சனி, 5 மார்ச், 2011

முறிகிறதா திமுக - காங்கிரசு உறவு?

எப்படியாவது காங். பீடை ஒழிந்தால் தி.மு.க.விற்கு நல்லதுதான். அறுபதிற்கே ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. போகட்டும். அவர்கள் கூட்டியுள்ளதால் தி.மு.க. ௬௦ ஐ ௫௦ ஆக்கட்டும்.
அப்பொழுதுதான் காங். அலறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

/தமிழே விழி! தமிழா விழி!/ 

முறிகிறதா திமுக - காங்கிரஸ் உறவு?


சென்னை, மார்ச் 4: திமுக - காங்கிரஸ் கட்சி இடையிலான 7 ஆண்டு கால உறவு முறிந்துவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 90 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகளைத் தொடங்கியது காங்கிரஸ். இருந்தாலும் திமுக கூட்டணியில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு முறையே 31, 10 தொகுதிகள் என முடிவானபோது காங்கிரஸýக்குக் கிடைக்கக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து போனது.  குலாம் நபி ஆசாத் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய பிறகும் முடிவு ஏதும் ஏற்படவில்லை. அதிக தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காமலே இருந்தது.  அதன் பிறகு சிறிது நேரத்தில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. தாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக கொங்குநாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அறிவித்தனர்.  மீதி 182 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 55 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.  இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், முடிந்தவரை அதிக தொகுதிகள் பெறுவதற்கு முயற்சித்தனர். இறுதியாக 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.  அதுமட்டுமின்றி தொகுதிகளை அடையாளம் கண்டு, தொகுதிப் பெயர்களையும் இப்போதே இறுதி செய்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்பியது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரு கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் "பேக்ஸ்' மூலமாக, தொகுதிகள் பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.  ஓரளவுக்கு தொகுதிப் பங்கீடு, தொகுதிகள் அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வெள்ளிக்கிழமை இரவு கருதப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளைக் கேட்பதாகவும், எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் தர வேண்டும் என்றும் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு கேட்பது நியாயம்தானா என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.  திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. அப்போது காங்கிரஸின் இந்த நிபந்தனைகள் பற்றி விவாதித்து உரிய முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  பிற கட்சிகளுக்கு கொடுத்தது போக காங்கிரஸ் கட்சிக்கு 51 தொகுதிகள் கிடைக்கும் என்ற நிலையில் தொடங்கி, படிப்படியாக அது 60 என்ற நிலையில் முடிவாகும் சூழ்நிலையில், மறுபடியும் 63 என்று கேட்பதால் கருணாநிதி கோபம் அடைந்திருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.  எனவே சனிக்கிழமை நடக்கும் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  வெள்ளிக்கிழமை இரவு வரையில் அதிமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், இரவு 9.30 மணிக்கு ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அதன்படி தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் இனி தேமுதிகவும் அந்த அணியில் சேர முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. எனவே கூட்டணியில் புதிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:  "தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக 132 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும்,பாமக 31 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 10 இடங்களிலும் போட்டியிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.  மேலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட 23 இடங்களில், இப்போது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக மீதமுள்ள இடங்களை திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது. இவ்வாறு கணக்கிட்டபோது காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. ஆனால் இந்த இடங்களை அதிகமாக்க வேண்டுமென்று கேட்ட காரணத்தால் 51 இடங்கள் என்பதை 53 ஆக்கி, பின்னர் 55, 58 இறுதியாக 60 இடங்கள் என தெரிவிக்கப்பட்டது.  இதை கட்சி மேலிடத்தில் தெரிவித்துவிட்டு உறுதி செய்வதாக குலாம் நபி ஆசாத் கூறினார். ஆனால், அதன்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.  மேலும் அந்த 63 இடங்களையும் அவர்களே நிச்சயித்து கேட்கும் தொகுதிகள் அத்தனையையும் தரவேண்டும் என்றும் கூறுகின்றனர்.  காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் என ஒப்புக்கொண்ட நிலையில், பாமக-வுக்கு 31 இடங்கள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 10 இடங்கள், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு இடம் என ஒதுக்கியதுபோக, திமுக-வுக்கு 122 இடங்கள் மட்டுமே எஞ்சின.  இந்த நிலையில் காங்கிரஸ் 63 இடங்கள் கேட்பதும், எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என கூறுவதும் முறைதானா என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டும்' என்று வினவியுள்ளார் கருணாநிதி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக