வியாழன், 21 அக்டோபர், 2010

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளிதான்

சென்னை, அக். 20: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளிதான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் அறிக்கை அளித்துள்ளது. உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன் மீதான வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராக உள்ளார். அதனால் அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று கூறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவிவரம்: குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்ற உத்தரவு ஒரு ஆங்கிலம், ஒரு தமிழ் நாளிதழ்களில் பத்திரிகை வெளியீடாக வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அது பத்திரிகைச் செய்தியாகத்தான் வந்தது. தவிர, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்கு அனுப்பப்பட்டுவிட்டார் (எக்ஸ்பேட்ரியேட்). எனவே, அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்ற உத்தரவு பொருத்தமற்றது என்று கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளிதானா என்பதை விசாரணை நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.அந்த வழக்கு நீதிபதி அக்பர்அலி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நீதிமன்றத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.செல்வநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 30-1-87-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர்கள் தலைமறைவானவர்களாக கருதப்பட்டு, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவித்து நீதிமன்றம் கடந்த 30-6-94-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கில் அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக்டோபர் 21) நீதிபதி தள்ளிவைத்தார்.
கருத்துக்கள்

உண்மையை ஒப்புக் கொண்ட நீதிமன்றத்திற்குப் பாராட்டு. இனப் படுகொலைகாரர்களையும் வரவேற்கும் நாம் இவரையும் வரவேற்பதில் தவறில்லை என மக்கள் எண்ணுகிறார்கள். எனவே, இவருக்குத் தண்டனை கொடுப்பதன் மூலம் இனப்படுகொலைகாரர்களுக்கும் அடுத்து தண்டனை வழங்கப்படும் என்பதை உணரத்துவீர்களாக! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக