திங்கள், 25 அக்டோபர், 2010

ஏழுகடல் நீரும் கழுவிடா களங்கம்


1991-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் நசிந்து அன்னியச் செலாவணி இருப்பு அதலபாதாளத்துக்குச் சென்றிருந்தது. இந்தியாவுக்கு எதையும் ஏற்றுமதி செய்ய உலக நாடுகள் தயங்கின. நிலைமையைச் சமாளிக்க, பிரதமர் சந்திரசேகர் அரசு சர்வதேச நிதியத்திடம் உதவிகோரியது. தங்கத்தை அடகு வைத்தால் மட்டுமே கடன்வாங்க முடியும் என்ற நிலை. தாலியை அடகு வைத்து மகனைப் படிக்க வைக்கும் தாய்போல், 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குள் நாட்டின் 67 ஆயிரம் கிலோ தங்கம் இங்கிலாந்து வங்கிக்கும், சுவிட்சர்லாந்து வங்கிக்கும் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் மானம் விமானம் ஏறிவிட்டதாக அன்று விமர்சனம் எழுந்தது. அவ்வாறு நிமிர்த்தப்பட்ட பொருளாதாரம்தான் அடுத்து வந்த நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள் வேரூன்றக் காரணமாக இருந்தது.  18 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே சர்வதேச நிதியத்திடமிருந்து இந்திய ரிசர்வ் வங்கி 2 லட்சம் கிலோ தங்கத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது. தாராளமயமாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தது, தொழில்மயமாதல் முடுக்கிவிடப்பட்டது, அன்னிய முதலீடும் அதிகரித்தது. அவை எல்லாவற்றையும்விட அசுர வேகத்தில் வறுமையும் அதிகரித்தது. இதற்கான காரணம் என்னவென்று ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அதையே தேடிக்கொண்டிருக்கிற மேய்ப்பனைப் போன்று, பூதக்கண்ணாடி வைத்துத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் பூதக் கண்ணாடி வாங்கியதில் எவ்வளவு ஊழல் என்பதை எதை வைத்துத் தேடுவது என்பதுதான் தெரியவில்லை. குடிமக்களைப் பொறுத்தவரை, கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதும் ஊழலைப் பற்றிப்  பேசுவதும் ஒரே மனநிலையிலான செயல்பாடாகிவிட்டது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று நினைக்கும் அளவு ஊழல் நம் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டது. மத்தியிலும் மாநிலங்களிலும் பல கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், காஷ்மீர்ப் பிரச்னையில் கருத்துவேறுபாடு, அயோத்தி சர்ச்சையில் முரண்பாடு, சேது சமுத்திரத் திட்டத்தில் நேரெதிர் நிலைப்பாடு என்று மோதிக்கொண்டாலும், ஊழல் அரக்கனை வளர்த்துவிடுவதில் அரசியல் கட்சிகள் தேசிய அளவில் கூட்டணி வைத்துச் செயல்படுகிறதோ என்னும் ஐயம் எழுகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து கடந்த 63 ஆண்டுகளில் பணவீக்கம், போர், பஞ்சம், இயற்கைப் பேரிடர் என்று எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாமல் ஊழலைப் போற்றி வளர்த்திருக்கும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.  சமீபத்தில் ஒரு ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடே திரும்பிப் பார்க்கும் அளவு ஒரு கருத்தைத் தெரிவித்தது. ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் லஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும், அதிகாரிகளுக்கும் வீணாகப் பேரம் பேசித் தங்களுடைய வேலைநேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று அங்கதமாகக் குறிப்பிட்டது. நாட்டில் நிலவும் ஊழலின் பரிமாணம், ஒட்டுமொத்த தேசத்தின் ஊறுபட்டுக்கிடக்கும் உளப்பாங்கைப் பிரதிபலிக்கிற அவலத்தை அகற்ற வேண்டும் என்று துணிகிற ஒரு தலைவன் தொடுவானம்வரை கண்களுக்குத் தெரியவில்லை.  1949-ம் ஆண்டு நேருவின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கின் தந்தையான ராவ் பகதூர் சிங் ஒரு வைர வியாபாரியிடம்   25 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காகச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அங்கு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை அரசு மேல்முறையீடு செய்து,  அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கித்தந்து, அவரைக் கட்சியிலிருந்தும் நீக்கியது. இப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றவர்களைத் தன்பக்கம் இழுத்து, ஊழலின் பலனை பங்குபோட்டுக்கொள்வதிலே அரசியல் கட்சிகளிடையே கடும்போட்டி நிலவுகிறது.  இந்திரா காந்தியின் மரணத்துக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி, 1984-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நேருவே கண்டிராத பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தபோது, கடல் முத்தை உமிழ்வது போன்று ஒன்றைச் சொன்னார். மத்திய அரசு மக்கள்நலத் திட்டங்களுக்குச் செலவிடும் ஒரு ரூபாயில் 15 காசுகள்தான் மக்களைச் சென்றடைகிறது என்றார். சுதந்திரத்துக்குப் பிறகு, அவருடைய அன்னை இந்திரா காந்தியும், தாத்தா நேருவும்தான் நாட்டை நீண்டகாலம் ஆண்டவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அவர் திருவாளர் பரிசுத்தம் என்ற அடைமொழியோடு ஆட்சியைத் தொடங்கினார். ஆனால், சூழ்நிலை காரணத்தால் போபர்ஸ் என்னும் ஊழல் சூறாவளி அவருடைய அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. இன்றளவும், ஒரு ரூபாயில் 15 காசுகள்தான் மக்களைச் சென்றடைகிறது என்னும் அவருடைய சத்தியவாக்கு ஊழல்களின் ஊற்றுக்கண்ணை அடையாளம் காட்டுவதாகவே இருக்கிறது.  தங்கத்தை அடகு வைத்துச் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பலன் வறுமையை ஒழிக்க உதவவில்லையே என்னும் ஏக்கத்துக்கான விடை மெகா ஊழல்களின் பட்டியலில் பொதிந்துகிடக்கிறது. 1991-ம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கப்பட்டது. 1992-ம் ஆண்டு முதல் மெகா ஊழல்களும் வெளிச்சத்துக்குவர ஆரம்பித்தன.  அதிகார வர்க்கத்தினரின் உதவியுடன்  5,000 கோடியை பங்குச்சந்தை மூலம் சுருட்டிய ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் 1992-ம் ஆண்டு ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. அதைத் தொடர்ந்து 1993-ம் ஆண்டில் ஹவாலா ஊழல், 1994-ல் சர்க்கரை இறக்குமதி ஊழல், 1996-ல் உர இறக்குமதி ஊழல், பிகார் மாட்டுத்தீவன ஊழல், 1997-ல் காங்கிரஸ் அமைச்சர் சுக்ராம் ஊழல், 2001-ல் யுடிஐ ஊழல், 2003-ல் போலி முத்திரைத்தாள் மோசடி, 2005-ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், 2006-ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், 2008-ல் பூனாவைச் சேர்ந்த ஹசன் அலி கான்  1,17,065 வருமான வரி ஏய்ப்பு ஊழல், 2009-ல்   8,000 கோடி சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், இப்போது பேசப்படுகிற ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று இந்தப் பட்டியல் கலைமாமணி விருதுப் பட்டியலைப்போல நீள்கிறது.   தில்லியில் நடந்தேறிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஊழல் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.  70,608 கோடி அளவிலான மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கும் இந்தப் போட்டியில்,  8,000 கோடி அளவு ஊழல் நடந்திருப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு சூறையாடுவதற்காகவா ஆதரவற்ற முதியவர்களுக்கான  171 கோடியும், தாழ்த்தப்பட்டவர்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட  744 கோடியும் காமன்வெல்த் போட்டிகளுக்காகத் திருப்பிவிடப்பட்டது என்று எண்ணும்போது நெஞ்சு பதைக்கிறது.  ஐந்தாண்டுத் திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள் இப்படி மெகா ஊழல்களாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. ஆண்டுதோறும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிற மத்திய பட்ஜெட் வறுமை ஒழிப்புக்குச் செய்வதைவிட செல்வந்தர்களின் செழிப்புக்கு செய்வதுதான் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு  1 லட்சத்து 47 ஆயிரத்து 209 கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன்  1 லட்சத்து 49 ஆயிரத்து 633 கோடியாக உயர்ந்தது. அதாவது, சில மணி நேரத்தில் அவருடைய சொத்து மதிப்பு  2 ஆயிரத்து 424 கோடி அதிகரித்தது. எல்லா மெகா கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பும் இவ்வாறுதான் பெருகிவருகிறது. ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பாசனத்துக்காக 10 லிட்டர் டீசல் வாங்கப் பணம் எடுத்துச் சென்ற விவசாயி, விலை உயர்வு காரணமாக 8 லிட்டர் டீசலை வாங்கிக்கொண்டு சோகம் கப்பிய முகத்தோடு வீடு திரும்புகிறார். அதனாலென்ன, பிரணாப் முகர்ஜி இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த நிதி அமைச்சர் என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியே இந்தியர்களின் மகிழ்ச்சிக்குப் போதுமல்லவா!      ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அலெக்ஸôண்டர் கேம்பெல் என்னும் அறிஞர், 1958-ம் ஆண்டு எழுதிய "இந்தியாவின் இதயம்' என்னும் புத்தகத்தில் ஊழலைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, குறைந்தபட்ச வருமானத்துக்கும் அதிகபட்ச வருமானத்துக்குமான இடைவெளி இன்னும் அதிகரித்தால் இந்தியாவில் ஊழல் தலைவிரித்தாடும் என்று எழுதிவைத்தார். அரை நூற்றாண்டுக்குப் பிறகும் ஆட்சியாளர்கள் ஊழலுக்கான காரணத்தையும் அதைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோலையும் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தேசத்தின் அடையாளத்தையே மாற்றிப்போடுகிற ஊழல் என்னும் களங்கம், ஏழு கடல் நீராலும் கழுவிட இயலுமோ என்று அதிர்ச்சியில் உறையவைப்பதாக இருக்கிறது.  ஊழல் செய்தேனும் தம் சந்ததியினருக்கு பெரும் செல்வம் சேர்த்து வைக்க எண்ணுபவர்கள், வறுமைக் கடற்பரப்பில் வளம்கொழிக்கும் மணல் திட்டுகள் புரட்சி அலைக்கரங்களின் புனித வேட்டையில் தப்புவதில்லை என்பதை நினைவில் கொள்ளுவதில்லை.
கருத்துக்கள்

நன்றாக எழுதியு்ள்ளார். ஆனால், இந்த உண்மைகள் அரசியல்வாதிகளைச் சுடுவதில்லையே! ஏன்? அதே நேரம் நேருவின் ஊழலை எதிர்த்த அவரது மருமகனே உயிரிழப்பிற்கு ஆளானதால் அர்ச்சுன் சிங் தந்தை இராவ்பகதூர் சிங் தண்டனை வாங்கித் தரப்பட்டதன் காரணம் நேர்மை நோக்கல்ல! அந்தப் போர்வையில் மாற்றணியினரைப் பழிவாங்கிய செயலாகத்தான் இருக்கும். ஆட்சியாளர்கள் தம்மை நேர்மையாளராகக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்பொழுது ஏதேனும் நாடகம் அரங்கேற்றுவார்கள். அதனைப் பெரிதாக எண்ணிப் போற்றக் கூடாது. மக்களிடம் மண்டிக் கிடக்கும் ஊழல் எண்ணங்களைத் துடைத்துஎறிந்தால் அவர்களால்
தேர்ந்தெடுக்கப்படும் அவர்களின் சார்பாளரகளும் தூய்மையானவர்களாக இருப்பார்கள் எனலாம். மக்களை மாற்றுங்கள். தலைவர்கள் மாறுவார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 4:06:00 AM
அருமையானக்கட்டுரை. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு இந்த ஊழல் பட்டியல போதுமானதா என்பதையும் கட்டுரையாளர் சொல்லி இருந்தால் நம் அரசியல் வாதிகளுக்க சாதிக்க வசதியாக இருந்திருக்கும்.
By A.Kumar
10/25/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக