nellai kannan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
nellai kannan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூலை, 2011

Article about kalaignar by nellai kannan: தாத்தாவுக்குத் தெரியாதா?

தாத்தாவுக்குத் தெரியாதா?

First Published : 20 Jul 2011 02:34:14 AM IST


கடைசிவரை மன்மோகன் சிங்கின் முன்னர் பணிந்து தனது மத்திய அமைச்சர் பதவியைவிடாமல் இருப்பதற்கு சகல முயற்சிகளையும் செய்து இறுதியில் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.  தலித் ராசா இந்த விஷயத்தில் எத்தனை சரியாக நடந்து கொண்டார். பிரதமர் சொன்னவுடனே பதவியை விட்டு விட்டாரே. கருணாநிதி கூறுவதுபோல, தாழ்த்தப்பட்டவர் என்பதால்தான் திமுக தலைமை அவருக்கு ஒரு நீதி, பேரனுக்கு ஒரு நீதி என்று செயல்படுகிறதோ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பம். அந்தக் குடும்ப விவகாரங்களில் தலையிடும் உரிமை அந்நியருக்குக் கிடையாது என்று கருணாநிதி வகையறாக்கள் வீரவசனம் பேசுவார்கள்.  தயாநிதியை ஊடகங்கள் பழிவாங்கி விட்டனவாம்! கருணாநிதி சொல்லுகிறார். அது மட்டுமல்ல, தயாநிதி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு இருப்பதே நேற்றுத்தான் அவருக்குத் தெரியுமாம். பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் அண்டப்புளுகன் என்றெல்லாம் அவரைப் பற்றி யாரும் கூறிவிடக் கூடாது. அது தமிழினத் துரோகம் என்று வியாக்யானம் செய்வார் கருணாநிதி.  திமுக அவரோடு நிற்குமாம். கருணாநிதி கூறி இருக்கிறார். தலித் ராசா இன்னும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலர். அவரோடு திமுக இன்னும் நின்று கொண்டிருப்பதை இந்தியா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் எல்லாம் அவருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டனரே. கருணாநிதியே நேரில் சென்று தில்லியில் இருந்தல்லவா அந்த தலித்துக்காகக் கண்ணீர் வடித்தார்.  கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரது மருமகன் முரசொலி மாறன். ""முரசொலி மாறனைப் பார்த்தவுடன் இந்திரா காந்தி அம்மையார் நினைப்பாராம், இப்படி ஒரு அழகான வாலிபனுக்கு கட்டிக்கொடுக்க தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று''. இப்படிச் சொன்னவர் மறைந்த நாஞ்சில் மனோகரன். "கருவின் குற்றம் பற்றி நாஞ்சில் மனோகரன் பின்னாளில் சொன்னது தனிக்கதை.  அந்த முரசொலி மாறன் தமிழ் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு சைக்கிள் வாங்க எத்தனை கஷ்டப்பட்டார் என்று. மாமா கருணாநிதி மிகவும் சங்கடப்பட்டு ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள் அறுநூறு ரூபாய்க்கு வாங்கித் தந்தார் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் மருமகன் முரசொலி மாறன்.  இன்று மாறன் சகோதரர்கள் இருபது தொலைக்காட்சிக்கு சொந்தக்காரர்கள். நாற்பத்தைந்து பண்பலை வானொலிக்குச் சொந்தக்காரர்கள். ஒரு விமான நிறுவனத்துக்கே சொந்தக்காரர்கள். ஒரு டிடிஹெச் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்கள். ஆனால், இவர்களிடம் வேலை பார்க்கும் எந்த ஊழியர்க்கும் நல்ல சம்பளம் கிடையாது. அவர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா என்று நானும் பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். பதில் கிடையாது.  ஊடகங்கள் இத்தனை வைத்துக்கொண்டு இவர்கள் மக்களுக்கா சேவை செய்தார்கள். ஜெயலலிதாவையும் அவரது இயக்கத்தையும் அவதூறு செய்வதையே வேலையாகச் செய்தார்களா இல்லையா? அதெல்லாம் கருணாநிதிக்கு நினைவுக்கு வராது.  கே.பி.கந்தசாமி உருவாக்கி வளர்த்த செய்தி ஊடகத்தை அவரது மகனிடம் இருந்து எப்படி மாறன் சகோதரர்கள் வாங்கினார்கள் என்பது இன்றுவரை மர்மம்தான். அந்தத் தினகரன் செய்தித் தாளினாலேதானே கருணாநிதி குடும்பத்திலேயே குழப்பம் வந்தது.  அதிலேதானே இந்தியாவிலேயே மக்கள் மத்தியில் பெரும்பான்மை மதிப்பைப் பெற்றுள்ள அமைச்சர் தயாநிதி மாறன் என்று செய்தி போட்டார்கள். சிதம்பரத்துக்கெல்லாம் வாக்குக் குறைவாக இருந்தது. அழகிரியோ மிக மிகக் கீழே இருந்தார்.  அந்த ஊடகத்தினாலேதானே மதுரையில் மூன்று இளைஞர்கள் எரிக்கப்பட்டார்கள். அந்தக் கருணாநிதியாரின் பேரன் ஊடகம் தமிழகத்தில் ஒரு பெரிய கொலைக் குற்றத்துக்கான காரணமாய் இருந்ததே, அது அவருக்கு வயோதிகம் காரணமாக நினைவுக்கே வராது.  அதன் விளைவுதானே அழகிரி கருணாநிதி குடும்பத்துக்கென்று ஒரு தனி தொலைக்காட்சி ஊடகத்தையே கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கினர். அந்தத் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வந்தது என்றும் அதற்குக் காரணம் கனிமொழி என்றும் அவரும் இயக்குநர் சரத்குமாரும் சிறையில் இருக்கின்றனர் என்பதாவது நினைவில் இருந்தால் சரி.  அந்தக் கலைஞர் தொலைக்காட்சியிலேதானே தேர்தல் முடிவுகள் அன்று விமர்சனத்துக்காக உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் பத்தே நிமிடத்தில் வெளியேறி மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. அதற்கெல்லாம் ஊடகங்கள்தான் காரணமென்றால் அது நியாயமான வார்த்தை.  தமிழ்நாட்டின் தலைசிறந்த ஊடகங்களெல்லாம் இந்தக் குடும்ப அட்டூழியத்தை இந்தக் குடும்பச் சண்டையினால் ஏழை இளைஞர்கள் மூவர் கொடுமையாகக் கொல்லப்பட்டதைக்கூட மறந்துவிட்டு அதே பேரனை மீண்டும் மத்திய அமைச்சராகிய அவலத்தை எழுதின.  கருணாநிதிக்குச் சொந்தமான குங்குமம் வார இதழையும் மாறன் சகோதரர்களே வாங்கிக் கொண்டனர். சன் தொலைக் காட்சியில் பங்கைக் கொடுத்துக் கலைஞர் குடும்பத்தைக் கழற்றியும் விட்டனர் மாறன் சகோதரர்கள்.  அரசுத் தொலைபேசித் துறையின் எத்தனை தொடர்புகள் மாறன் சொந்த நிறுவனத்துக்குப் பயன்பட்டுள்ளன என்பது இப்போது சிபிஐயின் விசாரணையிலிருந்து தெரியவந்திருக்கிறது.  ஏர்செல் நிறுவனம் மிரட்டப்பட்டிருக்கிறது. பதவியையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்த மலேசிய நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி வாங்கிய விவகாரம் இப்போது நீதிமன்றம்வரை வந்துவிட்டது.  பாவிகள் அத்துடன் விட்டார்களா? காந்தி மண்டபத்தை "ஏர்செல்' விளம்பரத்துக்குப் பயன்படுத்திய அநியாயத்தை ஏன் அன்றைய திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்பது இப்போதல்லவா தெரிகிறது.  சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபம் "ஏர்செல்' விளம்பர மண்டபமான மர்மத்தின் முடிச்சு மாறன் சகோதரர்களின் முற்றத்தில் அல்லவா போய் முடிகிறது.  கோடிக்கணக்கான பணத்தை வைத்து திருமங்கலம் பார்முலாத் தேர்தலை நடத்தி விடலாம் என்று எல்லாத் தவறுகளையும் மிக மிகத் தைரியமாகச் செய்து விட்டு தேர்தல் ஆணையத்தின் சிறந்த முயற்சியாலும் நல்ல காவல் துறை அதிகாரிகள் சிலராலும் மக்கள் தீர்ப்பின் வேகத்தில் துவண்டு கிடக்கும் இவர்களுக்குச் சட்டம்தான் கடமையைச் செய்யத் தொடங்கியவுடனே கோபம் வருகிறது.  கருணாநிதியார் குடும்பத்தினரைவிட அதிகம் அரசியலை வைத்துச் சம்பாதித்தது மாறன் குடும்பம்தான். இது உலகறிந்த உண்மை.  ஊடகங்களைக் குற்றம் சொல்கிறாரே கருணாநிதி இவரது முரசொலிதான் பெருந்தலைவர் காமராஜர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டை அவரது சொந்த வீடு என்று போட்டு ஏழைப் பங்காளர் காமராஜரின் வீட்டைப் பாருங்கள் என்று செய்தி போட்டது. பெரியவர் காமராஜர் ஆந்திர வங்கியில் ஒரு கோடிரூபாய் போட்டு வைத்திருக்கிறார் என்று ஓர் உலகப் புளுகைச் செய்தியாகப் போட்டது.  செய்தியாளர்கள் கேட்டபோது காமராஜர் சொன்னார்: ""அவர்கிட்ட அதற்கான செக் புக் இருந்தா வாங்க்கிட்டு வாங்கண்ணே, கையெழுத்துப் போட்டுத் தாரேன் அவரையே வாங்கிக்கிடச் சொல்லுங்க'' என்றார்.  ஊழல் அனைத்தையும் செய்துவிட்டு ஊடகங்களைக் குற்றம் சொல்லிப் பேரனைக் காப்பாற்ற தாத்தா முயற்சி செய்கிறார்.  எத்தனை மாதங்களாக தயாநிதியை பாஜக, கம்யூனிஸ்ட்கள், அஇஅதிமுக, தேமுதிக என்று எல்லா கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மன்மோகன் சிங் கேட்கவில்லை.  இன்று உச்ச நீதிமன்றத்திலேயே குற்றச்சாட்டு பதிவான பிறகு பிரதமர் கட்டாயப்படுத்தித்தானே விலகல் கடிதத்தை வாங்க முடிந்திருக்கிறது.  ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன என்கிறார் கருணாநிதி. இத்தனைநாள் கருணாநிதியின் பேரன்கள் நடத்திய ஊடகங்கள் தீர்மானித்தது உண்மை. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. தாத்தாவுக்கு வயதாகிவிட்டது. பாவம், தெரியவில்லையோ என்னவோ?  எது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மறந்தாலும் மறக்காவிட்டாலும் "குறளோவியம்' எழுதிய கருணாநிதிக்குத் "திருக்குறள்' தெரியாமல் இருக்க வழியில்லை. காமத்துப் பால் மட்டுமல்லாமல், அவர் அறத்துப்பாலும், பொருட்பாலும்கூடப் படித்திருக்கிறார்.  ""தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்'' என்பது குறள்.  வள்ளுவருக்குக் கோட்டமும் வள்ளுவருக்குச் சிலைகளும் வைத்த கருணாநிதிக்கு இது எப்படித் தெரியாமல் போகும்?  

வெள்ளி, 6 மே, 2011

nellai kannan article about kalaignar family: கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?

நேற்று (௫.௫.௨௦௧௧) பொதிகையில் ஒளிபரப்பான குறளின் குரல் நிகழ்ச்சியில் முனைவர் மா.நன்னன் அவர்கள், கல்வியால் நேர்மையாக வாழாமல், தனக்குரிய தீய பாதையில் மேலும் தேர்ச்சி பெற்றவனாக அல்லது பெற்றவளாக அல்லது பெற்றவர்களாக விளங்கும் உண்மையை எடுத்துரைத்தார். இவரது விளக்கம் இக் கட்டுரையின்கேள்விக்கேற்ற விடையாகும்.
௨.) கலைவாணர் சோவியத்து நாடு சென்ற பொழுது பள்ளி மாணாக்கரிடம் ௧௦௦ உரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி ௧௧௦ உரூபாய்க்கு விற்றால் என்ன (ஆதாயம்) கிடைக்கும் என்பது போன்ற ஒரு வினாவை கேட்டதாயும் சிறைத்தண்டனை கிடைக்கும் என மாணவர்கள் விடையிறுத்ததாகவும் ஒரு செய்தி உண்டு. ஆனால்,  நம் நாட்டுக் கல்வி முறை வேறு. இதனால்தான் பாரதியார் படித்தவன் பாவம் செய்தால் ஐயோ ஐயோ என்று போவான் எனக் குமுறினார் .
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




அருமையாக எழுதுகிறார் நெல்லை கண்ணன். ஆனால், குறிப்பிட்ட குடும்பத்தைத் தாக்க வேண்டும் என்பதையே மையமாகக் கொண்டதாகத்தான் கட்டுரை அமைகிறது. நேரு மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்பொழுது ஏன் தன் மகளைக் காங்.கின் தலைவராக்கினார் , இந்திராவிற்குப் பிறகு இராசீவ் ஏன் தலைமையமைச்சர்  ஆனால் என்பன போன்ற பல செய்திகளை அவரே அறிவார். ஆனால், தேவைக்கேற்ப மறைக்க வேண்டியவற்றை மறந்ததுபோல் மறைத்து விட்டு ஒரு தலைச்சார்பாகவே எல்லாக் கட்டுரைகளையும் எழுதுகிறார். காங்.கிற்கு வால் பிடிப்பதை விட்டு விட்டு நடுவுநிலைமையுடன் எழுதினால் இவரது கருத்திற்கு மதிப்பு  ஏற்படும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?

First Published : 06 May 2011 01:11:15 AM IST


கேடில் விழுச்செல்வம் கல்வி என்றார் வள்ளுவப் பெருந்தகை.இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளவாக் கேடின்றால் எம்மர் உலகத்தும் யாமறியோம் கல்வி போல்மம்மர் அறுக்கும் மருந்து, என்கிறது நாலடியார். ஆமாம், இந்த ஜென்மத்தைச் சிறக்கச் செய்யும். எடுத்து, எடுத்து யார் யாருக்குத் தந்தாலும் பெருகுமே தவிர, குறையாது. நம்மை அடுத்தவருக்கு உணர்த்த உதவும். எல்லா அறியாமையையும் அறுத்து எறியும் சிறந்த மருந்து கல்வி என்கிறது இந்தச் செய்யுள். திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் அழகிரியும், ஸ்டாலினும், மகள் கனிமொழியும் கற்றவர்கள்தானே?ஆனால், நாலடியார் சொன்ன கல்வி அவர்களுக்கு வழங்கப்படவில்லையா? இல்லை, அவர்கள் தந்தையாரால் கோட்டம், சிலைகள் என்று போற்றப்பட்ட வள்ளுவரின் கல்வி குறித்து இவர்களுக்குச் சொல்லித் தரப்படவில்லையா? புரியவில்லை.ஒரு பெரிய அரசியல் இயக்கத்தில் அந்த இயக்கத்துக்காக தங்களையே அழித்துக்கொண்ட பலபேரும், சொத்து சுகங்களை இழந்த பலபேரும் இருந்தும் இவர்கள் இந்த அரசியல் பொறுப்புகளை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?இன்று பெண் கவிதாயினியாக, பெண்ணியக்கப் போராளியாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிற கனிமொழிக்கு எப்படி, ஏன் இது புரியவில்லை?அவர் கற்ற கல்வி, வள்ளுவப் பேராசான் குறிப்பிட்ட கல்வியாக இருந்திருந்தால் அவர் தன் தந்தையிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ""அப்பா இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திய அண்ணாவின் குடும்பத்திலே படித்தவர்கள் இருக்கிறார்கள். கழக முன்னோடிகள் பலரது வாரிசுகள் படித்தவர்கள். கட்சித் தொண்டாற்றுபவர்கள். உங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு தொண்டர்களாகவே தங்களைத் தேய்த்துக் கொள்பவர்கள். அவர்களிலே ஒருவருக்கு இந்தப் பதவியைத் தந்தால் அண்ணாவின் இதயம் உங்களிடம்தான் இருக்கிறது என்று நாம் தமிழர்களிடம் சொல்வது நிஜம் என்று மக்கள் மன்றத்தை நம்ப வைக்க முடியும். அண்ணாவின் ஒரு மகன் உங்கள் ஆட்சியிலேயே தற்கொலை செய்துவிட்டாரே. அந்தப் பழியைத் துடைத்திருக்க முடியும்'' என்று சொல்லியிருக்க வேண்டாமா?அவர் கற்ற கல்வி, அவர் கற்ற கவிதைகள் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டக் கூடாது என்று அவரைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டாமா?அப்படி அந்தப் பதவியைப் பெற்றதற்குப் பிறகு அந்த இயக்கத்துக்கும் அதன் தலைவரான தனது தந்தைக்கும் உண்மையாகவாவது இருந்திருக்க வேண்டாமா? இருந்திருந்தால் ராசாவுக்குத் தொலைத்தொடர்புத் துறையைக் கட்டாயம் பெற்றுத்தர வேண்டி தந்தைக்குத் தெரியாமல் நீரா ராடியாவிடம் கேட்டிருப்பாரா?அவரால் அமைச்சரான ராசா அவராலேயே நாற்பது தினங்களுக்கு மேல் சிறையிலிருக்கிறாரே. இன்று கனிமொழியைக் கூட்டுச் சதிகாரர் என்று மத்தியப் புலனாய்வுத் துறை சொல்கிறதே. அதுமட்டுமல்ல, அவரது பண விளையாட்டுகளில் எந்தச் சம்பந்தமுமில்லாத தயாளு அம்மாள் அசிங்கப்படுகிறாரே, சரியா? இதுதான் அவர் கற்ற கல்வி கற்றுக்கொடுத்த பாடமா?ஸ்டாலினை ஓரளவு ஒத்துக்கொள்ள முடியும். ஆனால், அவரது மகன்கள் கற்றவர்கள்தானே? தன்னைத் தவிர, யாரையுமே தொழில் செய்யவிடாமல் திரைப்படத்துறையை ஆட்டிப் படைக்க ஆசைப்படலாமா? அவர்களும் கற்ற கல்வி அவர்களுக்கு உதவவில்லையே? கோட் சூட்டோடு தாத்தாவின் பக்கத்திலேயே நிற்கிறாரே தயாநிதி மாறன். அவரும் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் தாத்தா கருணாநிதிக்குத் தெரியாமல் நீரா ராடியாவிடம், அழகிரி ரெüடி, படிக்காதவர், முரடன் அவரை அமைச்சராக்க விட்டுவிடக் கூடாது என்று சொல்லிவிட்டு, பின்னர் அழகிரியோடு அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி வீட்டுக்கு எப்படி ஒன்றாகப் போக முடிந்தது. என்ன கல்வி இவர்கள் கற்ற கல்வி?ஏற்கெனவே மதுரையில் இவர்களின் போட்டியினாலே மூன்று உயிர்கள் பலியாயினவே. கலைஞர் தொலைகாட்சி அன்றுதானே உதயமாயிற்று. இன்று அதனால்தானே தயாளு அம்மையார் அசிங்கப்படுத்தப்படுகிறார். என்ன கற்றார்கள்?இன்று இளைஞர்கள் பரவலாகப் படித்ததாகச் சொல்ல மறுக்கிறார்கள். இன்ன படிப்பில் சேர்த்திருக்கிறேன் என்று சொல்வதில்லை. என்ன வாங்கியிருக்கே என்றுதான் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். காரணம், படிப்பதற்கு அவர்கள் அள்ளிக் கொடுக்கும் நன்கொடைப் பணம். அளவுக்கு மீறிய கல்விக் கட்டணம்.அழகிரியாவது மத்திய அமைச்சர் பதவியை அண்ணா குடும்பத்தில் ஒருவருக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்திருக்கலாமே. இல்லையென்றால், பாரதீய ஜனதா கட்சி இவர் பதில் சொல்ல சங்கடப்படுகிறார் என்று இவரைக் கேலிப் பொருளாக்கியிருக்குமா. என்ன கற்றார்கள் இவர்கள்?ராகுல் காந்தியைச் செய்தியாளர்கள் கேட்கின்றனர். நீங்கள் பிரதமர் ஆவீர்களா என்று. ஆங்கிலத்தில் "ரிடிக்குலஸ்' (சிரிப்புத்தான் வருகிறது) என்கிறார். அமைச்சராவீர்களா என்கின்றனர். மூன்று, நான்குமுறை எம்.பி.யாக இருந்த பிறகு யோசிக்கலாம் என்கிறார்.ராகுலையும், பிரியங்காவையும் வைத்து மக்களிடம் வாக்கு வாங்கிக் கொள்ளையடிக்கப் பார்க்கும் போலி காங்கிரஸ்காரர்கள் அவரிடம் கெஞ்சிப் பார்த்தனர். அவர் மிகத் தெளிவாக இருந்துவிட்டார். ராகுலும், பிரியங்காவும் கற்ற கல்வி சரியாக இருப்பதுபோல் தெரிகிறதே! ராசா ஒரு தலித் என்பதால் பழி வாங்கப்படுகிறார் என்றார் முதல்வர் கருணாநிதி. இன்னும் ராசா சிறையில்தான் இருக்கிறார். என்ன செய்ய முடிந்தது கருணாநிதியால்? உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு தப்பும் செய்யாமலா, எந்தவித ஆதாரமும் இல்லாமலா ராசா சிறையிலிருக்கிறார்?கலைஞர் தொலைக்காட்சி பற்றிய கேள்வி எழுந்தபோது முதல்வர் கருணாநிதி என்ன சொன்னார் என்பது அவருக்கு மறந்திருக்கலாம். நமக்கு மறக்கவில்லை.""கலைஞர் என்கிற பெயரைத் தவிர, எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. அதில் எனது மனைவியும் மகளும் பங்குதாரர்கள், நான் சம்பந்தப்படவில்லை'' என்பதுதான் அவரது பதிலின் சாராம்சம்.முதல்வரின் மனைவியும், மகளும் சம்பந்தப்பட்ட ஒரு வியாபார நிறுவனம் முறைகேடுகளில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், அதற்கும் கட்சிக்கும் முடிச்சுப் போடவா முடியும்?பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் உருவான கழகம் என்கிறார்கள். அண்ணா தொடங்கிய கட்சி என்கிறார்கள். அந்தக் கட்சி, இப்போது தலைவரின் குடும்பத்தினரைப் பாதுகாக்க உயர்நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டி விவாதிக்கிறது.கட்சிக்கு அரணாக இருக்க வேண்டிய தலைவரின் குடும்பம், இப்போது கட்சி என்கிற கேடயத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறது.சுயமரியாதை, சுயமரியாதை என்று பேசுகிறார்களே, கழகத்தில் யாருக்கும் அது இல்லையா? அமைச்சர்கள் அனைவரும் அநேகமாகக் கற்றவர்கள். வாயே திறக்க மாட்டேன் என்கிறார்களே. அவர்கள் கல்வி அவர்களுக்கு ஒன்றுமே தரவில்லையா?


செவ்வாய், 30 நவம்பர், 2010

யாகாவாராயினும் நா காக்க...

சூழ்நிலைக்கேற்ப பிராமணர்களைத் தாக்குவதும் தாங்குவதும் கலைஞரின் வழக்கமாக இருக்கலாம். அதனால் அவர் சொல்வதெல்லாம் பொய் என்றாகிவிடுமா? டி.டிகே. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒளிந்துதான் சென்னை ஓடி வந்தார்; இலால்பகதூர் முதலானோர் தனி மனித ஒழுக்கத்தால் பதவி விலகினர்;இன்றைக்குச் சிலர் காங்.கால் பகடைக்காய்களாக ஆக்கப்பட்டு பதவி விலக வைக்கப்பட்டனர்.வடக்கே உள்ளவர்கள் தெற்கேஉள்ள கலைஞர்  வடக்கே ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல்  ஊடக வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர் என்றும் இராசா இடத்தில் யார் இருந்தாலும் ஊழல் நடந்திருக்கும் ; அதனால் தாழ்த்தப்பட்டவர் பயனடைந்திருந்ததால் ஒன்றும் இல்லை என்றும் காங்.கிற்கும் பங்குத் தொகை சென்றிருக்கும் பொழுது ஆ.இராசாவை மட்டும் குறி வைப்பது ஏன்? என்றும் மக்கள் பேசும் அளவிற்கு ஊழல் வெறுக்கப்படாததாக மாறிவிட்ட அவலத்தையும் ஆராய்ந்து நடுநிலையுடன்  எழுத வேண்டும். செல்லாத் தேர்தலை நெருக்கடியால் செல்ல  வைத்த நகர்வாலா புகழ் இந்திராகாந்தி உட்படகாங்.அனைவரையும் மறந்து விடும் கட்டுரையாளர்  ஊழல் யார்  செய்தாலும் ஒழிக்கப்பட வேண்டியதே என்பதை நடுநிலையுடன் வலியுறுத்தினால் பயன் உண்டு. அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

யாகாவாராயினும் நா காக்க...


ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார். மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர். முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார். கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர். காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா? கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும்  பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?  போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே! இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்? 1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா? ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை. பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார். ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார். இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன? ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்? ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே! பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம். தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்? ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா? ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்! மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள். தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி. இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி. வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி. என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே!

திங்கள், 1 நவம்பர், 2010

கருணாநிதியின் நேரு குடும்பத்து உறவு!


தமிழக முதல்வர் கருணாநிதி, நேரு குடும்பத்துக்கும் அவருக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது என்று கூறியுள்ளார். ஆமாம், ஆமாம். மதுரையில் நேருபிரானுக்குக் கறுப்புக் கொடி காட்டி, அவர் மீது செருப்பு வீசியதில் இருந்து தொடங்கிய உறவல்லவா இது? அதை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியுமா, என்ன?  இவர்கள் பண்டித நேரு மீது செருப்பு வீசினார்கள். ஆனால், நேருவோ மாநிலங்களவையில் அண்ணா உரையைக் கேட்டு அவருக்கு அதிக நேரம் ஒதுக்கச் சொன்னார். இவர்களுடைய கலாசாரம் இப்படி. அவருடைய பாரம்பரியம் அப்படி. வேறுபாடு இருக்கத்தானே செய்யும்!  1971-ல் மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் நாட்டுடைமை போன்ற மக்கள் திட்டங்களால் இந்திரா காந்திக்கும் காங்கிரஸýக்கும் ஏற்பட்டுள்ள மக்கள் செல்வாக்கை உணர்ந்து, 1972-ல் சந்திக்க வேண்டிய சட்டசபைத் தேர்தலை, சட்டசபையைக் கலைத்து விட்டு 1971-லேயே சந்தித்து அதிகமான இடங்களைக் கைப்பற்றி கருணாநிதியின் திமுக ஆட்சி பீடம் ஏறியபோது அன்னை இந்திராவோடு ஏற்பட்ட உறவு என்னவாயிற்று?  கோவை திமுக மாநாட்டில் ஒரு திமுக அமைச்சரே "விதவைகளுக்கு ஓய்வூதியம் என்கிற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இந்திரா காந்தி விண்ணப்பித்தால் கலைஞர் தருவார்' என்று பேசியதில் அந்த உறவின் பெருமை வெளிப்பட்டது.  அவசர நிலைக்காலத்துக்குப் பின்னர் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைவி இந்திரா, அன்னை அங்கயற்கண்ணியின் மதுரைக்கு வந்தபோது மதுரை தெற்குவாசலில் அவரைக் கொல்ல முயற்சித்த கொடுமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அன்னையின் உயிரைக் காத்த பழ.நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் நல்ல சில காங்கிரஸ்காரர்களும் இன்றும் அதற்குச் சாட்சியாக உள்ளனர்.  60 வயதுத் தாய் இந்திராவின் வெள்ளைச் சேலை அனைத்தும் ரத்தம். அதற்கு கருணாநிதியின் கழகத்தார் மேடைகளில் தந்த பதிலை இன்றும் தன்மானமுள்ள நல்ல காங்கிரஸ்காரர்களும் பழம்பெரும் நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான தமிழக மக்களும் மறக்கவே மாட்டார்கள். அத்தனை கொடுமை. இந்திராவின் "மாதவிலக்கு ரத்தம்' என்றார்கள் மேடைதோறும் கருணாநிதி கட்சியினர். நேரு குடும்ப உறவை கருணாநிதியின் கழகம் எத்தனை உயர்த்திப் பிடித்தது பாருங்கள்?  அதன் பின்னர் பிரதமர் மொரார்ஜி தேசாயால் கருணாநிதிக்கு நேரு குடும்ப உறவைப் புதுப்பித்துக் கொள்ள இன்னொரு வாய்ப்புக் கிடைத்தது. தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா போட்டியிடுவதை ஒத்துக்கொண்ட எம்.ஜி.ஆர்., கடைசி நேரத்தில் அவருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்றார். காங்கிரஸ், சிங்காரவடிவேலை வேட்பாளராக நிறுத்தியது. இதனைப் பயன்படுத்தி, கருணாநிதி உறவைப் புதுப்பித்தார்.  "நேருவின் திருமகளே வருக! நிலையான ஆட்சி தருக' என்று இந்திரா காந்தியையும், "நேருவின் பேரப்பிள்ளையே, அன்னை இந்திராவின் வீரப்பிள்ளையே' என்று சஞ்சய் காந்தியையும் அழைத்தார். என்றும் இல்லாத அளவில் தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு, இரண்டு மக்களவைத் தொகுதிகளை மட்டுமே தந்தனர்.  ஜனதா அரசு செய்த வேலையைக் காங்கிரஸýம் செய்தது. எட்டு ஜனதா மாநில அரசுகளைக் கலைத்தது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சியையும் இந்திரா காந்தியைக் கட்டாயப்படுத்திக் கலைக்க வைத்தார். ஆனால், தமிழக மக்கள் தமிழக ஆட்சியை மீண்டும் எம்.ஜி.ஆர். வசமே தந்தனர்.  திருப்பத்தூர் வான்மீகியின் மறைவால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் திமுக ஆதரவு இருக்கும்போதே எம்.ஜி.ஆர். தானாகவே தனி மேடைகளில் காங்கிரûஸ ஆதரித்து மீண்டும் காங்கிரஸ் உறவைப் புதுப்பித்தார். அதன்பின்னர் இந்திரா, காவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார்.  பெரியவர் வாஜ்பாய், அத்வானி என்று இந்திராவின் அரசியலில் எதிர்முகத் தலைவர்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். நமது முதல்வர் கருணாநிதி மட்டும் இறுதி அஞ்சலி செலுத்தாதது மட்டுமல்ல, சென்னைக்கு வந்த இந்திராவின் அஸ்திக்குக்கூட மரியாதை செலுத்தவில்லை. நேரு குடும்பத்து உறவை அவர் மதித்துப் போற்றிய விதம் இது.  அதைவிடக் கொடுமை அத்தனை பெரிய கொடூரக் கொலையை ஏதோ சாதாரணச் சாவு என்று கருணாநிதி வர்ணித்தார். அவர் தோற்று விட்டாராம். அதனால், இந்திராவின் மரணத்தை, சாவுக்கு வாக்களித்து விட்டார்கள் என்று கேலி செய்தார். எம்.ஜி.ஆரின் நோய்க்கும் இந்திராவின் சாவுக்கும் கிடைத்த வெற்றி என்று தனது தோல்வியை நியாயப்படுத்தினார் கருணாநிதி. நேரு குடும்ப உறவை அவர் பேணிய பெருந்தன்மை, தமிழக மக்களுக்கு மிகமிகத் தெளிவாகத் தெரிந்தது.  காங்கிரஸிலேயே இருந்து இந்திராவிடமும் பதவிகள் பெற்று ராஜீவ் காந்தியோடேயே இருந்த வி.பி.சிங், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு போஃபர்ஸ் ஊழல் என்றபோது தமிழ்நாடு முழுவதும் அட்டை பீரங்கிகளை வைத்து அட்டகாசம் செய்தவர் இதே கருணாநிதி. அதைக் காங்கிரஸôர் மறந்திருக்கலாம். மக்கள் மறந்துவிட்டிருக்க மாட்டார்கள்.  பிகார் தலைநகரம் பாட்னாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் வி.பி. சிங்கோடும் பல வட நாட்டுத் தலைவர்களோடும் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, "நான் ஒன்றும் வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தவனில்லை' என்று ராஜீவ் காந்தியைக் கேலி செய்தார்.  அன்னை சோனியா என்கிறாரே இன்று, அவரைத்தான் வெளிநாட்டுப் பெண் என்றார். இன்று தமிழகத்தில் பதவிகளில் வீற்றிருக்கிற காங்கிரஸ் பெரியவர்கள் யாரேனும் சோனியாவிடம் இதைச் சொல்வார்களா? அனைவரும் கருணாநிதி காங்கிரஸில் அல்லவா இருக்கின்றனர்; அவருக்குக் குற்றேவல் புரியும் இவர்களால் உண்மையை எடுத்துரைக்க முடியுமா?  நண்பர் வைகோவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அன்றுதான் வி.பி.சிங்., நண்பர் வைகோ போன்றவர்களுக்கும் வரலாறு தெரியாது என்று தெரிந்து கொண்டனர் அறிஞர் பெருமக்கள்.  பாட்னாதான் சந்திரகுப்த மெüரியன் என்ற மாபெரும் மன்னனது ஆட்சித் தலைநகரம். அதன் பெயர் பாடலிபுத்திரம். அந்த சந்திரகுப்த மெüரியன் செல்யுகஸ் நிகோடர் என்கிற கிரேக்க வீரனின் தங்கையை மணந்திருந்தான். அங்கே போய் நான் ஒன்றும் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவனில்லை என்றார் கருணாநிதி. அவருக்கு வரலாறு தெரியாதென்றால் புரிகிறது. மற்றவர்களுக்கு? நேரு குடும்ப உறவை சோனியா வெளிநாட்டுக்காரர் என்ற விமர்சனத்தின் மூலம் புதுப்பித்துக் கொண்டார் கருணாநிதி.  வி.பி.சிங்கை, தமிழ்நாட்டுக்குக் கூட்டிவந்து சமூகநீதி காத்த வீரர் என்று புகழாரம் சூட்டுகிற போதெல்லாம், ராஜீவ் காந்தியின் மீது அவர் வீசிய சொல்லம்புகள் நேருவின் குடும்பத்தின் மீது அவருக்கிருந்த பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தேர்தலின்போது ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிலே படுகொலை செய்யப்பட்டார். அவரது பூத உடலுக்குக் கருணாநிதி மரியாதை செலுத்தினாரா?  அவரது அஸ்தி தமிழகத்துக்கு வந்ததே, அப்போதேனும் மரியாதை செலுத்தினாரா? நேருவின் குடும்பத்தோடு அவர் கொண்ட உறவின் பெருமைகள் இவை. இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியுமா?  நேரு பிரானை மிகப்பெரிய இசையரசியோடும் மவுண்ட் பேட்டன் மனைவியோடும் சேர்த்து மேடைகள்தோறும் மிகக் கேவலமாக நையாண்டி செய்து விமர்சித்த திராவிட இயக்கம், நேரு குடும்பத்து உறவு குறித்துப் பேசுவது விந்தையிலும் விந்தை!  இதுபற்றி கேள்வி கேட்க ஒரு காங்கிரஸ்காரனாவது இருக்கிறானா, தமிழகத்தில்? "திமுகவுடனான எங்களது உறவு தொடரும்' என்று கிளிப்பிள்ளைபோலப் பேசி, அவரவர் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் நினைவாற்றல் என்பதே இல்லாமல் போய்விட்டது. கழகக் காங்கிரஸ்காரர்களுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை.  நமது தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வள்ளுவப் பேராசானின் வழியொற்றி நடப்பவர்கள். கருணாநிதிக்கு நன்றிக்கடன்பட்டவர்கள். இவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு திருக்குறள் - "நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பதுதான். இதற்கு நேர்மாறானது கருணாநிதியின் அரசியலில் குறளோவியம் என்று யார் போய் சோனியாவிடம் எடுத்துரைப்பது?
கருத்துக்கள்

1.நேருவிற்குக் கருப்புக்கொடி காட்டியது சென்னையிலா? மதுரையிலா? 2. கட்டுரையில் குறிப்பிட்டவற்றை எல்லாம்தாண்டித்தான் தி.மு.க. காங்.கூட்டணி ஏற்பட்டு 40 இற்கு 40 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றன. அரசியலில் சூழலுக்கேற்ப மறக்கவும் நினைக்கவும்படக்கூடிய செய்திகளை இப்பொழுது கூறுவதன் காரணம் ஏதோ புதிதாகக் கூட்டணி அமைவது போலும் அதனைத் தடுப்பதற்காகவும் என்பதாக அமைந்துள்ளது. மாறாகத் தமிழினக் காவலர் ஈழத்தில் தமிழினத்தை அழித்த- மீனவத் தமிழர்களை அழிக்கும் - காங். உடன் கூட்டணி வைத்துள்ளது குறித்தும் வைப்பது குறித்தும் கேள்வி கேட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். கட்சி மாறும் அரசியல் கட்சிகளுக்கேற்ப கட்டுரையாளர் தடம் மாறுவது போலும் கலைஞரும் தடம் மாறுகிறார். அதில் கடந்த காலம் முதனமை பெறுவதில்லை. நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமே முதன்மை பெறும். கட்டுரையாளர் யாருடைய ஊதுகுழலாகவோ மாறுவதை விடத் தன்னை வளர்க்கும் தமிழின் பாதுகாவலாகத் திகழட்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்