பாட நூல்களிலும் பொதுஅறிவு நூல்களிலும் ஊடகங்களிலும் இந்தி இந்தியாவின் தேசிய மொழி எனத் தவறான தகவல் பதியப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து மேற்கொள்ளும பரப்புரைக்குப் பாராட்டுகள். தமிழர் பண்பாட்டு நடுவத்திற்கு வேண்டுகோள். இந்தி எனத் தமிழ் வரிவடிவிலேயே எழுதுங்கள். தினமணி குறிப்பதுபோல் குறிக்க வேண்டா. இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி இந்தி என்பதும் தவறான தகவலாகும். பல மொழி பேசுநரை இநதி பேசுநராகக் காட்டி 32% காட்டப்பட்டது. இத்தவறான புள்ளி விவரத்தின்படியே 70 % மக்களுக்கு எதிராக இந்தி திணிக்கப்பட்டு வரும் அநீதியைப் புரிந்து கொள்ளலாம். எனவே, மொழிச்சிக்கல் குறித்து நன்கு படித்து முனைப்பாகப் பரப்புரை மேற்கொள்ள வேண்டுகோள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
தினமணி First Published : 09 Apr 2012 10:45:16 AM IST
சென்னை, ஏப்.9: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர்.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக