சனி, 11 செப்டம்பர், 2010

கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போனதல்ல': டி.ராஜா


திருச்சி, செப். 10:  "கச்சத்தீவு பிரச்னையை இரு நாடுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தம் எனக் கூறி, மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. அது முடிந்து போன விஷயமல்ல' என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா.  திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: காஷ்மீரில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின்படி காஷ்மீரில் சுயாட்சி நடப்பதை, சிறப்பு அதிகாரங்கள் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த மாநில மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.÷ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், அதை நிறைவேற்றுவதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறைகளில் சந்தேகம் எழுகிறது. தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.÷தனிமனித அந்தரங்கத்தில் தலையிடுவது குறித்த பிரச்னையும் முன்வைக்கப்படுகிறது. எந்த ஜாதியையும் சாராதவர்கள், குறிப்பிட விரும்பாதவர்கள் என்று யாரேனும் கூறினால், அவர்களையும் கணக்கெடுப்பில் பதிவு செய்வதற்கு ஒரு தனி இடம் அளிக்க வேண்டும். இது வெறும் இடஒதுக்கீடு சார்ந்தது அல்ல; சமூக, பொருளாதார நிலைகளை உணர்ந்து ஆக்கப்பூர்வமான கொள்கைகளை வகுக்க அடிப்படையாக அமையும். அரசு பின்பற்றும் நடவடிக்கைகள், இந்தக் கணக்கெடுப்பில் தோல்வியைக் கண்டுவிடக் கூடாது.மீனவர்கள் பிரச்னை:  தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு, மத்திய அரசு கூறும் பதில் ஏற்புடையதாக இல்லை. இதற்கு கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும். வேறு வழியில்லை. இரு நாடுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது. அது முடிந்து போன விஷயமல்ல என்றார் ராஜா.
கருத்துக்கள்

சரியான கருத்து. தமிழினப் படுகொலை முடியாமல் தொடர்கதையாக இருக்கும் பொழுது அதற்கு வழிவகுக்கும் காரணங்களில் ஒன்றான கச்சத்தீவைத் தாரை வார்த்த ஒப்பப்நதத்தை முடிந்து போனதாகக் கூறுவது சரியல்ல. தமிழக மீனவர்கள்தானே மடிகின்றார்கள் என இந்திய அரசு எண்ணினால் இந்திய ஒருமைப்பாட்டிற்குத்தான் ஊறு நேரும் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். உலகின் மூத்த இனத்தைப் புறக்கணித்து எவ்வாறு வலிமையான இந்தியாவை உருவாக்க இயலும் என இந்திய அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். மனித உயிர்களை மலிவானதாக ஆக்கும் கச்சத் தீவு ஒப்பந்தத்தை முறிக்க வேண்டும். தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும். தமிழின மக்கள் சிங்கள இறையாண்மைக்கு உட்பட்டவர்கள் என்பது போல் நடந்து கொள்ளும் அறியாமைப் போக்கை அகற்றிக் கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:15:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக