93malaivedan
   தேவதானப்பட்டி அருகே உள்ள பரசுராமபுரம், மீனாட்சிபுரம் முதலான ஊர்களில் வசிக்கும் மக்கள் சாதிச்சான்றிதழுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
  தேவதானப்பட்டி அருகே மீனாட்சிபுரம், பரசுராமபுரம் என இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இச்சமூக மக்கள் தங்கள் பரம்பரைத் தொழிலான வேட்டையாடும் தொழிலை விட்டுவிட்டுத் தற்பொழுது வேளாண்மை, கூலி வேலை எனச் செய்துவருகின்றனர். இம் மக்களுக்குச் சான்றிதழ் கடந்த 1984 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் இவர்கள், சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் தொடர்புடைய கோட்ட ஆட்சியர் மூலம் வழங்கவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தக்க ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஆவணங்களில் இது இல்லை, அது இல்லை எனக்கூறி அலைக்கழித்து வருகின்றனர். தங்களுடைய   பரம்பரைச் சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் பழங்குடியினருக்குக் கிடைக்க கூடிய அரசு சலுகைகளைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
  இதன்   தொடர்பாக மேற்கத்திய பசுமை அமைப்பைச் சேர்ந்த அகமது என்பவர் கூறுகையில், “மலைவேடசன் சாதிச்சான்று கோரி வேடநாயக்கர் சமூகத்தைச்சேர்ந்த ஏறத்தாழ 75 குடும்பங்கள் மீனாட்சிபுரம் பகுதியிலும், ஏறத்தாழ 150 குடும்பங்கள் பரசுராமபுரம் பகுதியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
  இவற்றைத்தவிர போடி, சிலமலை,கம்பம் முதலான பகுதிகளிலும் வசித்து வருகின்றனர் இச்சமூக மக்கள். இவர்களுக்குரிய சாதிச்சான்றிதழ் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கி வந்தோம். தற்பொழுது கோட்டாட்சியர் மூலம் விண்ணப்பித்தால் மட்டுமே சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும் என அப்போதைய அரசு கூறியது. அன்று முதல் இன்று வரை சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. இதன் தொடர்பாக எங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் முதல் கோட்டாட்சியர் அலுவலகங்கள் வரை தகவல் பெறும் உரிமைச்சட்டப்படி தகவல் கேட்டுள்ளோம். அனைத்து அலுவலகங்களிலும் முறையான மறுமொழி தரவில்லை. இன்னும் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மறுமொழி வந்த பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்றார். எனவே மாவட்ட நிருவாகம் ஆய்வு மேற்கொண்டு சாதிச்சான்றிழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்
93vaikaianeesu_name