ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

Pot for old people found at panrutti : முது மக்கள் தாழி

பண்ருட்டி, பிப். 26: பண்ருட்டி வட்டம் சூரக்குப்பம் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியும், அதனுள் இருந்த மண்பாண்டங்கள், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உலகமும், மனித இனமும் தோன்றிய நாள் முதல், மனிதர்களின் நாகரிகங்களும், கலாசாரங்களும் ஓவ்வொரு நூற்றாண்டுக்கும் மாறுபட்டும், வேறுபட்டும் வந்துள்ளன. உணவிலும், உடையிலும், அணிகலன்களிலும், வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதிலும் காலம் காலமாக புதிய புதிய பரிணாமங்கள் கையாளப்பட்டு வந்துள்ளன.மனிதர்கள் இறந்தபோன பின்னர் செய்யப்படும் ஈமச்சடங்குகளிலும் இப்படிப்பட்ட மாற்றங்கள் காணப்பட்டு வந்துள்ளது. அவற்றில் ஒன்று ஈமத்தாழி எனப்படும் முதுமக்கள் தாழியாகும். இதுபோன்ற தாழிகள் நிறைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ள சூரக்குப்பம் கிராமப் பகுதியில் இதுபோன்ற தாழிகளை கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் அண்மையில் கண்டறிந்தார்.இதுகுறித்து தினமணி நிருபரிடம் அவர் கூறியது:முதுமக்கள் தாழிகளின் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. மன்னர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை அவர்கள் இறந்தவுடன் இதுபோன்ற தாழிகளில் வைத்து புதைக்கும் வழக்கம், சங்கக் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் 100 வயதுக்கு மேல் கடந்து முதிர்ந்து நடக்க முடியாமல் உடலின் கழிவுகளை இருக்கும் இடத்திலேயே போக்கி குடும்பத்தினரையும், உறவினர்களையும் முகம் சுளிக்க வைத்த மூத்தோர்களின் செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நீராட்டி, தூப தீபம் காட்டி இதுபோன்ற தாழிகளுக்குள் இறக்கி வைத்துவிடுவர்.அந்த தாழிக்குள் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், தண்ணீர், கள் போன்றவற்றை பாத்திரங்களில் வைத்து அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து தாழியை மூடி விடுவர். சுவாசிக்கும் காற்று அடைபடுவதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விடுவர். ஒரு வகையில் இதை கருணைக் கொலை என்றும் கூட கூறலாம்.இவ்வழக்கில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு ஞானிகளும், முனிவர்களும் தங்களின் இறப்புக்கு தாங்களே நாள் குறித்து அந்த நாளில் தங்கள் சீடர்கள் முன்னிலையில் தாழியில் அமர்ந்து மூடச் செய்து இறைவனை தியானித்து உயிர் நீர்த்தவர்களும் உண்டு என்கிற செய்தியும் வரலாற்று இலக்கியங்களால் அறியப்படுகிறது.இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் கோடிக்கணக்கில் தமிழகம் முழுவதிலும் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாழிகள் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பூமியை தோண்டியபோது உடைந்து கிடைத்தன. இப்பகுதியில் இதுபோன்ற தாழிகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளன.இங்கு கிடைத்த தாழியின் சுற்றளவு 190 செ.மீ, உயரம் 56 செ.மீ என ஒரு தாழிக்கு மேல் மற்றொரு தாழியாக 4 அடுக்குகள் கொண்ட தாழியாக மொத்தம் 224 செ.மீ. உயரத்துக்கு காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பு கிடைப்பது மிகமிக அரிதாகும்.பொதுவாக இதுபோன்ற முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புகளும், மண்ணால் செய்யப்பட்டு சூளையிட்ட உணவு தட்டுகளும், குடுவைகளும், விதவிதமான கலயங்களும், விளக்குகளும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் காணப்படும். அதுபோன்றே இந்த தாழியிலும் கண்டு பிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் அச்சில் வார்த்தது போல் துல்லியமாக செய்யப்பட்டுள்ளன. இவை அக்காலத்து மண்பாண்டக் கலையின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன.சில ஊர்களில் கிடைத்துள்ள தாழிகளில் போர் வீரர்கள் பயன்படுத்திய சிறிய, பெரிய கத்திகள், குறுவாள்கள், ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள் துருபிடித்துள்ள நிலையில் கிடைத்துள்ளன. அதுபோன்று இந்த தாழியில் ஏதும் காணப்படவில்லை. இந்த தாழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக