புதினம்(நாவல்) எழுதுவது சிரமம்!
பல விருதுகளைப் பெற்றுள்ள கன்னட எழுத்தாளர் பைரப்பா: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், சந்தேஷிவாரா என்ற கிராமத்தில் பிறந்தேன். என் இளமைக் காலம் முழுவதும் வறுமை, துன்பம் தான் நிறைந்திருந்தது. படிப்பறிவு இல்லாத தாயால் வளர்க்கப்பட்ட எனக்கு, உடன் பிறந்தவர்கள் எட்டு பேர். நான் சிறுவனாக இருந்தபோது, பிளேக் நோய் பரவியிருந்த சமயம், கொத்துக் கொத்தாய் மக்கள் இறந்தனர். பசியும், நோயும் சேர்ந்து எட்டு பேரில் ஐந்து பேர் இறந்து, என் தம்பியும், சகோதரியும் மட்டும் எஞ்சியிருந்தோம். உணவு விடுதிகளில் எச்சில் தட்டுக் கழுவி, தியேட்டரில் கேட் கீப்பர் வேலை பார்த்து, படிப்பைத் தொடர்ந்தேன். இவ்வளவு கஷ்டத்துடன் தான் பி.எச்.டி., பட்டம் முடித்து, மனோதத்துவப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். வலியும், இழப்பும் மிகுந்த என் கடந்த காலம் தான் என்னை எழுத்தாளனாக மாற்றியது. கடந்த 1958ல், "தர்ம்ஸ்ரீ' என்ற நாவலை எழுதினேன்; அது தான் என் முதல் நாவல். மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல். அதன் பின், "பருவா' என்ற நாவலை எழுதினேன். இது எனக்கு "சாகித்ய அகடமி' விருது பெற்றுக் கொடுத்தது. இந்த நாவலுக்காக, இமயமலையில் உள்ள மலைவாழ் மக்களிடம் பழகி, அவர்களின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்களைப் பற்றி அறிந்தேன். அது சம்பந்தமான நூல்களைப் படித்து, ஆராய்ச்சி செய்ய ஐந்து ஆண்டுகள் ஆனது. நாவலாக எழுதி முடிக்க, ஒன்றரை ஆண்டு என மொத்தம் ஏழரை ஆண்டுகள் சிரமப்பட்டு இதை எழுதி முடித்தேன். நான் பட்ட சிரமங்கள் வீண் போகவில்லை. ஒவ்வொரு நாவல் எழுதும் போதும், அதற்காக பல செய்திகளைச் சேகரிப்பேன். புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்வேன். "மந்திரா' நாவல் எழுதுவதற்காக, இரண்டு ஆண்டுகள் சங்கீதம் கற்றேன். இதை எழுதி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. என்னைப் பொறுத்தவரை, நாவல் எழுதுவது தான் சிரமம். ஏராளமான பாத்திரங்கள், சம்பவங்கள் இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு எழுத வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக