ஞாயிறு, 24 அக்டோபர், 2010

தேர்தல் தீர்ப்புக்கு பொதுக் கூட்டம் அளவுகோல் அல்ல: முதல்வர் கருணாநிதி

சென்னை, அக். 23: ""தேர்தல் தீர்ப்புக்கு பொதுக்கூட்டம் அளவுகோல் அல்ல'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்த நிலையில், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் கூடுவது குறித்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:"மத்தியில் ஆளுகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், அந்த அணியுடன் தோழமை கொண்டு மாநிலத்தில் திமுக அணியும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன. இந்த ஆட்சிகள் மீது கடுமையானதும், காரசாரமானதுமான தாக்குதலை நடத்தியே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று ஒரு அணியைத் திரட்டுவதற்கான ஆயத்தங்கள் அனைத்திந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இன்றுள்ள அரசியல் நிலையை மாத்திரம் அளந்து பார்த்தோ - எடைபோட்டுப் பார்த்தோ திமுக எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை. அனைத்திந்திய அளவில் ஜாதி, மத வேறுபாடுகள், மதமாச்சரியங்கள், மனித நேயத்துக்கு மாறான செயல்கள், மூடநம்பிக்கைகள் என்ற அடிப்படையில் நடைபெறும் முயற்சிகள் எதுவாயினும், அது இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடியதாகவும், மத நல்லிணக்கத்துக்கு மாறுபட்டதாகவும், திராவிட இன உணர்வுகளைச் சிதைக்கக் கூடியதாகவும், தமிழின்பால் கொண்டுள்ள பற்றினை அசைக்கக் கூடியதாகவும் அமையுமேயானால், அவற்றைப் பொறுத்துக் கொண்டு வாய்மூடி மௌனியாக திமுக இருந்ததும் இல்லை; இருக்கப் போவதுமில்லை.வீறுநடை போட்டு வருகிறோம்: திமுகவின் இந்த உணர்வுகளை - அவற்றின் அடிப்படையிலான லட்சிய முழக்கங்களை, ஒரு குறைந்தபட்ச அளவிலான பொதுத் திட்டங்களாக அமைத்துக் கொண்டுதான், இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தேர்தல் அல்லாத நேரங்களிலும் கூட கட்சிகளின் தோழமை அணிகள் உருவாகி இருக்கின்றன. அந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வீறுநடை போட்டு வருவதுதான் திமுக.ஒரு கட்சியைப் பொறுத்தவரை தேர்தலுக்காக எடுத்து வைக்கும் திட்டங்கள், கொள்கைகள், அவற்றை நிறைவேற்றும் பாங்குகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தலுக்கு முன்பு அந்தக் கட்சியின் பிரசாரத்துக்காகக் கூடுகிற அல்லது கூட்டப்படுகின்ற கூட்டத்தையே அளவாக வைத்துக் கொண்டு, எது நல்ல கட்சி அல்லது எது பெரிய கட்சி என தீர்ப்பு வழங்கிட முடியாது.கடந்த 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் அணிவகுத்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டம் திமுகவுக்கு ஏற்பட்டது. அப்போது, காமராஜரும், ராஜாஜியும் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் திமுக அணியை எதிர்த்துப் பேசினார்கள். அந்தக் கூட்டத்தின் புகைப்படத்தைப் பார்த்து, நாம் வெற்றி பெறுவோமா என்பது போல விழிகளை அகல விரித்துப் பார்த்தார் திமுக-இந்திரா காங்கிரஸ் அணியின் தலைவர் இந்திரா காந்தி.ஆனால், ""இதுவரை அரசு புரிந்துள்ள சாதனைகளையும், அடுத்து வரும் ஆட்சிப் பொறுப்பில் புரியவிருக்கும் சாதனைகளையும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்'' என்று இந்திரா காந்திக்கு விளக்கம் அளித்தேன்.தேர்தலில் திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடிய அந்தக் கூட்டம்; கணித்த ஆரூடத்தையும் மிஞ்சி தெருவோரத்தில் நின்ற மனிதர்களின் தீர்ப்பை வென்று காட்டியது.   கூட்டத்தை வைத்துக் கொண்டு...: கூட்டத்தை வைத்துக் கொண்டு வெற்றி தோல்வியை எடைபோட்டு விடக் கூடாது என்பதற்காக அல்ல, நாம் கூறுகிற கருத்துகளை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் தீர்ப்பளிப்பதற்கு கூட்டம் தேவைதான் என்பதில் இருவேறு எண்ணம் இல்லை. ஆனால், கூட்டம் மாத்திரமே அளவுகோல் எனக் கணிப்போர் அதுவே அளவுகோல் என நினைத்துவிடக் கூடாது' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

.பெருந்தலைவரே முன்பு ஒரு முறை நான் பேசினால் கூட்டம் கூட்டமாகத் திரளுகிறீர்கள். ஆனால் வாக்களிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று பேசியுள்ளார். ஆகவே, பொதுவாகக் கூட்டத்திற்கும் தேர்தல் வெற்றிக்கும் தொடர்பிருப்பதாகக் கூற இயலாது. எனினும் இந்த அறிக்கையின் மூலம் அ.இ.அ.தி.மு.க நிகழ்ச்சிக்குப் பெரும் அளவில் மக்கள் திரளுவதை ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, கூட்டம் ஒரு வகை எழுச்சி உணர்வைக் கட்சியினரிடமும் மாற்ற உணர்வை மக்களிடமும் ஏற்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்பதையே விரும்பும் மக்கள் இதுதான் வெற்றி பெறும் கட்சி என்ற முடிவிற்கு வந்து விட்டால் என்னாவது? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக