திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


சென்னை, ஆக.15: மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தினால், அது தமிழகத்தில்  பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையைப் பாதிக்கும் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:""2011-12-ம் கல்வி ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பில்  (எம்.பி.பி.எஸ்) மாணவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு வந்தபோது மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தொழில் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை 2007-08-ம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், சமூக-பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பலன் அடைந்து வருகின்றனர். அத்துடன் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் விரும்பி பணியாற்றும் நிலை விரைவில் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.மாநில உரிமையில் குறுக்கீடு: மத்திய அரசு அறிவித்துள்ள அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த முறை காரணமாக மருத்துவம்-முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் ஒரு குழப்ப நிலை உருவாகும் என்றும் அஞ்சப்படுகிறது.உச்ச நீதிமன்ற வழக்கில்...: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை தமிழக அரசு பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இப்போது மத்திய அரசு தெரிவித்துள்ள புதிய முறையினால், இந்த இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.  சமூகநீதி கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் மாநிலம் தமிழகம் என்பதால், மேல் குறிப்பிட்ட வகுப்பினரை நுழைவுத் தேர்வு முறை பாதிக்கும். மேலும் உச்ச  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.எனவே தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

பாராட்டுகள். இதே போல் எல்லா வகை அனைத்து இந்தியப் பொதுத் தேர்வுகளையும் ஒழிக்க வேண்டும். இந்த நேரத்தில் இந்தியனாகக் காட்டிக் கொள்வதாக எண்ணித் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்னும் அரசின் கோரிக்கையை உடனே கைவிட வேண்டும். துணை முதல்வர் தில்லியில் நடந்த மாநாட்டொன்றிப் பேசியதாக ஒரு நாளிதழில் படித்தேன். முழுப் பொறுப்பில்லாத பொழுதே மீனவர் படுகொலைகள் நின்ற பாடில்லை. மத்தியஅரசே முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டால் அந்தோ பரிதாபம்! மத்திய அரசின் பொருளதவியை நாடலாம்; பயிற்சியையும் அதற்கான செலவையும் நாடலாம்; தமிழக அரசின் கட்டுப்பாட்டில் மத்தியப் படை இயங்கவும் வேண்டலாம். ஆனால், மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக இருப்பின் எதற்கு இந்த அடிமை அரசு தேவை? மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே தமிழக அரசைக் கொண்டு வரலாமே! எனவே, இதில் மறு ஆய்வு செய்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/16/2010 7:41:00 AM
Ada looosupayale!
By Somasundaram
8/16/2010 6:35:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக