குற்றவாளி மட்டுமல்ல, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பவரும் தண்டனைக்குரியவரே என்கிறது இந்தியக் குற்றவியல் சட்டம். தவறு செய்பவர்களையும், தவறான நபர்களையும் தனது அமைச்சரவையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதமர் நல்லாட்சி நடத்துவதாகக் கூறினால் அதைவிடப் பெரிய நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது முதலே, பலவித குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து பொறுப்பான பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது நிரூபிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், பொறுப்பான பதவிகளில் அவர்கள் நியமிக்கப்படுவதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விசாரணையே நடத்தப்படாமல் தடுக்கப்பட்டு விடுகிறதே, பிறகு எங்கே நிரூபிப்பது?இப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டன. காங்கிரஸ் தலைமையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நாங்கள் தீர்மானித்து விட்டோம், அவரைப் பதவியில் அமர்த்தியே தீருவோம் என்று செயல்பட்டனரே தவிர, தங்களது வேட்பாளரை மாற்றவில்லை. பதவியில் அமர்ந்துவிட்டால், குற்றச்சாட்டுகள் பிசுபிசுத்துவிடும் என்பது மட்டுமல்ல, சட்டம் எதுவும் செய்துவிடாது என்கிற ஆணவம்தான் காரணம்.தலைமைத் தேர்தல் அதிகாரியாக நவீன் சாவ்லாவை நியமித்தபோது, பாரபட்சமில்லாமல் நடக்க வேண்டிய அந்தப் பதவியில் தனது மனைவியின் பெயரில் ஒரு சமூகசேவை அமைப்பை நடத்தி, அதன்மூலம் பல நிறுவனங்களிடம் சாவ்லா நன்கொடை பெற்றதை அரசு பொருள்படுத்தவே இல்லை. மேலும், சோனியா காந்தியிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்கிற ஒரே காரணத்துக்காக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நவீன் சாவ்லா நியமிக்கப்பட்டார் என்பது காங்கிரஸ்காரர்களுக்குப் பெருமையாக இருக்கலாம், ஆனால் இந்திய ஜனநாயகத்துக்கு அது தலைகுனிவாக அல்லவா இருந்தது?இந்த வரிசையில் இப்போது மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலர் பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு மூத்த அனுபவசாலியான ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பான ஒரு பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தோன்றும். ஆனால், இந்திய சரித்திரத்தில் இதுவரை வரலாறு காணாத ஊழல் என்று கருதப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்ட "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில் நேரடியாகத் தொடர்புடைய ஒருவர், மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது, ஜீரணிக்கவே இயலாத அதிகார ஆணவம் அல்லாமல் வேறென்ன?பி.ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதன் காரணமே, ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரிக்கப்படாமலே மூடி மறைப்பதற்காகத்தானோ என்கிற ஐயப்பாட்டுக்குக் காரணம் இருக்கிறது. இந்தப் பதவியில் பிரத்யுஷ் சின்ஹா இருந்தபோது, கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் பிரச்னையை விசாரிக்கும்படி மத்திய புலனாய்வுத் துறைக்குப் பரிந்துரை செய்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை முடிவு மட்டுமல்ல என்றும் இதன் பின்னணியில் பல கோடி ரூபாய்கள் கைமாறி இருக்கக்கூடும் என்றும் பிரத்யுஷ் சின்ஹாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார். அந்த முடிவின் தொடர்ச்சியாகத்தான் மத்திய புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்புத் துறையின் தலைமையகத்தில் அதிரடி சோதனையை நடத்தியது.கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, அதாவது பி.ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராகப் பதவி ஏற்பதற்கு ஒரு மாதம் முன்பே ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பூசி மெழுகும் பணியில் இறங்கிவிட்டார். தொலைத்தொடர்புத் துறைச் செயலர் என்கிற முறையில், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அவர் ஒரு கடிதம் அனுப்புகிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஒதுக்கீடுகளைப் பற்றி விசாரிக்கவோ, தணிக்கையிடவோ மத்திய தணிக்கை அதிகாரிக்குச் சட்டப்படி உரிமை உண்டா என்று மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, சட்ட அமைச்சகத்தின் கருத்தைக் கோருவதாக அந்தக் கடிதம் அமைகிறது.கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியே, அதாவது அடுத்த நாளே, மத்திய சட்ட அமைச்சகம் ஏழு பக்க விளக்கத்தை அளிக்கிறது. அதன்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு கொள்கை முடிவு என்றும் அதில் தலையிட மத்திய தணிக்கை அதிகாரிக்கோ, மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையருக்கோ உரிமை இல்லை என்றும் எதிர்பார்த்த பதிலை சட்ட அமைச்சகத்திடமிருந்து அன்றைய தொலைத்தொடர்புத் துறைச் செயலரும் இன்றைய மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையருமான பி.ஜே. தாமஸ் வாங்கி வைத்துக் கொண்டார்.இப்போது, மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.ஜே. தாமஸýக்கு, ஸ்பெக்ட்ரம் பிரச்னையை அடக்கம் செய்யும் பணி மிகவும் சுலபமாகிவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவரே தீர்ப்பு வழங்கும் இடத்தில் அமர்ந்து, சட்ட அமைச்சகத்தின் கருத்தைக் காரணம் சாட்டி மத்திய புலனாய்வுத் துறையை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லி விடுவார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காற்றோடு கலந்து கரைந்துவிடும்.ஒரு யோக்கியவானான பிரதமரின் ஆட்சியில் இவை அரங்கேற்றப்படுகின்றன. திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதையாக இருக்கிறது இவர்கள் பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் நபர்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார்கள், இந்திய ஜனநாயகம் இப்படி இன்னும் எத்தனை சோதனைகளை நேரிட இருக்கிறதோ, யாமறியோம் பராபரமே...
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:48:00 AM
9/11/2010 5:48:00 AM
By akkinik kunju dindigul
9/11/2010 5:34:00 AM
9/11/2010 5:34:00 AM
By RAVIKUMAR
9/11/2010 5:20:00 AM
9/11/2010 5:20:00 AM
By rangaraj
9/11/2010 4:28:00 AM
9/11/2010 4:28:00 AM
By tmp
9/11/2010 12:57:00 AM
9/11/2010 12:57:00 AM
By tmp
9/11/2010 12:43:00 AM
9/11/2010 12:43:00 AM
By tmp
9/11/2010 12:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/11/2010 12:40:00 AM