சனி, 11 செப்டம்பர், 2010

திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவர் பெயர் சூட்டக் கோரிக்கை


திருத்துறைப்பூண்டி, செப். 10: திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.      20-ம்  நூற்றாண்டின்  இணையற்ற உரையாசிரியராகத் திகழ்ந்து, ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.     சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார். மேலும், மானனீகை, செங்கோல் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1952-ல் ஏற்பட்ட புயல், 1966-ல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி குறித்தும் அவர் எழுதிய கவிதைகள், அறிஞர்கள் மட்டுமன்றி பாமர மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தன.    அவரது நூற்றாண்டு விழா அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலப் பெருமழையில், ஆர்.எஸ். ரங்கசாமித் தேவர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.    விழாவுக்கு மேல பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம், தஞ்சை சி.சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      பெருமழைப் புலவரின் திருவுருவப் படத்தை முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் மா. கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.    விழாவில் முனைவர் இளமுருகன் பேசியது:        உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் நெஞ்சில் பெருமழைப் புலவரின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ், துபை தமிழ் சங்கங்களின் சார்பில் பல்வேறு நாடுகளிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரியிலும், சென்னை, மற்றும் தில்லியிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.     புதுச்சேரி பாரதிதாசன் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு. இளங்கோவன் பேசியது:   புலவரின் சொந்த ஊரான மேலப் பெருமழையில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது நூல்களை அரசு உடைமையாக்க வேண்டும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைய  உள்ள தமிழத் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.    நிகழ்ச்சியில் புலவரின் மகன்கள் சோ. பசுபதி, சோ. மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர்.    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் வேதவள்ளி ராஜமாணிக்கம், ஆர். இளங்கோவன், ஆர். செல்வகணபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கருத்துக்கள்

பெருமழைப்புலவர் சோமசுந்தரனாரின் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கலைஞரே அறிவிப்பார். ஐயமில்லை. எனினும்,மத்தியப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைவது என்பது பேரறிஞர் அண்ணா அவர்களின் எண்ணத்திற்கு மாறானது. தமிழுக்கும் தமிழகக்கல்விக்கம் தீங்கிழைக்கும். என்செய்வது ஆளுவோரின் போக்கு மாறியுள்ளதால் முத்தமிழறிஞரின் ஊரான திருவாரூருக்கே அப்பல்கலைக்கழகம் அமைய உள்ளது என்பது வேதனையான செய்தி. வேதனையில் ஓர் அறுதலாக முனைவர் மு.இளங்கோவன் வேண்டியவாறு அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குப் பெருமழைப்புலவர் பெயர் சூட்ட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 6:07:00 PM
,thedithedik kandarinthu,thigattatha senthamizh urai theettiya perumazhaip pulavarin peyarai soottuvadhu ,thamizhaga arasu avarukku seyyum mudhal mariyadhaiyaga irukkattum. maa.ulaganathan
By m.ulaganathan
9/11/2010 2:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக