்) தடைச்
சட்டம் நீக்கப்படவேண்டும்”
இப்படியாகத் தொடர்கிறது அந்த மூவர் குழுவின் அறிக்கை.
மகிந்த இராசபக்சவின் கைத்தடிகள், இந்த
அறிக்கையால் மேலும் கடுப்பாகியிருக்கிறார்கள். பாரீசு வன்முறையைக்
கேடயமாகப் பயன்படுத்தி, போர்க்குற்ற உசாவல் முயற்சிக்கே முற்றுப்புள்ளி
வைக்க மேற்கொண்ட முயற்சியில் மண் விழுந்துவிடுமோ என்கிற அச்சம்
அவர்களுக்கு!
எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்ப்பது மாதிரி, இதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வேறு வந்து சேர்ந்திருக்கிறது. “வன்கொடுமைத்
தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், வட கிழக்கில் நின்று கொண்டிருக்கிற
படைகளைக் குறைக்க வேண்டும், படையினரின் வசம் இருக்கிற தமிழர் காணிகளை
(நிலங்களை) அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக உசாவலில் வெளிநாட்டு நீதியரசர்கள்
பங்கேற்றால்தான் அது நம்பகமானதாக இருக்கும்” என்றெல்லாம் வலியுறுத்தியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
பாரீசு வன்முறையைக் காட்டி, ஐரோப்பிய நாடுகளைக் கவிழ்க்கப் பார்த்தது இலங்கை. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலை இலங்கைக்கு ஏதுவாக இல்லை என்பது மட்டும்தான் ஆறுதலான செய்தி. உசாவலும் தேவை, வெளிநாட்டு நீதியரசர்களும் தேவை என்கிறது ஐரோப்பா.
“வெளிநாட்டு நீதியரசர்களை இலங்கைக்குள்
விடுவது, நாட்டுக்குச் செய்கிற பச்சையான இரண்டகம்….. அரசு அப்படியொரு
முடிவெடுத்தால் மக்கள் அதை உறுதியோடு எதிர்க்க வேண்டும்” என்கிற கைத்தடிகளின் குரல், இலங்கை முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
செனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த
உதவாக்கரைத் தீர்மானத்தில் இருக்கிற ஒரே உருப்படியான தொடர், ‘வெளிநாட்டு
நீதியரசர்கள் உசாவலில் பங்கேற்க வேண்டும்’ என்பதுதான்!
தானும் சேர்ந்தே அந்தத் தீர்மானத்தைக்
கொண்டு வருவதாக அத்தோபரில் பீற்றிய இலங்கை அதிபர் மைத்திரிபாலா,
“வெளிநாட்டு நீதியரசர்கள் – எனத் தீர்மானத்தில்
குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலங்கை அரசியல் சட்டம் அதை ஏற்காது. எனவே,
நடக்க இருப்பது முழுக்க முழுக்க உள்நாட்டு உசாவல்தான்….. நம்மை நாமேதாம்
உசாவிக் கொள்வோம்” எனக் கூசாமல் பேசுகிறார் இப்போது!
இப்படியொரு சூழலில், காணாது போனோர்
தொடர்பாக உசாவ (விசாரிக்க) வந்த ஐ.நா. குழு உறுப்பினர்கள் மன வேதனையுடன்
குறிப்பிட்டிருக்கிற உண்மைகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையும்
முதன்மை பெறுகின்றன.
‘விடுதலைப் புலிகளுக்கு உறுதுணையாக
இருந்தார்கள்’, என்கிற ஒரே காரணத்துக்காக, நீண்ட நெடுங்காலமாக உசாவலே
இல்லாமல் அரசியல் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருப்போர் விடுதலை பெற்றாக
வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சி ஈழத்தில் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.நா
குழுவின் வருகை மேலும் முதன்மை பெறுகிறது.
‘அப்படியெல்லாம் அரசியல் கைதிகள் யாரும் சிறைகளில் இல்லை’,
என்று தொடக்கத்தில் இலங்கை அரசு உறுதியாக மறுத்தது. அரசு சொல்வது பொய்
என்பதை அம்பலப்படுத்துகிற முறையில் பல்வேறு சிறைகளில் இருந்த தமிழ் அரசியல்
கைதிகள் ஒரே சமயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். அது,
திடீரென்று அறிவிக்கப்பட்ட போராட்டம் இல்லை; அறிவுக் கூர்மையுடன் கூடிய
அரசியல்தந்திரம். அந்தப் போராட்டத்தால்தான், சிறைகளில் அரசியல் கைதிகள்
இருக்கிற உண்மையை அரசு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத் தமிழர் தாயகத்தில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தின் வெற்றி, தமிழினம் நீறுபூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியதையடுத்து, இன்று ஒட்டுமொத்த உலகும் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ என இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கிறது.
“சிறையிலிருக்கிற இந்தப் புலிகள் போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள். உசாவல்களிலிருந்து இது தெரிய வந்திருக்கிறது. ‘போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டாக வேண்டும்’ என்பதுதான் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் இராத் உசெய்னின் நிலை. அதை மறந்துவிட்டு, உள்ளக உசாவல் பொறிமுறை உருவாக்கப்படும் முன்பே இந்தப் புலிச் செயற்பாட்டாளர்களை விடுவிப்பது சரியில்லை” என்று நைச்சியமாக நச்சூசி போடுகிறது சிங்கள நாளேடான – திவயின.
– ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு
— தமிழக அரசியல் – கார்த்திகை 6, 2046 / 22.11.2015
தரவு : மடிப்பாக்கம் அறிவொளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக