திங்கள், 9 ஏப்ரல், 2012

105old grandmother's birthday function: attended a four-generation relationships



தர்மபுரி:தர்மபுரி அருகே, 105 வயது பாட்டியின் பிறந்த நாளை, நான்கு தலைமுறை உறவுகள் கேக் வெட்டி, கறி விருந்து வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்ட சவுரியூர் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவரது கணவர் முனுசாமி. நெசவு தொழிலை பரம்பரையாகச் செய்துவரும் குடும்பத்தினர். கிருஷ்ணம்மாளுக்கு ஒரே மகள் சரஸ்வதி,75. இவரது கணவர் சிவப்பிரகாசம்,83 , இவர்கள் சேலம் மாவட்டம் கோணேரிப்பட்டியில் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

70 பேர்:இவர்களது மகன்கள் விவசாயி வெங்கடாசலம், ஜெகதீசன். இவர் திருச்சி யில் இன்ஜினியராகப் பணிபுரிகிறார். வெங்கடாசலத்தின் மகள்கள் சத்திய பிரியா, சண்முகப்பிரியா. இவர்களுக்குத் திருமணமாகி விட்டது. சத்தியபிரியாவுக்கு இரு மகன்களும், சண்முகப்பிரியாவுக்கு ஒரு மகன் இரு மகள்கள் உள்ளனர்.
ஜெகதீசனுக்கு சுகன்யா என்ற மகளும், விவேக் என்ற மகனும் உள்ளனர். சுகன்யாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அதாவது கிருஷ்ணம்மாளின் பேரன், பேத்திகள் என உறவினர்கள் வட்டத்தில், 70 பேர் உள்ளனர்.தர்மபுரியை அடுத்த சின்னமாட்டிலாம்பட்டியில் உள்ள பேரன் வெங்டாசலத்தின் வீட்டில் கடந்த, 38 ஆண்டுகளாக வசித்து வரும் கிருஷ்ணம்மாளுக்கு நேற்று உறவுகள் சூழ பிறந்த நாள் விழா நடந்தது.
பேத்தி, பேரன்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய கிருஷ்ணம்மாளிடம், உறவினர்கள் அனைவரும் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். பின்னர் கறி விருந்து நடந்தது.

சாப்பாடு என்ன?பிறந்த நாள் கொண்டாடிய கிருஷ்ணம்மாள் கூறியதாவது:காலையில் டீ, ராகி மாவு கூழ், பகலில் அரிசி உணவு, இரவு டிபன் இதுதான் என் உணவு பழக்கம். வீட்டு வேலை முதல், என் துணி மணிகளைத் துவைப்பது வரையில் நானே என் வேலைகளை செய்து கொள்வேன். என் பேரன் தோட்டத்தில் விவசாய வேலைகளையும் செய்து கொள்வேன். என் உணவுப் பழக்கமும், வீட்டு வேலைகளைச் செய்வதுமே, எனக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்துள்ளது. பேரன், பேத்திகளோடு பிறந்த நாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.இது வரை மருத்துவமனைக்கு செல்லாத கிருஷ்ணம்மாளுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த நோயும் வராமல், ஆரோக்கியத்தோடு இருப்பதை பெருமையாக கூறும் அவரது பேரன், பேத்திகள், கிருஷ்ணம்மாள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பிறந்த நாளில் சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனர்.

கிரீடம்:முதியவர்களை பற்றி புரிதல் குறைந்து, உறவு முறை இடைவெளி ஏற்பட்டு வரும் இந்த காலத்தில், 105 வயது பாட்டியை அன்புடன் அரவணைத்து, பல்வேறு இடங்களில் பிரிந்து இருந்த உறவுகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிறந்த நாள் கொண்டிட மகிழ்ந்திருப்பதன் மூலம், கிருஷ்ணம்மாளின் உறவினர்கள் தங்களுக்கு கிரீடம் சூட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக