ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு தேவை: வைகோ
First Published : 14 Apr 2012 05:31:43 AM IST
"பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வெளியிட, பெறுகிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.பாலசுப்
சென்னை, ஏப்.13: தமிழீழம் அமைய ஐ.நா.சபை சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீட்டு விழா தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நூலினை வெளியிட, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். விழாவில் வைகோ பேசியதாவது: இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. இந்த வஞ்சக சூழ்ச்சியால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர். இப்போது இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் சிங்களர்கள் குடியேற்றம் விரைவாக நடைபெறுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களைக் கொன்று விட்டதாக இலங்கை அரசு கருதலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் பின்னால் 7 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்னைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும். ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்பு எடுத்து தமிழீழம் அமைக்காவிட்டால் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள். பொது வாக்கெடுப்பா, ஆயுதமா என்பதை வரலாறே தீர்மானிக்க முடியும். ஆயுதம் தாங்கிப் போராடுவதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. தவறு என்றால் எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களை பசிபிக் கடலில்தான் கொட்ட வேண்டும். எந்த நாடாவது அப்படிச் செய்ய முன் வருமா? பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதற்குத்தான் எல்லா நாடுகளும் நிதி அதிகம் ஒதுக்குதின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எனவே ஆயுதம் எடுப்பதில் தவறு இல்லை. பழ.நெடுமாறன் எழுதியுள்ள இந்த நூல் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டத்துக்கான ஆயுத சாலையாகப் பயன்படும் என்றார் வைகோ. பழ.நெடுமாறன் பேசியதாவது: பிரபாகரன் புகழ் பாடுவதற்காக இந்த நூலை எழுதவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். ஈழத் தமிழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுதியுள்ளேன். பிரிட்டிஷார் ஆட்சியில் தமிழர்கள் கூலிகளாகத்தான் பார்க்கப்பட்டனர். இந்தப் பார்வை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. விடுதலைப் புலிகளுடைய எழுச்சிக்குப் பின்னரே இந்தப் பார்வை மாறியது. வீரம் நிறைந்தவர்களாக இப்போது தமிழர்கள் பார்க்கப்படுகின்றனர் என்றார் அவர். விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சித் தலைவர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட பலர் பேசினர். தங்கப் பேனா: விழாவில் பழ.நெடுமாறனுக்கு ம.தி.மு.க. சார்பில் தங்கப் பேனா பரிசளிக்கப்பட்டது.
தனித்தமிழீழம் அமைய உலகத்தமிழர்கள் அனைவரும் ஓர் அணியில் நின்று ஐ.நாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இசுரேல் எப்படி ஒரு நாடாக உருவானதோ அது போன்று ஈழத்தில் தமிழினம் சுதந்திரமாக கண்ணியத்துடம் வாழ தமிழீழமும் தனி நாடாக உருவாக வேண்டும். ஐ.நாவின் தமிழீழ வாக்கெடுப்புக்கு உலகத்தமிழினத்தினர் ஒன்றுபட்டு ஓர் அணியில் நின்று ஆதரவு கொடுக்க வேண்டும் -இன்பச்சுடர்-
பதிலளிநீக்கு