வெள்ளி, 22 அக்டோபர், 2010

குமரி மாவட்டத்தில் ராஜராஜன் கால கல்வெட்டுகள்


நாகர்கோவில், அக். 21: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் எழுத்திட்டான் பாறையில் கி.பி. 1012 ஆம் ஆண்டை சேர்ந்த ராஜராஜ சோழன் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.  இவற்றைப் பராமரிக்க வேண்டும் என்று இன்டாக் அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.  இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்த குழுவுக்கு தலைமை வகித்த இன்டாக் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன் கூறியதாவது:  கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஊராட்சியிலுள்ள பெரியகுளத்தின் அருகே எழுத்திட்டான் பாறை உள்ளது.  இந்த பாறையில் 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று கி.பி. 1012-ம் ஆண்டு சோழமன்னர் ராஜராஜ சோழனால் எழுதப்பட்டது.  இக் கல்வெட்டு, பெரியகுளக்கரை உடைப்பு எடுத்தால் அதை தடுத்து அணை கட்டி பராமரிப்பதற்காக முதலாம் ராஜராஜ சோழன் 1012-ம் ஆண்டில் நிலக்கொடை வழங்கியதை குறிக்கிறது.  குளத்தைப் பராமரிக்க தவறினால் 85 களஞ்சியம் பொன் தண்டனையாக கொடுக்க வேண்டும். இந்த பணமும் பெரியகுளம் பராமரிப்புக்கு செலவழிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.  மற்றொரு கல்வெட்டு அதன் அருகே 50 அடி தொலைவில் காணப்படுகிறது. இதில் 1597 சித்திரை 14-ம் தேதி எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு குறித்து இதுவரை அறியப்படவில்லை. ஏடுகளில் குறிப்பிடப்படவும் இல்லை.  குலசேகரப்பெருமாள் ரவிவர்மன் காலத்தில் இது எழுதப்பட்டுள்ளது. அங்குள்ள கோயிலுக்கு குரு பூஜைக்கு அரசனால் நிலம் கொடுக்கப்பட்டதை இந்த கல்வெட்டு கூறுகிறது.  இக் கல்வெட்டு மண்ணுக்கு அடியில் பல ஆண்டுகள் புதைந்து இருந்ததால் எழுத்துகள் மங்கிவிட்டன.  இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளுக்கும், ராஜராஜ சோழன் கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளுக்கும் மிகவும் வேறுபாடுகள் உள்ளன.  மேலும் ஒரு கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. இந்த கல்வெட்டின் எழுத்துகளுக்கும் 2-வது கல்வெட்டின் எழுத்துகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகத் தெரிகிறது.  இந்த பழமையான 3 கல்வெட்டுகளும் எந்த பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றன.  இவை அழியும் தருவாயில் இருப்பதால் இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல்வெட்டுகளை சுற்றிலும் சிமென்ட் தூண்கள் அமைத்து கம்பி வேலியிட வேண்டும் என்றார் லால்மோகன்.  இன்டாக் அங்கத்தினர்கள் கல்வெட்டு அறிஞர் செந்தீ நடராசன், ஆசிரியர் ஆப்ரகாம் லிங்கன், ஜெபர்சன், சந்திராசிங், ஜார்ஜ், வார்டு உறுப்பினர் எஸ். ஸ்ரீகுமார், அருள் அமலன், ஆதிகேசவன், ஏ. ராஜாமணி உள்ளிட்டோர் ஆய்வு குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக