திங்கள், 6 செப்டம்பர், 2010

கூட்டணி மாற வேண்டும்!


பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் அறிவித்திருந்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தம் அரசின் தகுந்த முன்னேற்பாடுகளால் பிசுபிசுத்துப் போய்விட்டது. ஆனால், மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் தாமதமாக மழை பெய்தாற்போல டாஸ்மாக் ஊழியர்களுக்கு சில நாள்கள் கழித்து ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம், ஊதிய உயர்வு ஆகிய இவை இரண்டுமே அடைமழை பெய்யும் என எதிர்பார்த்தோருக்கு லேசான சாரல் பெய்ததைப்போல இருந்தது என்பதே உண்மை. வேலைநிறுத்தத்தை முறியடிக்க தமிழக அரசு காவல் துறையின் உதவியுடன் மதுக்கடைகளைத் திறந்திருந்தது. இதனால், அன்றைய தினம் மட்டும் குடிமகன்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மது அருந்தி மகிழ்ந்த திருப்தி. இது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில்கூட முதன்முறையாக இருந்திருக்கலாம்.  மதுவிலக்கையும் மீறி மது அருந்தினால் காவலர்கள் கண்டுபிடித்து விடுவார்களோ, கைது செய்து விடுவார்களோ என்று குடிமகன்கள் அஞ்சியஞ்சி மது குடித்தனர். அது கர்மவீரர் காமராஜ் காலம்!  தற்போது நடப்பது காமராஜ் ஆட்சிதான் என்று மேடைதோறும் முழங்குபவர்களின் ஆட்சியிலோ இப்படி ஒரு காண்பதற்கரிய காட்சி.  பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அறிவு தீபமேற்ற அல்லும்பகலும் பாடுபட்டார் காமராஜ். அறிவை அழிக்கும் மதுக்கூடங்களை அதிகரித்து மகத்தான சாதனை புரிந்துகொண்டிருக்கின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள்.  தங்கள் ஆட்சியிலும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே என இவர்கள் கூறலாம். ஆனால் இளம் பருவத்தினர் "பார் வசதி உண்டு' என எழுதப்பட்ட குறைந்தது இரண்டு, மூன்று மதுபானக் கடைகளையாவது தாண்டித்தான் தினமும் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை. விளைவு...படித்துப் பயன்பெற வேண்டிய நஞ்சை நிலம், மது என்னும் நஞ்சைக் குடிக்கத் தொடங்கி எவருக்கும் பயன்படாத களர் நிலமாகிவிடுகிறது. இப்போதெல்லாம் மாணவர்கள் பயமின்றி பள்ளிச் சீருடைகளிலேயே மதுக்கடைகளுக்கு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  நலத்திட்டங்கள் குறித்தோ, அரசின் செயல்பாடுகள் குறித்தோ எதிர்க்கட்சிகள் ஏதேனும் கேள்வி எழுப்பினால் கேரளத்தைப் பாருங்கள், மேற்குவங்கத்தைப் பாருங்கள் என்பது தமிழக முதல்வரின் வழக்கம். மதுகுறித்த கேள்விகளுக்கு மட்டும் மெüனத்தையே பதிலாகத் தந்து, அரசின் இலவசத் திட்டங்களுக்கு டாஸ்மாக் மது மூலம் வரும் நிதிதான் பக்கபலமாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும் முதல்வர், மதுவை முற்றிலும் ஒழித்தாலும் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக குஜராத்தைப் பார்க்கலாமே! காந்தி பிறந்த புண்ணிய பூமியில் மது முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. கள் கூடாது என்பதற்காக தனது தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டித்தள்ளிய, சுயமரியாதை உணர்வை உசுப்பிவிட்ட பெரியார், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்ட "தென்னாட்டு காந்தி" அண்ணா, மதுவிலக்கை முழுமையாக ஆதரித்த ராஜாஜி, காமராஜ் போன்ற புண்ணியர்கள் பலர் பிறந்த தமிழகத்திலும் மது முற்றிலும் ஒழிக்கப்படுவதுதானே நியாயம்?  தாம் மதிப்போரின் கொள்கைகளைக் காற்றில் விட்டுவிட்டு அவர்களுக்கு சிலைகளும், சித்திர மண்டபங்களும் எழுப்புவதால் என்ன பயன்?   மதுவிலக்கு குறித்து ஓர் அதிகாரமே தந்தார் அய்யன் திருவள்ளுவர். தென்கோடியில்  அவருக்கு சிலை வைத்த ஆட்சியாளர்களோ, அவர் சொன்னதை விலக்கிவிட்டு, மதுவுக்கு அதிகாரம் தந்திருக்கின்றனர்.  ஆண்டுக்காண்டு மது விற்பனை மெல்ல அதிகரித்த காலம்போய் மாதந்தோறும், நாள்தோறும் மது விற்பனை அசுர வேகத்தில் அதிகரிப்பதைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. மதுவிற்பனை மூலம் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி கிடைக்கிறதாம். ஆனால், குடித்துக்குடித்து குடல் வெந்துபோகும் ஏழைக் குடிமகன் விழுந்து கிடக்கவும், அவன் இறந்துவிட்டால் அவன் குடும்பத்துக்கும் தெருக்கோடிதானே கிடைக்கிறது.  டாஸ்மாக் பணியாளர்களுக்கு நல்ல வருவாயில், நிரந்தரமான மாற்றுப் பணி தருவதுடன், குடி என்னும் தவறான பாதையிலிருந்து மக்களை மாற்றும் பணியையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் முக்கிய கடமைதானே!   இளைஞர் நலனில் அக்கறை கொண்டு இளைய சமுதாயத்துக்கு நன்மை செய்ய பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. வீதிகள்தோறும் குறைந்த கட்டணத்தில் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறந்தால் எதிர்காலத் தூண்களின் உடல் நலத்தை வளர்க்கலாம். பள்ளிக்கூடங்களை அதிகம் திறந்தால் பகுத்தறிவை வளர்க்கலாம். மாறாக, மதுக்கூடங்களைத் திறப்பதன் மூலம் இளைய சமுதாயத்துக்கு என்ன நன்மைகளைச் செய்துவிட முடியும்? தமிழகத்தில் பிரதான இரு கட்சிகள் மற்ற விஷயங்களில் எப்படியோ, மது விஷயத்தில் மட்டும் ஒன்றாகவே சிந்திக்கின்றன. ஒற்றுமையுடன் செயல்படுகின்றன.   இங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வற்றாமல் வாரி வழங்கும் மது அரக்கனுடன் கூட்டணி வைத்துக்கொள்வதே வழக்கமாக உள்ளது. அந்த நிலை மாறி மதுவுடனான கூட்டணி முறை முற்றிலும் ஒழிய வேண்டும். மக்கள் வாழ்வில் நிம்மதியும், அமைதியும் ஏற்பட கட்சிகள் மதுவிலக்குடன் புதிய கூட்டணி அமைக்க வேண்டும்.
கருத்துக்கள்

மது விலக்கை நீக்கியது மிகப்பெரிய குற்றம்தான் . மறுக்க இயலாது. ஆனால், மதுப பழக்கம் உள்ள மாநிலங்கள் மது விலக்கை நடைமுறைப்படுத்தினால் தரும் நிதியுதவியை எவ்வளவோ மன்றாடி மதுப்பழக்கம் இல்லா தமிழகத்திற்குக் கேட்ட போது அன்றைய மத்திய (காங்கிரசு) ஆட்சியினர் புதிய மது விலக்கினர்க்கு மட்டுமே நிதியுதவி தரப்படும; தமிழ் நாட்டிற்குத் த்ர முடியாது என விடாப்பிடியாக அடம்பிடித்து மறுத்து இராது இருந்திருந்தால் தமிழ்நாடும் மதுவிலக்கு நாடாகத் திகழ்நதிருக்கும் அல்லவா? எனவே, கழகங்களின் குற்றச் செயலில் காங்கிரசிற்கும் பெரும்பங்கு உண்டு என்பதை மறவாதீர்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக