வெள்ளி, 22 அக்டோபர், 2010

தானமேற்பதிலும் தாமதமா?


காôயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா' என்பது சரீரம் குறித்து பட்டினத்தடிகள் கூறிய அற்புதமான கருத்து. மனித வாழ்க்கையில் ஸ்தூல சரீரத்தின் வாழ்வு சில காலம் மட்டுமே. இந்த சொற்ப காலத்திலும் மண்ணுலகில் பிறர் வாழ நற்செயல்கள் புரிந்து விண்ணுலகம் சென்ற பிறகும், உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமே. உடலில் உயிர் உள்ளபோதே நன்மக்களை அலைக்கழிக்கும் சமூகம், உயிரற்ற சரீரத்தை அலைக்கழிப்பதில் வியப்பேதும் இல்லை. சேலம் குகை களரம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.ஜி.சண்முகம் (67), மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசுப் பணியில் இருந்ததால் தனது உடலை அரசாங்கத்துக்கு விட்டுச் செல்வதே பொருத்தம் என முடிவுசெய்து, தனது உடலையும், தனது துணைவியார் உடலையும், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமளிக்க பதிவு செய்த நிலையில், கடந்த 7.10.2010 அன்று அதிகாலை இயற்கை மரணமடைந்தார். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய உறவினர்களுக்காகக் கூட காத்திராமல், அவரது உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கச் சென்றபோது, எம்.பி.பி.எஸ். டாக்டர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால், பல இடங்களில் அலைந்தும் சேலத்தில் எந்த ஒரு மருத்துவரும் சான்றிதழ் அளிக்க முன்வரவில்லை. அன்று மாலை சண்முகத்தின் உடலை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்றபோதும் மருத்துவமனை அதிகாரிகள் உடலை வாங்க மறுத்து விட்டனர். இவ்வாறாக சுமார் 12 மணி நேர அலைக்கழிப்புக்குப் பிறகு வெளி மருத்துவர் ஒருவர் அளித்த சான்றிதழின் பேரில் உடல் தானமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது. கணவரின் உடலுக்கு ஏற்பட்ட அலைக்கழிப்பானது அவரது மனைவியை, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது மட்டுமன்றி, தானும் உடல்தானம் செய்யத்தான் வேண்டுமா என்று சிந்திக்க வைத்துள்ளது. சம்பவ தினமானது வாரவிடுமுறை நாளல்ல என்பதும், அன்றைய தினத்தில் எந்த ஒரு போராட்டமும் மருத்துவமனையில் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் இருந்திருப்பார்கள். அவர்களே சண்முகத்தின் உடலைப் பரிசோதித்து சான்றிதழ் வழங்கியிருக்க முடியும். அல்லது சுகாதார ஆய்வாளர்கள், போலீஸôரிடம் விசாரித்து அறிக்கை வாங்கியிருக்க முடியும். சுமார் 12 மணி நேரமாக, உடலைப் பரிசோதித்து சான்றிதழ் தர எந்த ஒரு மருத்துவரும் முன்வராதது சேலம் மருத்துவர்களின் மனது மரத்துப்போய்விட்டதோ என்ற ஐயத்தை எழ வைக்கிறது. மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்கப்படும் உடலுக்குச் சான்றிதழ் அளிப்பதில் மெத்தனம் காட்டிய அரசு மருத்துவர்கள், சிகிச்சை பலனின்றி இறக்க நேரிடும் உள்நோயாளிகள் மற்றும் விபத்து, கொலை, தற்கொலையால் மரணமடைய நேரிடுபவர்களின் உடலுக்கும், மர்மமான முறையில் மரணமடைந்து அழுகிய நிலையில் வெளியிடங்களில் மீட்கப்படும் உடல்களுக்கும் சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்து சான்றிதழ் அளிக்க எங்ஙனம் முன்வருவார்கள்?  பழங்காலத்தில் இருந்தே நமது சமூகத்தில், இறந்துபோன தங்களது முன்னோர்களின் உடலையும், ஆன்மாவையும் திருப்திப்படுத்தும் நோக்கில், மாதந்தோறும் அமாவாசை, ஆண்டுதோறும் திதியன்று பல்வேறு சடங்குகள் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காலங்காலமாக இருந்துவரும் சடங்குகளைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, உடலைத் தானமளிக்க முன்வருபவர்களை சான்றிதழுக்காக அலைக்கழிப்பது புனிதமான மருத்துவத் தொழிலுக்கு அழகல்ல.  பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் விளைவாக இப்போது ரத்ததானம், கண்தானம் செய்யும் ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆனால், உடல்தானம் குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாகத்தான் மக்களிடம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டிய மருத்துவர்கள், உடல்தான ஆர்வலர்களிடம் மேற்கொள்ளும் மெத்தனப்போக்கு பயிற்சி மருத்துவர்களையும் பாதிக்கும். தமிழக முதல்வர், தனது காலத்துக்குப் பிறகு, தன்னுடைய இல்லத்தை இலவச மருத்துவமனைக்குத் தானமளித்திருப்பது யாவரும் அறிந்ததே. உடல்தானம் அளிப்பவர்களுக்காக அந்தந்த மருத்துவமனைகளில் தனி ஆலோசனை மையங்கள் அமைத்து, விதிமுறைகளைச் சற்றுத் தளர்த்தி, நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து, உடல் தானத்துக்காகப் பதிவு செய்யப்படும்போதே அரசு மருத்துவர் ஒருவரின் தொலைபேசி, கைப்பேசி எண்கள் மற்றும் முகவரிகளை ஆர்வலர்களின் உறவினர்களுக்குத் தெரியப்படுத்த வழிவகை செய்து, உடலை எடுத்துவர இலவச வாகன வசதியும் ஏற்படுத்தி நல்லதொரு தீர்வை ஏற்படுத்தும்பட்சத்தில் நமது முதல்வர் போற்றப்படுவார். வரம் கிடைக்குமா?
கருத்துக்கள்

உடல் கொடை தொடர்பில் நல்ல அறிவுரைகளை க்கட்டுரையாளர் வழங்கியுள்ளார். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்பதை உணர்ந்து மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இறப்பு நேர்ந்த துயரத்திலும் அதனை அடக்கிக் கொண்டு இறந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கும் குடும்பத்தினரின் மன நிலையைப் புரிந்து கொள்ளாமல் காலத்தை வீணடித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பிறருக்குப் பாடமாக அமையும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக