சனி, 7 ஜூலை, 2012

கைதி சித்திரவதை: கீழ் நீதிமன்றத்தின் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

நீதிபதிகள் பலரின்  தீர்ப்புகள் மனித நேயத்துடனும் அறநெறியின்பாற்பட்டும் உள்ளன. அவர்களுள் குறிப்பிடத்தக்க்வராக நீதிபதி சந்துரு அவர்கள் உள்ளார்கள். அறம் காக்கும் தலைவருக்குப் பாராட்டுகள். இதே போல் வழக்குகளை விரைந்து முடிக்கவும் அனைத்து நீதிபதிகளும்  காவல்துறையையும் அரசையும் முடுக்கி விட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கைதி சித்திரவதை: கீழ் நீதிமன்றத்தின் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

First Published : 07 Jul 2012 12:44:04 AM IST
  தினமணி

சென்னை, ஜூலை 6: போலீஸ் சித்திரவதையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கைதிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடாத குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடு பற்றி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை சோழவரத்தைச் சேர்ந்த ஜி. பாரதி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.  கடந்த ஜூன் 16-ம் தேதி சோழவரம் காவல் நிலைய போலீஸôர் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து எனது மகன் அருணை தாக்கினர். பின்னர் எனது மகனை போலீஸôர் அழைத்துச் சென்றனர். எனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் டி.ஜி.பி. உள்பட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தந்தி மூலம் புகார் அனுப்பினேன்.  இந்நிலையில் கடந்த ஜூன் 20-ம் தேதி பொன்னேரியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் எனது மகனை போலீஸôர் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. தன்னை கட்டி வைத்து போலீஸôர் அடித்ததாக எனது மகன் கூறினார்.  தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகனுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், ஜூன் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை எனது மகனை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்து அவரை தாக்கிய போலீஸôர் மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி விசாரணை நடத்தவும், உரிய இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.  இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு பிறப்பித்த உத்தரவு:  சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருணை சந்திக்கவும், உண்மை நிலையை அறியவும் அட்வகேட் கமிஷனை அமைப்பதற்கு இந்த நீதிமன்றம் தயாராக இருந்தது. எனினும் அருணை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயார் என்று அரசு தலைமை வழக்குரைஞர் தாமாக முன்வந்து தெரிவித்தார். அதன்படி வெள்ளிக்கிழமை அருண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், போலீஸôர் தன்னை தாக்கியதாலேயே தனது உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்பு பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அருண் ஆஜர்படுத்தப்பட்ட போதெல்லாம் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடவில்லை.  கடந்த 5-ம் தேதிதான் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மற்றும் போலீஸôரின் செயல்பாடு ஏற்புடையதாக இல்லை.  உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள அருணை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இனியும் ஏதேனும் புகார் வருமானால், நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக