வியாழன், 5 மே, 2011

dinamani article by indira parthasarathy: சொல் குறுக நிமிர் கீர்த்தி!

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்குப் பிடித்த தொடர் "சொல் குறுக நிமிர் கீர்த்தி'  என்பது. சேக்சுபியரைப்பற்றிக் குறிப்பிடும்பொழுதுகூட இத் தொடரைக் கையாள்வார். சொற்களால் விளக்க இயலா மிகுதியான புகழை உடையவர் என்பதைக் குறிப்பதற்காகப் - புகழைக் குறிக்கப் போதுமான சொற்கள்  இல்லை என்பதற்காகக் - கவியரசர் கம்பர்
"உரை குறுக நிமிர் கீர்த்தி  " என்கிறார். இதனை உள்வாங்கிய இ.பா. அவர்கள் சொல் குறுக எனக் குறிப்பிடுகிறாரா? அல்லது சொல் குறுக என்றும் கம்பர் கூறியுள்ளாரா? இ.பா. அவர்கள் விளக்கினால் நன்று. உரை என்பதே சரி என்னும் முடிவிற்கு வந்தால் இனித் திருத்திக் கொள்வார் அல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சொல் குறுக நிமிர் கீர்த்தி!

First Published : 05 May 2011 12:16:21 AM IST


நான் தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தபோது, ஒரு நாள் நளினி என்கிற மாணவி என்னிடம், என் அக்காவின் கணவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறினாள். நான் எதற்காக என்பது போல் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தேன். அவருக்குத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. குறிப்பாக, அவரே ஒரு கவிஞர். புதுக் கவிதை எழுதுகிறார். சி.சு.செல்லப்பா வெளியிட்டிருக்கும் புதுக் குரல்களில் அவருடைய இரண்டு கவிதைகள் இருக்கின்றன என்றாள்.அவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன்.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறப்பு நிருபர். அவர் கடந்த ஆறு மாதங்களாகக் "கணையாழி' என்ற தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்றாள்.பிரபல அமெரிக்க தினசரியின் சிறப்பு நிருபர், தமிழ்க் கவிஞர் என்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்ற செய்தியின் கலாசார அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள எனக்குச் சிறிது நேரமாயிற்று.அழைத்துவா, நானும் அவரைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றேன்.அடுத்தவாரம் இருவரும் சந்தித்தோம். அந்த அதிசய மனிதர்தாம் கி.கஸ்தூரிரங்கன். ஆங்கிலப் பத்திரிகையின் சிறப்பு நிருபர் என்பதைக் காட்டிலும், ஒரு தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வருவதுதான் அவருக்குப் பெருமை தரும் விஷயமாக இருந்தது என்பது எனக்குப் புரிந்தது. இதே ஆர்வம்தான், போன நூற்றாண்டின் பின் எழுபதுகளில், தில்லியில் அவர் பார்த்து வந்த ஆங்கிலப் பத்திரிகை வேலையை ராஜிநாமா செய்து, அதைவிடக் குறைவான சம்பளத்தில் சென்னையில், தமிழ்ப் பத்திரிகையில் பணி புரிவதற்கும் காரணமாயிற்று. அவர் நியூயார்க் டைம்ஸில் இருந்தபோதே, அப்பொழுது பிரசுரமாகிக் கொண்டிருந்த "சுதேசமித்திர'னில் அரசியல் பத்தி எழுதிக் கொண்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பெருந்தலைவர் காமராசர் அப்பத்தியின் தீவிர வாசகரென்று அவரே கஸ்தூரிரங்கனிடம் ஒரு சமயம் சொன்னபோது, அவருக்குப் புலிட்ஸர் பரிசு பெற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.கஸ்தூரிரங்கன் இயல்பாகவே அடக்கமும் அமைதியும் நிறைந்தவர். ஆனால், அவர் காமராசர் இவ்வாறு கூறியதைப் பல தடவைகள் நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம் என்றால், தமிழ்ப் பத்திரிகையாளராக இருப்பதுதான் தமக்குப் பெருமை என்பதற்கு அவர் அடிமன உணர்வுதான் காரணம் என்று நினைக்கிறேன்.1962-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நிகழ்ந்த போரைப் பற்றி "நியூயார்க் டைம்ஸ்'க்கு அனுப்பிய களச் செய்திகள்தாம் (ச்ண்ங்ப்க் ழ்ங்ல்ர்ழ்ற்ண்ய்ஞ்) அவரை ஒரு நல்ல நிருபராக அடையாளம் காட்டியது. இதற்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மேல்நாட்டு வாசகர்களுக்குச் சுவாரஸ்யம் தரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.வாரணாசியில் படகுகளில் வசித்த அமெரிக்க ஹிப்பிகளை நேர்காணல்கள் நிகழ்த்தி அவர் எழுதியவை அமெரிக்க வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பழ்ஹய்ள்ஸ்ரீங்ய்க்ங்ய்ற்ஹப் ஙங்க்ண்ற்ஹற்ண்ர்ய் பற்றியும், மகேஷ் யோகியைப் பற்றியும் நியூயார்க் டைம்ஸில் வந்த முதல் குறிப்பு கஸ்தூரிரங்கன் எழுதியதுதான்.முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கேரள ஆயுர்வேத வைத்தியசாலையில் இளமைக்காகச் சிகிச்சை பெற்றார் என்ற செய்தி கேட்டு, நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் இந்த வைத்திய சாலைகளைப் பற்றி விவரமான குறிப்பு அனுப்பும்படிக் கஸ்தூரிரங்கனைப் பணித்தார். அவை பிரபலமாவதற்கு, நியூயார்க் டைம்ஸில் இதைப் பற்றிய செய்தி வந்தது என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அவர் "தினமணி கதிர்' ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். பல நல்ல எழுத்தாளர்கள் கதிரில் எழுதும்படியாகவும் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற "வானம் வசப்படும்' என்ற நாவலைப் பிரபஞ்சன் கதிரில் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்கன்.1988-ல் நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றபோது, "தினமணி'யில் மாதம் இருமுறை இரண்டு ஆண்டுகள் தவறாமல் கட்டுரைகள் எழுதியது அவர் தந்த ஊக்கத்தினால்தான். என்னுடைய ஐந்தாண்டு போலந்து அனுபவத்தைப் பயணக் கட்டுரைகளாக எழுத நினைத்தபோது, அதை நாவலாக எழுத யோசனை சொன்னவரும் அவர்தாம். அது "ஏசுவின் தோழர்கள்' என்ற தலைப்பில், கதிரில் வந்தபோது அவருடைய யோசனையின் அருமை எனக்குப் புலப்பட்டது.அவர் நடத்திய "கணையாழி' அருமையான இளம் புதுக்கவிஞர்களை இனம் கண்டது. இன்று பிரபலமாக இருக்கும் பல கவிஞர்கள் "கணையாழி'யில் எழுதத் தொடங்கியவர்கள்தாம். குறு நாவல் வளர்ச்சிக்காக அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது. "கணையாழி'யில், அமரர் தி.ஜானகிராமன் பேரில் ஆண்டுதோறும் குறுநாவல் போட்டி நடந்து வந்தது. முழு நாடகங்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் வராத காலத்தில், "கணையாழி' அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கவில்லை. ஜெயந்தன் நாடகங்களை "கணையாழி' பிரசுரித்தது. என்னுடைய நந்தன் கதையும் அப்பத்திரிகையில் பிரசுரமாயிற்று."கணையாழி' மூலம் கஸ்தூரிரங்கன் ஆற்றிய இலக்கியப் பணியில், அசோகமித்திரன் பங்கும் கணிசமானது. பல இளம் நல்ல எழுத்தாளர்களைக் கண்டறிவதற்கு, இப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் என்ற முறையில் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். மிகச்சிறந்த பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், கவிஞர், கட்டுரையாளர், பல நல்ல எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர், எழுத்துச் சாதனையாளர் சுஜாதாவைக் கண்டெடுத்தவர் (இருவரும் பள்ளி நண்பர்கள்) ஆக பன் முகங்களை உடைய நண்பர் கி.கஸ்தூரிரங்கன், இறுதி மூச்சு இருந்த வரை பழுத்த காந்தியவாதியாகவும், ஆன்மிக நாட்டமுடையாராகவும் இருந்து வாழ்ந்ததுதான் மாபெரும் சாதனை."சொல் குறுக நிமிர் கீர்த்தி' என்பான் கம்பன். இது கஸ்தூரிரங்கனுக்கு மிகவும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக