சிதம்பரச் சூத்திரத்தைப் பின்பற்றலாம் என எண்ணி, வாக்குப் பதிவிற்கும் எண்ணிக்கைக்கும் இடையே 1 மாத இடைவெளி போலும்! பிற மாநில வாக்குப் பதிவு என்பது போலிக்காரணம். தேவையற்ற திருட்டுத்தனம், வழிப்பறி முதலானவற்றிற்கே வழி வகுக்கும்.
வாக்குப் பதிவு அன்று உள்ளுக்குள் வைக்கப் போகுமஒப்பாரியை வெளிப்படையாக வைக்க 1 மாதம் தேவையல்லவே!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி/
Last Updated :
சென்னை, மார்ச் 1: தமிழகம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குப் பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், புதிய திட்டங்கள், அறிவிப்புகளை தமிழகம், புதுச்சேரி அரசுகள் அறிவிக்க முடியாது. தமிழக சட்டப் பேரவையின் காலம் மே 16-ம் தேதியும், புதுச்சேரி பேரவையின் காலம் மே 28-ம் தேதியும் முடிவடைகின்றன. இதையடுத்து சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் தேதிகளை முடிவு செய்வது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி தலைமையில் தில்லியில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை குரேஷி வெளியிட்டார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகம், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதியும் நடைபெறுகின்றன. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை: தமிழகத்தில் மொத்தம் 4.59 கோடியும், புதுச்சேரியில் 8 லட்சத்து 5,124 வாக்காளர்களும் உள்ளனர். அவர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதமும், தமிழகத்தில் 99.9 சதவீதமும் அடையாள அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகள்: தேர்தல் பணியில் மத்திய மற்றும் தேர்தல் நடைபெறும் மாநிலத்தைச் சாராத பிற மாநில போலீஸôர் ஈடுபடுத்தப்படுவர். மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கைக் காப்பதற்கு போலீஸ் உயரதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும். பதற்றமான இடங்களில் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு, தேர்தல் சுதந்திரமாக நடைபெற வழிவகுக்கப்படும். தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்க பல்வேறு வகைகளிலான பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்கும் பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் என மாவட்டம்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். கேமரா மூலம் கண்காணிப்பு: வேட்புமனு தாக்கல், மனுக்கள் பரிசீலனையில் தொடங்கி அனைத்து நடவடிக்கைளும் விடியோ படம் எடுக்கப்படும். வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், முக்கியமான பொதுக் கூட்டங்கள், தபால் வாக்குகளை அனுப்பும் நடவடிக்கை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் விடியோ மூலம் படம் எடுக்கப்படும். பதற்றமானவை என கருதப்படும் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் டிஜிட்டல் கேமரா மூலம் படம் பிடிக்கப்படும் என்றார் குரேஷி. ஒரு மாத அவகாசம்: தமிழகத்தில் தேர்தல் பணியில் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 54 ஆயிரத்து 19 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குப் பதிவு தேதிக்கும், வாக்கு எண்ணிக்கை தேதிக்கும் சரியாக ஒரு மாத இடைவெளி உள்ளது. இதுபோன்று வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்ட கால இடைவெளி இருப்பது இதுவே முதல் முறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் அட்டவணை தமிழகத்தில் 234 தொகுதிகளும், புதுவையில் 30 தொகுதிகளும் உள்ளன. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஒரே நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் - மார்ச் 19 மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 26 மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28 மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 30 வாக்குப் பதிவு - ஏப்ரல் 13 வாக்கு எண்ணிக்கை - மே 13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக