சனி, 23 அக்டோபர், 2010

natpu மீபத்தில் மாவட்டவாரியாகத் தன் கட்சியினரைச் சந்தித்துவரும் தி.மு.க தலைவரான கருணாநிதியின் பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தமிழக அரசியலை இயல்பாகக் கவனித்து வரும் யாரும் உணர்ந்துகொள்ள முடியும். அதில் அவர் தொடர்ந்து வலியுறுத்தும் விஷயம் - உள்கட்சி ஒற்றுமை. அப்படியொரு ஒற்றுமை இருந்தால் ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும் தி.மு.க வை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
தன்னைக் குறைத்து மதிப்பிட்டு சர்வே ஒன்று ஒரு நாளிதழில் வெளிவந்ததற்காக அந்த நிறுவனம் பட்டபாடு தமிழகத்திற்குத் தெரிந்த ஒன்றுதான். உட்கட்சிப் பிரச்சினை எந்தெந்த விதங்களில் எல்லாம் தி.மு.க வில் வெடித்திருக்கிறது என்பதும் பலருக்கும் தெரியும். தி.மு.க வில் இருக்கும் மோதல்கள் குறித்த பத்திரிகைச் செய்திகள் - அ.தி.மு.க ஆட்சியின்போது வெளிவந்த தகவல்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான். முதல்வர் கருணாநிதி இப்போதும் அடிக்கடி உட்கட்சி ' ஒற்றுமை' பற்றிக் குறிப்பிடக் காரணம் என்ன?  இல்லாமல் போனதால்தானே!
natpu நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தபோது காங்கிரசுக்கு தி.மு.க மீது இருந்த மதிப்பு இப்போதும் இருக்கிறதா? சோனியாவைத் தேடிப்போய்ப் பார்க்க வேண்டிய நிலையில்தான் மூத்த தலைவரான கருணாநிதியும் இருக்கிறார். தமிழகத்திற்கு வரும் ராகுல்காந்தி கருணாநிதியைப் பார்ப்பதைத் தவிர்க்கும்போது இவர் மட்டும் விமான நிலையத்திற்குப் போய் சோனியாவைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
காரணம் - ஒன்று தான். மத்திய அரசுக்குச் சிக்கல் ஏற்படுத்தும் விதத்தில் பூதாகரமாக வளர்ந்து நிற்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். அந்தத் துறை சார்ந்த ராசா மீது குற்றச்சாட்டுகள் வலுத்துக் கொண்டிருக்கும் நிலையில் - காங்கிரசுக்கு அதனால் ஏற்படும் தர்மசங்கடத்தையும் தி.மு.க உணர்ந்திருக்கிறது. ராசா மீது எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்று தி.மு.க தொடர்ந்து வற்புறுத்தினாரும் அது காங்கிரஸ்.தி.மு.க உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.
காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் - ஊழலை மட்டும் ஒரு காரணமாக வைத்து தி.மு.க அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தால் - காங்கிரசுக்கும் அதே குற்றச்சாட்டு பொருந்தாதா என்று தி.மு.க பதிலுக்குக் கேள்வி எழுப்பலாம். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்படும் தொகை - ஒரு லட்சம் கோடியைத் தொடுமளவுக்குப் போயிருப்பதும், தமிழ்நாட்டு ஊடகங்களில் அது குறித்த செய்திகள் அவ்வளவாக வராத நிலையில் வட இந்திய ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் தலையாயப் பிரச்சினையாக இன்று வரை அடிபட்டுக் கொண்டிருப்பதும் காங்கிரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய அவசியத்தை - அதனால் ஏற்படும் இழப்பைப் பொருட்படுத்தாமல் யோசிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரசுக்கு உருவாகியிருக்கிறது.
natpu வாரிசு மோதலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் தற்போது தி.மு.க வின் அடையாளமாக அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி பெரியார், அண்ணா கொள்கைகளை நினைவூட்டிப் பேசியிருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது மட்டும் அவர்களைப் பேசியாக வேண்டிய அவசியம் தி.மு.க வுக்கு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி நாங்கள் என்கிற அடையாளத்தையும் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது.
பெரியார் விழா, அண்ணா நூற்றாண்டு நூலகம் இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் நடைபெற்றிருக்க முடியுமா என்றும் நாளைக்கு ஒரு வேளை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அந்த நூலகத்தை இடித்துத் தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா என்றும் உடன்பிறப்புகளை உசுப்புகிற விதத்தில் கேட்டிருக்கிறார். தி.மு.க ஆட்சியில் உருவான வள்ளுவர் கோட்டமும்,  பூம்புகார் உள்ளிட்டவற்றை ஆட்சி மாறியதும்natpu இடித்தத் தள்ளிவிட்டார்களா? அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறவில்லையா?  எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தான் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்கள் அமல்படுத்தப்பட்டு அவை இன்று இயல்பாகி விட வில்லையா?
அப்புறம் ஏன் தி.மு.க தொண்டர்களைத் தூண்டும்விதத்தில் இதையெல்லாம் இடித்து விடுவார்கள் என்கிற அச்சத்தை ஏன் கருணாநிதி பரப்ப வேண்டும்? இலங்கையில் சிங்களர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த மாதிரி தமிழகத்தில் நிகழும் என்று எதை வைத்து முடிவுக்கு வந்து ஏன் வீண் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்? காங்கிரசில் முதலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் தி.மு.கவுக்குப் புதிராகத் தெரிந்தார். பிறகு ராகுல் தெரிந்தார். இப்போது சோனியா உட்படப் பலரும் புதிராகத் தெரிகிறார்கள். அதனால் திராவிட நாடு பற்றிப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 'இந்த ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வருமானால் நிச்சயமாக அண்ணா கனவாகி விடுவார்' என்றும் அவரைப் பேச வைத்திருக்கிறது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கிற தொல். திருமாவளவன் காங்கிரசுக்கு எதிரான கண்டனத்தைத் துவக்கி வைத்திருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் மீதான பாசமும் தி.மு.கவுக்கு இப்போது வந்திருக்கிறது. தேர்தல் என்னென்ன உளவியல் மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்துகிறது!
காங்கிரஸ் ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணிக்குப் போகிறதா என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் - காங்கிரஸ் தயவில் தி.மு.க இருப்பதைப் போன்ற தோற்றம் தற்போது ஏற்பட்டிருப்பதை காங்கிரஸ் ஒருவேளை விரும்பலாம். தி.மு.கவுடன் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதிகள் என்பதை வற்புறுத்த இந்தச் சந்தர்ப்பத்தை அது பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
natpu அ.தி.மு.க வெவ்வேறு இடங்களில் கூட்டத்தைக் கூட்டுவது ஒருபுறம் தி.மு.கவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் இன்னொருபுறம் காங்கிரசின் மௌனமும், புதிரான செயல்பாடுகளும் பதற்றத்தை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அதனால் தான் எப்போதோ கீழே போட்டுவிட்ட ஆயுதங்களான திராவிட நாடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, பெரியார், அண்ணா கொள்கைகளை எல்லாம் திரும்பவும் கையில் எடுக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இவற்றைச் சொன்னால் இவற்றின் அர்த்தத்தை உணர்ந்தவர்கள் தி.மு.கவில் நிறையப் பேர் இருந்தார்கள். இப்போது தி.மு.கவில் உள்ள இளைய தலைமுறைக்கு தி.மு.கவில் எந்தக் கோஷ்டியில் இருந்தால் பாதுகாப்பு, வருமானம் வர வாய்ப்பு என்கிற யதார்த்தமான விஷயங்களே நிறைந்திருக்கும் போது - தி.மு.கவில் பழைய கொள்கைகளைத் தூசி தட்டிப் பேசினால் இன்றைய தி.மு.கவில் இருக்கும் இளைய தலைமுறைக்கும் அது புதிராகவே இருக்கும்.


Comments

 Ilakkuvanar Thiruvalluvan said:
கட்சி நிலைப்பாட்டிற்கு எவை தேவையோ அவற்றைக் கலைஞர் பேசியுள்ளார். எனினும் அவற்றிற்கான காரணங்களை யூகி நன்கு அலசி ஆராய்ந்துள்ளார். இருப்பினும் காங். யாரும் சீண்டாத கட்சியாக மாறுவதே தமிழ் நலனுக்கு நல்லது. ஆனால் முதன்மைக் கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு இழந்து வரும் அக்கட்சிக்கு மதிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். தாங்கள் உண்டாக்கும் மாயையில் தாங்களே சிக்குவதால் எக்கட்சியை வேரறுக்க வேண்டுமோ அக்கட்சியையே அடைக்கலம் புகும் அவல நிலைக்குச் செல்கிறார்கள். கொள்கையும் நேர்மையும் தமிழ், தமிழர் நலனும் இருப்பின் அந்த நிலை வராது. இதனை உணர்த்துகிறது கட்டுரை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக