வெள்ளி, 19 நவம்பர், 2010

இராசா பதவி விலகல் . . . .


குற்றமற்றவர் என்று சொல்லி விட  முடியாது என்றும் குற்றவாளி என்று கூறி விட முடியாது என்றும் குழப்புகிறார். கோவனின் உளறல்களுக்கு ஊடகங்கள் முதன்மை  கொடுக்கும் பொழுது இன்னும் உளறலாம்; இனியும் உளறலாம். குற்றவாளி என்றால் கூட்டுப்பொறுப்பிற்குரிய காங்.கும் குற்றவாளி ஆகும். குற்றமற்றவர் என்றால் தி.மு.க.விற்கு உதவியதாக அமையும். எனவே, எப்படி உளறல்களை உதிர்ப்பது என்று புரியாமல் ஏதோ இரண்டையும் இடைவிட்டுக் கூறி ஏமாற்றுகிறார் என்றால் நீங்களும் வெளியிடலாமா?
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
"ராசா ராஜிநாமா செய்ததாலேயே குற்றமற்றவரல்ல': ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


விழுப்புரம், நவ.18:  மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததாலேயே ஆ. ராசா, குற்றமற்றவர் என்று சொல்லிவிட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) விழுப்புரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பா.ஜ.க, கம்யூனிஸ்ட், அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக ஆ.ராசா ராஜிநாமா செய்தார்.ராசா ராஜிநாமா செய்ததினாலேயே அவர் குற்றமற்றவர் என்று சொல்லிவிட முடியாது. விசாரணை செய்து தீர்ப்பு வந்தபிறகு உண்மை தெரியும்.இதைக் காரணம் காட்டி பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையை முடக்குவது தவறு. ஜனநாயகத்தில் இது தவறான நடவடிக்கை.கர்நாடக முதல்வர் எடியூரப்பா  6 ஆயிரம் கோடியில் நிலமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. மற்ற கட்சிகளைக் குறைகூறும் பாஜக, தன் கட்சியின் எடியூரப்பாவை ராஜிநாமா செய்ய சொல்வார்களா?, அவரை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.அலைக்கற்றை விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்முன்பே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. பொதுக் கணக்கு தணிக்கைக் குழுத் தலைவர் மனோகர் ஜோஷியின் விசாரணைக் குழு போதுமானது.மக்களவைக் குழு விசாரணை தேவையில்லை. பாஜக விசாரணை தேவை என்கிறது, அப்படியென்றால் தன் கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷியின் விசாரணையையே அவர்கள் நம்பவில்லை என்றுதானே அர்த்தம்.முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது, உண்மைக் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றார்.முன்னதாக மாநில ஒருங்கிணைப்புச் செயலர் எஸ்.வி. தட்சிணாமூர்த்தி, மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் எஸ். ஆறுமுகம், நகரத் தலைவர் டி. சங்கர், இளைஞர் காங்கிரஸ் ஏ. சத்யா, ஒன்றியச் செயலர்கள் வெங்கடேசன், ராஜமாணிக்கம், மாயாண்டி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குற்றமற்றவர் அல்லர் எனக் குறிக்க வேண்டும். பிழையின்றி எழுதுவதை வெளியிடும் தினமணியில் இது போன்ற பிழை ஏற்படாமல் விழிப்பாக இருக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக