திங்கள், 24 ஆகஸ்ட், 2015

அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் -தீர்வுகளும் : கரிகால்வளவன்

andaman01andhaman02
 

அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் தீர்வுகளும் 

  அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம் தமிழினமாகும். 4 நூறாயிரம் மக்கள் தொகையில் 80,000 பேர் தமிழர்களாவர். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரு காலத்தில் வளர்பிறையாகக் கொடிகட்டிப் பறந்த நம் தமிழருக்கு இன்று தேய்பிறையாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழகத்தில்உள்ளது போல இங்குத் தமிழுணர்வு மங்கிப் போய்ச் சாதிய உணர்வு மேலோங்கியது.
வரலாறு படைத்தவன் தமிழன்
  தீவில் 1940-50களில் உண்மையான உள்ளூர்வாசிகள், சிறைக்கைதிகள், ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்டவர்கள் தீவைவிட்டுப் பூர்வீக மாநிலங்களுக்கும், பாக்கித்தானுக்கும் குடிபெயர்ந்தனர். அப்போது தீவில் வணிகம் செய்ய, தொழில் புரிய, கட்டடக் கட்டுமானப் பணிகள், சாலைகள் அமைக்க, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தமிழக மக்கள் தேவைப்பட்டனர். அன்று அமைக்கப்பட்ட சாலைகள், கட்டடங்கள், கிணறுகள், 1973-இல் கட்டப்பட்ட தண்ணிக்காரி அணைக்கட்டு யாவும் தமிழன் புகழை இன்றும் எடுத்தியம்புகின்றன. அப்போது தமிழகத்திலிருந்து கப்பலில் உணவுப் பொருட்கள் வரவில்லை என்றால் இங்கு உணவுப் பற்றாக்குறையே!
நம்மில் வேற்றுமையில் ஒற்றுமை தேவை!
  நம் தமிழர்களிடையே 1970-80களில் இருந்த ஒற்றுமை உணர்வு இன்றில்லை. ஏன்? பணம் பண்ணுவது ஒன்றே நோக்கமாகக் கருதியதன் விளைவாகத், தமிழ்க் குமுகாயத்தைப் பற்றிக் கவலைப்பட மறந்தனர். அன்று தமிழ்க் குமுகாயத்திற்குத் தமது வருவாயில் ஒரு பகுதியை வழங்கி இருந்தால் இக்கட்டான சூழ்நிலையில் தமிழன் துயரங்களைத் தானே சுமந்திருப்பான். இனி நம் தமிழ் மக்களில் உயரதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் அனைவரின் பட்டியலையும் தயாரிக்கவேண்டும். மாதத்தில்குறைந்தது இருமுறையோ, முடிந்தால் வாரத்தில் ஓரிருமுறையோ கூடிப் பேசவேண்டும். நம் மக்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தும், அதனைக் களைவது எப்படி என்பது குறித்தும் கலந்தாயவேண்டும். நம் மக்களுக்கு நிலம் விற்பது, வாங்குவது, கடை, வீடு வாடகைக்குக் கொடுப்பது, அரசு, தனியார் வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்தாய்வுகளை நடத்திஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு பொறுப்பையும் வழங்கித் திட்டமிட்டுச் செயல்பட்டால் நமது சிக்கல் தீரும்.

சிக்கலும் – தீர்வும்
  தற்போது தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏளனப்படுத்தப் படுகிறார்கள். தொழில் முடக்கம் செய்யப்படுகிறது. ஆனால், சிக்கலுக்கான தீர்வும் நம்மிடம் மட்டுமே உள்ளது. நம்மில் ஒற்றுமை, ஒருமைப்பாடு காணப்பட்டால் எதிலும் சாதிக்கலாம். இத்தீவில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன் வெளியே எந்த மாநிலத்திலும் பணம் சம்பாதிக்க வக்கற்றவன் ஆகிறான். நம்மைப் பிரித்தாள எண்ணும் அரசியல்வாதிகளுக்கு நாம் இடம் தரக்கூடாது. இத்தீவில் பிறந்த நமக்கு இங்கும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழகத்தில் சுற்றுலாப் பயணிக்கான தகுதி மட்டுமே இங்குள்ள தமிழர்களுக்குக் கிடைக்கிறது. பிற மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து, தொடரிப் போக்குவரத்து போன்ற ஒரு மாநிலத்தைப் பிற மாநிலத்தோடு இணைக்கக்கூடிய வழிமுறைகள் இருக்கின்றன. எனவே இங்குள்ள மக்கள் தாயகத்தில் வேலைவாய்ப்பு பெறும் நம்பிக்கை இல்லை. எனவே வெளிமாநில மக்கள் இங்கு வேலை வாய்ப்புக்காக வருவதைத் தடுக்கவேண்டும். அந்தமான் நிக்கோபர் நில வரையறைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வெளியாட்கள் நிலம் வாங்க முடியாதபடித் திருத்தம் கொண்டுவர வேண்டும். சட்டமன்றம் அமைதல் ஒன்றே இதற்குத் தீர்வு.
கல்வி, வேலைவாய்ப்பு முதன்மை
  இந்தத் தீவில் சுப. சுப்பரமணியனார், து.க. கோபால் போன்ற தன்னலமற்றத் தலைவர்களின் அரிய போராட்டங்களால் தொடங்கப்பட்ட 22 தமிழ்க் கல்விக் கூடங்களில் 11 தமிழ் கல்விக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. மீதி 11 கல்விக் கூடங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும். அன்றைய காலத்தில் அந்தமானில் தமிழ்க் கல்விக் கூடங்கள் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இன்று தமிழ்க் கல்விக் கூடங்கள் ஒவ்வொன்றாக மூடப்படுவதற்கு அந்தமான் தமிழர் அமைப்பினரோ / தமிழினத் தலைவர்கள், தமிழக அரசியல் கட்சியினரோ முதன்மைக் காரணமாகியுள்ளனர் என்பது வரலாற்று உண்மை.
  ஏனெனில் தீவில் தமிழ்க் கல்விக் கூடங்கள் திறப்பின் மூலம் தீவில் தமிழர்களின் குடிபெயர்வு 1970-80களில் அதிகரித்தது. தமிழர்கள் தமது குடும்பம், குடும்பமாக இங்கு குடியேற முற்பட்டனர். இதன் மூலம் தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கும், பிற பொது மக்களுக்கும் அரசாங்கப் பணி, ஒப்பந்தப் பணி என வேலைவாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று அனைத்திற்கும் பின்னணியில் பெரிய சதி வேலை நடைபெறுகிறது. கல்வித்துறையின் மூலம் தமிழ்க் குழந்தைகளுக்கு உரிய வாழ்வியல் கல்வி வழங்க உணர்வுள்ள ஆசிரியப் பெருமக்கள் முயல வேண்டும். ஆங்கில மயமாகியுள்ள தமிழ்க் கல்விக் கூடங்களில் குறைந்தது ஒரு பாடம் தமிழ், தாய் மொழிக் கல்விக்காவது வழிமுறை ஏற்படவேண்டும். இதன்மூலம் நாளைய இளைஞர் சமுதாயம் எல்லாவித அறைகூவல்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு உறுதிப்படுத்தப்படும். நிருவாகத்தின் துறைகளில் உள்ள நம் அதிகாரிகள் படித்து வேலை வாய்ப்பின்றி இருக்கும் நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். அவர்களுக்கு அவ்வப்போது கல்வி, வேலைவாய்ப்பு குறித்த அறிவுரைகளை வழங்கலாம். எதிர்காலச் சிந்தனையுடன் இன்று விழித்துக்கொண்டோர் நாளை பிழைத்துக்கொள்வர். தீவின் எதிர்காலம் இருட்டாக இருக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. நமது ஒற்றுமை உணர்வின் மூலம் நமக்கும், நம் சமுதாய மக்களுக்கும் மாபெரும் ஆதரவுப் பின்னணியை ஏற்படுத்திட முடியும். நாம் திட்டமிட்டுச் செயல் பட்டால்எல்லாம் சாத்தியமே.
  கடந்த 35-ஆண்டுக் காலமாக பக்தா, விசுனுபத ரே ஆகிய அரசியல் தலைவர்கள் இருவர் தமிழர்களின் வாக்குகளால் மக்களவைக்குத் தேர்வுபெற்றனர். வெற்றிக்குப் பின்னர் தமிழர்களுக்காக அவர்கள் இருவரும் செய்த நன்மைகள் என்ன? நற்செயல்கள் என்ன? அவர் தம் இன மக்களுக்கு முன்னுரிமை அளித்து இத்தீவை வங்காளத்தேசமாக மாற்றிச் சீரழித்து உள்ளனர். இதனை மாற்றியமைக்க வேண்டும். தமிழர்களின் ஒற்றுமையை நிலை நிறுத்தி அதிகாரத்தோடு நமது உரிமையைப் பெறவேண்டும். தமிழர்கள் செய்து வந்த அத்தனைத் தொழில்களிலும் இன்று வங்காளத்தவனும், மார்வாடிக்காரனும் போட்டியாக உருவாகி உள்ளான். வங்காளத் தேசத்து தொழிலாளர்களின் வருகையால் தமிழர் செய்துவந்த அத்தனைத் தொழில்களும் அவர்கள் கைவசம் சென்றடைந்து விட்டன. அவர்களைத் தட்டிக்கேட்க எவருக்கும் துணிவு இல்லை. அவர்கள் காலில் விழுந்துதான் சாதிக்கவேண்டுமா? எனவே இன்று நாம் யாரும் கேட்பாரற்ற, நாதியற்ற சமூகமானோம்.
  தமிழனுக்காகப் போராடிய தலைவர்கள் சுப. சுப்பரமணியன், து.க. கோபால், பெர்னாட் ஆண்டுரூசு போன்ற தலைவர்களின் இல்லாமை குறைபாடு நம்மிடையே தெரிகிறது.
  கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் ஓ.பி.சி. எனும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் தீவை வளமான, செழுமை மிக்கத் தீவாக மாற்றியமைத்த தமிழர்களைச் சேர்க்கவேண்டும். அல்லது அனைவருக்கும் பொதுவாக இ.பி.ப / ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தல் வேண்டும்.
  சிறிமாவோ- சாத்திரி ஒப்பந்தத்தின்படிக் கட்சால்தீவில் குடியமர்த்தப்பட்ட 48 இலங்கை மலையகத் தமிழ்க் குடும்பங்களுக்கும் வங்காளத் தேசத்துக் குடியேறிகளுக்கு வழங்கியதுபோல 5 காணி(ஏக்கர்) விளை நிலம், 5 வீட்டுமனை நிலங்கள், சலுகைகள் யாவும் வழங்கி முறைப்படுத்தவேண்டும். 40 ஆண்டு காலமாக   ஏதிலியர்(அகதிகள்) வாழ்க்கை வாழ்ந்து வரும்   மொத்தம் 48 குடும்பங்களைச் சார்ந்த 800 கட்சால் தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தரவேண்டும்.
  தமிழர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிப்போருக்கான பட்டியலில் இடம் பெறச் செய்தல்வேண்டும்.
  அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப்பாடம், கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் துணைபுரிய வேண்டும்.
  போர்ட் பிளேயர் – மதுரைக்கும் இடையே நேரடி விமானச் சேவையை உடனேயே தொடங்க வேண்டும்.
  தமிழ் அரசு ஊழியர்கள் பாதிக்கும் படியாக வம்படியாக நடைபெறும் இந்தித் திணிப்பு முயற்சியை உடனடியாக மைய அரசு கைவிடவேண்டும்.
  தமிழர்கள் செய்து வந்த கடல் மணல் எடுக்கும் பணியை மீண்டும் தொடங்க இசைவளிக்க வேண்டும்.
  மீண்டும் கற்குடைவு(குவாரிகள்) உரிமத்தை வழங்கவும், அதனைத் தொடங்கி நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  தமிழர் சார்ந்த தொழில்களில் புதிது, புதிதாக விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிச் சட்டங்களை நீக்க வேண்டும்.
  சென்னை வட்டாரத்தோடு நீதித்துறை, நிதித்துறை, செய்தி ஒளிபரப்புத் துறைகளை இணைக்க வேண்டும்.
  நகர மன்றம், மாவட்ட மாமன்றங்களில் தமிழர்களுக்கு உரிய சார்பு வழங்கவேண்டும்.
  தமிழ் கல்விக் கூடங்கள் மூடப்படுவதை எதிர்த்துப் போராட முன்வரவேண்டும். இதற்கு நம்மிடையே தலைமை உள்ளதா?
  நம்மிடம் 1008 குறைபாடுகளை வைத்துக்கொண்டு பிறர் மீது குறைகூற நமக்கு என்ன உரிமை உள்ளது? இப்போது தீவு வாழ் தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு பொதுவான தமிழர் தலைவரைத் தேர்வு செய்ய முடியுமா? நடந்த நாடாளுமன்ற உறுப்பனருக்கான தேர்தலில் தமிழன் முடிவை   வரையறுக்கும் வாக்காளன் எனும் பெயரும், புகழும் பெற்றான். ஏனெனில் இரண்டாவது மாபெரும் வாக்குவங்கி பெற்றுள்ள இனமும், அரசியல் களத்தில் ஈடுபாடுகொண்ட முதலினமும் நம் தமிழினமே. இந்தப் பெயரும், புகழும் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடர வாய்ப்புகளே இல்லை. சாதி அரசியலால் தமிழன் சுக்கு நூறாகப் போவான் எனத் தமிழன் பச்சையாகப் பொய் உரைப்பதை கேட்கும் செவிகளுக்கு மருந்தளிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலாவது சாதி, மத பிரிவினையைத் தூக்கியெறிந்து விட்டுத் தேர்தலை ஒற்றுமையாகச் சந்தித்தால் ஊராட்சி மன்றம், நகராட்சி மன்றம் தமிழன் கையில் இருக்கும். எனவே இன்று மீண்டும் தமிழர்களின் தன்வலிமையைக் காட்டவேண்டிய தருணம் வந்துள்ளது. ஒட்டுமொத்தத் தமிழர்களின் தலைமையைத் தேர்வு செய்து தனிச் சமூக ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும். தமிழர்களை ஒன்று திரட்டவேண்டும்!

– கரிகால்வளவன், ஆசிரியர்,  “அந்தமான் முரசு

karikalvalavan,andamanmurasu
– தென்செய்தி
thenseychi_muthiraiandhaman murasu
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக