வியாழன், 12 ஏப்ரல், 2012

திரு தி.கே.சீ.இளங்கோவன் கட்சிப் பொறுப்பிற்கு வந்தது பின்னால் இருக்கலாம். ஆனால், தத்துவமேதை தி.கே.சீனிவாசன் அவர்களின் மகன் என்ற முறையில் அவரது கட்சி ஈடுபாடு முன்பிருந்தே உள்ளது. நாடாளு மன்றத்தில் அஞ்சாது ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர்.மேலும், டி.ஆர்.பாலு கடந்த முறை சென்றவர். எனவே  இளங்கோவன் அவர்களை அனுப்பவது சரியே. என்றாலும் அ.தி.மு.க.வின் புறக்கணிப்பு முடிவுதான் சரியானது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


எம்.பி., குழுவில் இளங்கோவன் நியமனம்: தி.மு.க.,வில் அதிருப்தி
ஜெனீவாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்த ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்தது. அதன் தொடர் நிகழ்வாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், இந்திய எம்.பி.,க்கள் குழு, வரும் 16ம் தேதி இலங்கை செல்கிறது. ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்லும் இக்குழுவில், பா.ஜ., சார்பில் வெங்கையா நாயுடுவும் இடம் பெறுகிறார். காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணசாமி, மாணிக் தாக்கூர், என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிபருடன் சந்திப்பு: இலங்கையில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை பார்வையிட்டு, இலங்கையில் தமிழர்களுக்கு செய்யப்பட வேண்டிய மறுவாழ்வுப் பணிகள் குறித்து, இக்குழு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேயையும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுவின் நிகழ்ச்சி நிரல்களைப் பார்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., இக்குழுவில் இடம்பெறாது என்று நேற்று அறிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவில், டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அவர்கள், "ராஜபக்ஷேவை சந்தித்து டீ, பிஸ்கட் சாப்பிட்டு வந்தது தான் மிச்சம்' என்று, அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் குழுவில் இடம்பெற்றிருப்பது, அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைப் பிரச்னை குறித்து பார்லிமென்டில் பலமுறை குரல் கொடுத்து வருபவர்களான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரில் ஒருவரை குழுவில் நியமித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் புறக்கணித்து இளங்கோவனை நியமித்திருப்பது, சிலரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கனிமொழி காரணமா: கனிமொழியின் பரிந்துரையின்படி, பார்லிமென்ட் குழுவில் இளங்கோவன் இடம்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "கடந்த 2002ம் ஆண்டு தி.மு.க.,வுக்கு வந்தவர் இளங்கோவன். பல மூத்த உறுப்பினர்களைப் புறக்கணித்து அவருக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது, கட்சியின் மூத்த தலைவர்களின் மத்தியில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் கூட அதிருப்தியில் உள்ளார். இந்த அதிருப்தி கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும்' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக