தமிழ்த்தேசம் என்கின்ற இலட்சியப் பாதையில் இருந்து
நாம் விலகப்போவதில்லை
– கசேந்திரகுமார் பொன்னம்பலம்!
எமது கட்சியின் கொள்கையை ஏற்று
வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியினைக் கூறிக்கொள்ளுகின்றோம். எமது
கொள்கையினை முன்னெடுத்துச் செல்லும் எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டுவரும். கடந்த காலங்களில் குறிப்பாகத் தேர்தல் காலங்களில்
எமது பல செயற்பாடுகளுக்குப் பல்வேறு கோணங்களில் இருந்து அறைகூவல்கள்
கொடுக்கப்பட்டிருந்தன. எங்களுடைய கருத்துகள் மக்கள் மட்டத்தில்
செல்வதற்கும் பெரும் அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.
எங்களுடைய மக்களுக்கான அடையாளத்தினைக்
கொடுக்கக்கூடியத் “தமிழ்தேசியம்” தமிழ் அரசியலில் இருந்து இல்லாது
போனதற்குப் பிற்பாடே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நாங்கள்
உருவாக்கினோம். தமிழ் மக்களுடைய தேசியவாதம் பாதுகாக்கப்படவேண்டும்.
தேசியவாதத்தினைப் பாதுகாப்பது தீவிரவாதம் இல்லை. இன்று தமிழ்த்தேசத்தில்
நடைபெற்றுக் கொண்டிருப்பது இன அழிப்பு என்பதில் எமக்கு எந்த
மாற்றுக்கருத்துகளும் இல்லை. அந்தத் தமிழ்த்தேசத்தினைப் பாதுகாக்கவேண்டும்
என்ற நிலைப்பாட்டுடன் நாங்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றோம்.
இன்று அந்தச் செயற்பாடுகளை உரிய வகையில்
மக்கள் மட்டத்தில் கொண்டு செல்வதற்குக் குறைபாடுகள் இருந்தாலும், இதனை
நீக்கி மக்களுக்குக் கொண்டுசென்று சேர்ப்பதன் ஊடாகத்தான் எமது
சிக்கலுக்குத் தீர்வினைப் பொற்றுக்கொள்ள முடியும். இதனைப் பெற்றுக்கொள்ள
எந்தனைத் தடைகள் வந்தாலும் அவை அத்தனையையும் தாண்டிச்செல்வதே எமது பணியாக
இருக்கும். இதன்படியே இனிவரும் காலங்களில் நாம் செயற்படப்போகின்றோம்.
எம்மைப் பொறுத்தவரையில் 2010ஆம்
ஆண்டு தேர்தலைவிட இந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் பல மடங்கு
வளர்ந்திருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள
விழிப்புணர்வே காரணம். இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள்
பெருமளவு ஆதரவினைக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
அதேபோன்று எமது நிலைப்பாடு தன்னுரிமை அடிப்படையிலே தமிழ்த்தேசம்
அங்கிகரிக்கப்படுகின்ற நிலையான தீர்வு எட்டப்பட வேண்டும். இதனை எமது
தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
அந்தத் தீர்வு தமிழ்த்தேசம்
அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்புத் தீர்வாக அமைவதற்கு கூட்டமைப்பு முயன்றால்
அதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் ஆதரவு வழங்க
ஆயத்தமாக இருக்கின்றோம்.
எந்த விதத்திலும் எங்களுடைய தமிழ்த்
தேசத்தினுடைய நலன் பாதிக்கப்படாத வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தன்னாட்சி உரிமை என்னும் அடிப்படையில் தேசம் அங்கிகரிக்கப்படுகின்ற ஒரு
கூட்டாட்சித் தீர்வை எட்டுவற்கு எடுக்கின்ற எந்த ஒரு முயற்சிக்கும்
எங்களுடைய ஒத்துழைப்பு இருக்கும். திம்பு கோட்பாட்டினைத் தாண்டிய
தீர்வினையே நோக்கி நகர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த முயற்சி
நேர்மையான வழியில் முன்னெடுக்கப்பட்டால் அதற்கும் நாங்கள் ஆதரவு
வழங்குவோம்.
ஐ.நா மனித உரிமை பேரவையினால்
வெளியிடப்படவுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தாண்டியும்,
பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்; முன்னிலையில் தமிழர்களுக்கு நடைபெற்ற
இனஅழிப்பு தொடர்பாகப் பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று தமிழ்
தேசியக் கூட்டமைப்பு வேண்டுவதாக இருந்தால் அதற்கும் எங்களுடைய ஆதரவினை
உறுதியாகக் கொடுப்போம்.
நாம் ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்துள்ள
இரு செய்திகளும் பேரம் பேசுவதற்கு அப்பாற்பட்ட செய்திகள். இந்த
நிலைப்பாடுகளோடு செயற்படுகின்ற எந்த ஒரு தரப்பிற்கும் ஒத்துழைப்புதர
ஆயத்தமாக இருக்கின்றோம். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் எமது
ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் எமது அடிப்படைக் கொள்கையில் இருந்து நாம்
சற்றேனும் தளரப்போவதில்லை என்பதும் உறுதி.
– கசேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக