திங்கள், 16 ஆகஸ்ட், 2010

வேத மந்திரங்கள் சொல்லும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்


சி.வ.சு.ஜெகஜோதிராமநாதபுரம், ​​ ஆக.​ 15:​ ராமநாதபுரம் விவேகானந்தா இலவசக் கல்வி மையத்தில் பயின்று வரும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும் வேத மந்திரங்களை சொல்லிய பிறகே தினசரி காலையில் படிப்பைத் தொடங்குகின்றனர்.ராமநாதபுரம் அண்ணா நகரில் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.​ கொக்கு,​​ குருவி,​​ நாரை ஆகியன பிடிப்பது,​​ பன்றி வளர்ப்பு,​​ சுமை தூக்குவது,​​ திருவிழா நடைபெறும் ஊர்களுக்கு சென்று பலூன்கள்,​​ வளையல்கள் விற்பது,​​ சாக்கடைக் கழிவிலிருந்து தங்க நகை வேலைகள் செய்யப் பயன்படும் மணல் சேகரித்தல் போன்றவை இங்கு வாழும் ஆண்கள் செய்யும் தொழிலாக இருக்கிறது.​ திருமண மண்டபங்களில் நடைபெறும் விருந்து வைபவங்களில் எச்சில் இலைகளை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கூலித் தொழில்களை பெண்கள் செய்து வருகின்றனர்.இவர்களது குழந்தைகள் நல்ல முறையில் படித்து முன்னேற ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஞானதீபா சேவா சங்கம் என்ற அமைப்பு,​​ விவேகானந்தா இலவசக் கல்வி மையத்தை உருவாக்கி அவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறது.​ பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 மாணவியர் உள்பட மொத்தம் 72 பேர் இக்கல்வி மையத்தில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.​ காலை சரியாக 6.30 மணிக்கே குளித்துவிட்டு,​​ நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு கல்வி மையத்துக்கு வந்து விடுகிறார்கள்.​ தினசரி படிப்பு துவங்கும் போது அனைவரும் ஒன்றுசேர்ந்து வேத மந்திரங்களை சொல்லத் தொடங்குகின்றனர்.​ பின்னர் ராமகிருஷ்ணர்,​​ அன்னை சாரதா தேவி,​​ சுவாமி விவேகானந்தர்,​​ மந்திரங்கள் மற்றும் குருமந்திரம் ஆகியனவும் சொல்லி முடித்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விவேகானந்தா இலவசக் கல்வி மையத்தில் ஆசிரியர்களாக 4 பேர் பணி செய்கின்றனர்.​ ஆசிரியை போதும்பொண்ணுஇக்கல்வி மையத்திலேயே 4 ஆம் வகுப்பிலிருந்து படித்து,​​ இன்று கல்லூரியில் மனையியல் பட்டப் படிப்பையும் படித்து வருகிறார்.​ ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நீதிக்கதைகள்,​​ பக்திப்பாடல்கள்,​​ விளையாட்டுகள் ஆகியன கற்றுத்தரும் பண்பாட்டு வகுப்பும் நடந்து வருகிறது.காலை 7.30 மணிக்கு பாடவகுப்பு நிறைவின் போது வேத மந்திரங்களைச் சொல்லி பின்னர் அவரவர் வீடுகளுக்குச் சென்று பள்ளிக்கு செல்கின்றனர்.இக்கல்வி மையத்தில் பயின்றுகொண்டே 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் மணிகண்டன் கூறியதாவது:பெற்றோர் கூலித் தொழிலாளிகள்.​ என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர்.​ என்னைத் தவிர மற்ற 5 பேரும் பெண்கள்.​ வறுமை காரணமாக அவர்கள் படிக்கவில்லை.​ நான் மட்டும் இக்கல்வி மையத்தின் துணையுடன் தற்போது 5 ஆம் வகுப்பு படித்து வருகிறேன என்றார்.விவேகானந்தா இலவச கல்வி மையத்தை நடத்தி வரும் ஞானதீபா சேவா சங்க தலைவர் முருகேசன் கூறியதாவது:இக்கல்வி மையத்தை 8 வருடங்களாக நடத்தி வருகிறோம்.​ இப்பகுதியில் இருந்த முளைப்பாரி வைக்கும் இடத்தை தளம்,​​ மேற்கூரை ஆகியவற்றுடன் கூடிய கல்வி மையமாக ரூ.1 லட்சம் செலவில் அமைத்துள்ளோம்.​ இக்ககல்வி மையத்தை துவங்கிய போது தலை சீவாமலும்,​​ அழுக்கு உடை அணிந்தும்,​​ குளிக்காமலும்தான் படிக்க வருவார்கள்.​ அழுக்கு உடைகள் அணியாமல் இருப்பது,​​ ஒழுக்கமாக வாழ்வது,​​ படிப்பில் அதிக மதிபெண்கள் எடுப்பது,​​ புத்தகங்களை பத்திரமாக பாதுகாப்பது,​​ பெற்றோர்கள்,​​ ஆசிரியர்களை மதிப்பது உள்ளிட்டவற்றை முதலில் கற்றுக் கொடுத்தோம்.​ பின்னர் வேத மந்திரங்களை கற்றுக் கொடுத்தோம்.​ இப்போது இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ,​​ மாணவியர் வேத மந்திரங்கள் சிலவற்றை தெளிவாக சொல்கின்றனர்.பெற்றோர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களாக இருப்பதால் 6 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க யாரையும் அனுமதிப்பதில்லை.​ காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த இவர்களுக்கு இன்று வரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால்,​​ இவர்கள் மேல்படிப்பு படிக்க முடியாமல் உள்ளனர்.​ நாங்களும் முயற்சி எடுத்தும் பலனில்லை.நன்றாகப் படிக்கும் குழந்தைகளில் சிலரை நாங்களே சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறோம் என்றார்.
கருத்துக்கள்

ஆரியத்தைப் புகுத்தும் கல்வி முறை அழித்தொழிக்கப்பட வேண்டியது. இதில் பாராட்ட என்ன உள்ளது? தமிழ் இறைப்பாடல்களைக் கற்றுத் தரலாமே! ஆனால், இறை நெறி அவர்களின் நோக்கம் அல்ல. எனவே,ஆரியத்தைத்தான திணிப்பர். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/16/2010 5:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக